உலகம்

தென்கொரியா பொருட்களின் வரியை உயர்த்தும் டிரம்ப்!

தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை தென்கொரியா முறையாகப் பின்பற்றவில்லை என தெரிவித்தே டொனால்ட் ட்ரம்ப் இந்த வரி அதிகரிப்பை அறிவித்துள்ளார்.

இதன்படி, வாகனங்கள், மரம், மருந்துகள் மற்றும் ஏனைய அனைத்து ‘பரஸ்பர வர்த்தகப் பொருட்களுக்கும்’ விதிக்கப்பட்டிருந்த 15 சதவீத வரியானது, இனி 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

உடன்படிக்கையின்படி, அமெரிக்கா தனது வரிகளை விரைவாகக் குறைத்துள்ள போதிலும், தென்கொரிய நாடாளுமன்றம் அந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதில் மந்தகதியில் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து வொஷிங்டனுடன் அவசர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்புவதாகவும் தென்கொரியா கூறியுள்ளது.

இந்தநிலையில், கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்கொரிய தொழில் அமைச்சர் கிம் ஜுங்-க்வான், விரைவில் வொஷிங்டன் சென்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹவார்ட் லட்னிக்-ஐ சந்திப்பார் என கூறப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *