நோர்வே சாமி (Sámi) இன மக்கள்: மொழி கலாச்சார அடக்குமுறை தொடர்கிறதா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சாமி இனத்தின் பிள்ளைகள் பாடசாலைகளில் தங்களது மொழியில் பேசக்கூடாது என்ற தடைகள் எல்லாம் முன்பு இருந்தன. இது நடந்தது பல நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் இல்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் தான் இந்த நிலைமை இருந்தது.
1990 வரை தன்னுடைய சொந்த நாட்டிலையே 10,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த ஒரு இனத்தை அதன் மொழியை, கலாச்சாரத்தை இழக்க வைத்து தங்களுடன் இணைத்துக் கொள்ள அடக்குமுறைகளை பாவித்தவர்கள் தான் நோர்வேஜியர்கள்.
35-40 வருடங்களுக்கு முன் தான், அந்த மக்கள் தங்கள் மொழியை, கலாச்சாரத்தை விட்டு நோர்வேஜியர்களுடன் கலக்க வேண்டும் என்று எத்தனையோ அடக்குமுறைகள் மேற்க்கொள்ளப்பட்டன. அதில் ஒரளவு வெற்றியும் கண்டனர் நோர்வேஜியர்கள்)
சாமி (Sámi) இன மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஸ்காண்டிநேவியாவின் வடக்குப் பகுதிகள் மற்றும் கோலா தீபகற்பம் போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதி “Sápmi” என்று அழைக்கப்படுகிறது.
பாரம்பரியமாக, சாமி மக்கள் மான்களை வளர்த்து, ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம் பெயர்ந்து வாழ்ந்தனர். இன்று, பலர் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டு, கலாச்சார ரீதியாக மாறி வாழ்ந்து வருகின்றனர்.
நோர்வே நோர்வேஜியர்க்கு மட்டுமா ?
நோர்வே, இது நோர்வேஜியர்களுக்கு மட்டும் உரிய ஒரு நாடு அல்ல. நோர்வேயில் இன்னுமொரு இன மக்களும் வாழ்கிறார்கள். அவர்கள் தான் இந்த சாமி (Sámi) இன மக்கள்.
உலகின் வரைபடத்தை பார்த்தீர்கள் என்றால், பூமிப்பந்தின் வடபகுதியில் வாழ்கின்ற ஒரு தொன்மையான இனம். நோர்வேயில் மட்டுமல்ல, நோர்டிக் (Nordic) பகுதி முழுவதுமே பரவியிருந்த ஒரு இனம்.
இப்போது தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் நான்கு நாடுகளின் கீழ் வாழ்கிறார்கள். இந்த இன மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சம். நோர்வேயில் 65,000, ஸ்வீடனில்20,000, பின்லாந்தில் 8000, ரஷ்யாவில் 2000 பேர் வசிக்கின்றனர். இந்த நான்கு நாடுகளினதும் வட பகுதிகளில் இவர்கள் பரந்து வாழ்கிறார்கள்.
தனியான ஒரு இனம், தனியான ஒரு மொழி, தனியான கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட மக்கள் என இவர்கள் அடையாளப் படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் ஒரு வேட்டையாடும் இனமாகவும், அதைவிட ஒரு நாடோடிகளாக வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
இந்த இன மக்கள் நீண்ட காலமாக நோர்வேஜியர்களால் பல அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். 1987களில் தான் நோர்வே அவர்களை ஒரு தனி இனமாக அங்கீகரித்தது. அவர்களின் மொழியையும் நோர்வேயின் இன்னொரு அதிகாரபூர்வ மொழியாக நீண்ட காலத்தின் பின்னரே அங்கீகரித்தது.
அத்துடன் சாமி இன பிள்ளைகள் பாடசாலைகளில் தங்களது மொழியில் பேசக்கூடாது என்ற தடைகள் எல்லாம் இருந்தன. 35-40 வருடங்களுக்கு முன்பாக, அந்த மக்கள் தங்கள் மொழியை, கலாச்சாரத்தை விட்டு நோர்வேஜியர்களுடன் கலக்க வேண்டும் என்று எத்தனையோ அடக்குமுறைகள் மேற்க்கொள்ளப்பட்டன. அதில் நோர்வேஜியர்கள் வெற்றியும் கண்டனர்.
இதன் விளைவாக அந்த மக்களின் ஒரு பகுதியினரும் தாங்கள் வாழ்ந்த வட பகுதி கிராமங்களை விட்டு வெளியேறி, நோர்வேயின் பெரிய நகரங்களுக்கு நவீன வாழ்க்கைக்கு தங்களை மாற்றிக்கொண்டார்கள். இதன் காரணமாக சாமி இன மக்கள் நோர்வேஜியன் மொழி பேசுவார்கள். ஏனெனில் பாடசாலைகளில் அந்த மொழி கட்டாயம், ஆனால் நோர்வேஜியர்களுக்கு சாமி மொழி தெரியாது.
1999 இல் மன்னிப்பு கோரிய நோர்வே:
1999 ஆண்டு நோர்வே அரசாங்கம் சாமி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது. அந்த மக்களுக்கு இழைத்த அடக்குமுறைகளுக்காகவே அரசு மன்னிப்பு கோரியது.
இத்தகைய கொடூரமான காலகட்டங்களை எதிர்த்து போராடியதன் காரணமாக, நோர்வேயின் வட பகுதியில் இவர்வளுக்கென தனி ஒரு பாராளுமன்றமும் இருக்கிறது. அதில் அந்த மக்களை பிரதிநிதிப்படுத்த 39 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இது 1989 ல் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதே போல சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளிலும் இவர்களுக்கென தனி பாராளுமன்றங்கள் இருக்கின்றன.
1990 வரை தன்னுடைய சொந்த நாட்டிலையே 10,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த ஒரு இனத்தை அதன் மொழியை, கலாச்சாரத்தை இழக்க வைத்து தங்களுடன் இணைத்துக் கொள்ள அடக்குமுறைகளை நோர்வேஜியர்கள் பாவித்தவர்கள்.
ஐரோப்பாவின் பூர்வகுடி:
இத்தனை கொடூரங்களை சந்தித்த சாமி (Sámi) மக்கள் ஐரோப்பாவின் பூர்வகுடி மக்கள் ஆவர். இவர்கள் நோர்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யாவின் வடக்குப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர். பாரம்பரியமாக, இவர்கள் மான்களை வளர்ப்பதோடு, வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தனர். இவர்களது கலாச்சாரம் மற்றும் மொழி ஐரோப்பாவில் தனித்துவமானதாக கருதப்படுகிறது.
சாமி கலாச்சாரம் இயற்கையுடன் மிக நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இவர்கள் தங்கள் தனித்துவமான உடைகள், நம்பிக்கைகள், மற்றும் மொழியைக் கொண்டுள்ளனர். சாமி மொழி, பல வட்டார மொழிகளைக் கொண்ட ஒரு மொழி குடும்பமாகும். இது ஐரோப்பாவில் உள்ள பிற இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து வேறுபட்டது.
இன்னமும் சாமி மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். நீண்ட போராட்டங்களின் பின்னர் நோர்வேயில், சாமி தேசிய திரையரங்கம் மற்றும் உயர்நிலைப் பள்ளி போன்ற பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
யூராலிக் தாயக குடிகள்:
மேற்கு யூராலிக் மொழிகள், ஐரோப்பாவின் மிக நீளமான நதியான வோல்கா வழியாக யூராலிக் தாயகத்திலிருந்து பரவியதாக நம்பப்படுகிறது. இந்தக் குழுக்கள் கிமு 2 ஆம் மில்லினியத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் ஆரம்பகால யூராலிக் மக்களின் தாயகத்திலிருந்து வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கின.
அவர்களின் பயணத்தில், அவர்கள் இப்போது வடக்கு ரஷ்யாவாக இருக்கும் பண்டைய நதி வழிகளைப் பயன்படுத்தினர். முதலில் அதே மேற்கு யூராலிக் மொழியைப் பேசிய இந்த மக்களில் சிலர், கரேலியா, லடோகா மற்றும் இல்மென் ஏரிக்கு இடைப்பட்ட பகுதிகளிலும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளிலும் தங்கி தங்கினர்.
கிமு 1600 முதல் 1500 வரை பின்லாந்து ஏரி நிலத்தில் முடிவடைந்த இந்த மக்களின் குழுக்கள் பின்னர் சாமி இன மக்கள் ஆயினர். வெண்கல யுகம் அல்லது ஆரம்பகால இரும்பு யுகத்தின் போது சாமி மக்கள் தங்கள் தற்போதைய தாயகத்திற்கு வந்தனர்.
சாமி – ஸ்காண்டிநேவிய உறவு:
ஸ்காண்டிநேவிய மொழிகளைப் பேசும் மற்றும் நோர்வே மற்றும் ஸ்வீடன் ராஜ்ஜியங்களை நிறுவி ஆதிக்கம் செலுத்திய ஸ்காண்டிநேவிய ஆதிக்க மக்களான ஸ்காண்டிநேவியர்களுடன் (இடைக்கால சகாப்தத்தில் நோர்ஸ் மக்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்) சாமிகள் சிக்கலான உறவைக் கொண்டுள்ளனர்.
தெற்கு ஸ்காண்டிநேவியாவிற்கு ஜெர்மானிய மொழி பேசும் மக்களின் இடம்பெயர்வு, வடக்குப் பகுதிகளுக்கு சாமி குடியேற்றங்களிலிருந்து சுயாதீனமாகவும் தனித்தனியாகவும் நடந்தது.
பல நூற்றாண்டுகளாக, சாமி மற்றும் ஸ்காண்டிநேவியர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவான தொடர்பு இருந்தது. சாமி முதன்மையாக வடக்கு ஃபென்னோஸ்காண்டியாவின் உள்நாட்டில் வாழ்ந்தனர். அதே நேரத்தில் ஸ்காண்டிநேவியர்கள் தெற்கு ஸ்காண்டிநேவியாவில் வாழ்ந்து படிப்படியாக நோர்வே கடற்கரையை காலனித்துவப்படுத்தினர்.
18 மற்றும் குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டிலிருந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் அரசாங்கங்கள் வடக்கில் இறையாண்மையை மிகவும் ஆக்ரோஷமாக உறுதிப்படுத்தத் தொடங்கின. மேலும் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கட்டாய ஒருங்கிணைப்பை நோக்கமாகக் கொண்ட ஸ்காண்டிநேவிய மயமாக்கல் கொள்கைகளுடன் சாமியை குறிவைத்தன.
கட்டாய ஸ்காண்டிநேவிய மயமாக்கல்:
கட்டாய ஸ்காண்டிநேவிய மயமாக்கல் கொள்கைகளின் சகாப்தத்திற்கு முன்பு, நார்வேஜியன் மற்றும் ஸ்வீடிஷ் அதிகாரிகள் சாமியை பெருமளவில் புறக்கணித்தனர்.
19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், நவீன கால டிராம்ஸ் மற்றும் ஃபின்மார்க் கடற்கரையை படிப்படியாக காலனித்துவப்படுத்த நார்வேஜியர்கள் வடக்கு நோக்கி நகர்ந்தனர். ஏற்றுமதி சார்ந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர். கலைமான் மேய்க்கும் சாமிகளால் நிறைந்த கடுமையான மற்றும் விவசாயம் செய்ய முடியாத உள்நாட்டில் அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. தெற்குடனான தங்கள் வர்த்தகத்தை வலுவாக நம்பியிருந்த கடற்கரையில் உள்ள நார்வேஜியர்களைப் போலல்லாமல், உள்நாட்டில் உள்ள சாமிகள் நிலத்திலிருந்து விலகி வாழ்ந்தனர்.
அத்துடன் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து நார்வேஜியன் மற்றும் ஸ்வீடிஷ் அதிகாரிகள் சாமியை நாகரிகம் தேவைப்படும் பின்தங்கிய மற்றும் பழமையான மக்களாகக் கருதத் தொடங்கினர். ஸ்காண்டிநேவிய மொழிகளை ராஜ்ஜியங்களின் ஒரே செல்லுபடியாகும் மொழிகளாக திணித்தனர். பல சூழல்களில், குறிப்பாக பள்ளிகளில் சாமி மொழி மற்றும் கலாச்சாரத்தை தடை செய்தனர்.
நோர்வேயால் சாமி மக்களின் மொழி அடக்கப்பட்டது:

நோர்வேயில் சாமி மக்களை “நோர்வேயாக்கும் அரசியல்” (Fornorskningspolitikk) என்ற பெயரில் வலுக்கட்டாயமாக நோர்ஷ்க் (norsk) மட்டும் கற்றுக்கொள்ள வைக்கப்பட்டது. இந்த கொள்கை சுமார் 1850 முதல் 1950 வரையில் 100 ஆண்டுகளுக்கு நெருக்கமாக நடந்தது.
அதாவது நோர்வே பள்ளிகளில் சாமி மொழி பேசுவதற்கு தடை இருந்தது.
இதனால் ஆசிரியர்கள் சாமி மொழி கேட்டால் தண்டனை அளித்தனர்.
தேவாலயங்களில் கூட நோர்ஸ்க் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்
நோக்கம் சாமி கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் குறைக்க முயற்சி செய்ததே.
மீண்டும் சாமி மொழி பள்ளிகளில் பயன்படுத்த அனுமதியுடன், 1990இல் சாமி மொழி நோர்வேயில் அதிகாரப்பூர்வ மொழி சட்ட அங்கீகாரம் பெற்றது. இன்று சாமி மொழி பாதுகாப்பு, ஊக்குவிப்பு, கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றிற்கு சட்ட வசதிகள் உள்ளது. ஆனால் கடந்த 100 ஆண்டுகளின் காயமும், அடக்கப்பட்ட வரலாறும் இன்னும் சாமி சமூகத்தில் விளைவுகளை விட்டுள்ளது.
![]()