இலங்கையில் சுனாமி தாக்கினால் எதுவுமே செய்ய முடியாத நிலை; அனைத்து முன்னெச்சரிக்கை கோபுரங்களும் செயலிழந்தன

இலங்கையில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பில் கண்டறிந்து கொள்வதற்காக 77 கோபுரங்கள் காணப்படுவதாகவும் இவை அனைத்தும் தற்பொழுது செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் நாடு முழுவதிலும் குறிப்பாக கரையோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே செயலிழந்து விட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.
செய்மதி சமிக்ஞைகள் தொடர்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இந்த முன்னெச்சரிக்க கோபுரங்கள் செயல் இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது .
வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து சர்வதேச நிறுவனங்கள் ஊடாக இந்த தொழில்நுட்பக் கோளாறை சரி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் சுனாமியை கண்டறிந்து கொள்வதற்கான ஒரு முறைமை மட்டுமே எனவும் இவ்வாறான பதினைந்து முன்னெச்சரிக்கை முறைமைகள் காணப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
ஒரே முறைமையில் தங்கி இருக்க முடியாது.பல்வேறு முறைகள் காணப்படுவதாகவும் இந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் ஊடாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே முன்னெச்சரிக்கை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் முன்னெச்சரிக்கை கோபுரங்களை பழுது பார்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் கரையோர மாவட்டங்களான மட்டக்களப்பு,யாழ்ப்பாணம், காலி களுத்துறை போன்ற பகுதிகளில் நேற்றைய தினம் இந்த சுனாமி சுனாமி ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
![]()