வீடுகளை நிர்மாணிக்க 50 இலட்சம் ரூபா; அத்தியாவசியப் பொருட்களுக்கு 50,000 ரூபா; வாழ்வாதாரத்திற்கு 50,000 ரூபா ; ஜனாதிபதி அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்காக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 50,000 ரூபாவும். வீடுகளுக்கு செல்ல முடியாமல்வாடகை வீடுகளுக்கு செல்வோருக்கு மாதாந்தம் 25,000 ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு வழங்கவும், ஒவ்வொரு குடும்பத்திற்காக வாழ்வாதார வழிமுறைகளை ஏற்படுத்துவதற்காக 3 மாதங்களுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்பதுடன், வீடுகள் சேதமடைந்திருந்தால் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 50 இலட்சம் ரூபா வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாள் குழுநிலை விவாதத்தின் இறுதியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை அறிவித்தார்.
இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
எமது நாடு பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளது. இம்முறை சில மாவட்டங்களை தவிர மற்றைய சகல மாவட்டங்களிலும் பெரும்பாலான பிரதேசங்கள் இந்த அனர்தத்திற்கு முகம்கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் எம்முடன் வாழ வேண்டிய பலரை நாங்கள் இழந்துள்ளோம். சில கிராமங்கள் முழுமையாகவும், சில இடங்களில் முழுக் குடும்பமாகவும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். மக்கள் மிகவும் அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பலரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள போதும், மேலும் பலர் உயிரிழந்திருந்தாலும் அவர்களின் சடலங்களை மீட்கப்பட முடியாத நிலைமை உள்ளது. காணாமல் போனோரின் குடும்பங்களின் மனநிலை இந்த நேரத்தில் எப்படியிருக்கும். அவர்கள் எங்கேயோ உயிருடன் இருப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருப்பர். காணாமல் போதல் எந்தளவுக்கு அவர்களின் உறவினருக்கு வேதனையை ஏற்படுத்துமாக இருக்கும் என்பதனை என்னால் புரிந்துகொள்ள முடியும். இதனால் இவர்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதேவேளை எவருடைய இழந்த உயிர்களையும் எங்களால் மீள கொடுக்க முடியாவிட்டாலும், உயிர்வாழ்ப்பவர்களுக்கு வாழக்கூடிய சிறப்பான நாட்டை உருவாக்க வேண்டும். இதற்காக முடிந்தளவான பங்களிப்பை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த முயற்சிகளை நாங்கள் கைவிடப் போவதில்லை. இந்த அனர்த்தத்தின் போது மனிதாபிமானத்தை நாங்கள் காண்கின்றோம் நாட்டின் சகல பிரதேசங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்காக மக்கள் உதவிகளை வழங்குகின்றனர். வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் எமது நாட்டுக்காக பங்களிப்பை வழங்கி வருகின்றனர். உலக வரலாற்றில் வீழ்ந்த சகல நாடுகளும் மீளெழும்பும் போது அதற்கு அந்த நாட்டு மக்களின் அபிலாசைகளும் தைரியமுமே காரணமாக இருந்தது.
கடற்படையினர், விமானப் படையினர் உள்ளிட்ட முப்படையினரும் இதில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களில் பலர் மீட்பு நடவடிக்கையின் போது உயிரிழந்துள்ளனர். அத்துடன் கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்கள் மக்களை பாதுகாப்பதற்காக பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
நாங்கள் இந்த அனர்த்த நிலைமையின் போது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்திற்கமைய அவசரகால சட்டத்தையும் அமுல்படுத்தினோம். இவ்வாறான அனர்த்தங்களின் போது சாதாரண சட்டங்களை விடவும் இதுபோன்ற சட்டம் அவசியமாகும். இதன்மூலமே அதிகாரிகள், உபகரணங்களை வேறு மாவட்டங்களுக்கு அனுப்ப முடியும். இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமான சட்டத்தை ஆராய்ந்தே இந்த முடிவை எடுத்தோம். இந்த மக்கள் பாதுகாப்பு சட்டத்தை மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் பயன்படுத்துவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்படாது. எம்மீதான விமர்சனங்கள் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. நாங்கள் ஒருபோதும் இந்த சட்டத்தை மக்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப் போவதில்லை.
எம்.பியொருவர் பாராளுமன்ற சிறப்புரிமையில் கம்பளையில் ஆயிரம் பேர் இறந்துள்ளதாக கூறியுள்ளார். இதனை முடிந்தால் வெளியில் கூறலாம். அவ்வாறு பொய்களை கூறினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இதனைவிடுத்து சின்ன சின்ன விடயங்களுக்காக இந்த சட்டத்தை பயன்படுத்தப் போவதில்லை. இந்த அனர்தத்தின் போது முறையாக செயற்பட்ட சகல அதிகாரிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுடையது. அதனை செய்வோம். நாங்கள் அந்த அதிகாரிகளை நம்பி நிதி கையாளுகைக்கான அதிகாரங்களை வழங்கியுள்ளோம்.
இன்னும் பெருமளவானவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் இருக்கின்றனர். 51ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். பல குடும்பங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்த நேரத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் குறுகிய நோக்கத்தில் சில கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவற்றுக்கு இடமளிக்க முடியாது. இவ்வாறான உள்ளக அனர்த்தம் எமது பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும். நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வரும் நிலையிலேயே இந்த அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாங்கள் 50 பில்லியன் ரூபா ஒதுக்கீடு குறைநிரப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்நிலையில் நாங்கள் தற்போது வீடுகளை சுத்தம் செய்ய 25,000 ரூபா கொடுப்பனவையும் அத்தியாவசிய பொருட்களை வாங்க 50,000 ரூபாவும். வீடுகளை இழந்து வாடகை வீடுகளுக்கு செல்வோருக்கு மாதாந்தம் 25,000 ரூபா 6 மாதங்களுக்கு வழங்கப்படும். அத்துடன் மூன்று மாதங்களுக்காக வாழ்வாதார வழிக்காக இரண்டு பேருக்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இருவரை கொண்ட குடும்பத்திற்கு 25,000 ரூபா வழங்கப்படும். விவசாய உற்பத்தியை மேம்படுத்த ஒரு ஹேக்கர் நிலத்துக்கு ஒரு இலட்சத்து 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். அழிவடைந்துள்ள ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ஹேக்கர் நிலப்பரப்பும் மீண்டும் விவசாய நிலமாக மாற்றப்படும். அதேபோல் மரகறி உற்பத்திக்கு 1 ஹேக்கர் நிலத்துக்கு 2 இலட்சம் ரூபா வழங்கப்படும். விவசாயிகள் துவண்டுவிட கூடாது. மீண்டு வர வேண்:டும். முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன்.
பாதிக்கப்பட்டுள்ள விலங்கு வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு 2 இலட்சம் ரூபா வழங்கப்படும். அதேபோல் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.வங்கி அடிப்படையில் தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.அதற்குரிய சுற்றறிக்கையை மத்திய வங்கி வெளியிடும். காப்புறுதி நிறுவனங்களும் நிவாரணம் வழங்கும் அதற்குரிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும்.
பதிவு செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் ஒரு படகுக்கு தலா 4 இலட்சம் ரூபா வழங்கப்படும். பாடசாலை மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். அஸ்வெசும திட்டத்தின் ஊடாக 6 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். எமது மாணவர்களுக்கு நாங்கள் வழங்குவோம். கல்விக்கான நிதி செலவல்ல, அது சிறந்த முதலீடு.
வர்த்தக கட்டிடங்கள் சேதமடைந்திருந்தால் மதிப்பீடுகளுக்கு அமைய 50 இலட்சம் ரூபா வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு, வீடு கட்டிக் கொள்வதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.காணி இல்லையாயின் பாதுகாப்பு பகுதிகளில் அவர்களுக்கு காணி வழங்கப்படும். அரச காணி இல்லாவிடின் காணி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
பகுதிகளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கு உயர்ந்தபட்சமாக 25 இலட்சம் ரூபா வழங்கப்படும்.அதேபோல் உயிரிழந்தவர்களின் உயிரை மதிப்பிட முடியாது. இருப்பினும் அவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
![]()