இலங்கை

கடும் மழை, பலத்த காற்றுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தில் இன்று மாவீரர்களுக்கு நினைவேந்தல்; மாலை 6.07 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்றைய மாவீரர் நாள் நிகழ்வுக்காக மாவீரர் துயிலுமில்லங்களில் எழுச்சிப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு துயிலுமில்லங்கள் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப் பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன.

இன்று 27 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில், ஆலய மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட அகவணக்கத்தை அடுத்து 6.07 மணியளவில் பொதுச்சுடர் மாவீரர்களின் பெற்றோர் களால் ஏற்றப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள். நண்பர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்ந்த ஏனையவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

தாயக மண்ணினதும் தமிழ் மக்களதும் உரிமைப்போரில் தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் முகமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் நினைவேத்தல் தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக இம்முறையும் மாவீரர் நினைவு வாரம் தமிழர் தாயகமெங்கும்,அழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மாதிரி மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் தின நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் போல் இம்முறையும் வடக்கு கிழக்கு பகுதியில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க ஜனாதிபதி அநுர குமார அரசால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக மாவீரர் தின நினைவு தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகமே உணர்வு பூர்வமாக தயாராகியுள்ளது.

வடக்கு-கிழக்கில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் கடந்த 21ஆம் திகதி முதல் உணர் வெழுச்சியுடன் இடம்பெற்றன. இதில் மாவீரர்களின் உருவப்படங்களும் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப் பட்டதுடன், மாவீரர்களின் பெற்றோர்மற்றும் உறவினர் கள் கண்ணீர் மல்க நினைவேந்தல்களில் ஈடுபட்டனர்.

இவ்வாறான நிலையிலேயே இன்றைய இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுக்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு, மஞ்சன் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு தமிழர் நாயகம் உணர்வெழுச்சியுடன் காணப்படுகின்றது.

இதற்கமைய இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எட்டு மாவட்டங்களிலும் உள்ள 30க்கும் மேற்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *