சாம்பல்… கதை… சோலச்சி


அமாவாசை இருட்டு, நாய்களின் சத்தமும் அடங்கிப்போய் இருந்தது. கரிச்சான் குருவிகளின் சத்தம் மட்டும் அவ்வப்போது கிரீ…ச்…கிரீ…ச் என கேட்டுக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு கரும்புக் காட்டுக்குள் நரி ஊளையிடும் சத்தம் கேட்டு, தெருநாய் ஒன்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வீதியோரம் தோண்டி வைத்திருந்த குழிக்குள் படுத்துக்கொண்டது.
ஆள் அரவம் இல்லாமல் ஆதம்பட்டி கிராமம் நித்திரையில் முத்திரை பதித்துக்கொண்டு இருந்தது. தேர்தல் காலம் தவிர, வேறு எப்போதும் நாலு சக்கர வாகனங்கள் ஊருக்குள் வந்ததே கிடையாது.
இரவு ஒரு மணி, மண் சாலையில் புழுதி பறக்க வெள்ளை நிற காரும், இரண்டு மூன்று இரு சக்கர வண்டிகளும் இருளை கிழித்துக்கொண்டு சென்றன. இருள் கிழிந்த வேளையிலும் ஊர் புரண்டு கூட படுக்காமல் ஆழ்ந்து உறங்கியது.
“மாப்ள வண்டிய புளியங்கரைக்கு நேராவிடு” வண்டியில் இருந்த ஒருவன் சொன்னதும் கார் அங்கு போய்தான் நிலைக்குத்தியது.
“கட்டுகள அவித்து விட்டுறாதிக…. தாயோளி ம…. அப்புடியே ஒன்ன………. காடுகளே செவிடாகும்படியான….. தகாத வார்த்தையால் திட்டினான் ஒருவன்.
“ராத்திரிக்குள்ள எறிச்சர்னும். மசமசனு நிக்காம புளியமரத்து வாதுகள சட்டுப்புட்டுனு வெட்டுங்கப்பா……” அழுத்தமாய் அதே நேரத்தில் மெதுவாகவும் பேசினான் இன்னொருவன்.
வண்டிக்குள் இருந்து “ம்….. ம்…….” என சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டே இருந்தது.
“வேலு. அவ தலையில கடப்பாரையால நங்குனு ஒன்னு போடுடா… எரிக்கிறதுக்கு முன்னாடியே சாவட்டும்….” அனலாய் கக்கினான் மருது.
“அவ தலையில மட்டும் போடக்கூடாது சகல. பக்கத்துல கெடக்குறான்ல அவனோட குண்டித் துணிய அவுத்துட்டு… அதுலயே மிதிச்சாதான் என்னோட ஆத்திரம் தீரும். ம்……இப்ப நீ செய்யிறியா இல்ல நா வரட்டுமா…..” சொன்னபடியே செய்தான் வேலு.
நாலஞ்சு பேர் புளியமரத்துல ஏறி மரக்கிளைகளை வெட்டிக்கொண்டு இருந்தார்கள். புளியமரங்கள் அந்தக் குளத்துக் கரையில் அதிகம் இருப்பதால்தான் அந்தக் குளத்துக்கு புளியக்கரைகுளம்னு பேரு.
அந்தக் குளத்துல வடக்குப் பக்கமாதான் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு சுடுகாடு. அந்தச் சுடுகாட்டுலதான் இப்ப சலசலப்பு கேட்டுக்கிட்டு இருக்கு.
வேகவேகமாய் வெட்டி வீழ்த்தப்பட்ட மரக்கிளைகளை இடுப்பளவு உயரத்துக்கு அடுக்கினார்கள்.
“அந்த சாதி கெட்ட பயலையும், ஈனச்சிறுக்கி மவளையும் தரதரனு இழுத்து வாங்கடா….” கொக்கரித்தான் முருகன். குடுமியைப் பிடித்து இழுத்து வந்து கீழே போட்டார்கள்.
“வாய்க் கட்ட மட்டும் அவித்து விடு; கத்தியே சாகட்டும்….. மீண்டும் கர்ஜித்தான் முருகன்.
“அண்ணா விட்டுடுனா.. ஓங்…கண்ணு காணா தூரம் எங்காச்சும் போயர்றோம்….. அண்ணா….. அண்ணா…. அண்ணா….. ண்ணா…..” வாயில் வழிந்த ரத்தத்தை விழுங்க முடியாமல் விழுங்கி கதறினாள் மீனாட்சி.

ரத்தத்தில் மூழ்கி கிடந்த கேசவனின் முகத்தைக் கூட அவளால் இருட்டில் பார்க்க முடியவில்லை. உசுரோட இருக்கானா… இல்லையானு அவளால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
கேசவனிடம் இருந்து “ம்…பு ம்……பு…..ம் ம்…..பு….ம்…” ஒலி மட்டும் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தது.
“நம்ம சாதில ஆளே இல்லேனு… துப்புக்கெட்ட சாதில பொறந்தவனுக்கு வெட்கமே இல்லாம பெரிய வள்ளல்மாறி தூக்கி காட்டிருக்கா… இங்க உள்ளவனெல்லாம் முதுகு செத்த பயலுவளா…. இன்னும் என்ன மாப்ள அண்ணே…. நொண்ணே… வெண்ணேங்கிறா… நீயும் பாத்துக்கிட்டுருக்குற… நெஞ்சுல ரெண்டு பக்கமும் ஏறி மிதி மாப்ள…. எனக்கு வர்ற ஆத்தர மசுத்துக்கு….. அப்புடியே…..” உதட்டை நறுநறுவென கடித்துக் கொண்டான் மருது.
சொன்னதுதான் தாமதம்.
அவர்களின் பேச்சுக்கு பலியாக்கினான் முருகன்.
ரெண்டு பேரையும் குண்டு கட்டாக தூக்கி, அடுக்கி வைக்கப்பட்ட கட்டைகளில் நங்கென போட்டார்கள். ம்….க்கூ…ம்…க்…கூ. என சத்தம் கேட்டது.
விறகு இடுக்குகளில் சிலர் லாரி டயர்களை சாய்த்து வைத்தார்கள்.
“அண்…..ணே… அண்…..ணே… ” முனகல் சத்தம் நிற்கவே இல்லை.
இந்த கொடூர சாவுக்கு காரணம் காதலும் காமமும்தான்.
ஆதம்பட்டில பொட்டல் காடு முழுவதும் சீமைக்கருவ மரங்களும், வயல்வெளி தோறும் கரும்புத் தோட்டமும்தான் நிறைஞ்சு இருக்கும்.
மரம் வெட்டும் தொழிலும் கரும்பு வெட்டும் தொழிலும்தான் முக்கியமான தொழில்.
மரம் வெட்டும் தொழில் செஞ்சு வந்த மூக்கன் மகன்தான் கேசவன். இவன் யார் டானா… கோயிலுக்கு வெளியே ரொம்ப தூரத்துல நின்னு சாமி கும்புடுற சாதியாம்.
கரும்பு வயல் பலவற்றுக்கும் சொந்தக்காரன் சுப்பையா. இவனுக்கு ரெண்டு புள்ளைங்க. மூத்தவன் பேரு முருகன். அடுத்ததா பொறந்தவதான் மீனாட்சி, சுப்பையா, மீசைய முறுக்கி விடுற சாதியாம்… அந்தக் கூட்டத்துல முக்கியமானவன்.
கரும்பு தோட்டத்துக்குள்ளதான் கேசவனுக்கும் மீனாட்சிக்கும் காதல் மலர்ந்தது.
பட்டும்படாம இலைமறை காயாகப் பழகி வந்த காதலை முதலில் கண்டுபிடித்ததே மீனாட்சியின் உறவுக்காரன் மருதுதான். நம்ம சனத்துல இம்புட்டு பேரு இருந்தும் முண்டச்சிக்கி வேறுபக்கட்டு ஒனக்கை கேக்குதோ… மவளே ஒருநாளு இல்ல ஒருநா சிக்காமலா போயிருவ…. அப்ப இருக்குடி ஒனக்கு…. முணுமுணுத்தான் மருது.
ஒருநாள், தோப்பு செய் ஓரமா புல்லு அறுத்துக்கொண்டு இருந்தாள் மீனாட்சி. சரசரவென சத்தம் கேட்டு சுத்தும்முத்தும் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை. பூச்சி வட்டை ஏதும் போயிருக்கும் என நினைத்தவள் மீண்டும் புல் அறுப்பதில் தீவிரம் காட்டினாள். மீண்டும் சரட்…சரடென சத்தம் கேட்டதும் குனிந்திருந்தவள் நிமிர்வதற்குள் இடுப்பைக் கிள்ளினான் மருது.
திடுக்கிட்டு அலறினாள் மீனாட்சி. உடல் வேர்த்து வெடவெடத்துப் போனது அவளுக்கு. என்ன பண்ணப் போறானோ தெரியலையே….. மனசு படபடத்தது.
“மச்சான் எதும் பண்ணிடாதீங்க… வெலகிக்கங்க. இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க…. நா வீட்டுக்குப் போகனும்….” குருட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.
“இங்க பாரு மீனாட்சி. இப்புடி மொசுமொசுனு வெளஞ்சு நிக்கிற உன்னப்பாத்தா எவனுக்குத்தான்டி சும்மா இருக்கத்தோணும். நீயா அந்த வரப்புப்பக்கம் வந்துரு… இல்லனு வையி இங்கேயே… வேலைய முடிச்சுடுவேன்..” விழிகளை உருட்டி நாக்கைத் துருத்தினான்.
“மச்சான் என்னய விட்டுரு….. கையெடுத்து கும்புடுறேன்…..” மடாரென காலில் விழுந்து கதறினாள்.
கரும்புக் காட்டுக்குள் எழுந்த கதறல் ஒலி எந்த செவிகளுக்கும் எட்டவே இல்லை…… கரும்புத் தோகையை ஆட்டி ஆட்டி கூச்சலிட்டாள்.
“என்னடி… பத்தினிமாறி நடிக்கிற… சாதி கெட்ட பய மடியில படுக்கத்தோனும்… அவம்புட்டு மட்டும்தான் இனிக்கிதோ… எங்கவுட்டு கசக்குதோ… அடியே…. சடங்காயி குச்சுக்குள்ள போன நாள்லருந்து ஒன்னப் பாத்துக்கிட்டு தான்டி இருக்கேன்….” கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு கைலியை ஏத்தி கட்டினான்.
“மச்சான் அவர உசுரா நெனச்சுருக்கேன். என்னய விட்டுருங்க… விட்ருங்க….” மீண்டும் கதறினாள்.
“ஏன்டி…..இவள…. அவன உசுரா வச்சுக்க… இல்ல… மசுராக்கூட வச்சுக்கடி எனக்கு அது முக்கியமில்லடி… எனக்கு இப்ப படுக்கனும்…” அதட்டிக்கொண்டே குரல்வளையை பிடித்தான் மருது.
ம்…..என தலையாட்டினாள்…
அவள் தலையாட்டியதும் உள்ளுக்குள் குளுகுளுவென இருந்தது அவனுக்கு. அதனால் தனது பிடியிலிருந்து அவளை விடுவித்தான். அவனது பிடியிலிருந்து விலகி வரப்புப்பக்கம் ஒதுங்குவது போல் தலைதெறிக்க ஓடினாள் மீனாட்சி. தனது இச்சைக்கு இணங்குவாள் என்று எதிர்பார்த்தவனுக்குள் கோபம் கொதித்து எழுந்தது. கடிச்சு ருசிக்கலாம்னு எதிர்பார்த்து இப்புடி ஏமாந்துட்டமேனு தரையில் நங்குநங்குனு உதைத்தான்.
ஊருக்குள் ஓடி வந்தவள் தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டவளாய் வழக்கமான முகத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டாள். கரும்புக்காட்டுக்குள் நடந்தது வேறு யாருக்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ… என அஞ்சினாள்.

“என்கிட்டப் படுக்காதவ, இனி எவன்கிட்டயும் படுக்கவே கூடாது. எங்க ஓடிரப்போறா….” சிந்தனையில் மூழ்கியபடி தென்னை மரத்தில் சாய்ந்தான் மருது. ஒவ்வொரு நாளும் மீனாட்சியை தொந்தரவு செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்தான் மருது.
ஒரு நாள் மாலை நேரம் வழக்கம் போல் அவள் வீட்டுக்கு வந்தான் வேலு. வேலுவிடம் மீனாட்சி மனம் விட்டு பேசுவாள். கேசவனை காதலிப்பது தெரிந்ததும் அவளுக்கு துணையாக நின்றான். அதனால் வேலுவை மீனாட்சி எப்போதும் நம்புவாள்.
“மீனாட்சி உன்ன மருது விடமாட்டான் போல. நானும் அவன பாத்துக்கிட்டதான் இருக்கேன். உன்னைய சுத்திசுத்தியே வந்து நோகடிக்கிறான்.. அதுனால ஒன்னு சொன்னா கேப்பியா….” வேலு இப்படி சொன்னதும் என்ன என்பதுபோல் பார்த்தாள்.
“ஓன்…..நல்லதுக்குத்தான் சொல்றேன். மறுப்பு சொல்லாம இன்னைக்கு ராத்திரி கேசவன கூட்டிட்டு எங்காச்சும் ஒடிடு. கேசவன் கிட்டயும் சொல்லிட்டேன். அவனும் சரினுட்டான். ராத்திரி பதினோறு மணிய போல எனக்குத் தெரிஞ்சவன் ஒத்தக் கருப்பர் கோயில்கிட்ட “பைக்”ல நிப்பான். அவன்கூட போயிடுங்க. நானு உங்கண்ணே முருகன ராத்திரி எங்காச்சும் கூட்டிட்டுப் போயிடுறேன். எந்தப் பிரச்சினையும் வராது…”சொல்லி முடித்தான் வேலு.
பலமுறை யோசித்துப் பார்த்தாள். தெனமும் மருத பாத்து பயந்து சாகுறதுக்கு… வேலு சொல்ற மாறி கெளம்புறதுதான் நல்லது என முடிவெடுத்தாள்.
வேலு சொன்னது போல் கேசவன் ஒத்தக்கருப்பர் கோயில் கிட்ட காத்திருந்தான். மூச்சிறைக்க வந்து சேர்ந்தாள் மீனாட்சி. ஒத்தக் கருப்பர் கோயிலில் அவசர அவசரமாக சாமி கும்பிட்டு விட்டு வேலுவின் நண்பனுடன் பைக்கில் சென்றனர்.
ஊரு எல்லையைக் கடந்து மின்னல் வேகத்தில் வண்டி சீறிப்பாய்ந்தது. ஏழு கிலோமீட்டர் தூரம் சென்றிருக்கும் தடக் தடக் சத்தத்துடன் வண்டி நின்றது.
“என்னாச்சு… என்னாச்சுங்க….” பதட்டமானான் கேசவன்.
“வண்டில பெட்ரோல் இல்ல போல… அன்னக்கித்தான் நெறைய போட்டேன்….. என்னான்னு தெரியலயே….. ம்…. யோசித்தவன்.. இதுக்கு மேல இங்கிட்டு யாரும் வரமாட்டாங்க.. எப்புடியாச்சம் நீங்க போயிடுங்க…” அவன் சொல்லி முடிப்பதற்குள் எதிரே மூன்று வண்டிகளில் முருகன், மருது, வேலு இன்னும் சிலரும் நகரத்தில் இருந்து எதிரே வந்து கொண்டு இருந்தனர். எதிரே வண்டியில் யார் வருகிறார்கள் என இவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால “இருங்க ஏதோ வண்டிக வருது.. நீங்க அந்தப் பக்கம் ஒழுஞ்சுக்கங்க அவங்ககிட்ட பெட்ரோல் கிடைக்குமானு பாக்குறேன்…” என்றான்.
இருவரும் மறைவாக இருந்த புதருக்குள் ஒளிந்து கொண்டனர்.
கை நீட்டினான் அவன்…….
“மாப்ள வண்டிய நிறுத்து.. நவ்வா மரத்துப்பக்கம் யாரோ ரெண்டு பேரு போற மாறி இருக்கு..” முருகனின் தோளைத் தட்டினான் மருது.
“மாப்ள இங்கேயே நில்லு . நா…….போயிட்டு வர்றேன்…” கிளம்பினான் மருது.
“நானும் வர்றேன் சகல…” வேலுவும் பின் தொடர்ந்தான். செல்போனில் இருந்த டார்ச் லைட்டை நவ்வா மரத்தின் பக்கமாக செலுத்தினான் மருது. வெளிச்சத்தை பார்த்ததுமே கேசவனுக்கும் மீனாட்சிக்கும் ஈரக்கொளையே நடுங்கியது.
“மாப்ள…. ஓந்தங்கச்சியும் அந்த எச்சிக்கல பய மவனும்டா…” உரக்க கத்தினான் மருது. முருகனோ சாதிவெறியில் நித்தமும் குளிப்பவன். சுய சாதி பெருமையை யாரிடமாவது காட்டவில்லை என்றால் மண்டையே வெடித்துவிடும் போல் ஆகிவிடும் முருகனுக்கு. இப்ப சொல்லவா வேணும்…..
மருது அடுத்து குரல் எழுப்புவதற்குள் பாய்ந்து வந்த முருகன் இருவரையும் தாக்கினான். எல்லோரும் தாக்க ஆரம்பித்தனர். கத்தவும் முடியாமல் தப்பிக்கவும் வழியில்லாமல் இருவரும் திகைத்தனர். வழியனுப்பி வச்ச வேலுவும் வந்துருக்கானே….. ஆகா…. என்ன நடக்குதுன்னு தெரியாம அவசரப்பட்டு கிளம்பி வந்து மாட்டிக்கிட்டோமே என நினைக்க மட்டுமே முடிந்தது. அடி தாறுமாறாக விழுந்தது. வலி தாங்க முடியாமல் திணறினர்.
இருவரையும் வண்டியில் கூட்டி வந்தவனோ.. எதுவும் தெரியாதது போல் வண்டியை தள்ளிக்கொண்டே நகர்ந்து சென்றான்.
“மாப்ள இந்தக் கூத்து ரொம்ப நாளாவே நடக்குதுடா… ஒனக்கு தெரியாதா…? இப்புடியே விட்டா அந்த வேசி பயலுகளுக்கு கொழுப்பு வச்சுப் போயிடும். ராத்திரியோட ராத்திரியா கொன்னு பொதச்சாதான் நாம மானத்தோட வாழமுடியும். என்ன சொல்ற……” உசுப்பேற்றினான் மருது.
“பொதச்சா பின்னாடி சிக்கல் வந்துராதா….. எறிச்சர்றதுதான் நல்லது….” ஆலோசனை சொன்னான் இன்னொருவன்.
இருவரது வாயையும் கைகளையும் துணியால் கட்டினர். அங்குகிடந்த கட்டையை எடுத்து ஆத்திரம் தீர அடித்தனர். வலியால் துடித்தனர்.
ம்….ம்……ங்…..ங்…..ம்……. மூச்சு மட்டுமே வந்தது. உடலை ரத்தம் நனைத்துக்கொண்டு இருந்தது. உறுப்புகள் செயலிழந்து போனது.
மருது யாருக்கோ போன் செய்தான். சில நிமிடங்களில் கார் ஒன்று வந்தது…
காரிலிருந்து இறங்கியவன் இருவரையும் மிதிமிதியென மிதித்தான்…. இங்க வச்சு மிதிச்சா பத்தாது…. தூக்குங்க என்றான் ஒருவன்.
அர்த்த ராத்திரியில் அந்த வழியாக நடந்து வந்த கேசவனின் மாமா, கூட்டமாக காரில் யாரையோ தூக்கிச் செல்வதைப் பார்த்து என்னம்மோ ஏதோனு ஓடி வந்தார். காரின் முகப்பு வெளிச்சத்தில் கேசவனின் முகம் பளிச்சென தெரிந்தது.
அய்யய்யோ……. ஏம்…..மாப்புளைய என்னடா பண்றீங்க….. அய்யோ….. விடுங்கடா….. விடுங்கடா என கத்திக் கொண்டே காரை நோக்கி ஓடி வந்தார். அதற்குள் அந்த காரு கிளம்பிவிட்டது.
இருசக்கர வண்டியில் கிளம்புவதற்கு இருவர் தயாராக இருந்தனர். ஒருவன் வண்டியை சாவி போட்டு மிதித்தான். வண்டி கிளம்புவதாக இல்லை. அந்த வண்டியை நோக்கி கத்திக் கொண்டே ஓடி வந்தார் கேசவனின் மாமா.
என்னடா…. எவ்ளோ மிதிச்சும்… வண்டி எடுக்க மாட்டேங்கிது…
யார்…ரா இந்த ராத்திரியில கத்திக்கிட்டு வர்றது….
அவனோட மாமங்காரன்தான்…. கத்திக்கிட்டு வர்றான்.

அப்புடினா…. பாத்துட்டான்போல… இவன உசுரோட விட்டுட்டு போனா பெரிய பிரச்சினைய உண்டாக்கிருவான். வா..டா கோழியத் திருவன திருவி போட்டுட்டுப் போயிருவோம்.
இவனயும் போடனும்னுதான் வண்டி கெளம்ப மாட்டேனுருச்சுபோல…
கேசவனின் மாமனை மடக்கி மூஞ்சியிலும் கழுத்திலும் மாறி மாறி குத்தினர். மாப்ளய என்னடா பண்ணுனீங்க…. அய்யய்யோ…… என்னடா பண்ணுனீங்க…. கத்தினார். ஒருகட்டத்தில் நிலை தடுமாறி போன அவரின் கழுத்தை ஒரே திருவாக திருவி புதருக்குள் தூக்கி வீசினர்.
வண்டியில் இருவரும் விருட்டென கிளம்பினர்.
அந்தக் காருதான்… இப்போது புளியங்கரையில்…
“மாப்ள… உனக்கு புடிச்ச சனியன்.. இன்னையோட தொலையட்டும் இந்தப் பெட்ரோல ஊத்தி பத்தவையி.. சத்தமில்லாம எறிச்சுட்டுப் போயிக்கிட்டே இருப்போம். இவ செத்தா வெறும் மசுரு போன மாறித்தான்……” காரில் வைத்திருந்த பெட்ரோலையும் தீப்பெட்டியையும் நீட்டினான் மருது.
“ம்……. ண்ணே.. விட்ரு… ண்ணே…. விட்ரு…” முனகல் நிற்காமல் தொடர்ந்தது.
“இன்னும் தாயோளி மக …. ஈனச் சிறுக்கி சாகலடா…” பெரிய கட்டையால் மடாரென ஓங்கி அடித்தான் ஒருவன். அதற்குள் வேகமாய் பிடுங்கி பெட்ரோலை ஊற்றினான் மருது.
மாப்ள ஓங்கையால பத்த வையி….. நம்ம சனத்துக்கே புடிச்ச சனியன் தொலையட்டும்…. மருது பேசபேச…. கொந்தளிப்பு அடங்காத முருகன் பத்த வச்சான்.
நெருப்பு கொழுந்துவிட்டு எறிந்தது.
சேவல் கூவ ஆரம்பித்தது.. தீயும் எறிந்து முடிந்திருந்தது.
“யாராச்சும் இது என்னான்னு கேட்டா… சீக்குப்பிடிச்ச மாட்ட எறிச்சுட்டதா சொல்லுங்க.. சந்தேகம் வராது..” முருகனின் கையை பிடித்துக்கொண்டு நடைபோட்டான் மருது.
தனது திட்டப்படி சாதித்தீயை கொழுத்திவிட்ட மகிழ்ச்சியில் வேலுவுக்கு கைகொடுத்து முருகனுடன் பம்பு செட்டுக்குள் படுக்கப்போனான் மருது.
விர்ரென்று…….காரும் கிளம்பியது….
![]()