அரசியல் பத்தித்தொடர்… சொல்- 46… சொல்லித்தான் ஆகவேண்டும்… தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ
அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம்
அல்ல – பகுதி V.
(பக்கம்-08)
விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழான முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1989இல் நடைபெற்றது. அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பொறுத்தவரை தமக்குரிய ஒரேயொரு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின்-சாத்தியப்படுத்த வேண்டுமாயின் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் சார்பில் ஒரேயொரு தமிழ்க் கட்சிதான்-தமிழர் அணிதான் போட்டியிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்க் கட்சிகள்-அணிகள் போட்டியிட்டால் தமிழர்களுடைய வாக்குகள் பிரிந்து சிதறி தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் பறிபோய்விடக்கூடிய ஆபத்துண்டு.
1989 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி- ஈ பி ஆர் எல் எப்-ரெலோ-ஈ என் டி எல் எஃப் ஆகிய தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தின்கீழ் ஒரே அணியாகப் போட்டியிட்டமையால் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டது. அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ரெலோ சார்பு பிரதிநிதி ஜெ திவ்வியநாதன் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.
அடுத்த தேர்தல் 1994 இல் நடைபெற்றது. அப்போது தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் செயற்பட்டுக் கொண்டிருந்த கட்சிகளாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி-அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்-ஈ பி ஆர் எல் எப்-ரெலோ-புளொட்-ஈரோஸ்-ஈ பி டி பி ஆகியவை விளங்கின.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்க் கட்சிகள் தனித்தனியே போட்டியிடாமல் ஒரே அணியில் பொது சின்னமொன்றின் கீழ் 1989இல் நடந்தது போல் போட்டியிடும்படியும்-அப்படிப் பொதுச் சின்னமொன்றின் கீழ் ஒன்றிணைய விரும்பாத தமிழ்க் கட்சிகள் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் நிலைமையை உணர்ந்து இணைய விரும்புகிறவர்களுக்கு வழிவிட்டு போட்டியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளும்படியும்-அதுவும் சாத்தியப்படாத பட்சத்தில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் புரிந்துணர்வுடன் போட்டியிடுவதை தவிர்த்து அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதற்காகவும் தமது பிரதிநிதியைத் தாமே தீர்மானித்துக் கொள்வதற்கும் ‘அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம்’ நிறுத்தும் சுயேச்சைக் குழுவுக்கு வழிவிட்டு ஆதரவு தரும்படியானதொரு நியாயமான-நடைமுறைச் சாத்தியமான-மூலோபாயக் கோரிக்கையை அனைத்துத் தமிழ்க் கட்சிகளிடமும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் முன்வைத்தது.
இதற்காக இப்பத்தி எழுத்தாளரின் தலைமையில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் தேர்தல் நடவடிக்கைக் குழுவொன்று கொழும்பு சென்று அனைத்துத் தமிழ்க் கட்சித் தலைமைப் பீடங்களுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்-ஈ பி ஆர் எல் எப்-ஈ பி டி பி ஆகிய கட்சிகள் பொதுச் சின்னமொன்றின் கீழ் (அது உதய சூரியன் சின்னமாகவிருந்தாலும்கூட) இணைந்து போட்டியிடவும் அது சாத்தியப்படாதபோது போட்டியிடாது ஒதுங்கவும் முன் வந்தன. ரெலோ-புளொட்-ஈரோஸ் ஆகிய கட்சிகள் பொதுச் சின்னத்தில் (உதய சூரியன் சின்னத்தில்) இணைந்து போட்டியிடச் சம்மதித்தபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்கு இணங்க மறுத்தால் தாம் (ரெலோ-புளொட்-ஈரோஸ்) இணைந்து ஒரே அணியில் தனியாகப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தன. அத்துடன் உத்தேச அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கச் சுயேச்சைக் குழுவைத் தமது அணியுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்தன.
ஆனால், தமிழரசுக் கட்சியைத் தலைமைக் கட்சியாகக் கொண்டிருந்த தமிழர்
விடுதலைக் கூட்டணியோ எவரோடும் தான் கூட்டுச்சேரப்போவதில்லையென்றும் அம்பாறை மாவட்டத்தில் தனியே போட்டியிட வேண்டுமென்றும் பிடிவாதமாக இருந்தது. மட்டுமல்லாமல் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பட்டியலின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாவை சேனாதிராசாவை நிறுத்தப் போவதாகவும் தெரிவித்தது.
இந்த இக்கட்டான நிலையில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத் தேர்தல் நடவடிக்கைக் குழு பின்வரும் யோசனைகளைத் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் முன்வைத்தது.
*அம்பாறை மாவட்டத்தில் பொதுச் சின்னமொன்றில் (உதயசூரியன் சின்னத்தில்) போட்டியிட ஏனைய தமிழ்க் கட்சிகள் அனைத்தும் சம்மதம் அளித்திருப்பதால் அதனை ஏற்றுக்கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி அக்கட்சிகளையும் இணைத்துக்கொண்டு போட்டியிடவேண்டும்.
*இதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி மறுத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துப் போட்டியிட்டால் ஏனைய தமிழ் கட்சிகளும் தனித்தனியே போட்டியிடும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் தமிழர்களின் வாக்குகள் பிரிந்து சிதறி அம்பாறை மாவட்டத் தமிழர்களின் ஒரேயொரு பிரதிநிதித்துவமும் பறிபோய்விடக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை எடுத்துச் சொல்லியும் அது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.
*மாற்று யோசனையாக, தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துப் போட்டியிட்டால் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே ஆதரவு தரும் என்றும் தேர்தலில் வாக்குகள் பிரிந்து தற்செயலாகத் தமிழர் பிரதிநிதித்துவம் பறி போய்விடுமாயின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைக்கும் தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத் தமிழர் ஒருவருக்கே வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் முன் வைத்தது.
தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கொழும்பைச் சேர்ந்த நீலன் திருச்செல்வத்திற்கு வழங்கத் தாம் தீர்மானித்து உள்ளதாகக் கூறி இந் நியாயமான கோரிக்கையையும் தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்தது.
இறுதிக் கோரிக்கையாக அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாவை சேனாதிராசாவைத் தவிர்த்து அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரொருவரை நிறுத்துமாறு கேட்கப்பட்டது.
அதனைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் எக்கேடுகெட்டுப் போனாலும் பறவாயில்லையென்றது போன்ற மனோநிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது தீர்மானத்தில் விடாப்பிடியாக இருந்தது.
விளைவு, அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் தலைமை வேட்பாளராக மாவை சேனாதிராசாவை நிறுத்தி தனித்துப் போட்டியிட்டது.
ரெலோ-புளொட்-ஈரோஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ரெலோவின் ‘வெளிச்சவீட்டு’ச் சின்னத்தில் தனி அணியாகப் போட்டியிட்டன.

அம்பாறை மாவட்டத் தமிழர்களின் கௌரவத்தைக் காப்பாற்றவும்-அம்பாறை மாவட்டத் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதி அம்மண்ணைச் சேர்ந்தவராக இருக்கவும்-தமிழர் விடுதலைக் கூட்டணியின் மக்கள் நலனைப் புறந்தள்ளிய தன்முனைப்புடன் கூடிய-அம்பாறை மாவட்டத்தில் அதன் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாவை சேனாதிராசாவை நிறுத்தும் அதன் யாழ் மேலாதிக்க அரசியலுக்கு எதிர்ப்புக் காட்டவும்வேண்டி அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் இப்பத்தி எழுத்தாளரின் தலைமையில் ‘சுயேச்சைக் குழு’ வை நிறுத்தியது.
இத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் தரப்பிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி-ரெலோ, புளொட், ஈரோஸ் இணைந்த அணி-அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கச் சுயேச்சைக் குழு என மூன்று அணிகள் தனித்தனியே போட்டியிட்டதால் தமிழர்களுடைய வாக்குகள் சிதறி அம்பாறை மாவட்டத் தமிழர்களுடைய ஒரேயொரு பிரதிநிதித்துவமும் பறி கொடுக்கப்பட்டது.
இதற்கு அடிப்படைக் காரணமாகவிருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியின் (தமிழரசுக் கட்சியின்) கிழக்குத் தமிழர்களின்-அம்பாறை மாவட்ட தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தின் மீது அக்கறையற்ற யாழ் மேலாதிக்க அரசியல் குணாம்சமேயாகும்.
(தொடரும்…..)
![]()