கட்டுரைகள்

மட்டுநகர் முதல்வர் செ.இராசதுரையின் மகத்தான பணி… சு.ஸ்ரீகந்தராசா

மட்டுநகர் முதல்வர் செ. இராசதுரையின் மகத்தான பணி;
சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம்!

 (சட்டத்தரணி, சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா)

1956 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட சொல்லின் செல்வர் செ. இராசதுரை அவர்கள், பல அங்கத்தவர் தொகுதி முறை அமுலுக்கு வந்த 1960 ஆம் ஆண்டிலிருந்து இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்ட  மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியாகவும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு 1989 ஆம் ஆண்டுவரை 33  வருடங்கள் தொடர்ந்து பதவி வகித்தவர் என்பதாலும், மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது மாநகரபிதா (மேயர்) ஆகத் தெரிவுசெய்யப்பட்டவர் என்பதாலும் மட்டக்களப்பின் முடிசூடா மன்னர் என்றும், மட்டுநகர் முதல்வர் என்றும் மக்களால் அழைக்கப்படுபவர்.

சொல்லின் செல்வர் செ.இராஜதுரை அவர்கள் சிறந்த எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், நாடக நடிகராகவும், தன்னிகரற்ற பேச்சாளராகவும் விளங்கிய ஒரு முழுமையான கலைஞர் என்பதால், தமிழ் இசை அறிவும், இசையின் மேல் இதயபூர்வமான ஆழமான ஈடுபாடும் கொண்டவர்.

இசைக் கலையை மட்டுமன்றித் தமிழ்க் கலைகள் எதையுமே பயிற்றுவிப்பதற்கான நிறுவன ரீதியான அமைப்புகள் எதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லையே என்ற குறை அவரது உள்ளத்தில் நீண்டகாலமாக ஒரு கவலையாக இருந்து வந்திருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகையில் வந்திருந்த கேலிச் சித்திரத் துணுக்கு ஒன்றில், ” மட்டக்களப்பில் என்ன விசேடம்”  என்று ஒருவர் கேட்பது போலவும், அதற்கு மற்றொருவர், ” பாடும் மீன்கள், பாடாத பெண்கள், பேசாத பிரதிநிதிகள் ” என்று பதில் சொல்வதுபோலவும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதனை வாசித்த திரு.செ.இராசதுரை அவர்கள், அது மட்டக்களப்பு மக்களை மிகவும் கேலிசெய்வதாக உணர்ந்து கவலைப்பட்டிருக்கிறார்.

வீடுகளிலும், வயல் வரப்புக்களிலும் நமது மக்கள் ஆண்களும் பெண்களும் அழகான பாடல்களைக் காலங்காலமாக எழுதாமலே பாடுவதை இவர்கள் அறியவில்லையா? நாட்டார் பாடல்களின் அருமை இவர்களுக்குத் தெரியவில்லையா?  உலகமே வியக்கும்படி இசையைப் பற்றி ஆராய்ந்து யாழ்நூலைப் படைத்த முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளைப்பற்றி இவர்கள் அறியவில்லையா? எதுவுமே தெரியாமல் இப்படியெல்லாம் செய்கிறார்களே என்று அவர் மிகவும் வேதனையடைந்திருக்கிறார்.

ஒருநாள் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்த விடயங்களையெல்லாம் கூறிய அவர், ஏன் இப்படி நமது மக்களைக் கிண்டலடிக்கிறார்கள் என்பது பற்றி, தான் ஆராய்ந்தபோது, முறையாக இசைக் கல்வியைக் கற்றுப் பட்டம் பெற்றவர்கள்   ஓரிருவரைத் தவிர யாரும் மட்டக்களப்பில் அப்போது இருக்கவில்லை என்ற தகவலை அறிந்துகொண்டதாகவும், இந்த விடயம் மட்டக்களப்பில் எப்படியும் ஓர் இசைக்கலூரியை ஆரம்பித்தேயாகவேண்டும் என்ற தனது எண்ணத்தைச் செயற்படுத்துவதற்கான  உந்துசக்தியைத் தனக்குத் தந்ததாகவும் கூறினார்.

தனக்குள் இருந்த அந்த எண்ணத்தையும், ஆசையையும் அவர் பலரிடம் கூறியதையும் நான் அறிவேன். இப்பொழுது, சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின், கட்புல  தொழில்நுட்பக் கலைத்துறையில் சிரேஸ்ட விரிவுரையாளராக இருக்கும், கலாநிதி சு.சிவரெத்தினம், அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர், சொல்லின் செல்வர் அவர்களை நேர்காணல் செய்திருந்தபோதும் இந்த விபரங்களை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்.

பிரதேச அபிவிருத்தி அமைச்சு என்ற ஓர் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளில், இசை நடனக்கல்லூரியும் ஒன்று என்பதுபோலவும், ஏதோ அந்த அமைச்சு ஏனைய பல அமைச்சுக்களைப்போல காலங்காலமாக இருந்துவந்ததொன்று என்பது போலவும், அந்த அமைச்சிற்குத் திரு.செ.இராசதுரை அவர்கள் அமைச்சராக இருந்தார் அவ்வளவுதான், மற்றும்படி, அவர் அமைச்சராக வந்திருக்காவிட்டாலும், இசை நடனக் கல்லூரி அமைக்கப்பட்டிருக்கும் என்பது போலவும் உண்மை தெரியாமல் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நன்றாகத் தெரிந்த இன்னும் சிலர் வேண்டுமென்றே வரலாறைத் திரித்து ஆவணப்படுத்த முயல்கிறார்கள்.

பிரதேச அபிவிருத்தி அமைச்சு முன்னர் எப்போதுமே இருந்ததொன்றல்ல. அது திரு.செ.இராசதுரை அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது.

திரு.செ.இராசதுரை அவர்கள்,1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி,  ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் சேரவேண்டிய நிர்ப்பந்ததிற்கு உள்ளாக்கப்பட்டார். அதன் விளைவாக அவரது நீண்டகால பாராளுமன்ற அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவர் அமைச்சரவையிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். பிரதேச அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிரதேச அபிவிருத்தியுடன், தமிழ்மொழி அமுலாக்கல் மற்றும் இந்துசமய அலுவல்களும் அவரது அமைச்சின் கீழ் வந்தன.

புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சு என்பதால், அதனை முறையாகக் கட்டமைக்க வேண்டிய அவசியம் இருந்தது. சில சவால்களையும், பல அசௌகரியங்களையும் எதிநோக்க வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம் அமைச்சர் செ.இராசதுரை அவர்கள் மிகச் சாதுரியமாக எதிர் கொண்டு, உரிய அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி நெறிப்படுத்தினார். அதனால், சில மாதங்களிலேயே, ஏற்கனவே நீண்டகாலமாகச் செயற்பாட்டிலிருக்கும் அமைச்சுக்களைப்போல பிரதேச அபிவிருத்தி அமைச்சும் தன் பணிகளை இயல்பாக முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது.

அந்த அமைச்சுக்கும், அதன் கீழ் இயங்கிய இந்துசமய விவகாரத் திணக்களம், தமிழ் அலுவல்கள் திணைக்களம் என்பனவற்றுக்கும் ஆளணிகளை ஏற்படுத்தி, அதற்குப் பொருத்தமான அதிகாரிகளையும், அலுவலர்களையும், ஊழியர்களையும் வேறு அமைச்சுக்கள், திணைக்களங்களில் இருந்து இடமாற்றி எடுத்தார். சிலரைப் புதிதாக நியமனம் செய்யப் பணித்தார்.

வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த என்னையும் அவர் தனது அமைச்சில், அவரின் தனிப்பட்ட கிளையினை நிர்வாகிப்பதற்காக அழைத்தார். பொது நிர்வாக அமைச்சிலிருந்து, என்னைத் தனது அமைச்சுக்கு இடமாற்றம் செய்து எடுத்தார். அதனால், 1979 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிமுதல், அமைச்சின் ஆரம்பக்காலத்திலே அங்கே பணியாற்றியவன் என்பதாலேயே இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள விடயங்களை என்னால் குறிப்பிடமுடிகிறது. இந்த இடத்தில் ஒரு தகவலைப் பதிவுசெய்வது பொருத்தமானதாகும்.

திரு. செ.இராசதுரை அவர்கள் அமைச்சரான சில நாட்களிலேயே, மட்டக்களப்பில் இசை நடனக்கல்லூரியொன்றை அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கையை, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களிடம் வாய்மூலமாக விடுத்தது மட்டுமல்லாமல், எழுத்துமூலமாகவும் கொடுத்திருக்கிறார். அப்பொழுது ஜனாதிபதி அவர்கள், ஏன் அதனை உங்கள் அமைச்சின் மூலமாகவே செய்யலாமே என்று கூறியதுடன், அமைச்சர் இராசதுரை அவர்கள் கொடுத்த கோரிக்கைக் கடிதத்திலேயே அதற்கான தனது அனுமதியை எழுத்திலும் வழங்கிக்  கையொப்பமிட்டுக் கொடுத்திருக்கிறார்.

அமைச்சர் செ.இராசதுரை அவர்கள் அந்த நிமிடத்திலேயே, மட்டக்களப்பில் ஓர் இசைநடனக் கல்லூரி அமைந்து விட்டதுபோன்ற பேருவகையுடன் அதற்கான செயற்பாட்டில் இறங்கத்தொடங்கிவிட்டார். அது அவரது நீண்டகாலக் கனவாக இருந்த ஒருவிடயம். ஆனால், அதிகாரத்தில் இருந்தவர்கள்  அதில் அக்கறை காட்டாமையாலும்,  அவருக்கு அருகே அவரோடு இருந்தவர்களின் ஆதரவு கிடைக்காமையாலும், அந்தக் கனவை நனவாக்க முடியவில்லை என்றும், இப்போது தானாகவே அதனை நிறைவேற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளதால், சற்றும் தாமதிக்காமல் செய்து முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார்.  அதனால், அரசு, அமைச்சரவை, நிர்வாக நடைமுறைகள், அதிகாரிகளின் செயற்பாடுகள் என்றிவ்வாறு ஒவ்வொன்றிலும் எவ்வித தாமதமும் ஏற்படக்கூடாது என்பதில் அவர் மிகவும் கரிசினையாக இருந்தார்.

அப்பொழுது தமிழக முதலமைச்சராக இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜீ.இராமச்சந்திரன் அவர்கள் திரு.செ.இராசதுரை அவர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பது உலகறிந்த விடயம். இசை நடனக் கல்லூரி அமைக்கப்படுவதற்கான ஆரம்பச் செயற்பாடுகளில் ஒன்றாக தமிழக முதல்வரை, அமைச்சர் தொடர்புகொண்டு கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான உதவிகளைக் கோரினார்.

பாடவிதானங்களை எழுதுவது முதலான கற்கை நெறிகள் பற்றிய விடயங்களுக்காக, தமிழகத்தில் இருந்து  திரு. சிவானந்தம்பிள்ளை அவர்களை வரவழைத்தல் மற்றும் பல்வேறு விடயங்களில் தமிழக முதல்வர் பூரண உதவிகளை வழங்கினார்.

1981 ஆம் ஆண்டு கட்டிட வேலைகள் ஆரம்பித்தன. 1982 ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் , சுவாமி விபுலானந்தர் இசை நடனக்கல்லூரி, 2005ம் ஆண்டு சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவனமாகத் தரமுயர்த்தப்பட்டு, கிழக்குப் பல்கலைக கழகத்துடன் இணைக்கப்பட்டது. இசை, நடனம் மட்டுமன்றி, நாடகம் மற்றும், கட்புலத் தொழின்நுட்பக்கலைகளான ஓவியம் சிற்பம் என்பவற்றிலும் பட்டமளிக்கும் கல்வியகமாக இப்போது விளங்குகின்றது.

திரு. செ.இராசதுரை அவர்கள், பிரதேச அபிவிருத்தி  அமைச்சராகியிருக்காவிட்டால் மட்டக்களப்பு இசை நடனக்கல்லூரி அமைக்கப்பட்டிருக்க மாட்டாது. அப்படியொரு அமைச்சு எப்போதாவது அமைக்கப்பட்டு அதற்கு வேறு யார் அமைச்சராகி இருந்தாலும் இசைநடனக் கல்லூரி வந்திருக்காது. அதேவேளை, அவருக்கு வேறு எந்த அமைச்சைக் கொடுத்திருந்தாலும் அந்த அமைச்சின் கீழ் இந்த இசை நடனக்கல்லூரியை அவர் அமைத்திருப்பார். அல்லது கல்வி, கலாசார அமைச்சின் கீழ் இசைநடனக்கல்லூரியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பார். எனவே இசை நடனக் கல்லூரியை,  அமைச்சின் செயலாகவல்ல, அரசின் செயலாகவும் அல்ல, அமைச்சராக இருந்த, செ. இராசதுரை அவர்களின் செயலாகவே கொள்ள வேண்டும். அவர் இல்லையென்றால் அது இல்லை!

எனவே மட்டக்களப்பில் ஓர் இசை நடனக்கல்லூரியை அமைக்கவேண்டும் என்ற  எண்ணம் சொல்லின் செல்வர் செ.இராசதுரை அவர்களது நெஞ்சில் எழுந்து, ஆழமாகப் பதிந்து, நோக்கமாக வளர்ந்து, அவராலேயே நிறைவடைந்து, இன்று சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகமாக – கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஒரு வளாகமாக – உயர்ந்து நிற்கின்றது. அவரும் அதன் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்.

அந்த நிறுவனம் ஆயிரமாயிரமாக, இலட்சோப இலட்சங்களாக தமிழ் அழகியற்கலைப் பட்டதாரிகளையும், சாதனைகளை நிகழ்த்தும் அறிஞர்களையும் உலக வரலாறு நீளும்வரை, உருவாக்கிக் கொண்டேயிருக்கும். அமரர் சொல்லின் செல்வர் செ.இராசதுரை அவர்களின் நினைவும், புகழும் வரலாற்றில் வாழ்ந்துகொண்டேயிருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *