இலங்கை

மலையக மக்களை மீண்டும் மண் சரிவுக்குள் தள்ளாதீர்; சாணக்கியன் வலியுறுத்து 

ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டவாறு ஆறு மாதத்திற்குள் அவற்றினை நிறைவேற்றாவிட்டால் அதனை கேள்விக்குள்ளாக்குவது எங்களது கடமையாகும். அதற்குத்தான் நாங்கள் இருக்கின்றோம் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை அரசாங்கத்துடன் கதைத்து பெற்றுக் கொடுக்க வேண்டியது எங்களுடைய கடமையாகும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார் .

வாழைச்சேனை கிண்ணையடியில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற இடங்களில் மக்கள் குடியிருப்புக்களில் வாழ்வதை தொடர்ந்தும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதற்கான மாற்று வழிகளை நாங்கள் செய்வோம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது வரவேற்க வேண்டியதாகும்.

எமது பிரதேசத்திலும் ஆற்றங்கரையை அண்மித்த பகுதிகளில் மக்கள் வாழ்வதுடன் வருடா வருடம் இவ்வாறு பாதிப்பிற்குள்ளாகி வாழ்கின்றனர்.அவர்களுக்கும் இவ்வாறான புதிய வீடுகளையும் இடங்களை வழங்கி பாதுகாக்க வேண்டுமென அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

நாங்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் உள்ளதால் புதிய வீடுகளை கட்டுவதற்கோ அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. அது எங்களால் முடியாத காரியம் அரசாங்க அமைச்சர்கள் அபிவிருத்தி குழுத் தலைவர்களே அவற்றினை மேற்கொள்ள முடியும்.

மக்களுக்கு கிடைக்கக்கூடியவற்றை பெற்றுக் கொடுப்பதுதான் எங்களது பொறுப்பாகும் .அதற்குத்தான் நாங்கள் இருக்கின்றோம் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை அரசாங்கத்துடன் கதைத்து பெற்றுக் கொடுக்க வேண்டியது எங்களுடைய செயல்பாடும் கடமையுமாகும்.

அந்த வகையில் மலையகத்தில் வாழும் மக்கள் சார்பாக ஜனாதிபதி கருத்தை வெளியிட்டு இருக்கிறார் மலையகத்தில் வாழும் மக்கள் கூடுதலாக மண் சரிவு ஏற்படும் இடங்களில் தான் வாழ்கிறார்கள் நாங்களும் சென்று பார்வையிட்டு இருந்தோம்.அவர்களுக்கு அந்த இடத்திலே வீடுகளை கட்டிக் கொடுப்பது மீண்டும் ஒரு அபாய நிலைக்கு இட்டு செல்வதாக அமையும் .

எனவே எத்தனையோ தசாப்தங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்ற தங்களுக்கு கிடைக்கக்கூடிய நில உரிமையை வழங்கி அவர்களுக்கென்று காணிகளை வழங்கி மண்சரிவில் பாதிக்காத வகையில் வீடுகளை அமைத்து கொடுத்தால் அவர்களுக்குரிய நீண்ட கால பிரச்சனைக்கான தீர்வாக அமையும். இந்த விடயங்களை, ஜனாதிபதி தனது அறிக்கையில் கூறியபடி செயற்படும்போது அவருடன் சேர்ந்து நாங்களும் பயணிக்க கூடியதாக அமையும் நாங்கள் பிழைகளை சுட்டிக்காட்டுகின்ற போது அரசுக்கு எதிரானவர்கள் அல்ல.

ஜனாதிபதி இரவு இரவாக வேலை செய்கிறார் பாவமாகவுள்ளது என்று அவரிடம் விடயங்களை தெரிவிக்காமல் இருக்க முடியாது.இந்தப் பிரதேச மக்களின் வாக்குகளால் நான் பாராளுமன்றம் சென்றேன் எனவே இந்தப் பிரதேச மக்களுடைய குறைபாடுகளை எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு உள்ளது. எனவே எனக்கு விமர்சனம் என்பது புதிய விடயம் அல்ல விமர்சனம் செய்வதால் இவ்வாறு மக்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகளை இல்லாமல் செய்வதற்கு தயவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *