கஜேந்திரகுமார் பக்கத்தில் இருந்தால் பிரச்சினை வரும்; அவரது இடத்தை உடன் மாற்றவும் – அர்ச்சுனாஎம்.பி.

பாராளுமன்றத்தில் தனக்கு பக்கத்தில் வலது பக்கமாக அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறும், இல்லையேல் அவர் தனது பக்கத்தில் இருப்பதால் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தன்னால் பொறுப்புக் கூற முடியாது என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே அர்ச்சுனா எம்.பி இவ்வாறு கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் வார்த்தைப் பிரயோகங்களை செய்துள்ளமை தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பிப்பதாகவும், இதன்படி கடந்த டிசம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்கு தவறாக வார்த்தைப் பிரயோ
கங்களை பயன்படுத்தி ஒருமையில் மிகக் கேவலமாகவும், பொதுமக்களால் கேட்க முடியாதவாறு வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தி தன்னை இழிவாக பேசியதாகவும் சபையில் முறையிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அர்ச்சுனா எம்.பி. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை கேவலமாக பேசும் போது, பாராளுமன்றத்தில் அவருக்கு அருகில் எனது ஆசனம் இருப்பது தொடர்பிலும் பேசினார் என்றும், இது பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்களிடையே தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் அமைந்துள்ளது என்றும், இதனால் இன்றில் இருந்து எனது ஆசனத்திற்கு வலது பக்கத்தில் அமைந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் ஆனத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோருவதாகவும், தொடர்ந்தும் இவர் எனது வலது பக்கத்தில் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் என்னால் பொறுப்புக்கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான ஒழுக்காற்று குழுவில் அங்கம் வகிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தகுதியற்றவர் என்றும், இதனால் அந்த குழுவில் இருந்தும் அவரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.
![]()