திருமலை சட்டவிரோத கட்டுமானம்; 4 பிக்குகள் உட்பட 10 பேருக்கும் பெப்.2 வரை விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பெளத்த பிக்குகள் உட்பட 10 பேருக்கும் எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதுடன். பொலிஸாரினால் 8 குற்றங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையும் நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை தொடர்பான வழக்கு நேற்று திருகோணமலை நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதி குறித்த 10 பேருக்கும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
மேலும் நேற்று ,எதிரிகள் ஒவ்வொருவருக்கும் 8 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான குற்றங்கள் போடப்பட்டுள்ளதாக எதிராளிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்ததுடன், கடந்த தவணையில் இடம்பெற்ற வழக்கின்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் குறிப்பிடப்பட்ட சில சொற்கள் திட்டமிட்டு அறிக்கையில் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இதனை செய்துள்ளதாகவும் நீதிமன்ற பதிவாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் தங்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
அத்துடன் இந்த வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்ததுடன் குறிப்பாக முதலாம், இரண்டாம் எதிராளிகளுக்கு பிணை வழங்குமாறும் கோரியிருந்தனர். அதற்கு பொலிஸார் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் கடந்த வழக்கில் இடம்பெற்ற அனைத்து உரையாடல்களும் ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எல்லாவற்றையும் அறிக்கையிட முடியாது எனவும், கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு சமர்ப்பிப்பதற்கு அவற்றை வழங்க முடியும் எனவும் நீதிபதி தெரிவித்ததோடு இந்த வழக்கில் 15 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் முன்னிலையாகாமல் இந்த வழக்கில் பிணை மற்றும் ஏனைய இணக்கப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது எனவும் அதற்கான தடைக் கட்டளையை வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் எதிராளிகளினால் தொடரப்பட்ட வழக்கானது எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் அதன் தீர்ப்பின் பின்னர் இந்த வழக்கை கொண்டு செல்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதியிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது உதயன் கம்மன்பில உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகியிருந்தனர்.
திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அண்மையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரைக்கு உரியது என கூறப்படுகின்ற காணியில் கடற்கரையில் இருந்து சுமார் 11 மீற்றரில் சட்டவிரோத கட்டுமானம் கட்டப்பட்டதாகக் கூறியும், அமைதியை சீர் குலைக்கும் விதமாக அப்பகுதியில் புத்தர் சிலையை வைத்ததாக கூறியும் அதனுடன் சம்பந்தப்பட்ட 15 பேருக்குக்கு எதிராக திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் 17.11.2025 அன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதன் பின்னர் குறித்த குற்றங்களுடன் தொடர்புபட்ட 10 பேர் கடந்த 14.01.2026 அன்று நீதிமன்றில் முன்னிலையான நிலையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()