கணக்காய்வாளர் நாயகம் நியமனம்; சிறீதரன் எம்.பி. தனது முடிவை மாற்ற வேண்டும்

இராணுவத்தை தவறான தரப்பாக நாம் சொல்லும் நிலையில் எங்களுடைய முன்மொழிவில் அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் சிறீதரன் அரசியலமைப்பு பேரவையின் கணக்காய்வாளர் நாயகமாக இராணுவ அதிகாரியை நியமிப்பதற்கு இணங்கியது என்பது பாரதூரமான விடயம். இதற்கு பகிரங்கமாக சிறிதரன் மன்னிப்பு கேட்பதுடன் அந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவையின் கணக்காய்வாளர் நாயகமாக இராணுவ அதிகாரியை நியமிப்பதற்கு சிறீதரன் இணங்கினார் என வெளியாகும் தகவல் தொடர்பில்
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,அது மிகப்பெரிய ஏமாற்றம். அந்த செயலை நாங்கள் கண்டிக்கிறோம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் தான் சிறீதரனின் பெயரை முன்மொழிந்தேன். தமிழ் அரசுக் கட்சி அதை ஆமோதித்தது.
அப்படிப்பட்ட நிலையில் ஊடகங்களின் வந்த கருத்தின்படி சிறீதரன் இராணுவ அதிகாரியை ஆதரித்தது மன்னிக்க முடியாத செயல். அவரிடம் எவ்வகையான பதில் உள்ளது என்பதை சொல்லத் தெரியவில்லை. இதற்கு பகிரங்கமாக சிறிதரன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அந்த முடிவில் இருந்து அவர் மாற்றங்களை செய்தே ஆக வேண்டும். சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பார்க்க வேண்டும். அல்லது அவரை அந்த பதவியில் வைத்திருக்க வேண்டியதற்கான ஆதரவை வாபஸ் பெற வேண்டி வரும்.
இராணுவத்தை தவறான தரப்பாக நாம் சொல்லும் நிலையில் எங்களுடைய முன்மொழிவில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் அவ்வாறு நடந்து கொள்வது என்பது பாரதூரமான விடயம் – என்றார்.
![]()