டித்வா சூறாவளி ஏற்படுத்திய அனர்த்தப் பேரழிவுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்; கடமைப் பொறுப்பைத் தட்டிக் கழித்தவர்கள்…. சின்னத்தம்பி குருபரன்

இலங்கையில் 2025 நவம்பர் மாதம் இறுதி நான்கு நாட்களில் ஏற்பட்ட அனர்த்தம் நாடு பூராகவும் பாரிய பேரழிவை ஏற்படுத்திச் சென்றிருந்தது. இயற்கை அனர்த்தங்களைத் தடுத்துவிட முடியாது. ஆனால் அழிவின் இழப்புக்களைக் குறைக்க முடியும். டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் அர்ப்பணிப்பு, விசுவாசம், நாட்டு மக்கள் நலன் கருதிச் செயற்பட்டிருந்தால் பல இழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம். நாட்டில் பல அதிகாரிகள் தமது பதவி அதிகாரத்தையும் பலத்தையும் நிலை நிறுத்தச் செயற்படுகின்றார்களே தவிர, நாட்டினதும் மக்கள் நலனும் கொண்டவர்களாக இல்லை என்பதே நிதர்சனம்.
ஜனாதிபதியும் அமைச்சர்களும் அறிவுறுத்தல்களை வழங்கலாமே தவிர எல்லாச் சந்தர்ப்பங்களிலும் களத்தில் நின்று பணியாற்ற முடியாது. நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாகாணம், மாவட்டம், பிரதேசங்கள் தோறும் அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அவசர சூழ்நிலை அறிந்து, அவசர நிலைக்கு முகம் கொடுத்து நாட்டையும் நாட்டு மக்களையும் அழிவுகளில் இருந்து பாதுகாக்கத்தக்க வகையில் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த முயற்சிக்க வேண்டும். கடந்த அனர்த்தத்தில் இதில்தான் பல தவறுகள் நடந்திருக்கின்றன.
வளி மண்டலத்தில் வங்காள விரிகுடாக் கடல் பரப்பின் கீழ் அடுக்குகளில் அழுத்தம் ஒன்று இருக்கிறதென்பது ஆபத்தை (Hazard) உணர்த்தும் நிலையாகும். வளிமண்டலவியல் திணைக்களத்தின் இந்த அறிவித்தலைக் கேட்டவுடன் இடர் (Risk) ஒன்று நிகழலாம் என உணர்ந்து வானிலை அறிக்கைகளை எதிர்பார்த்து அதற்கு முகம் கொடுக்கும் தயார்நிலைச் செயற்பாட்டில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இறங்க வேண்டும். இறுதிவரைப் பார்த்துக் கொண்டு இருப்பதல்ல. இதுவே அவசர நிலமைகளுக்கான நடைமுறையுமாகும். நிலப்பரப்பில் ஏற்படும் நில நடுக்கங்களைத் தவிர எந்தவொரு இடரும் உடனடியாக ஏற்படுவதல்ல.
படிப்படியாக அறிகுறிகளை உணர்த்தி, கட்டமைப்பைக் குலைத்த பின்னரே பேரிடரை ஏற்படுத்தும். அப்பேரிடரினால் ஏற்பட்ட அழிவு பேரழிவாக இருப்பின் அதுவே அனர்த்தமாகும். இளற்கையில் ஏற்படும் எல்லா இடர்களும் பேரிடருமல்ல. பேரழிவுமல்ல பலவற்றுக்கு மீளளிப்புச் செய்ய முடியாத வகையில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை மாத்திரமே அனர்த்தங்களாகும். அந்த வகையில் நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்டது பாரிய அனர்த்தமாகும்.

அரச நிறுவனங்களும் பொதுநல அமைப்புக்களும் ஆபத்து, அபாயம் என்பவற்றில் இருந்து சேதத்தையும் இழப்பினையும் குறைக்கும் வகையில் விழிப்புணர்வு, அதற்கு முகம் கொடுப்பதற்கும் (Response) தயார்படுத்தலுக்குமான (Preparedness) பயிற்சிகளை வழங்குதல் வேண்டும். இடர் ஒன்றின்போது நாட்டுக்குள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதுக்காரணிகள் பற்றிய தரவுகள் தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் பேரழிவுத் தணிப்பு (Mitigation), தடுப்புக்கான (Prevention) செயற்பாடுகளில் இறங்க வேண்டும். இடரொன்று ஏற்படுவதற்கு முன்னர் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பிரதேசங்களுக்குச் சென்று முன்னெச்சரிக்கையை (Early Warning) ஏற்படுத்தி அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிப் (Evacuation) பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். இதற்கு முப்படைகளைப் பயன்படுத்தலாம்.
இந்த நடவடிக்கைகள் யாவும் இலங்கையில் குழந்தைப் பருவத்திலேயே காணப்படுகிறது. அதனால்தான் நடந்து முடிந்த அனர்த்தத்தினால் பேரழிவு ஊற்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகள் ஒதுக்கப்பட்ட நிதியை வருடத்துக்குள் செலவு செய்து முடிக்கும் செயற்பாடுகளாக இருந்தனவே தவிர, தடுப்பு, தணிப்பு, முகம் கொடுத்தல், விழிப்புணர்வூட்டல், தயார்படுத்தல் போன்ற செயற்பாடுகள் உணர்வு பூர்வமாக, ஆணித்தரமாக ஏற்படுத்தப்படவில்லை என்பதே உண்மையாகும்.
இடரொன்று நிகழும்போது குறித்த இடங்களுக்கு மக்கள் செல்வதைத் தடுத்து, மேலும் ஓரிருவர் வெளியேற்றப்படாதிருப்பின் அவர்களையும் வெளியேற்றி இடைத் தங்கல் முகாம்களில் இருப்போருக்கு உணவு வழங்கல் ஏனைய அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துப் பாதுகாப்பளித்து நிவாரணங்களை வழங்கதல் வேண்டும். அனர்த்தம் ஒன்று நிகந்த பின்னர் உரிய நிவாரணங்களை வழங்கி, சுமுக நிலையின் பின்னர் கட்டுமானம், மீள்கட்டுமானம் ஆகியவற்றைச் செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திய பின்னரே இடைத்தங்கல் முகாம்களில் இருப்போரைக் குடியமர்த்துதல் வேண்டும். அண்மையில் நடந்த பேரிடரின்போது பேரிடர் நிகழ்வதற்கு முன்னர் வெளியேற்ற வேண்டிய மக்களைப் பேரிடர் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே வெளியேற்றினர். அதற்குள் மண்சரிவில் நூற்றுக் கணக்கானோர் புதையுண்டு போயினர். இன்னும் நூற்றுக் கணக்கானோர் வெள்ளத்தில் அள்ளுண்டு போயினர். அதிகாரிகள் செய்ய வேண்டிய கருமத்தை உரிய காலத்தில் செய்யாது விட்டதனால் செய்யாது முழு அவப் பெயரையும் சனாதிபதியும் அமைச்சர்களும் ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது எதிர்க் கட்சியினருக்கு அல்வாக் கிடைத்தமை போலாகிவிட்டது. இதைக் கொண்டு சங்கூத ஆரம்பித்துவிட்டார்கள்.
இடர் ஒன்றின்போது வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவத் திணைக்களம், கட்டிட நிர்மாணிப்புத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் ஒரு குடையின்கீழ் ஒன்றிணைந்து பணியாற்றுவது மிக மிக அவசியமானதாகும். அத்தோடு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள், மின்சார சபை ஆகியனவும் ஆபத்துநிலை உணர்ந்து தேசிய நலன் கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இதில் சிறு தவறு நடந்தால்கூட பாரிய அழிலினை ஏற்படுத்தி விடலாம். இவை யாவும் 2005 அனர்த்த பேரழிவுச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இத்திணைக்களங்களும் நிறுவனங்களும் தேசிய நலன்கருதிச் செயற்படாமையினால் பாரிய அனர்த்தம் ஒன்றைச் சந்தித்து இருக்கின்றோம்.
வானிலை அவதானிப்புக்கெனப் பல செய்மதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞான, தொழினுட்பம், செயற்கைத் தொழினுட்பம் என அபரிமிதமாக வளர்ச்சி அடைந்திருக்கும் இக்கால கட்டத்தில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இருபது வருடங்களுக்கு முன்னர் வானிலை பற்றிய அறிக்கைகளைக் கூறியது போல் இன்றும் பல சந்தர்ப்பங்களில் வானிலையின் அபாய நிலை உணராமல் செய்திகளை அதிகாரிகள் கூறிக் கொண்டிருக்கின்றன. அதனால் வானிலை பற்றிய அறிக்கைகளை மக்கள் நம்ப மறுக்கின்றனர்.
இந்திய வளிமண்டல ஆராச்சித் மையம் நவம்பர் 18, 19 ஆம் திகதிகளில் வெளியிட்ட வானிலை அவதானிப்புத் தொடர்பான அறிக்கையில் “வங்காள விரிகுடாவுக்குத் தென் கிழக்கே மட்டக்களப்பில் இருந்து 210 கிலோ மீற்றரில் அம்பாந்ட்டைக்கு அண்மையிலும் கொழும்புக்குத் தென்மேற்கேயும் கடல் பரப்பில் காற்றழுத்தச் சுழற்சி ஒன்று கீழடுக்குகளில் ஏற்பட்டு இருப்பதாகவும், நவம்பர 26 ஆந் திகதி சூறாவளியாக மாறி இலங்கை பூராகவும் பேரழிவினை ஏற்படுத்தலாம். பாரிய வெள்ளப் பெருக்கு, மண்சரிவு ஏற்பட்டுப் பேரழிவை ஏற்படுத்தலாம் எனவும், பல இடங்களில் பத்து அடிக்கு மேலான வெள்ளம் ஏற்படலாம் எனவும் எச்சரித்திருந்தது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வழமை போல் வானிலை அறிக்கையை வெளியிட்டு இருந்தது.

25 ஆந் திகதிக்குப் பின்னர் சூறாவளியாக மாறி மட்டக்களப்புக் கடற்பரப்புக்கூடாக வடக்கு நோக்கி நகர்ந்து செல்லலும் எனவும் கூறி இருந்தது. தென்கிழக்குக் கடல் பரப்பில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கமானது விரிவடைந்து சூறாவளியாக மாறலாம் அவ்வேளையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்தி, ஊவா மாகாணங்களில் 200 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி கிடைக்கலாம். அவ்வேளையில் 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் சூறாவளி வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும் எனவும் வழிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் வழமைபோல் 26 ஆந் திகதிவரைக் கூறி இருந்தது. சூறாவளி நகர்ந்து செல்லும் திசை பற்றிய அறிக்கை தெளிவாகச் சொல்லப்படாமை இத்தகைய பேரழிவுக்குக் காரணமாக அமைந்த்து. இந்தப்பேரழிவு வழமைபோல் அறிக்கையை வழங்கிய திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்பட்டதல்ல, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டது. டித்வா சூறாவளி, பாரிய மண்சரிவுகள், பாரிய வெள்ளமென இலங்கையின் 20 வீத நிலப்பரபைத் தாக்கிய வெள்ளமென ஐக்கிள நாடுகள் அபிவிருத்தித் திட்ட (UNDP) அறிக்கை கூறுமளவுக்கான பேரழிவு இது.
தேசிய அனர்த்த முகாமைத்தவத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகிறது. அனர்த்தத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய திணைக்களங்கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக் கூடிய தாய் நிறுவனமாகவும் காணப்படுகிறது. வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களம் அவ்வப்போது வானிலை பற்றிய துல்லியமான அறிக்கையினை வழங்கத் தவறியமையினால் பேரிடரில் பாதிக்கப்படப் போகும் இடங்களில் வாழும் மக்களை வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல் தொடர்பான கட்டளைகளைப் பாதுகாப்புப் படையினருக்கும் கச்சேரி, பிரதேச செயலகங்களுக்கும் வழங்குவதில் தாமதமாகின. கட்டளை பிறப்பித்து வெளியேற்றும் பணியில் ஈடுபடுவதற்கு முன்பாகவே சூறாவளி, மண்சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன.
தேசிய கட்டிட ஆராய்ச்சித் திணைக்களம் மலையப் பிரதேசம் தொடர்பாக முற்று முழுதாக ஆய்வு செய்து மண்சரிவுக்கு உட்படக் கூடிய பிரதேசங்களை இனங்கண்டு அவை தொடர்பான முழுமையான அறிக்கையையினை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கும் முன்கூட்டியே தெரியப்படுத்தி இருத்தல் வேண்டும். அவ்வாறு முழுமையான அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, உரியவர்களுக்கு வழங்கப்பட்டதா என்பது கேள்விக்குறி. இதைச் செயத் தவறியமையால் நூற்றுக் கணக்கான உயிர்கள் மண்சரிவில் அள்ளுண்டு போயினர். இந்தப் பேரழிவில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த உயிரிழப்புக்களுக்குக் காரணமான சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கமும் மக்களும் என்பதே உண்மை. இத்திணைக்களம் 12-12-2025 இல் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 30 வீதமானவை நிலச்சரிவு அபாயத்துக்கு உட்பட்டவை எனவும், மொத்த சனத்தொகையில் 34 வீதமானோர் இந்நிலப்பரப்பில் வாழ்கின்றனர் எனவும், இப்பிரதேசங்களில் பதினையாயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர். இந்த அறிக்கையினைப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பிப்பதற்கு முன்பாக வெளியிட்டிருக்க வேண்டும். கண்டி மாத்தளை வீதியில் அம்பதென்ன முதல் அலவத்துக்கொடை வரை மகாவலி கங்கையின் இயற்கையான நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள் அப்பிரதேசங்களில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படக் காரணமாக அமைந்தன.
நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர், தொழினுட்ப உத்தியோத்தர்களுக்குத் தமது நிர்வாகப் பிரதேசங்களிலுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்களின் அப்போதைய நீர்மட்டத்துடன், மழைவீழ்ச்சி, ஊட்டப் பிரதேசக் (Catchment Area) காட்டு வெள்ளம் நீர்நிலைக்குள் வந்து சேரும் அளவு, அவசர நிலமையின்போது அதிலிருந்து எத்தனை அடி நீரை வெளியேற்றினால் குளத்து அணைக் கட்டினையும் விவசாய நிலங்களையும் மக்களையும் பாதுகாக்கலாம் என்பது தொடர்பான அனுபவமும் கடந்த காலத் தரவுகளும் தகவல்களும் இருந்திருக்கும். அந்தப் பட்டறிவினை ஆதாரமாகக் கொண்டு குளத்தின் நீர்க் கொள்ளளவு, அடுத்துவரும் நாட்களில் கிடைக்கும் மழை வீழ்ச்சியின் அளவு, அந்த மழை வீழ்ச்சியினால் ஊட்டப் பிரதேசங்களில் இருந்து குளத்துக்கு வந்து சேரக்கூடிய நீரின் அளவு, குளத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய நீர்மட்டம் என்பவற்றைப் பருமட்டாகக் கணக்கெடுத்து மேலதிக நீரை வெளியேற்ற வேண்டும்.
அவ்வாறு மேற்கொண்டு செய்திருந்திருந்தால் நடந்து முடிந்த பேரழிவில் இருந்து உயிர், உடமை, பயிர்ச் சேதங்களைப் பெருமளவு தவிர்த்திருக்கலாம். இதை உரியபடி செய்யாது குளம் நிரம்பும் வரையும் பார்த்திருந்து பல வான் கதவுகளை ஒரே நேரத்தில் திறந்து விட்டதனால் கனமழை வெள்ளத்துடன் குளங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரும் சேர்ந்து எதிர்பார்த்திருக்க முடியாதளவு பாரிய பேரழிவுகளை ஏற்படுத்திவிட்டன. அதிலும் கூடுதலாக மகாவலி கங்கை, களனி கங்கை ஆகியன ஊடறுத்துச் செல்லும் நகரங்கள், கிராமங்கள், அவற்றுடன் இணைந்த நீர்த்தேக்கங்கள், குளங்கள், அவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகியன மிகக்கூடுதலான உயிரிழப்புக்களும் அழிவுகளும் ஏற்பட்டக் காரணமாயின. இந்த அனர்த்தத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எத்தகைய இழ்ப்பும் ஏற்படவில்லை.
அவர்களின் பொறுப்பற்ற செயலினால் கடந்த வருடமும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக் கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டதனால் அரச நிதியில் இருந்து மில்லியன் கணக்கில் நட்ட ஈடு வழங்கப்பட்டது.
சூறாவளி மற்றும் பலத்த காற்று வீசும்போதும் பாரிய வெள்ளப் பெருக்கின்போதும் மின்சார சபை மின்சாரத்தைத் துண்டிப்பது தவிர்க்க முடியாதது. அத்தகைய சூழ்நிலையிலும் தொலைத் தொடர்புச் சேவைகள், இலத்திரனியல் ஊடங்கங்கள சீரான சேவையை மக்களுக்கு வழங்குதல் வேண்டும். ஒரே குழுமத்தின் கீழ் இயங்கும் டயலொக், எயாடெல் நிறுவனங்களில் இருந்து இலங்கை மக்களில் 80 வீதத்துக்கு மேற்பட்டோர் சேவைகளைப் பெறுகின்றனர். தினமும் காற்றில் பல கோடி ரூபாய்களை உழைக்கின்றனர்.
அவர்களால் அவசர நிலையில் பயன்படுத்துவதற்கென ஒவ்வொரு தொலைத் தொடர்பு கோபுரத்துடன் இணைந்ததாக ஒரு மின் பிறப்பாக்கி (Generator) இயந்திரமொன்றை வைத்திருக்க முடியவில்லை. 25-11-2025 அன்று அரச தொலைக்காட்சிச் செய்தியில் டித்வா புயலினால் பாரிய அனர்த்தம் ஒன்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதனால் பொதுமக்கள் தஙகளது கைப்பேசிகளை போதியளவு சார்ஜ் செய்து பாதுகாப்பாக வைக்குமாறு கேட்டுக் கொண்டன. நவம்பர் 26 ஆந் திகதி மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் சகல கைப்பேசிகளும் செயலிழந்தன. மக்களிடையேயான தொடர்புகள், வானிலை பற்றிய தகவல்கள் யாவும் துண்டிக்கப்பட்டன. இதுவும் உயிர்கள் காவு கொள்ளப்பட்டமைக்குக் காரணமாக அமைந்தன. பெரும்பாலான மக்கள் அவசர நிலைக்குக் கைகொடுத்து உதவாத இத்தகைய தொலைத் தொடர்பு சேவைகள் எதற்கு எனக் கேட்டுக் கொண்டதையும் காண முடிந்தது.
நவம்பர் 26 முதல் மின்சாரம் தடைப்பட ஆரம்பித்தமையினால் வானொலிச் சேவைகள், பல தொலைக்காட்சிச் சேவைகளும் செயலிழந்தன. அவ்வாறு தொழிற்பட்டாலும் இரைச்சல், ஒலி, ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டமையால் வானிலை பற்றியும் நாட்டு நடப்புகள் பற்றியும் அறிய முடியாதிருந்தன. இதுவும் ஒரு குறபிட்ட வீதமான உயிர் இழப்புக்குக் காரணமாக இருந்தன. சக்தி வானொலி, தொலைக்காட்சிச் சேவைகள் அனர்த்தம் நிகழ்ந்து இன்றுவரை பல பிரதேசங்களில் ஒலி, ஒளிபரப்புத் தெளிவில்லாமலே காணப்படுகின்றன.

முன்னைய ஆட்சிக் காலத்தில் இலஞ்சம், ஊழல், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட பல உயர் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தி அரசில் பதவி இழந்தும், பதவி குறைக்கப்பட்டும் இடமாற்றப்பட்டும் இருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் அதே இடங்களிலேயே பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் இன்றும்கூட பதவியையும் சட்டத்தையும் தம் இஷ்டப்படி பயன்படுத்தி அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுச் சேவைக்கென மக்களுக்குப் பணியாற்றுவதற்காக நியமனம் செய்யப்பட்ட இவர்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளமும் வரப்பிரசாதங்களும் பெற்றுக் கொண்டு அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் பதவி, அதிகார மோகத்தோட செயற்பட்டு வருகின்றனர். இவர்களில் பலரின் அதிகார துஸ்பிரயோகமும் 2025 நவம்பர் மாததில் நிகழ்ந்த பேரழிக்கு ஒருவகையில் காரணமாக இருந்தன. மக்களின் நியாமான சந்தேகங்கள், வினாக்களுக்குப் பதிலளிக்க விரும்பாது பதவி அதிகாரத்தைக் கொண்டு தகாத வார்த்தைகள் பேசித் துரத்தி அனுப்பும் இத்தகைய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் இவ்வாறான செயலில் ஈடுபடமாட்டார்கள். இவ்வாறு அதித மனவெளுச்சிக்கு உட்படக்கூடிய இவர்களே இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகத்திலும் ஈடுபடக் கூடியவர்கள்.
டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பல உயிரிழப்புகளுக்கும் தொழில் உடமை இழப்புக்குக்கும் காரணமானப் பொறுப்பற்றுச் செயற்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் தொடர்பாகப் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டு விசாரனைகள் நடாத்தி உரியவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இது அரச பதவிகளில் இருந்து கொண்டு அரசாங்கத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்றுச் செயற்படும் அதிகாரிகளுக்குத் தக்க பாடமாக அமையும். அத்தோடு ஏனையவர்கள் திருந்துவதற்கும் வாய்ப்பாக இருக்கும். அரசினை இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிடும் இத்தகையவர்கள் பதவியில் இருந்தும் எத்தகைய பயனுமில்லை. இவர்கள் பொறுப்பற்றுச் செய்த செயல்கள் எதிர்க்கட்சியினருக்கும் பொறுப்பற்ற வகையில் தொழிற்படும் சமூக வலைத் தளங்களுக்கும் ‘பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போலாகிவிடும். இந்த விடயத்தில் அரசு விழிப்புடன் செயற்படுவது அவசியமானதாகும்.

பொறுப்பற்றுச் செயற்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அரசு அறிக்கையைக் கோரும் பட்சத்தில் வழமைபோல் அறிக்கைகளைத் திருத்திப் பொய்யான தரவுகள், தகவல்களைச் சேர்த்து அரசுக்கு வழங்கி விடுவார்கள். தமக்குச் சாதகமாகப் பக்கப்பாட்டுப் பாடுவதற்கும் ஆட்களை ஒழுங்குபடுத்திக் கொள்வார்கள். டித்வா சூறாவளி அனர்த்தம் தொடர்பான அறிக்கைகளும் அரசுக்கு இவ்வாறுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டன. பல மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் செய்து பழக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இது சர்வசாதாரணம் விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இடர் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள், முன்னெச்சரிக்கைகள் தொடர்பான பதிவுகள் யாவும் தரவுத் தளத்தில் (DataBase) பதிவிடப்பட்டு தரவுகள் தகவல்களை அதிகாரிகள் விரும்பியபோது மாற்ற முடியாத சூழ்நிலையை அரசு உருவாக்கினால் மாத்திரமே இத்தகைய அதிகாரிகள் திருந்தி உண்மையான அறிக்கையை அரசு கோரும்போது வழங்குவார்கள். அதுவரையும் பொய் புரட்டுக்களும் பித்தலாட்டங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
![]()