வெளிநாட்டு கடன் செலுத்தலை இடைநிறுத்தக் கோரும் பேச்சை ஆரம்பிக்க அரசிற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்

தற்போதுள்ள இந்த சர்வதேச நாணய நிதிய (ஐ.எம்.எப்) கடன் இணக்கப்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட வேளையில், வெளிநாட்டுக் கடனை 2033ஆம் ஆண்டுக்கு முன்பு செலுத்துமாறே தெரிவித்தது. ஆனால் முன்னைய அரசாங்கம் தானாகவே அதை 2028 முதல் செலுத்துவதற்கு இணக்கப்பாடு கண்டது. தற்போதைய அரசாங்கமும் அதை இருந்தவாறே ஏற்றுக்கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன் கீழ், ஆண்டுதோறும் 4.5 பில்லியன் டொலர்களை நாம் செலுத்தவேண்டும். இந்த இணக்கப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஆரம்பம் முதல் ஐக்கிய மக்கள் சக்தி இருந்து வருகின்றது.இதன் மிகப்பெரிய சுமையைக் குறைக்க வேண்டும்.
மூச்சுத் திட்டத்தின் கீழ், ஹெம்மாத்தகம பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்,
தற்போது இந்த டித்வா சூறாவளி 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளோம். பேச்சை ஆரம்பித்து இந்தக் கடன் இணக்கப்பாடுகளின் விதிமுறைகளை எளிதாக்குவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் .
உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுவது போல, வெளிநாட்டுக் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தை நாம் எடுத்துக் கொண்டு, புதிய இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். இந்தக் கருத்து சரியானது என்பதால், அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டு புதிய இணக்கப்பாடு ஊடாக செல்ல வேண்டும். அரசாங்கத்தால் இதைச் செய்ய முடியாவிட்டால், எதிர்க்கட்சி இதனைச் செய்வதற்குத் தயார். இந்த நிபந்தனைகளுடன் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது
உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் கூட நமது நாடு பொருளாதாரக் கடன் நிவாரணத்தைப் பெற வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றனர். கடன் வெட்டு தொடர்பிலும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த இணக்கப்பாடுகளைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளோடு நமது நாட்டால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது.
தற்சமயம் கடனைத் திருப்பிச் செலுத்துவது நடைமுறைக்கு மாறான விடயமாகும்
இலங்கையின்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு, உண்மையான விரைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் காணப்பட வேண்டும். தற்சமயம் இதை யதார்த்தமாக்குவது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.
![]()