நாடு பேராபத்தில் உள்ளதாக ஜனாதிபதி அறிவிக்கவில்லை

2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய நாடு அனர்த்த நிலைமையை எதிர்கொண்டுள்ளது என்று ஜனாதிபதி அறிவிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டஎம்.பி.அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டுள்ளதா என்பது சந்தேகத்துக்குரியது.நாடு இயற்கை அனர்த்தம் ஒன்றை எதிர்க்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் எவ்வாறு செயற்பட வேண்டும்,ஜனாதிபதி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டத்தால் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய தேசிய அனர்த்த சபை மற்றும் அதனுடனான விடயங்கள், அனர்த்த நிலை மற்றும் இழப்பீடு தொடர்பான அறிவிப்பை விடுக்கும் சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் 11(1) பிரகாரம் நாடு அனர்த்த நிலைமையை எதிர்கொண்டுள்ளது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு.
இச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி முழு நாடும் அனர்த்த நிலைமையை எதிர்கொண்டுள்ளது என்பதை அறிவித்துள்ளரா என்பது எமக்கு தெரியவில்லை. 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் 11 (3) ஆம் பிரிவில் ‘ சட்டத்தின் 1 ஆம் பிரிவுக்கமைய விடுக்கப்படும் அறிவிப்பு பாராளுமன்றத்தின் பிரேரணை ஊடாக நிறைவேற்றுவதற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டு விரைவாகவே பாராளுமன்றத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் ‘என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரையில் அவ்வாறான பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரத்தின் கீழான கட்டளைகள் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் (உ) பிரிவின் ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை அரசாங்கம் மறந்துள்ளது. இந்த சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் செயற்படவில்லை.அனர்த்த நிவாரணம் தொடர்பில் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இது எந்த சட்டத்தின் பிரகாரம் வெளியிடப்படுகிறது என்று குறிப்பிடப்படவில்லை. ஆகவே தற்போதைய செயற்பாடுகளை அரசாங்கம் சட்டத்தின் ஊடாக மேற்கொண்டு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
![]()