ஸ்டாலின் தலைமையிலே தமிழக அரசு தடுமாறுகின்றதா?… நியூசிலாந்து சிற்சபேசன்

2026 ல் சட்டமன்றத்தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலே தமிழக அரசியல் விறுவிறுப்படைகின்றது.
பொதுவாக, மொழி – சாதி – மதம் என்பன அரசியலிலே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியனவாகும். அதற்குத் தமிழகமும் விதிவிலக்கல்ல.
ஹிந்தி எதிர்ப்பு தொடர்பில் தமிழகம் ஒரே புள்ளியில் கூடுகின்றது. ஆனால், சாதி தொடர்பில் அப்படிச் சொல்லிவிட முடியாது. வடதமிழகம், தென் மாவட்டங்கள், டெல்டாபகுதி, கொங்குநாடு என வெவ்வேறு பிரதேசங்களிலும் ஏகப்பட்ட சாதிப்பிரிவுகள் உள்ளன.
மறுவளத்தில், மதம் தொடர்பில் மிதவாதப் பண்புகளையே தமிழகம் கொண்டிருக்கின்றது. இந்துமதம் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனாலும்கூட, இந்துமதத்தை முன்னிறுத்துகின்ற பாரதீய ஜனதாவின் அரசியலைத் தமிழகம் முழுமையாக ஆதரிப்பதில்லை. அதேவேளையில், கடவுள் மறுப்புக் கொள்கை என்னும் கோதாவிலே, இந்துமதத்தைக் கீழ்மை செய்யக்கூடிய ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியாளரின் செயற்பாடுகளிலே அதிருப்தி அதிகரிக்கின்றது.

இத்தகையதொரு பின்னணியிலேயே, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பூதாகரமாகியிருக்கின்றது.
ஆறுபடை வீடுகளிலே திருப்பரங்குன்றமே முதலாவது படைவீடாகப் போற்றப்படுகின்றது. அங்கே திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா பத்துநாள் உற்சவமாக நடைபெறுவதாகும்.
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறத்தில் சிக்கந்தர் தர்காவும் உள்ளன.
திருக்கார்த்திகைத் தீபநாளிலே, மலைப்பிள்ளையார்கோயில் முன்புள்ள தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்படுகின்றது.
மலை உச்சியில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்படுவதில்லை. அது தொடர்பிலான சர்ச்சை நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும்.
இந்திய விடுதலைக்கு முன்னர் “பிரிவி கவுன்சில்” வரையில் பேசப்பட்டதாகும்.
“சிக்கந்தர் தர்காவிலிருந்து பதினைந்து மீட்டருக்கு அப்பால் எந்தப் பக்கமும் தீபம் ஏற்றலாம்” என்பதே 1996ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாகும். ஆனாலும்கூட, மலை உச்சியில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்படவில்லை.
2014ல் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேலுமொரு வழக்கு பதிவாகியது. 2017ல் மேல்முறையீடு செய்யப்பட்டது.
2020ல் மலையின் உச்சியிலே தீபம் ஏற்றுவதை காவல்துறை தடுத்துவிட்டது.
2025ல் மீண்டுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனுடைய தீர்ப்பு டிசம்பரில் வெளியாகியது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகைத் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, குறிக்கப்பட்ட நாளில் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டது. நெய், காடாத்துணி போன்றவற்றை பிற்பகல் 3.30 மணியளவிலேயே கோயில் பணியாளர்கள் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகின்றது.
ஆனாலும்கூட, திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான டிசம்பர் 3ம் திகதி மாலை ஆறுமணியளவில் பாலதீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்பு மலைப்பிள்ளையார்கோயில் முன்புள்ள தீபத்தூணில் மட்டுமே மகா தீபம் ஏற்றப்பட்டிருக்கின்றது. நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
அதனைக் கோவில் நிர்வாகமும், காவல்துறையினரும் தடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.
சட்டம் – ஒழுங்கு தொடர்பான மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவு, தமிழக அரசின் மேல்முறையீடு போன்ற காரணங்களின் அடிப்படையிலேயே, மலை உச்சியிலுள்ள தீபத்தூணில், தீபம் ஏற்றுவது தடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
இத்தகையதொரு சூழலிலேயே, திருப்பரங்குன்றத்தில், பதட்டம் ஏற்பட்டது.
சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.

அதுவே, “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” என்ற தோரணையில், நீதிமன்ற உத்தரவு அமுல்படுத்தப்படுவதை யார் தடுத்தார்கள் என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியது.
ஆனால், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாய்ந்திருக்கின்றது.
சட்டத்தை அமுல்படுத்துவது, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது போன்றவை அரச அதிகாரிகளினுடைய கடமையாகும்.
திருப்பரங்குன்றத்திலே, நீதிமன்ற உத்தரவுகளை அரச அதிகாரிகள் புறக்கணித்தனர். வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்ட “மேலிட” உத்தரவுகளுக்கே கீழ்ப்படிந்தனர். அதனால், அரசியலமைப்புக் கடமையின் மேன்மை கேள்விக்கு உட்பட்டிருக்கின்றதா என்னும் ஐயம்கூட எழுகின்றது.
தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த வேளையிலேயே, மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவொன்றை, நிர்வாக உத்தரவு மூலமாக, உதாசீனம் செய்யமுடியுமா என்பதுகூடக் கேள்வியாகின்றது.
டிசம்பர் 4ல், மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கியது. அதன்பின்னரும்கூட, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
கார்த்திகைத் தீப விவகாரத்தில், தர்கா தரப்பிலிருந்து எதிர்ப்பு உருவாகவில்லை. மாறாக, ஆட்சியாளரிடமிருந்தே எதிர்ப்பு உருவாகியது.

அதனாலேயே, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியாளரின் உள்நோக்கம் கேள்விக்குட்படுகின்றது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கோயில் உண்டியல் மற்றும் சொத்துக்களைக் கையாள்தல், சிதம்பரம் கோயில் போன்ற விடயங்கள், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியாளரின் நம்பகத்தன்மையைத் தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்துகின்றன.
அதனால், இந்துக்களிடையே அவநம்பிக்கை வலுப்பெறுகின்றது. ஏமாற்றப்படுவதான உணர்வு உச்சம் தொடுகின்றது. அதனுடைய பிரதிபலிப்பு, நீதிபதி சுவாமிநாதனுடைய தீர்ப்பிலும் தெரிகின்றதோ என்னும் கேள்வி எழுகின்றது.
ஆக, இந்துக்கள் தொடர்பில், ஸ்டாலின் தலைமையிலே, தமிழக அரசு தடுமாறுகின்றமைக்கு “கார்த்திகைத்தீப” விவகாரமும் சாட்சியாகின்றது.

![]()