தொல்லியல் பெயர் பலகை; அரசு மென்போக்கை கடைப்பிடிக்காது

தொல்லியல் இடங்களின் பெயர் பலகைகளை அகற்றுதல், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மென்மையான போக்கை கடைப்பிடிக்காது என்றும், சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் தொல்லியல் இடங்களுக்கான பெயர் பலகைகள் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
கோரளைப்பற்று பிரதேச சபை மற்றும் வெல்லாவெளி பிரதேச சபைக்குரிய சிலர் தொல்லியன் திணைக்களத்திற்கு சொந்தமான பெயர் பலகைகளை அகற்றியுள்ளதாக வாழைச்சேனை, வாகரை, வெல்லாவெளி, கரடியனாறு மற்றும் கொக்கடிச்சோலை ஆகிய ஐந்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்படி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த அரச சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சகல சேதங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம், வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் மற்றும் செங்கலடி நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோரளைப்பற்று பிரதேச சபையில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 7 பெயர் பலகைகள் பொலிஸாரின் பொறுப்பில் உள்ளது. மேலும் பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்களால் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
தொல்பொருள் திணைக்களம் என்பது அரசாங்க நிறுவனமாகும். அந்த திணைக்களத்தால் அமைக்கப்படும் பெயர் பலகைகள் நீக்கப்படுவதானது அரச சொத்துக்களை சேதப்படுத்துவதாகவே அமையும். இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் விளக்கமளிப்பர்.
நிதி ரீதியிலான பெறுமதியை அடிப்படையாகக் கொண்டே எந்த சட்டத்தில் இது தொடர்பான வழக்கு தொடர்வது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். இந்த விடயத்தில் நாங்கள் எந்த வகையிலும் மென்மையான போக்கை கொடுப்பதில்லை. இது போன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமாமாகவே செயற்படுத்தப்படும். இவ்வாறு செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது. அரசாங்கமே பெயர் பலகைகளை அமைக்கின்றது. இதற்கு எதிராக எவராவது செயற்பட்டால், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
![]()