நவீன சிங்கள இலக்கியத்தின் பிதாமகன் மார்ட்டின் விக்ரமசிங்க… ஐங்கரன் விக்கினேஸ்வரா

நவீன சிங்கள இலக்கியத்தின் பிதாமகன் என்று அறியப்படும் மார்ட்டின் விக்ரமசிங்க, 20ஆம் நூற்றாண்டின் சிங்கள இலக்கியத்தின் அறிவுசார் தளத்தை வடிவமைத்தவர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்வேறு துறைகளில் புதினம், சிறுகதை, நாடகம், விமர்சனம், கட்டுரை எனப் பல வகைகளிலும் 65-க்கும் மேற்பட்ட நூல்களை சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
நவீன சிங்களச் சமூக யதார்த்தவாத இலக்கியத்தைத் தொடக்கி, முன்னகர்த்திச் சென்ற இரட்டையர்களுள் ஒருவர் மார்ட்டின் விக்ரமசிங்க, மற்றவர் பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர. நீண்டகால எழுத்துச் செயற்பாட்டைக் கொண்டிருந்த மார்ட்டின் விக்ரமசிங்க சிங்கள இலக்கிய உலகில் முழுநேர எழுத்தாளராகத் தன்னை நிறுவிக்கொண்டவர்.
பல்துறைசார்ந்த எழுத்தாளர்:

மார்ட்டின் விக்கிரமசிங்க (Martin Wickramasinghe, மே 29, 1890 – ஜூலை 23, 1976) சிங்கள எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியரும் ஆவார். சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பல்துறைசார்ந்து எழுதியவற்றுள் 10 புத்தகங்கள் அவர் ஆங்கிலத்தில் எழுதியவை. இலக்கியம் புனைவு, அபுனைவு,சமூகவியல், வரலாறு, மானுடவியல், இயற்கை அறிவியல், தத்துவம், மொழியியல், கல்வி, பௌத்தம், மதங்கள், வாழ்க்கை வரலாறுகள், பயண இலக்கியம் என அவர் இயங்கிய களங்கள் மிகவும் விரிவானவை. பொதுவாக சமூக அறிவியல்கள் சார்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு சிங்களச் சிந்தனை உலகுக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்.
சார்ள்ஸ் டார்வீனின் பரிணாமத் தத்துவம் குறித்து முதன்முதலில் சிங்களத்தில் விரிவான அறிமுகத்தைச் செய்துவைத்தவர் மார்ட்டின் விக்ரமசிங்க அவர்கள் ஆவார். அந்தவகையில் சிங்களச் சமூக சிந்தனை வெளியிலும் புதிய சிந்தனைகளுக்கும், நவீன அறிவியக்கத்துக்கும் அவர் ஒரு முன்னோடி என்று சொல்லலாம்.
பல்வேறு உலக மொழிகளில் இவரது நூல்கள் தற்போது மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் பல ரஷ்சிய மொழியில் அநேக நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, சீன, ரூமேனிய, பல்கேரிய, தமிழ் ஆகிய மொழிகளில் இவருடைய நாவல்கள் சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு உலகின் பல பகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
நவீன சிங்கள இலக்கிய பிதாமகன்:
மார்ட்டின் விக்ரமசிங்க இலங்கையின் நவீன சிங்கள இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் பத்திரிகையாளர் மற்றும் அறிவுஜீவி ஆவார். இவர் புதினம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம் எனப் பல துறைகளிலும் எழுதி, சிங்கள இலக்கியத்தில் மரபுக்கும் நவீனத்துவத்திற்கும் இடையே ஒரு பாலத்தை அமைத்துள்ளார்.
மேலும் அறிவியல், தத்துவம் போன்ற சிக்கலான கருத்துக்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்தார். அவரது புகழ்பெற்ற படைப்புகளில் ‘கமப்பெரலிய’, ‘மடோல் தூவ’, ‘யுகாந்தய’ போன்றவை அடங்கும், இவை இலங்கையின் சமூக மாற்றங்களை ஆழமாகச் சித்தரிக்கின்றன. இவரது புனைகதைகள் இலங்கையின் சமூக மாற்றங்களை நுட்பமாகப் பிரதிபலித்தன, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
ஒரு பன்முக படைப்பாளி:
‘சத்வா சந்தாத்தியா’ (Sathva Santhathiya): 1934இல் வெளியான இந்த நூல், டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை சிங்கள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இவரின் முக்கிய படைப்புகளான ‘கமப்பெரலிய’ (Gamperaliya – மாறும் கிராமம்), ‘மடோல் தூவ’ (Madol Doova – சதுப்புநிலத் தீவு), ‘யுகாந்தய’ (Yuganthaya – சகாப்தத்தின் முடிவு), ‘விராகய’ (Viragaya – பற்றற்ற நிலை) போன்றவை அவரது புகழ்பெற்ற நாவல்கள் ஆகும்.

அவரது சிங்கள இலக்கியத்தின் மைல்கற்கள் ‘Landmarks of Sinhala Literature (1948)’ எனும் நூல்தான் பல தசாப்தங்களாக இலங்கையின் பல எழுத்தாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய சமூக யதார்த்த வாதத்துக்கான ஓர் ஆரம்ப மாதிரி விமர்சனமுறையை முதன்முதலில் தொடக்கி வைத்தது எனச் சிங்கள இலக்கிய விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறது. இந்நூலில் இடம்பெறும் ஒரு பிரதான கட்டுரை ஜாதகக் கதைகள் பற்றிப் பேசுகிறது. சிங்களச் சமூக வாழ்வையும் பண்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக யதார்த்தவாதப் படைப்புக்குச் சிங்களத்தில் வெளிவந்த சிறந்த எடுத்துக்காட்டான படைப்பாக அவர் ஜாதகக் கதைகளையே கருதினார் எனச் சிங்கள இலக்கிய விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இளவயதில் எழுத்தாளராக:
1890, மே 29 இல் இலங்கையின் தென் மாகாணத்தில் ஹபரதுவ தேர்தல் தொகுதியிலுள்ள கொக்கலை என்னும் ஊரில் புஞ்சி எலிசார குடும்பத்தில் பத்துப் பேரில் ஒரே ஆண்மகனாகப் பிறந்தார். சொந்தக் கிராமத்திலே சிங்களக் கல்வியைப் பெற்ற மாட்டின் விக்கிரமசிங்க காலி உனவடுன பொனவிஸ்டா வித்தியாலயத்தில் ஆங்கிலக் கல்வியை பெற்றார்.
சிறு வயதிலே தந்தையை இழந்துவிட்டார். வளரும் பருவம்வரை தெற்கின் கடற்கரையோரத்தின் கிராமப் புறத்திலேயே வாழ்ந்தார். பின் கொழும்பில் ஒரு புத்தகசாலையில் எழுத்தராகச் சேர்ந்தார். ஆங்கிலப் புத்தகங்களை அதிகமாக வாசித்து பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதினார். அதன் மூலமே பிற்காலத்தில் தினமின, சிலுமின, லக்மின ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக வர முடிந்தது.
1946 ஆம் ஆண்டு வரை தினமின சிங்களப் பத்திரிகையில் பணிபுரிந்து எழுத்துத் துறையில் பல சாதனைகளை நிலைநாட்டினார். 1914 ஆம் ஆண்டு வெளியிட்ட லீ லா என்ற புதினத்தை எழுதினார். புதின இலக்கியத்தில் ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றத்திற்காக வித்தியாலங்கார பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கியது.
சோசலிச கொள்கையில் ஆர்வம்:
இவர் சோசலிசக் கொள்கையை விரிவாக ஆராய்ந்து பல ஆக்கங்கள் வெளியிட்டுள்ளார். பரிணாமவாதத்தை சிங்களத்திற்கு முதல் முதல் அறிமுகப்படுத்தியவரும் இவரே. கிராமப்புற மனிதனையும் கிராமப்புற சூழ்நிலைகளையும் அதிகமாக நேசித்தவர். இதனால் இவரின் சிறுகதைத் தொகுப்பில் அதிகமானவை இன்றும் காலத்தால் அழியாத தன்மையுடையனவாக இருக்கின்றன. கஹனியக் ‘பெண் ஒருத்தி’ என்ற கதைத் தொகுதி வஹல்லு ‘அடிமை’ என்ற கதைத் தொகுதி போன்றவை புகழ் வாய்ந்தவை.
இதேவேளை இவர் ஒரு தத்துவவியலாளராக, கலைஞராக, சமூகவியல் ஆய்வாளராக என பல தளங்களில் கால் பதித்துள்ளார். இவர் அறுபது ஆண்டுகளாக சேகரித்து தனது சொந்த வாசிகசாலையில் வைத்திருந்த சுமார் 5000 அபூர்வ நூல்கள் மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தால் தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சேவை நூலகத்திற்கு அன்பளிப்புச்
செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வாளர்கள் பார்வையிடவும் உசாத்துணையாக பயன்படுத்தவும் முடியும்.
மேலும் விபுலாநந்த அடிகளாரைத் தலைவராகக் கொண்டு 1947 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை எழுத்தாளர் சங்கத்தில் மார்ட்டின் விக்கிரமசிங்க உப தலைவராக இருந்தார். தற்போது மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தினர் அவரது 94 நூல்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாத்தறை பிரதேசத்தில் கொக்கலையில் அமைந்துள்ள இவரது பிறந்த இல்லம் கிராமிய கலை அரும்பொருட் காட்சி நிலையமாக அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
![]()