கட்டுரைகள்

தமிழகத்துடனான உறவு கானல்நீராகிறதா?… நியூசிலாந்து சிற்சபேசன் 

நியூசிலாந்து சிற்சபேசன்

“உப்புக்கரிக்கும் கடல் நம்மைப் பிரித்தாலும், பொதிகை மலையிலிருந்து வீசுகின்ற தென்றல் சற்று வேகமாக வீசினால், ஈழவள நாட்டிலே எங்களையும் கொஞ்சித் தாலாட்டும்” என ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டிலே சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை உருகினார்.

இந்தியா – இலங்கை தமிழரின் பிணைப்பு புவியியல் ரீதியானது மட்டுமல்ல. உணர்வுபூர்வமானதுமாகும்.

அதற்கு, முதலமைச்சர் எம் ஜி இராமச்சந்திரன் தலைமையில் 1981ல் மதுரையில் நடைபெற்றஇந்தியா- இலங்கை இணைப்பில் ஆர்வம் காட்டும் தேச தலைவர்கள்: வரலாற்று  குறிப்புக்கள் - தமிழ்வின் உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் நிறைவுவிழா மேடையும் சாட்சியாகும். பிரதமர் இந்திரா காந்தியுடன், அ. அமிர்தலிங்கம், சௌ. தொண்டமான், செ.இராசதுரை உள்ளிட்ட தலைவர்களும் மேடையை அலங்கரித்திருந்தனர். அஃது, உணர்வுபூர்வமான தொடர்பாடலையும் வெளிப்படுத்தியது.

இந்தியா – இலங்கை தமிழருடைய தொடர்பாடல் அரசியல்வாதிகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. அறிஞர்கள், சமூகப்பெரியார்கள், சமயப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் என பல்வேறுநிலைகளிலும் பரந்து விரிந்ததாகக் காணப்பட்டது.

அரசியல்வாதிகளுடனான தொடர்பு கட்சி வேறுபாடுகளைக் கடந்ததாகவே காணப்பட்டது. அத்துடன், அஃது தலைவர்கள் மட்டத்திலான தொடர்பாக சுருங்கிவிடவில்லை. வெவ்வேறு மட்டங்களிலும் உள்ளவர்களுடனும் தொடர்பு பேணப்பட்டது.

அத்தகைய தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.

கொடுக்கல் – வாங்கல் இருந்தது. பிச்சல் – பிடுங்கல் இருந்தது. ஆனால், அவை எதுவும் அத்துமீறவில்லை. மூன்றாம் தரப்பு மூக்கை நுழைக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால், அன்னியோன்யமாகவே உறவைப் பேணிக்கொள்ள முடிந்தது.

இலங்கைத் தமிழரைப் “பிறத்தியாராக” தமிழகம் கருதியதேயில்லை.

சைவசமயத்திலே அறுபத்திமூன்று நாயன்மார்கள் என்று கொண்டாடப்படுவோரில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த, திருஞானசம்பந்தர் முதன்மையானவராகும். திருக்கேதீஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வரத் தலங்கள் குறித்துத் தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை அண்டிய தீவுகளிலிருந்து, இராமேஸ்வரம் ஆலயத்துக்கு பால் விநியோகம் நடைபெற்றிருக்கின்றது.

யாழ் குடாநாட்டிலிருந்து சிறியபடகுகளில் போய் “நைட் ஷோ” பார்த்துவந்தவர்களுடைய கதைகளும் உண்டு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் யாழ்நூல் தந்த சுவாமி விபுலானந்தர் பேராசிரியராக மிளிர்ந்தார். யாழ் இராமநாதன் கல்லூரியில் மகாராஜபுரம் சந்தானம் அதிபராக வரலாறு படைத்தார்.

யாழ்ப்பாணப் பாடசாலைகளில் இந்திய ஆசிரியர்கள் சேவையாற்றினர். இந்தியாவிலே பெயர்சொல்லத்தக்க பதவிகளை யாழ்ப்பாணத்தவர் வகித்தனர். திருவனந்தபுரத்தில் நீதிபதியாகச் செல்லப்பாபிள்ளை, சென்னை எழும்பூர் முனிசிபல் தேர்தலிலே மங்களம்மாள், மதுரையில் மருத்துவராக சுந்தரம்பிள்ளை எனப் பட்டியல் நீளமானதாகும்.

இடுக்கண் களைவதாம் நட்பு என துன்பம் நேர்கையிலெல்லாம் இந்தியா துணையாகியிருக்கின்றது.

காலனித்துவக் காலத்தில் நல்லைநகர் ஆறுமுகநாவலர், தமிழையும் சைவத்தையும் பேணிப்பாதுகாக்க, தமிழகம் சென்றார்.

1948க்குப் பின்னர் பிரஜாவுரிமை விவகாரம், 1983 இனக்கலவரம், 2022 பொருளாதாரச் சரிவு, 2025 டித்வா புயல் என இந்தியா தோள் கொடுத்த வரலாறு நீண்டதாகும்.

1980களில் இந்தியாவின் அரவணைப்புடனேயே ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றது.

அன்றையகாலத்தில், தமிழ்நாட்டிலிருந்து கிடைத்த அனுசரணை எழுத்தில் வரையறுத்துவிடக் கூடியதல்ல. கரையோரப்பகுதிகளில் மீனவ சமூகத்தினர் உதவினர். விவசாயிகள், நிலச்சுவான்தார்கள், வர்த்தகர்கள் போன்றோரிடமிருந்து இடவசதி, பொருளுதவி என்பன கிடைத்தன. அதிகாரிகளிடமிருந்து, விதிமுறைகளைத் தாண்டிய, அனுசரணை கிடைத்தது. கல்விக்கான வாயில்கள் அகலத் திறந்தன. இவ்வாறாக, தமிழ்நாட்டில் கிடைத்த கரிசனையான அரவணைப்புக்கு எல்லையே இருக்கவில்லை.

இலங்கைத் தமிழர் அவலத்தை முன்னிறுத்தி இருபது வரையானோர் தமிழ்நாட்டில் தீக்குளித்துள்ளனர். அஃது, குறைத்து மதிப்பிடக்கூடாத தியாகமாகும்.

முதன்முதலிலே, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தஞ்சாவூரிலேயே அமைந்தது.

முதன்முதலிலே, இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டசபையிலேயே நிறைவேற்றப்பட்டது.

மறுவளத்தில், இறுதியுத்தத்தின்போது தமிழக ஆட்சியாளரின் மெத்தனம், இந்தியா தர்மசத்திரம் அல்ல என்னும் நீதிமன்றத்தின் உச்சாடனம், இந்திய அமைதிப்படை, மீனவர் பிரச்சினை போன்றவை இலங்கை தமிழரிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவன என்பது மறுப்பதற்கில்லை.

இந்தியாவின் ஈடுபாடு தொடர்பில், “சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்னும் நக்கல் நையாண்டி இலங்கை தமிழரிடையே உண்டு.

தன்னுடைய நலன்களைப் பேணிக்கொள்வதே இந்தியாவின் நோக்கம் என்னும் குற்றச்சாட்டு உயிர்ப்புடன் பேணப்படுகின்றது.

இலவசங்கள் என்பது யதார்த்தம் அல்ல. ஏதோவொரு நோக்கத்துடனேயே, ஒவ்வொரு செயலும் முன்னெடுக்கப்படுவதாகும். “தனக்கு மிஞ்சியதே தனம்” என்பதே பேச்சுவழக்குச் சொல்லாடலாகும்.

அந்தவகையிலே, தன்னுடைய நலன்களைத் துறந்துவிட்டே இந்தியா உதவவேண்டும் என்னும், இலங்கைத் தமிழரின், எதிர்பார்ப்பே கேள்விக்கு உட்படுத்தப்படவேண்டியதாகும்.

இந்தியா, சர்வதேச ரீதியாகக் கவனிப்பைப் பெறுகின்ற, ஒன்றரை பில்லியன் சனத்தொகையைக் கொண்ட தேசமாகும்.

இந்தியாவின் 72 மில்லியன் தமிழரும், முப்பது மைல் உப்புக்கரிக்கும் கடலால் பிரிக்கப்பட்ட, மூன்று மில்லியன் இலங்கைத் தமிழரும், காலதேசவர்த்தமானத்தைக் கடந்த தொடர்பைக் கொண்டவர்களாகும்.

அஃது, அண்மைகாலமாகவே தொய்வடைகின்றது.

ஒருகாலத்தில், இந்தியப் பிரதமர் முதல் தமிழக முதலமைச்சர் வரை நேரடியான தொடர்பை, இலங்கை தமிழ் தலைவர்கள் பேணினார்கள். அதுவெல்லாம் பழங்கதையாகிவிட்டது.

தமிழக முதலமைச்சருடன் பத்தோடு பதினொன்றாக நின்று “செல்பி” எடுப்போரும், தமிழக அரசியல்வாதிகளைத் தொடர்புகொள்ள “ஏஜன்டை” தேடுவோருமே இலங்கைத் தமிழரின் “தலைவர்களாக” தம்பட்டமடித்துக் கொள்கின்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலை மாறவேண்டும்.

தமிழகத்துடன் ஆத்மார்த்தமான தொடர்பாடலை, இலங்கைத் தமிழ் தரப்பு, வளர்த்துக் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இல்லாவிடில், தமிழக – இலங்கைத் தமிழ் உறவு கானல்நீராகிவிடுவது தவிர்க்க முடியாததாகும்.

Loading

One Comment

  1. தமிழ்நாட்டுத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி கசப்பை ஏற்படுத்துவோருக்கு மத்தியில் உங்கள் கட்டுரை பாலைவனத்தில் பசுஞ்சோலை போன்று அமைகிறது. இருநாட்டுத் தமிழருக்கும் இடையேயான தொப்புள் கொடிஉறவை செயற்கைக்கோள் வழியாக எடுத்த படம் காட்டினாலும் இந்த கட்டுரையைவிட சிறப்பாக வேறு எவராலும் எடுத்தியம்ப இயலாது. உலகத் தமிழர்களின் உறவுப்பாலம் உங்களைப் போன்றோரால் கட்டிக் காக்கப் படுகிறது என்பது மறுக்க முடியா உண்மை. வாழ்த்துகள்.

    சங்கர சுப்பிரமணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *