அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் தமிழிலும் வெளியிட நடவடிக்கை எடுங்கள்

தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஆனால் தமிழில் அவை வெளிவருவதில்லை என்று இலங்கை தமிழரசுக் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சிறீதரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் பெரு வெள்ள அனர்த்தம் காரணமாக இறந்த சகல உறவுகளுக்கும் எனது அனுதாபங்களை அவர்களின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்புக்காக சாலையை வெட்டும் போது ஐந்து கடற்படையினரும் உயிரிழந்திருந்தனர். அவர்களையும் நாங்கள் நினைவுகூருகின்றோம். நடைபெற்ற இனப்படுகொலைக்கு கடற்படை, விமானப்படை இருந்தாலும் இயற்கை அனர்தத்தின் போது அவர்கள் இறந்ததை மனிதாபிமான ரீதியில் தமிழ் மக்களாக நாங்கள் எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அனர்த்த நிலைமைகளின் போது ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் மிகவும் நேர்த்தியாக பணியாற்றினர். இதன்போது கிராம சேவையாளர்களுக்கு இடையூறுகளும் நடந்துள்ளன. பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் மக்கள் பணியை செய்துகொண்டிருந்த தியாகராசா கலைரூபன் பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இது மிகவும் மோசமான காரியமாகும். மேர்வின் சில்வாவுக்கு பின்னர் இவ்வாறானவொரு பாராளுமன்ற உறுப்பினரால் அரச உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இது தொடர்பில் சபையினால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
மலையகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றேன். அங்கு மக்களை சந்தித்த போது அவர்கள் மிகவும் கவலையுடன் கண்ணீர்விட்டு அழுகின்றனர். இது மிகப்பெரிய அனர்த்தம் இந்த அனர்த்தம் தொடர்பில் அரசாங்கம் மீது பழிசொல்லவில்லை. சுனாமிக்கு பின்னர் 2006இல் புயல், மழை தொடர்பில் ராடர் கருவி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அனர்த்தமொன்று ஏற்பட்டுள்ளது. இயற்கையை அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் என்று விடுதலைப் புலிகள் காலத்தில் ஒட்டப்பட்ட பிரசுரங்களாக இருந்தது. யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கம் மரங்களை அழித்துள்ளனர். இதுபோன்ற இயற்கை அழிப்பால் இயற்கையின் சீற்றம் மக்களை பாதித்துள்ளது.
இலங்கையின் அனர்த்த குழுவின் அறிக்கை தனி சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே வெளியிடப்படுகின்றது. கொழும்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள் தமிழில் வெளியிடப்படவில்லை. நாட்டில் தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்றது. ஆனால் தமிழ் மொழியில் இந்த அறிவித்தல்கள் வரவில்லை. மக்களுக்கு சரியாக அறிவித்தல்கள் சென்றடையவில்லை.
யாழ். பல்கலைக்கழக புவியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவின் கருத்துக்களை மக்கள் உன்னிப்பாக பார்க்கின்றனர். அவரின் கருத்துக்களை வைத்து மக்கள் தீர்மானிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் கூறும் கருத்துக்கள் மக்களை காப்பாற்றியுள்ளன. அவர் இந்த பேரிடர் தொடர்பில் கூறியுள்ளார். அதனை எவரும் கணக்கிலெடுப்பதில்லை. இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையிலான தகடுகளுக்கு இடையில் சிறிய சிறிய நில நடுக்கங்கள் நடக்கின்றன. இது எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்று கூறுகின்றார். ஏன் நாகமுத்து பிரதீபராஜா போன்ற நிபுணர்களை கொண்டு இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் போதும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதில் ஏன் சரியாக கையாளவில்லை.
உங்களிடமும் தவறுகள் இருக்கின்றன என்பதனை நீங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குங்கள். மலையகத்தில் வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் மனிதாபிமானதுடன் உதவிகள் சென்றடைய வேண்டும்.
![]()