மாகாண சபைத் தேர்தல் நடக்குமா?; பாராளுமன்றமே தீர்க்க வேண்டும்

அதிகார பகிர்வுக்காக 13ஆவது திருத்தத்தை தவிர வேறேதும் முறைமைகள் இருக்குமாக இருந்தால் அரசியலமைப்பை திருத்த வேண்டும். ஆனால் அரசியலமைப்பு திருத்தத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்காமல் மாகாண சபைகளுக்காக தேர்தலை நடத்தாமல் இருப்பது அல்லது அதனை ஒத்தி வைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளதாவது.
நிதியை ஒதுக்கினால் மட்டும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது. அந்தத் தேர்தல் தொடர்பான பிரச்சினையை பாராளுமன்றமே தீர்க்க வேண்டும். அங்கேயே பழைய விகிதாசார முறையில் நடத்தவதா? அல்லது புதிய கலப்பு முறையில் நடத்துவதா? என்பதனை தீர்மானிக்க வேண்டும். இதன்படி தேர்தல் நடத்தும் முறையை தீர்மானித்த பின்னர், பழைய முறையில் நடத்துவதென்றால் தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி, பழைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு அல்லாமல் புதிய கலப்பு முறையில் தேர்தலை நடத்துவதென்றால் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதா? அல்லது புதிதாக எல்லை நிர்ணயத்தை செய்வதா? என்று தீர்மானிக்க வேண்டும்.
பழைய முறையில் செல்வதென்றால் அடுத்த வருட ஆரம்பத்திலேயே தேர்தலை நடத்த முடியும். ஆனால் புதிய முறையில் நடத்துவதென்றால் சில காலம் எடுக்கும். ஆனால் மாகாண சபைகள் தேர்தல் வேண்டுமா? இல்லையா? என்று அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை வெளியிடுவதில்லை. குறைந்தது எதிர்க்கட்சியினர் தாம் ஆட்சி செய்யும் உள்ளூராட்சி சபைகளில்கூட அது தொடர்பில் தீர்மானங்களை கொண்டு வரவில்லை. அதேபோன்று அரசாங்கத்தினாலும் சரியான தினம் கூறப்படவில்லை. குறிப்பாக அடுத்த வருடத்தில் ஜுன் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டுமென்றால் இப்போது அதற்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். எவ்வாறாயினும் ஆட்சிக்கு வந்த உடனேயே பழைய முறையில் நடத்தியிருந்தால் இப்போது பிரச்சினை இருந்திருக்காது. இப்போது முழுமையாக குழப்பகரமான ஒன்றாக மாறியுள்ளது. இதனை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
இதேவேளை மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் ஆளுநர்களின் நிர்வாகத்தை கொண்டு செல்வது முழுமையாக சட்டவிரோதமாகும். அதாவது மாகாண சபையொன்று தொடர்பான வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நிறுவனமொன்றை நடத்திச் செல்ல வேண்டுமென்றால் அதற்கு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாகாண சபை வேண்டாம் என்றால் அரசியலமைப்பை மாற்றி 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும். ஆனால் அதிகார பகிர்வுக்காக பண்டாரநாயக்க காலத்தில் இருந்து கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு முறைமைகள் அதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமையில் அதிகார பகிர்வுக்காக ஏதேனும் முறையில் செல்வதென்றால் அரசியலமைப்பை திருத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்காமல் மாகாண சபைகள் தேர்தலை நடத்த மாட்டோம் என்பது பொருத்தமானது அல்ல. எந்த அரசாங்கமாக இருந்தாலும் தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாய விரோதமாகும் என்றார்.
![]()