இலங்கை

பட்ஜட்டின் 3 ஆம் வாசிப்பை எதிர்த்த ‘’தனி ஒருவன்’’; ஆதரவாக 158 வாக்குகள் – ஜீவன், மஸ்தான் ஆதரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு 157 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்ட துடன் எதிராக ஒரு வாக்கு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையிலேயே 157 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

3 ஆம் வாசிப்புக்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்த நிலையில் ஐக்கியத் தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான இ.தொ.க செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தொழிற்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர ஆதரவாக வாக்களித்தனர். எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே வாக்களித்தது. ஏனைய எதிர்க்கட்சிகள் எதுவும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தார். ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் ஆதரவாக 160 பேரும் எதிராக 42 பேரும் வாக்களித்தனர்.

இதனையடுத்து குழுநிலை விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான 17 நாட்கள் நடைபெற்ற நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார் .இதனையடுத்தே வாக்கெடுப்பு இடம்பெற்றது.

நாட்டில் கடந்த வாரம் நிலவிய மிக மோசமான இயற்கை அனர்த்தத்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் வாசிப்பின் போது வாக்கெடுப்பு கோராமல் இருப்பதற்கும், அவ்வாறு ஏனைய எதிர்க்கட்சிகளின் சில வேளை வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார்

அதேபோன்றே தற்போதைய நெருக்கடியான நிலையில் வரவு – செலவுத் திட்டம் மீது வாக்கெடுப்பு கோரும் நிலைப்பாட்டில் தாங்கள் இல்லை என தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, எதிர்க்கட்சிகளில் எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் தாங்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமலிருக்க தீர்மானித்துள்ளதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம். பி. யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரியிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *