தொல்பொருள் இடங்களுக்கு பிரதேச சபையின் அனுமதி இன்றி பெயர்ப் பலகைகள் நட முடியாது; நீதிமன்றம் அறிவிப்பு

பிரதேச சபையின் அனுமதி இன்றி எந்த ஒரு தொல்லியல் இடங்களும் அடையாளப்படுத்த முடியாது என வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றினால் கட்டளை வழங்கப்பட்டுள்ளதுடன்,தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப் பலகையை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர்,பிரதி தவிசாளர்,உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப் பலகைகளை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதித் தவிசாளர்,இரண்டு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் நேற்று செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர் பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.
வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப் பலகைகள் இடப்பட்டதாகத் தெரிவித்து வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரினால் அந்தப் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.
இதன்கீழ் வாழைச்சேனை பிரதே சபைக்குள் இருந்த தொல் பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப் பலகைகளை நேற்று முன் தினம் வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரை கைது செய்திருந்தனர்.
இது தொடர்பில்,தமிழரசுக் கடசியின் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்,பிரதித் தவிசாளர் உறுப்பினர் இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் நால்வரும் ஆஜராகியிருந்தனர்.இவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
இந்தச் சம்பவம் தொடர்பாக கிரான் பிரதேசத்திற்கான தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார் அதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் திங்கட்கிழமை மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (25) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் ஏனையோர் இன்று(நேற்று) செவ்வாய்க்கிழமை வழக்கு நீதிமன்றத்துக்கு வருவது அறிந்து வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் தாங்களாகவே நீதிமன்றுக்கு வந்து வழக்கு கூப்பிடப்பட்ட போது தங்களை அடையாளப்படுத்தி மன்றிலே முற்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் சார்பாக சக சட்டத்தரணிகளோடு நானும் ஆஜராகி இருந்தேன்.
இந்த வழக்கிலே ஒரு வீட்டிலோ அல்லது கப்பலிலோ இருந்து ஏதாவது ஒரு பொருள் திருடப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று இலங்கை தண்டனை சட்ட கோவை 369 ஆவது பிரிவு சொல்லப்படுகிறது அந்த பிரிவின் கீழே தான் இந்த வழக்கு பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இரண்டாவதாக 410 .417 என்கின்ற பிரிவுகளும் பொலிசாரால் அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது .
பெயர் பலகைகளை திருடியது,அரச உத்தியோகத்தர் ஒரு விடயத்தினை செய்தால், அதாவது ஒரு பெயர் பலகையினை நட்டால் அதனை அனுமதியின்றி அப்புறப்படுத்துவது குற்றம் என்பன போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வீதியிலே இருந்து பெயர் பலகைகள் திருடப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர் . பொலிசாரின் அறிக்கை படி அவை கப்பலிலோ அல்லது வீட்டில் இருந்தோ திருடப்பட்டதாக இருக்க வேண்டும் ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை .
1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொது வழிகள் சட்டத்தின் பிரகாரம், வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதேச சபை தவிசாளர் அந்த சட்டத்தின் கீழ் அதிகாரமுடையவர்.அவருக்குரிய அந்த அதிகாரத்தின் கீழ் செய்யப்பட்ட விடயத்தினை,அவர் சட்டவிரோதமாக அகற்றினார் என்று எக்காலத்திலும் குற்றச்சாட்டினை முன்வைக்க முடியாது.அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அதனை அவர் செய்துள்ளார் என்பது நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அத்துடன் உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியைப் பெற்றே பெயர்ப் பலகை வைக்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப் பெற்றுக் கொள்வதாகவும் எதிர்காலத்தில் முறையாக அனுமதி கோரும் போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கப்படலாம் என்ற காரணத்தினாலும் பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணை வழங்கக் கூடிய காரணங்களைக் கொண்டிருப்பதனாலும் ஐந்து பேரையும் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் பிரதேச சபையின் முறையான அனுமதி பெறப்பட்டு பெயர்ப் பலகையிடும் பணிகள் நடைபெற்று இது தொடர்பான பிரச்சினை முடிவுறுத்தப்படுமானால் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த வழங்கு முடிவுக்கு வரும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
இதன்போது வாழைச்சேனை பிரதேசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர், இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுதியளித்து.
இந்த வழக்கானது மீண்டும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
![]()