இலங்கை

இனவாத கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரரைக் கைது செய்ய நீதவான் உத்தரவு!

சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரத்ன தேரரைக் கைது செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்  செவ்வாய்க்கிழமை (25) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டத்தின் அடிப்படையில் வழக்கு “வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்” என்று அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு பகுதியில் பகிரங்கமாகத் தெரிவித்த கருத்து தொடர்பில், சட்டத்தரணி தனுக ரணஞ்சய கஹந்தகமகே என்பவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சட்டத்தரணி தனுக ரணஞ்சய கஹந்தகமகே அவர்கள், கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி, சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தின் (ICCPR Act) அடிப்படையில் இந்த முறைப்பாட்டை நீதிமன்றில் பதிவு செய்திருந்தார்.

நீதிமன்ற நடவடிக்கை ICCPR சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, தேரரைக் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றின் இந்த உத்தரவு தொடர்பான தகவலை சட்டத்தரணி தனுக ரணஞ்சய கஹந்தகமகே தனது உத்தியோகபூர்வ Facebook பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு விசாரணையின் அடுத்த தவணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவின் மூலம், ICCPR சட்டத்தின் கீழ் இனவாத கருத்துகளை வெளியிடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *