இலங்கை

வடக்கு, கிழக்கு இரவு நேர ரயில் சேவைகள் நிறுத்தப்படுகிறதா?

மஹவ முதல் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் சரக்கு மற்றும் எரிபொருள் தாங்கி ரயில் சேவைகளை நிறுத்துவதற்கு ரயில் சாரதிகள் சங்கம் (லொகோமோட்டிவ் ஒபரேட்டிங் இன்ஜினியர்ஸ்) தீர்மானித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நள்ளிரவு முதல் சரக்கு மற்றும் எரிபொருள் ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, நாளை(இன்று திங்கள்) இரவு சேவையில் ஈடுபடும் ‘இரவுத் தபால் ரயில்’ சேவைகளிலிருந்தும் விலக எதிர்பார்ப்பதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ரயில்களில் யானைகள் மோதுவதால் ரயில் சேவைகளுக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது. மஹவயிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் போது ஏற்படும் யானை – ரயில் மோதல்களால் காட்டு யானைகளுக்கும் ரயில்களுக்கும் சேதம் ஏற்படுகிறது.

ரயில் இயந்திர சாரதிகளாகிய எங்களால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ரயிலை உடனடியாக நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லாததால், இது ரயில் சாரதிகளுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. எனவே இந்த விபத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.

காட்டு விலங்குகள் ரயிலில் மோதுவதால், எதிர்காலத்தில் இப்பகுதிகள் ஊடாக ரயில்களை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இது ஒரு பெரிய பிரச்சினையாகும், ஏனெனில் இதனால் ரயில் பயணிகள் உரிய நேரத்திற்குப் பயணிக்க முடிவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே இதற்கு உரிய தீர்வு அவசியம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *