இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும் என்ற சமஷ்டி ஆட்சி முறைக்கு கனடா பூரண ஆதரவு!

சமஷ்டி ஆட்சி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும் என்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு கனடா ஆதரவளிக்கும் கனடா தூதுவர் இசபெல்லா மார்ட்டின் உறுதியளித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை கனடா தூதுவர் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் பேரவையில் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பரில் கனடா தான் முதலாவது தீர்மானத்தை கொண்டு வந்தது. அதற்கு ஆதரவு போதாது என்று பிற்போட்டார்கள். அது பிற்போடப்பட்ட பிறகுதான் அடுத்த நவம்பரில் அமெரிக்காவை கொண்டு தீர்மானத்தை எடுக்கச் செய்தோம். 2012ல் இருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பொழுது இலங்கைக்கான இணை அனுசரணை நாடுகளில் கனடா முக்கியமான நாடாக செயற்பட்டு வந்தது. அந்த வகையில் கனடாவிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்தோம்.
தமிழ் கலாசாரம், தமிழ் பண்பாடு, இன அழிப்பு சம்பந்தமான தீர்மானங்கள் கனடாவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் நன்றி செலுத்தினோம்.
சமஷ்டி ஆட்சி முறை இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். கனடாவில் முன்மாதிரி ஒன்று இருக்கிறது. அந்த முன்மாதிரியை பின்பற்றி செயல்படுத்தப்பட வேண்டும் என்ற எங்களது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக கனடா செயல்பட வேண்டும் என்பதை கேட்டோம். அதற்கு, தாங்கள் எப்போதும் ஆதரவாகச் செயல்படுவோம் என்பதை கனடா தூதுவர் எமக்கு உறுதி அளித்தார்.
நில அபகரிப்பு சம்பந்தமான விபரங்களை கேட்டறிந்து கொண்டார். கிவுல் ஓயா போராட்டத்தை ஏன் செய்கிறோம், அந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்கள் என்ன என்பதனை விளக்கிக் கூறினோம்.அது தொடர்பாக கேட்டறிந்து கொண்டார் – என்றார்.
![]()