ரணிலுக்கு எதிராக வழக்கு விரைவில் குற்றப் பத்திரிகை; லண்டன் பயணம் உத்தியோகபூர்வமானதல்ல!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய இங்கிலாந்து விஜயம் தொடர்பான விசாரணைகளை ஒரு மாதத்தில் நிறைவு செய்து மார்ச் மாதத்தில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கும் அது தொடர்பான குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸால் நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் வெளிநாட்டு பயணமொன்றின் போது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு நேற்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அந்த வழக்கு குறிப்பிட்ட திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2023 செப்டம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் தனிப்பட்ட பயணமாக தனது பாரியாரான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு செல்வதற்காக 1.6 கோடி ரூபா அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த குற்றப்புலனாய்வு திணைக்களம் கடந்த வருடம் ஜூன் 24 ஆம் திகதி இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது.
அதைத் தொடர்ந்து,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
இந்தநிலையில் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகஸ்ட் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்படி அவர் அன்றைய தினம் கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில், அவரிடம் பல மணிநேரம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
இதன்படி அன்றைய தினம் மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டதால் விசாரணை நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நீண்ட விசாரணைகளின் பின்னர் நீதவான் ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்க கொழும்ப தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 26ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வைத்தியசாலையில் இருந்து வீடீயோ தொழில்நுட்பம் ஊடாகவே அவர் அந்த வழக்கில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் அவரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தவிட்டதுடன், அந்த வழக்கை ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி ஒக்டோபர் 29ஆம் திகதி குறித்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சட்டத்தரணிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
அதற்கு முந்தைய வழக்கு தினத்தில் நீதிமன்றம் சார்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பான நபர்கள் யார், அவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அடுத்த வழக்குத் திகதியன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் இதன்போது பணிப்புரை விடுத்ததுடன், இந்த வழக்கை 2026 ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாகவும் அறிவித்தார்.
இதன்படி அந்த வழக்கு விசாரணை மீண்டும் நேற்று புதன்கிழமை பிற்பகல் கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் நடைபெற்றது.
இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிற்பகல் 1.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், வழக்கு விசாரணைகள் 2.10 மணியளவில் ஆரம்பமாகின.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகளை ஒரு மாதக் காலத்திற்குள் நிறைவு செய்து மார்ச் மாதமளவில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும், அதன்போது இது தொடர்பான குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இவ்வேளையில் நீதிமன்றத்திற்கு தொடர்ந்தும் அறிவித்த மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்க மறியலில் வைக்கப்பட்ட போது, அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டமை ஊடாக மீண்டும் அரச சொத்து முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விடயங்களை கைவிடுவதற்கு தாம் தயாரில்லை என்றும் கூறினார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, தாமும் இந்த வழக்கை கைவிடப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.இதன்போது நீதிமன்றத்தில் இருதரப்பினரும் கடும் வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தனர்.
இவ்வேளையில் சந்தேகநபர் கூண்டில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அங்கு அமர்ந்திருந்தமை தொடர்பில் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் தனது அதிருப்தியை வெளியிட்ட நிலையில், நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று ரணில் விக்கிரமசிங்க அங்கு அமர்ந்திருந்தார்.
இதேவேளை மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரலால் ரணில் விக்கிரமசிங்கவின் குறிப்பிட்ட வெளிநாட்டு பயணம் தனிப்பட்ட பயணமே என்பதனை உறுதிப்படுத்துவது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்ததுடன், ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்தில் குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்த போது, அப்போதிருந்த ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க அமெரிக்காவில் இருந்தார் என்றும், அது உத்தியோகபூர்வ பயணம் அல்ல என்பதனை அவர் அறிந்திருந்த காரணத்தினாலேயே அவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் எனவும் குறிப்பிட்டு அது தொடர்பான விடயங்களை முன்வைத்தார். அத்துடன் அந்த பயணம் உத்தியோகபூர்வ அரசமுறை பயணம் என்பதற்கான ஒரு சாட்சியேனும் உள்ளதா? என்றும், அந்த பயணம் தொடர்பான வீடீயோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்படாமை தொடர்பிலும் திலிப பீரிஸ் கேள்விகளை எழுப்பினார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சண்ட்ரா பெரேரா இது தனிப்பட்ட பயணம் என்பதனை குறிப்பிட்டுள்ளதையும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இவ்வேளையில் ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பில் போலி ஆவணங்களை தயாரித்துள்ளதாக உறுதிப்படுத்த முடியுமா என்று நீதவான் கேள்வியெழுப்பிய போது, இன்னும் அவ்வாறு கூற முடியாது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
இதேவேளை மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் விளக்கமளிப்புகளை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி திலக் மாரப்பன நீதிமன்றத்தில் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்து சென்றமையானது தனது பாரியாருடைய பட்டமளிப்பு விழாவுக்கு மட்டுமல்ல என்பதனை தான் தெளிவாக ஏற்கனவே கூறியுள்ளதாக தெரிவித்து, தனது விளக்கமளிப்புகளை முன்வைத்தார். இப்போது ஜனாதிபதி செயலகத்தில் அறிக்கைகளை கோரி விசாரணை நடத்துவது திருடனின் அம்மாவிடம் மை வெளிச்சம் பார்ப்பதை போன்றது என்றும், எந்தவொரு விடயம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு கேட்க முடியும் என்றும், திலக் மாரப்பன கூறியுள்ளார்.
இதேவேளை மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ், இது தொடர்பான விசாரணைகளை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துகொள்ளுங்கள் என்றும், இதனுடன் தொடர்புடைய மூன்றாவது நபரொருவர் இருக்கின்றார் என்றும், எவ்வாறாயினும் இது தொடர்பான விசாரணைகளை ஒரு மாதக் காலத்திற்குள் நிறைவு செய்து மார்ச் மாதமளவில் மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இருதரப்பு நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர், இருதரப்பு விளக்கமளிப்புகளையும் கருத்திற்கொண்டு இந்த வழக்கில் அரச சொத்து முறைகெடு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி செயலாளரான சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதாக நீதவான் அறிவித்தார்.
மேலும் இது தொடர்பில் லண்டனில் உள்ள குறித்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறும், இது தொடர்பில் சகல சந்தேக நபர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு தூதரகங்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகளின்படி இது உத்தியோகபூர்வ பயணம் அல்ல தனிப்பட்ட பயணம் என்பது உறுதியாவதாகவும் நீதவான் திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான வழக்கை ஏப்ரல் 29ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதற்கு நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார்.
ரணில் விக்கிரமசிங்க நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த போது அவருக்கு ஆதரவாக பெருமளவான அரசியல்வாதிகள் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர். நவீன் திஸாநாயக்க, வஜிர அபேவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் அங்கிருந்தனர். அதேபோன்று நீதிமன்றத்திற்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஆதரவாளர்கள் பலரும் கூடியிருந்தனர். இதனால் நீதிமன்றத்திற்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
![]()