அண்டனூர் சுரா கட்டுரைகள் தொடர் – 02 …. நினைவுகூரல் மீதான ஒடுக்கம்… அண்டனூர் சுரா

மகர், ஒடுக்குமுறை சாதிய ஏகாதியப்பத்தியத்திற்கு எதிரான அதிர்வுச் சொல். சட்டமாமேதை அண்ணல் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ‘மகர்’ சமூகத்தில் பிறந்தவர் என்பதால் அல்ல. இந்திய மரபுசார் சரித்திரக் கூறுகளைக் காலக்கோடாக வரைகையில் மகர் தவிர்க்க முடியாத வெற்றி குறியீடாக மாறிப் போனதே இதற்குக் காரணம்!
பிளாசிப்போர், பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனி, மகாராஜா ரவீந்திர சிங், ஆங்கிலோ – பேஷாவா போர், இராணுவம்…, இவையாவும் யாவரும் விட்டுச்சென்ற சரித்திரச் சுவடுகளைப் புரட்டுகையில் மகர் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையும் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரே திரளில் வெகுண்டெழுந்த வெற்றி முகமும் ஓர் ஏட்டின் முன், பின் பக்கங்களைக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. 2018 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு அன்று நடந்தேறிய பீமா – கொரேன் கலவரம் உண்மையில் மகர் சமூக மக்களின்மீது ஏவப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிரான கலவரமே ஆகும். இக்கலவரமும் இதற்குப் பிறகான அரசியல், அநீதி, வாக்குவங்கி அரசியல்,..இவை யாவும் மகர் சமூகத்தின் சரித்திரச் சுவடுகளின் கவனத்தையும் கனத்தையும் மேலும் கூட்டியுள்ளது.
பீமா – கொரேன் கலவரத்தின் அதிர்வு இந்தியா முழுமையும் சலனமித்திருந்த அந்நாட்களில் நமது தமிழ்ப் பத்திரிகைகள் மகாத்மா காந்தி வைத்திருந்த மூன்று குரங்குகளைப் போல கண்களை மூடி, காதுகளடைத்து, வாய்ப்பொத்தி பேச மறுத்தது. நமது தமிழ்ப் பத்திரிகைகள் இக்கலவரத்தின் தோற்றுவாய் குறித்தோ அதன் காரணங்கள் தூண்டல், துலங்கல் குறித்து கவலைப்பட என்ன இருக்கிறது? அவர்கள் இதுக்குறித்தெல்லாம் பேச, எழுத ஒரு நடிகையின் கைக்குட்டை அக்கலவரத்தில் குறைந்தப்பட்சம் தொலைந்திருக்க வேண்டும்!
தமிழ்ப் பத்திரிகைகள் பீமா – கொரேன் கலவரத்தைக் கண்ணொட்டி பார்க்காமல் வேறொரு விடயத்தின்மீது எறும்புகளாக படையெடுத்து, ஈக்களாக மொய்த்தன. ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய கவலை அது. ரஜினியின் அரசியல் சாய்வு ஆட்டத்தை எந்த வகையிலெல்லாம் தலைப்புச் செய்தியாகவும் முக்கியச் செய்தியாகவுமாக்கலாமென்று இதழாலர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆங்கில ஊடகங்கள் அப்படி அன்று. பீமா – கொரேன் கலவரத்தைத் தலையங்கமாகவும் வரலாற்று ஒடுக்குமுறையின் கெட்டிப்படுத்தப்பட்ட கலவரம் என்றும் எழுதின.
தி இந்து இதழில் வெளியான ஒரு கட்டுரை “பீமா – கொரேன் நினைவுச்சின்னம், வெறும் ஒரு வரலாற்று நிகழ்வு அல்ல. ஒடுக்கப்பட்டோரின் அடையாளத்தோடு வாழ்தலில் சமஉரிமை கோரும் போராட்டம்” என்றது. இன்னொரு கட்டுரை “இந்துத்துவப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான வெகுண்டெழுதல்” என்றது. மற்றொரு கட்டுரை “பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி, சுதந்திர இந்தியாவிலும் இந்துத்துவமாக தொடர்கிறது” என்றது. மேலும் ஒரு பத்திரிக்கை, “சம உரிமைக்காக நடந்தேறும் சரியான வரலாற்றுத் தவறுகள்” என்றது. கட்டுரையாளர்கள் இந்த ஒடுக்குமுறை கலவரத்திற்கு எதிராகப் பேசியதைப் போல ஆதரவாகவும் பேசியிருந்தார்கள்.
இக்கட்டுரைகளை வாசிக்கையில் எனக்கு ஜப்பானிய திரைப்பட இயக்குநர் அகிரா குரோசவா இயக்கிய, ` RASHOMON (ராஷோமொன்) என்கிற திரைப்படம் நினைவுக்கு வந்தது. இத்திரைபடம் ‘IN A GROVE’ என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இக்கதையை எழுதியவரும் அவரேதான், அகிரா குரோசவா. இப்படத்தின் கதை இதுதான்: ஒரு வழிப்பறி கொள்ளையன் ஒரு சாமுராயைக் கட்டி வைத்து அவனது மனைவியைக் கற்பழிக்கிறான். அவளைக் காப்பாற்ற போராடும் சாமுராய் படுகொலை செய்யப்படுகிறான். அவனது சடலத்தைப் பார்த்தவர்கள் எப்படியெல்லாம் நீதிபதியிடம் சாட்சியமளிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.
வழிப்பறி கொள்ளையன், கற்பழிக்கப்பட்டவள், இறந்து போன சாமுராய் (ஆவியாக ஒரு பெண்ணின் உடலில் இறங்கியதன் வழியே) என்று மூன்று பேரின் சாட்சியங்களும் நீதிபதியிடம் வாக்குமூலமாக முன்வைக்கப்படுகிறது. மூவரும் தன் சுயமரியாதைக்குப் பாதகம் வராதளவிற்கு, மறைத்தாக வேண்டியதை மறைத்து உண்மையும் கற்பனையும் கலந்து, அவரவர் போக்கில் நடந்த சம்பவத்தைச் சாட்சியமளிக்கிறார்கள். இந்தத் திரைப்பட மொழியின் ஒற்றைவரி செய்தி, “எந்தவொரு சம்பவத்தையும் எதிர்கொள்கிறவர்கள், பார்க்கிறவர்கள், எதிர்வினையாற்றுகிறவர்கள் அவர்களது சுயம்கொண்டே அவற்றை அணுகுகிறார்கள்.” பீமா – கொரேன் கிராமத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஆங்கிலோ – பேஷாவா சதுரத் தூண் நினைவஞ்சலிக் கூட்டத்தில் நடந்தேறிய கலவரம் குறித்த கட்டுரைகள் அப்படியானவையே. இந்தக் கலவரத்தின்மீது எழுதப்பட்ட கட்டுரைகள், சொல்லப்பட்ட கருத்துகள் அவரவர் சார்ந்த சமூகத்தின் சுயநலம் அதற்குள் பொதிந்திருந்தது. இருநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்று நிகழ்வைக் காலத்தாலும் தொலைவிலும் மிக தூரத்திலிருக்கும் தமிழர்கள் புரிந்துகொள்ள கூடுதலாக சில வரலாற்றுச் சம்பவங்கள் தேவைப்படுகின்றன.
ஒரு கட்டுரையாளர், “ஆங்கிலேயர்கள் தன் காவற்படையில் மகர் மக்களை சேர்த்துக்கொண்டதைப் போலவே பேஷ்வா மன்னர் இரண்டாம் பாஜிராவ், தன் இராணுவப் படையில் ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்த்துக்கொண்டார்….” என்று சத்தியம் வரிகளாக எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையை வாசித்த எனக்கு வட்டமேசை மாநாடும் அதையொட்டி நடந்தேறிய நிகழ்வுகளும் நினைவுக்கு வந்தன. வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கலந்துகொள்வதை மகாத்மா காந்தி அவர்கள் விரும்பவில்லை. அவர் வட்டமேஜை மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு முன்னதாக இந்திய வைஸ்ராயைச் சந்தித்து, அம்பேத்கர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளக் கூடாது என்று முறையிட்டார். “அம்பேத்கர், மகர் சமூகத்தைச் சார்ந்தவர். மகர் இனத்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல” என்பது காந்தியின் வாதம்.

மகர் இனத்தவர்மீது, காந்திக்குச் சரித்திர புரிதல் இருந்தது. மகர் இனத்தவர்கள் ஆங்கிலேயர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் பதினைந்து முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை நடைப்பெற்ற போர்களில் வெற்றி படைகளுக்குக் காரணமாகவும் இருந்தவர்கள். இந்த உண்மையை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்ட காந்தி அவர்கள் இந்திய வைஸ்ராயிடம் அம்பேத்கருக்கு எதிராக வாதம் புரிந்தார்.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் கால் வைப்பதற்குக் காரணமாக இருந்த போர் பிளாசிப்போர். ஐரோப்பிய கண்டத்தில் பிரெஞ்சு, பிரிட்டன் இவ்விரு நாடுகளுக்கிடையில் யார் பெரியவன் என்று வணிகப்போர் நடைபெற்றதோ அந்தப் போருக்கு எந்தளவிலும் குறையாமல் பிரெஞ்சு – ஆங்கிலேயப் போர் நடைபெற்றது. இப்போரின் முடிவில் பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்து ஆங்கிலேயப் படை வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பிறகு வங்காளம் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்கு கைக்கு மாறியது.
வங்காளத்தை ஆண்ட நவாப் சிராஜ் உத் தவுலா பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி உதவியுடன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியப் படைகளைத் தாக்கினார். அத்தாக்குதலுக்குப் பிறகு இராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய கிழக்கிந்தியப் படை, நவாப் படையைத் தோற்கடித்தது. இது நடந்தேறிய ஆண்டு 1757. இதிலிருந்து சரியாக நூறாவது ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியது. இந்தப் போர் நடந்தேறிய இடம் பிளாசி. இப்போரில் மகர் இனத்தவர்கள் ஆங்கிலேயக் கிழக்கிந்திய படைகளின்கீ்ழ் வீரப் போர் புரிந்தார்கள், போரில் வெற்றியும் பெற்றார்கள்.

மராட்டியத்தில் இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவரான சத்ரபதி வீரசிவாஜி வெற்றிக்குப் பின்னும், அவருக்குப் பிறகு அவரது மூத்த மகனான சாம்பாஜி சிவாஜி தலைமையிலான மராட்டிய போர்களில் மகர் இனத்தவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தன. இச்சரித்திர உண்மையைத் தெரிந்து வைத்திருந்த காந்திஜி அவர்கள் மகர் சமூகத்தில் பிறந்த அம்பேத்கர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வட்டமேசை மாநாட்டில் கலந்துக்கொள்வதை ஏற்க மறுத்தார்.
வட்டமேசை மாநாடு நடைபெறுவதற்கு சில ஆண்டுகளுக்கும் முன்பு அம்பேத்கர் கொரேன் கிராமத்திற்குச் சென்றிருந்தார். அவர் சென்றிருந்த ஆண்டு ஜனவரி 1927. அப்பயணம் அவருக்கு மேலும் சில வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டியது. “அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி அல்ல” என்கிற காந்தியின் குற்றச்சாட்டுக்கானப் பதிலை அவர் கொரேகன் கிராமப் பயணத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார்.
“காந்திஜி சொல்வதைப் போல மகர் இனத்தவர்கள் உயர் சாதியினர் என்றால் மனு தர்மத்தின்படி ஆட்சி செய்த பேஷாவா முதலாம் பாஜி ராவ் ஆட்சியிலும் (1775 – 1851), இரண்டாம் பாஜி ராவ் ஆட்சியிலும் (1851 – 1881) தன் போர்ப் படைகளில் ஏன் மகர் இனத்தவர்கள் போர்வீரர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படவில்லை?” அம்பேத்கரின் இக்கேள்விக்கு காந்திஜியிடம் பதில் இருந்திருக்கவில்லை.
பீமா – கொரேன் கலவரம் குறித்து ஒரு வரலாற்றுத்துறை நண்பரிடம் விவாதித்தேன். அவர் கேட்டார். “ஒரு இந்திய மன்னருக்கு எதிராக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றியை மகர் இனத்தவர்கள் கொண்டாடுவது சரியா?” இக்கேள்வி அவரது கேள்வி அல்ல. இந்துத்துவ மனநிலையின் அடிநாதக் கேள்வி. இதற்கு, பீமா – கொரேகன் கலவரம் சொல்லும் பதில் என்ன?
இந்துத்துவவாதிகள் இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு விதமான அடிமைச்சிக்கலிலிருந்து மீண்டுவரும் நிலைக்கு ஆட்பட்டிருந்தார்கள். ஒன்று பிரிட்டிஷாரின் ஏகாதிபத்தியம். மற்றொன்று தேசியம். இதைத்தான் மறைந்த எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி, “இந்துத்துவவாதிகள் ஒரே நேரத்தில் கோபர்நிகஸ் காலத்துடனும் ஐன்ஸ்டீன் காலத்துடனும் வாழக்கூடியவர்களாக இருந்தவர்கள்” என்றார்.
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களின் ஆட்சியை முறியடிக்கும் தேவை இந்துத்துவவாதிகளுக்கு இருந்தது. அதேநேரம் இவர்களது போர்ப்படைகள் சுல்தானிடம் எடுபடவில்லை. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வியாபாரம் செய்யும் பொருட்டு இந்தியாவிற்குள் வந்தார்கள். அவர்கள் சுல்தான்களிடம் போரிட்டு வெற்றியும் பெற்றார்கள். இப்போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் உயர்சாதி இந்துக்கள். இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, உயர்சாதி இந்துக்கள் ஆங்கிலேயப் படையுடன் கைக்கோர்ப்பது தவறில்லை என வாதிடும் அவர்கள் மநுஅதர்ம ஆட்சியை வேரோடு களைய ஒடுக்கப்பட்ட சாதியினர் ஆங்கிலேயப் படையுடன் கைகோர்த்தது தவறு என்று வாதாடும் போக்கு தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. இன்னும் எளிமையாகச் சொன்னால் இந்துத்துவவாதிகளுக்கு இந்தியா முழுவதும் வியாப்பித்திருந்த சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, பிரிட்டிஷாரின் வருகை தேவையாக இருந்தது.
பக்கிங் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவல் இதைத்தான் உரக்கப் பேசுகிறது. நாவலின் படி, வங்காளத்தில் சுல்தான் ஆட்சி நடக்கிறது. சுல்தான் ஆட்சிக்கு எதிராக இந்து இளைஞர்கள் கூடுகிறார்கள். நாவலின் கதாநாயகன் பவாநந்தன் தலைமையில் ‘வந்தே மாதரம்’ பாடிக்கொண்டு சுல்தான் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்கள். சுல்தான் படையை இந்து இளைஞர்களால் முறியடிக்க முடியவில்லை. ஆகவே அவர்கள் ஆங்கிலேயர்களுடன் கைக்கோர்க்கிறார்கள். இரு படைகளும் சேர்ந்து சுல்தான் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். இந்நாவலில் இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் ஓரிடம் மிக முக்கியமானது. “சுல்தான் ஆட்சிக்கு எதிராக ஆங்கிலேயர்களிடம் கைக்கோர்கிறோமே?” என ஒரு கதாபாத்திரம் கேட்க, அதற்கு மற்றொரு பாத்திரம், “ஆங்கிலேயர்களிடம் ஒப்பிடுகையில் சுல்தான்கள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியவர்கள்…” என்று கூறும்.
இதேபோன்றதுதான் மைசூர். மைசூர் சமஸ்தானம் திப்புசுல்தான் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. அவனது ஆட்சி ஆங்கிலேயப் படைகளால் முற்றுக்கு வந்தது. இங்கு ஆங்கிலேயப் படையுடன் கைக்கோர்த்து நின்றவர்கள் உயர்சாதி இந்துக்கள். இந்த இஸ்லாமியத்திற்கு எதிரான ஆங்கிலேயர்களின் வெற்றியை இந்துத்துவா தன் வரலாற்றுப் பக்கத்தில் பொன் எழுத்துகளால் பொறித்து வைத்திருக்கிறது. இந்திய உள்நாட்டு போரில் இந்துக்கள் ஆங்கிலேயர்களிடம் கைக்கோர்த்து பல வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அப்படியானதுதான் மூன்றாம் மராட்டியப் போர். ஆனால் இப்போர் குறித்த வரலாற்றுப் பதிவுகளுக்கு மராட்டியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க காரணம், இப்போரில் சுல்தான்களுக்குப் பங்கில்லை.
பேஷவா ஆட்சி என்பது, உயர்சாதி இந்துகளால் நடத்தப்பட்ட மநுஅதர்மம் ஆட்சி. இங்கு
நடைபெற்ற மூன்றாம் மராட்டிய போர் பேஷ்வா – ஆங்கிலேயர் இருவருக்கிடையில் நடந்தேறியது. இப்போரில் ஆங்கிலேயர்களை எதிர்க்க பேஷ்வா கட்டமைத்த இராணுவம் மகர் இனத்தவர்களைத் தன் போர்ப்படையில் சேர்த்திருக்க வேண்டும். அவர்கள் சூத்திரரர்கள் என்றும் இவர்களுக்குப் போர்ப்படை ஆயுதமேந்தும் தகுதி மநுதர்ம சாஸ்த்திரத்தின்படி கிடையாது என்று புறக்கணிக்கப்பட்டார்கள். போர்க்கலையில் சிறந்தவர்களான இவர்களை ஆங்கிலேயர்கள் தன் போர்ப்படையில் சேர்த்துக்கொண்டது. பேஷ்வா படைக்கு எதிரான போரில் வெற்றியும் பெற்றது. இப்போரில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள் மகர் இனத்தவர்கள்.
இந்தப் போரின் வெற்றி அது குறித்து நினைவுகூர்தல் இந்துத்துவத்தைத் தூக்கிப்பிடிக்கும் எல்லாரையும் கோபம் மூட்டச் செய்கிறது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செண்பகராமனால் முதலில் முழக்கமிடப்பட்டு பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் பிரபலமடைந்த ‘ஜெய்ஹிந்த்’ என்கிற முழக்கச் சொல் தோன்ற ‘பீமா – கொரேன்’ ஒரு காரணம். பீமா – கொரேன் வெற்றிக்குப் பிறகு மகர்கள் வெற்றியின் முழக்கமாக ‘ஜெய் பீம்’ முழங்கினார்கள். ஒடுக்குமுறைக்கு எதிரான வெற்றியின் அடையாளச் சொல்லாக அது மாறியது. இச்சொல்லுக்கு எதிராக அல்லது நிகராக ஒரு சொல், இந்து சனாதனவாதிகளுக்குத் தேவைப்பட்டது, அதுவே ‘ஜெய்ஹிந்த்’.
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி மகர் சமூகத்திற்கு எதிரானவர் அல்ல. முகலாய ஆட்சியை முறியடிக்கையில் மகர் இனத்தவர்கள் சிவாஜி படையில்தான் இருந்தார்கள். இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சிவாஜி, இந்து சாம்ராஜ்யம் நிறுவினாலும் அவருக்குப் பின்னே வந்த அவரது மூத்த மகன் சாம்பாஜி முகலாயர்களிடம் தோற்று நிர்க்கதியாக நின்றான். முகலாயர்களை வீழ்த்தி இந்து சாம்ராஜ்ஜியம் அமைத்திருந்த சிவாஜி, அவருக்குப் பிந்தைய வாரிசுகளால், அந்த ஆட்சியை தற்காத்துக்கொள்ள முடியவில்லை. மராட்டிய ஆட்சி என்கிற பெயரில் மநுஅதர்மம் ஆட்சியாக நடத்தியதும், ஒடுக்கப்ப்ட மக்களுக்கு கல்வி, வேலை, இராணுவப் பணி மறுக்கப்பட்டதுமே அந்த ஆட்சி சரிய காரணமாக அமைந்தது.
சாம்பாஜி சிவாஜியால் தோற்கடிக்கப்பட்ட சுல்தானால் கொன்றொழிக்கப்பட்டார்.
அவரது உடல் எங்குத் தேடியும் கண்டெடுக்கமுடியவில்லை. பிறகு ஓர் ஆற்றாங்கரையில் அழுகிய நிலையில் உடல் வேறு, கால் வேறாகக் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலைக் கண்டெடுத்து மரியாதைச் செய்து அடக்கம் செய்தவர் மகர் இனத்தவர் கோவிந்த் கைய்க்வாட். சிவாஜியின் படையில் பணியாற்றிய விசுவாசத்தின் பேரால் அதை அவர் செய்திருந்தார். அவருக்கு நினைவுச்சின்னமும் எழுப்பினார். காலவோட்டத்தில் கோவிந்த் கைய்க்வாட் இறந்ததும் மகர் இனத்தவர்கள் சாம்பாஜி கல்லறை இருக்கும் அதே ஊரில் கோவிந்த் கைய்க்வாட்டுக்கும் நினைவுச்சின்னம் எழுப்பினார்கள். இருவரின் நினைவுகளையும் ஒரு சேரக் கொண்டாடினார்கள் மகர் இனத்தவர்கள்.
சாம்பாஜி மன்னரின் வரலாறு பற்றி பேசுகையில் கோவிந்த் கைய்க்வாட்டும் குறித்து பேசுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகியிருந்தது. மேலும் சத்ரபதி சிவாஜி முகலாயர்களை வீழ்த்தி இந்து சாம்ராஜ்ஜியம் அமைத்ததை வரலாறு பெருமை பேசுவதற்கிடையில் அவரது மூத்தமகன் முகலாயர்களால் வீழ்த்தப்பட்டு சாம்பாஜியின் அழுகிய உடல் ஆற்றாங்கரையில் கண்டெடுக்கப்பட்ட வரலாறும் பேசப்படுகிறது.
மராட்டியத்தில் இந்து சாம்ராஜ்ஜியம் கட்டமைக்க நினைப்பவர்கள் சிவாஜியையும், அவர்களுக்கு எதிர்முகப்பிலிருக்கும் மகர் இனத்தவர்கள் சிவாஜியின் வாரிசு சாம்பாஜியையும் உயரத் தூக்கிப் பிடித்தார்கள். இந்த முரணான முன்னெடுப்புகள் மராத்தியர் – மகர் இருவருக்கிடையில் தீராப் பகையை வளர்த்தெடுத்தன. இந்தப் பகை அவ்வப்போது இரு சமூக மக்களுக்கிடையேயான பதட்டத்தை வளர்த்தது.
பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் போர்ப்படையில் சிப்பந்திகளாகப் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே உச்சப்பட்ச மரியாதை இருந்தது. மேலும் அவர்களுக்கு மட்டுமே கட்டாயக் கல்வி, நல்ல உணவும், சம்பளம், இழப்பீடு,.. உறுதிபடுத்தப்பட்டன. ஆகவே மகர் இனத்தவர்கள் போர்ப்படையில் தொடர ஆர்வம் காட்டிவந்தார்கள். அவர்களின் வளர்ச்சியைத் துண்டிப்பதாக மராட்டிய மண்ணில் நிறுவப்பட்ட மராட்டிய ஆட்சி இருந்தது.
இதேக் காலத்தில் பஞ்சாப் பகுதிகளை ஆண்டவர் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங். இவரது படையின்கீழ் பணியாற்ற மகர் இனத்தவர்கள் ஆர்வம் காட்டினார்கள். மகாராஜா ரஞ்சித் சிங் அவர்களை இந்து மதத்திலிருந்து சீ்க்கிய மதத்திற்கு மாற்றி அவர்களைத் தன் படையின்கீழ் இணைத்துகொண்டார் என்பது இது தொடர்பான வேறொரு செய்தி.
மகர் இனத்தவர் தங்களைப் பேஷ்வா படையில் சேர்த்துக்கொள்ள தொடர்ந்து போராடிக்கொண்டு வந்தார்கள். தீண்டத்தகாதவர்கள் ஆயுதம் எடுக்க தகுதியற்றவர்கள். அவர்களுக்குக் கல்வி கிடைத்திடக்கூடாது. இப்படியான ஒடுக்குமுறை தலையெடுக்கையில் மகர் இனத்தவர்கள் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின்கீழ் இணைய வேண்டிய அவசியம் நேரிட்டது.
மராட்டியப் போர் பேஷாவா – ஆங்கிலேயர்களுக்கிடையில் மூன்று முறை நடந்தேறியிருக்கிறது. கடைசிப் போரில் பேஷ்வா தரப்பில் இருபதாயிரம் பேர். ஆங்கிலேய தரப்பில் எண்ணூற்று முப்பது நான்கு பேர். இதில் ஐநூறு பேர் மகர் இனத்தவர்கள். இப்போரில் ஆங்கிலேயப் படை வெற்றி பெற்று இந்து சாம்ராஜ்ஜியத்தின் பெயரால் நடைபெற்ற மராட்டிய ஆட்சி முடிவுக்கு வந்தது. மகர் இனத்தவர்கள் அங்கம் வகித்த ஆங்கிலேயப் படை வெற்றி பெற்ற நாளான ஜனவரி 1, 1818 வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறது.
பொதுவாக எந்த போர் முடிவிலும் போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு ஸ்தூபி எனும் நினைவுத்தூண் எழுப்புவது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வழக்கமாக இருந்து வந்தது. அப்படியாகத்தான் போர் நடந்தேறிய இடத்தில் ஒரு சதுரத் தூண் எழுப்பியது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி. அந்தத் தூணில் போரில் மரணமுற்றவர்களின் பெயர்களை வடிக்கிறது. அந்நாட்கொண்டு மகர் இனத்தவர்கள் போரில் தன் வாரிசுகளைப் பறிக்கொடுத்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி வந்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். நினைவுத்தூண் என்பது இறந்தவர்களின் நினைவுச்சின்னமே தவிர அது வெற்றியின் அடையாளம் அல்ல. ஆனால் மராட்டியர்கள் அதைப் பார்ப்பது மகர் இனத்தின் வெற்றி சின்னமாக!
இதுபோன்ற நினைவுத் தூண்கள் இந்தியாவில் நிறைய உள்ளன. புதுடெல்லியில் நிறுவப்பட்டிருக்கும் இந்திய கேட் இவ்வகையானதே. முதல் உலகப்போரில் பங்கேற்று கிழக்கிந்திய கம்பெனிக்காக உயிர்த்துறந்த இந்தியர்களுக்கு அஞ்சலி செலுத்தும்பொருட்டு எழுப்பப்பட்டது. இன்றைக்கு அவ்விடம் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளம். அப்படியான அடையாளம்தான் பீமா – கொரேகன் நினைவுத் தூண். இந்தத் தூண் எழுப்பப்பட்டு இருநூறாவது ஆண்டின் நினைவு கூடுகை என்பதால் கூட்டம் எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகமாக இருந்தது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் மராட்டிய அரசு கலவரத்தைத் தூண்டியிருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் இல்லாமல் அந்த ஆண்டு இப்படியான திடீர் கலவரம் நிகழக் காரணம்? இந்துத்துவாவின் தலைமையிடம் குஜராத். அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் தலித் இளையத் தலைவர் ஜிக்னேஷ் மெவானி வெற்றி பெற்றார். இந்த வெற்றி ஆளுங்கட்சியின் வெற்றி முகத்தைப் பெரிதும் சரித்திருந்தது. இந்தச் சரிவு அடுத்த நடக்கவிருந்த கர்நாடக சட்டசபைத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல்களைப் பாதித்துவிடக் கூடாது என்று பீமா – கொரேன் கலவரத்தை இந்துத்துவம் நடத்தி முடித்திருக்கிறது.
இந்த இடத்தில் கனடா தத்துவ மேதை ‘அயன் ஹாங்கிங்’ சொன்ன கூற்று நினைவுகூரத் தக்கது. இவர் நூற்றாண்டுகளின் அரசியலைக் கணித்தவர். “பதினெட்டாம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் மக்கள் உடலின்மீது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துவார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மக்கட்தொகை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடக்கும். இருபதாம் நூற்றாண்டின் இலக்கு ஒன்றுதான். மக்களின் நினைவுகூர்தலைக் கட்டுப்படுத்துதல்.” மகர் சமூக எழுச்சிப் போராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கிறது.
மகர் சமூகத்தினர் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறவர்கள். குறிப்பிடும்படியான வெற்றியும் பெற்றவர்கள். அவ்வெற்றியின் அடையாளத்தில் ஒன்றுதான் பீமா – கொரேன் நினைவுத் தூண். அத்தூணின்கீழ் அவர்கள் சங்கமிக்கையில் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாகத்தான் ஒன்று திரள்கிறார்களே தவிர தங்களை அவர்கள் உயர்சாதி இந்துக்களாக ஒரு காலமும் பாவித்துக்கொண்டதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர் ஒடுக்குமுறைக்கு உள்ளான சில சாதிய சமூகங்கள் அவர்களை வழிநடத்தும் தலைவர்களின் பெயரால் தங்களைத் தாங்களே உயர்ந்த சாதிகள் என அறிவித்துக்கொள்ள முனைகிறார்கள். யார் யாரைவிடவெல்லாம் நாங்கள் உயர்சாதி எனக் காட்டிக்கொள்ள முனைவது சாதிய விடுதலைக்கு வழிவகுக்குமா?
பீமா – கொரேகன் நினைவுத்தூண் எல்லாருக்குமாகச் சொல்லும் செய்தி ஒன்றுண்டு. ‘நான் ஒடுக்கப்பட்டவன் என்று ஒரு வாய் உச்சரிக்கையில் வெட்கப்பட வேண்டியது காதுகள்தானே தவிர, வாய் அல்ல.”
![]()