சமஷ்டி அரசியலமைப்பு நாட்டுக்கு மிகவும் உகந்தது; கனடா தூதுவருக்கு வலியுறுத்தினோம்

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சமஷ்டி அரசியலமைப்பு என்பது நாட்டுக்கு மிகவும் உகந்தது என்பதை கனடா தூதுவருக்கு வலியுறுத்தினோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கனடா தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போது சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தினோம். வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினோம். தமிழ் மக்களுக்கே அது தேவை என்பதையும் சிங்கள மக்களுக்கு பாராளுமன்றம் இருப்பதால் அது பற்றி பிரச்சினை இல்லை என்பதை சுட்டி காட்டினோம்.
அதை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். முன்னர் வந்த தூதர்களிடம் அது சம்பந்தமாக பேசியிருக்கிறோம். தாங்கள் அது சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேசுவதாக கூறியிருக்கிறார்கள்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இலங்கை இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் இந்த பிரச்சினையை தீர்க்கவில்லை. தற்போது இருக்கக்கூடிய அரசு கூட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை முன்வைக்கின்றதா என்ற கேள்வி இருக்கிறது. தமிழ் மக்களிடம் முழுமையான கருத்துக்கள் கேட்கப்பட்டு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், சமஷ்டி அரசியலமைப்பு என்பது நாட்டுக்கு உகந்தது என்பதை மீண்டும் வலியுறுத்தினோம்.
அரசாங்கம் புதிதாகக் கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டத்தை கொண்டு வருகின்ற பட்சத்தில் அங்கே ஏற்கனவே இருக்கின்ற பழம் தமிழ் கிராமங்கள் அதனுடைய வயல் நிலங்கள் அங்கிருக்க கூடிய சிறிய சிறிய குளங்கள், ஏற்கனவே 15க்கு மேற்பட்ட குளங்கள் உள்ளதாக சொல்கிறார்கள். அதற்கு கீழ் உள்ள மக்கள் நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்கள் இந்த நீர்ப்பாசன குளத்தை உருவாக்குகிற பட்சத்தில் குளங்கள் அனைத்தும் அந்த நீர் பகுதிக்குள் அமிழ்ந்து போகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகார சபை கூட கஷ்ட நஷ்டங்களை பட்டியலிட்டு சொல்லி இருப்பார்கள். ஆகவே இந்த குளத்தின் ஊடாக இவ்வளவு காடுகள் அளிக்கப்படும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் யானையின் புகலிடங்கள் என்பது தொடர்பாக குழப்பங்கள் ஏற்படும் என்பது தொடர்பாக சுட்டிக்காட்டினோம் – என்றார்.
![]()