இலக்கியச்சோலை

எழுத்தாளருக்கு மூன்று படித்துறைகள்… இலக்கிய உரை…. அண்டனூர் சுரா

அண்டனூர் சுரா
அண்டனூர் சுரா

அனைவருக்கும் வணக்கம்.

ஓர் அறிமுக எழுத்தாளனின் முதல் நூல் இப்படித்தான் இருக்கும் என்கிற கருத்து தமிழ் இலக்கியச் சூழலில் இருக்கிறது. முதல் நூல் வெளியீட்டு விழா இப்படியெல்லாம் நடக்கும் என்கிற புரிதல் இருக்கிறது. முதல் நூலுக்கான திறனாய்வு கூட்டம் இந்த அளவில்தான் நடக்குமென்று ஒரு கருதுகோள் இருக்கிறது. இவ்வளவையும் தகர்த்து இந்த நூல் வெளியீட்டு விழா ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்குரிய விழாவாக நடந்துகொண்டிருக்கிறது.
சராசரியாக இலக்கியக் கூட்டத்திற்கு கூடும் கூட்டத்தை விடவும் திரளான கூட்டம் இது. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு ‘சிலுக்கு தேவதை’ எனும் நூலின் பெயரும் ஒரு காரணம் என்று கருதுகிறேன்.

அன்பு நண்பர் கவிஞர் அஷ்ரப் அலி அவர்கள் ஒரு மாதத்திற்கும் முன்பு என்னிடம் தொடர்புகொண்டு நிலா மகன் சிறுகதைத் தொகுப்பு கொணர்ந்திருக்கிறார். நீங்கள் வந்து வெளியிட்டு சிறப்புரையாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். நான் மட்டுமல்ல, யாரும் அஷரப் அலியின் வேண்டலைத் தட்ட முடியாது. சிலுக் கண்களிலிருக்கும் ஒரு விதமான காந்தமும் சிலுக் நடனத்தின் நளினமும் அஷரப் அலியின் குரலில் உண்டு. இது அவரோடு நெருங்கி பழகியவர்களுக்குத் தெரியும். ஆயினும் நான் தயங்கினேன். காரணம் இந்த நூல் வெளியீட்டு விழா மணவை இலக்கிய வட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது. மணவை இலக்கிய வட்டம் ஆட்களைக்கொண்டு கூடுவதில்லை. ஆளுமைகளைக்கொண்டு கூடுகிறது. ஆகவே முதலில் நான் தயங்கினேன். பிறகு நூலின் தலைப்பைக் கேட்டேன்.. ‘சிலுக்கு தேவதை’ என்றார். என்னது? சிலுக்கு தேவதை. உடனே வருவதாக ஒப்புக்கொண்டேன்.
சிலுக்கு யாருக்குத்தான் பிடிக்காது. சிலுக்கைப் பிடிக்காமல் இந்தப் பூமியில் யார் இருக்க முடியும்?

சிலுக்கு எனக்குப் பிடித்துப் போக காரணம் அவர் கிளாமர் நடிகை என்பதால் அல்ல. பசியினலான வாழ்க்கை அவருடையது. அவரது அந்திமக் காலத்தை வாசித்தவர்களுக்கு அது தெரியவரும்.

சிலுக்கு தேவதை எனும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு சிலுக்கு பற்றிய கதைகள் என்றே நினைத்தேன். இந்தக் கதை சிலுக்கு கதை அல்ல, சிலுக் கதை.
சிலுக் தேவதையை ஏன் சிலுக்கு தேவதை என்று எழுதியிருக்கிறார் என்று கேட்பீர்கள். புனைவு இலக்கியம் அப்படியாக அவரை எழுத வைக்கிறது. எதிர்பார்ப்பைக் கூட்ட வைக்கிறது. வாசகர்களைத் தன் பக்கமாகத் திருப்ப வைக்கிறது. எல்லாரையும் கவனிக்கவும் பார்க்கவும் வைக்கிறது. ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு இவ்வளவு பெயரையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

சிலுக் நடிகையை மனதில் நிறுத்தி வாசிப்பதற்கு முன்பாக என்னையே நான் ஒரு முறை எச்சரித்துக்கொண்டேன். இந்த நூல் நாற்கரம் எனும் பதிப்பகத்தின் வழியே வந்திருக்கிறது. நாற்கரம் பதிப்பகத்தார் தோழர் நல்லு லிங்கம் அவர்கள் அவ்வளவு எளிதில் ஒரு நூலைத் தன் பதிப்பகத்தில் கொண்டுவந்துவிடமாட்டார். அவரது பதிப்பகத்தில் இந்தத் தொகுப்பு வந்திருக்கிறதென்றால் அது சிலுக்கு பற்றிய கதையாக இருக்காது என்று ஊகித்தேன். எனது ஊகம் சரிதான்!

சிலுக்கு தேவதை பட்டு தேவதைக் கதையாக வந்திருக்கிறது. பட்டு என்றால் பட்டாம்பூச்சியா? வண்ணத்துப்பூச்சியா? என்று கேட்பீர்கள்.

நல்ல மொழியால் வார்க்கப்’பட்டு’ எதார்த்த கதைகளால் புனையப்’பட்டு’ பிழை இல்லாமல் வடிக்கப்’பட்டு’ நல்ல கட்டமைப்பால் கட்டமைக்கப்’பட்டு’ வந்திருக்கிறது. சிலுக்கு தேவதை கதை என்பது பட்டுத் தேவதை கதை.

தன் வீட்டுப் பெண் குழந்தையை செல்லம், தங்கம், மயில், பட்டு என்று கொஞ்சும் தந்தை பற்றிய கதை. அப்படியாக கொஞ்சும் அளவிற்கு அழகும் அறிவும் கொண்ட பெண் குழந்தையின் கதை.
இந்த நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர் தமிழ்மணி எனும் வழக்கறிஞர் தலைமையில் நடக்கிறது. புனைவு மொழிக்குப் பெயர் போனவர்கள் வழக்கறிஞர்கள். வழக்கறிஞர் அளவுக்கு யாரும் எதையும் புனைந்து எழுதிவிட முடியாது.

தொடக்கக்கால புனைவு இலக்கியத்திற்கு வழக்கறிஞர்கள் செய்த பங்களிப்புகள் அதிகம். முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளை, பத்மாவதி சரித்திரம் எழுதிய அ. மாதவையா யாவரும் வழக்கறிஞர்களே.

முதல் சிறுகதை எழுதியது யார் என்கிற விவாதத்தில் வ.வே.சு ஐயர், சுப்பிரமணிய பாரதி வரிசையில் மாதவய்யாவும் அவர் எழுதிய ‘சாஸ்தா பீரீதி’ எனும் கதையும் இருக்கிறது.
இதெல்லாம் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் இவ்விழாவின் தலைவர் வழக்கறிஞர் தமிழ்மணி அவர்கள் நல்ல கட்டுரையாளர், சமூகத்தை மிகச் சரியாய் திறனாய்வு செய்யக்கூடியவர். ‘உறஙகும் மனசாட்சி’ எனும் அவரது நூல் இதற்கு உதாரணம். அத்தகையவரைத் தலைமையாக வைத்துக்கொண்டு சிலுக்கு தேவதை நூல் குறித்து மிகைப்படுத்தி பேசி விட முடியாது. தவறாகவும் பேசி விட முடியாது. குறைத்தும் பேசிவிட முடியாது.

சிலுக்கு தேவதை ஏழு கதைகளைக் கொண்ட தொகுப்பு. ஜீவி.சந்திரசேகரன் எனும் இயற்பெயர்க்கொண்டவர் நிலா மகன் எனும் புனைப்பெயரில் இக்கதைகளை எழுதியுள்ளார். மணப்பாறைக்கும் அருகில் விடாத்திலாம்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர். இந்திய கப்பற்படையின் கடலோரக் காவல் படையில் முக்கிய அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி மீனாட்சி ப்ரியா, மகன் சாணக்யன், மகள் நிலாமிகா. தன் மகள் நிலாமிகாவின் மகனாக நிலாமகன் இருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் யாவரும் இவரது கதைகளில் மாந்தர்களாக இருக்கிறார்கள்.

சிலுக்கு தேவதை கதையில் வரும் மீனாட்சியை இவரது துணைவியார் மீனாட்சியாகவும் பார்க்கலாம். அவரவர் துணைவியாரை மீனாட்சி உருவத்திலும் உருவகப்படுத்திப் பார்க்கலாம்.
ஒரு சிறுகதைக்கு தொடக்கம் மிக முக்கியம். நன்றாக தொடங்கப்படாத ஒரு சிறுகதை தன்னை அது நன்றாக எழுதிக்கொள்வதில்லை. ஒரு படைப்பாளன் மொத்த படைப்பையும் இழுக்கப்போகும் முதல் சொல்லையே தேடுகிறான். அந்த சொல்லுக்காக காத்திருக்கிறான். அந்தச் சொல்லுக்காக அவனது கதையும் காத்திருக்கிறது.

ஒரு குழந்தை கரு கொள்கையில் இதயமே முதலில் உரு கொள்கிறது. அந்த இதயமே முழு குழந்தையையும் உருவப்படுத்துகிறது. அப்படித்தான் சிறுகதையும்.

“தூரத்திலிருந்து வரும் மழை வாசனையும் மண் வாசனையும் இதமாக இருந்தன” என்பதாக இந்தக் கதை தொடங்குகிறது. மண்ணுக்கு வாசனை உண்டு. மழைக்கு வாசனை உண்டா?
இந்தக் கதையில் மண் என்பது மீனாட்சி. மழை என்பது மீனாட்சிக்கும் அவரது கணவரான கதைச் சொல்லிக்கும் பிறந்த மகள். ஒரு மழை விடிகாலை பெய்கையில் என்னவெல்லாம் செய்யுமோ அவ்வளவையும் செய்கிறாள் இந்தக் கதையில் வரும் சில்க் குட்டி.

பெண் குழந்தையான சில்க் குட்டி மீது மீனாட்சிக்கு செல்லமாய் ஒரு கோபம். எப்படியான கோபமென்றால் ஒரு தாய் தன் மகளை பகலெல்லாம் பராமரித்து விதவிதமாய் ஆடையுடுத்தி கொஞ்சி இரவு அமுதூட்டி தூங்க வைக்கிறாள். மகளும் அம்மாவைக் கட்டிப்பிடித்தவளாய் தூங்குகிறாள். விடிகாலையில் அம்மாவுக்கு முன்பே விழித்துவிடும் மகள் அம்மாவை எழுப்பி கேட்கிறாள். “அம்மா, அப்பா எங்கேம்மா?” இப்போது மகள்மீது செல்லமாய் ஒரு கோபம் வரும் இல்லையா. இவளை நாள் வளர்ப்பது நான். ஆனால் இவள் விழித்ததும் அப்பனைத் தேடுகிறாள். அப்படியான கோபம் மீனாட்சிக்கு வருகிறது. மனைவி கோபப்படுமளவிற்கு சில்க் தேவதை மீது அப்பா கோபம் கொள்கிறார். அந்த அப்பா சில்க் மீது எவ்வளவு அன்பைக் காட்டியிருந்தால் அந்த சில்க் தேவதைக்குட்டி அப்பாவை அப்பா இல்லாத நாட்களிலும் தேடுவாள். இதை அன்புணர்வை உள்வாங்கிக்கொண்டே இந்த கதையை அணுக வேண்டும்.

மென் உணர்வாக செல்லும் கதையில் ஓரிடத்தில் தனக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் அன்புணர்வை ஒரு உவமை மூலமாக காட்டுகிறார் எழுத்தாளர். “என்னதான் சொன்னாலும் அமெரிக்கா இஸ்ரேல் பக்கமே சாய்வதைப் போல நான் என்றும் மகள் பக்கம்தான்.” இந்த உவமை இந்தக் கதைக்கு சற்றே அந்நியப்பட்டாலும் தகுந்த உவமை அது.

மகள் மீது அவர் காட்டும் அன்பைப் பார்த்து மீனாட்சிக்கு பொறாமை வருகிறது. கோபம் வருகிறது. சமையலறையிலிருந்து தோசை கருகும் வாசனை வருகிறது. கதையில் முக்கியமான இடம் இது.

நான் எனது கதைகளில் இது போன்ற இடங்களில் பாத்திரங்களை உருட்டியிருக்கிறேன். மனைவி தன் கோபத்தைக் காட்ட பாத்திரங்களே சரியான தேர்வு. பாத்திரங்களை உருட்டுவது ஒரு வகையான வன்முறையான வெளிப்பாடு. தோசை கருகுதல் என்பது அகிம்சையான கோபம்.

மகளின் மீது மொத்த அன்பையும் காட்டுவதுதான் கதை. இந்த அன்பை அவர் ஒரு மழையைப் போல காட்டுகிறார். இப்பொழுது நமக்கு ஒரு கேள்வி எழும். மிக முக்கியமான கேள்வி இது. சரி, மகள் தன்கூட இருக்கும் நேரத்தில் மகள் மீது அன்புக் காட்டுகிறார். மகள் பள்ளி சென்றுவிட்டால் இந்த கதைச்சொல்லி என்ன செய்வார்?

அவர் தன் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வருகிறார். ஒரு பாலித்தீன் பையோடு வருகிறார். மீனாட்சி கேட்கிறாள், என்னங்க இது? “உனக்குப் பிடிக்குமேனு தேங்காய்ப்பாலும் இடியாப்பமும்.”

இந்த இடத்தில் வாசகனாக உங்களுக்கு ஒரு சந்தேகம் எழும். மனைவியைக் கவர யாரும் பூ வாங்கி வருவார்கள். அதோடு இன்னொன்றையும் வாங்கி வருவார்கள். இவரென்ன தேங்காய்ப்பாலும் இடியாப்பமும் வாங்கி வருகிறாரே என்று கேட்கலாம்.
பதில் இருக்கிறது. தேங்காய்ப்பாலும் இடியாப்பமும் இரண்டற கலப்பது என்பது செம்புலப்பெயல் நீர் கலப்பது போன்றது.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!’
இந்த வரிகளைச் சற்றே திருத்தி தேங்காய்ப் பாலுடன் இடியாப்பம் அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே என்று கொள்ளலாம்.

செம்மண்ணும் நீரும் ஒன்றொடு ஒன்று கலந்து ஒரு வண்ணமாவது சங்க இலக்கிய உவமை. தேங்காய்ப்பாலும் இடியாப்பமும் கலந்து வெண்ணிறம் கொள்வது புதிய இலக்கிய உவமை.
இந்தக் கதையின் தொடக்க வரியை அவர் மண் வாசனை என்று தொடங்கியிருப்பதாக சொன்னேன். இங்கு மண் வாசனையை மணவை வாசனை என்றும் கொள்ளலாம்.

புதுக்கோட்டை – புதுகை , கோயம்புத்தூர்- கோவை , தஞ்சாவூர் – தஞ்சை என்று அழைக்கப்படுவதைப் போன்றதல்ல மணப்பாறை மணவை என்று அழைக்கப்படுவது.
புதுகை, தஞ்சை, கோவை ஊர் மரூஉ பெயர்கள் யார்ச் சூட்டியது என்று நம்மால் சொல்ல முடியாது. ஆனால் மணவை பெயர் யார் சூட்டியது? அல்லது யாரால் இந்தப் பெயர் கவனம் பெற்றது என்று சொல்லிவிட முடியும். மணவை என்றால் நம் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மணவை திருமலைசாமி. இவர் பெரியார் காலத்தவர். ‘நகர தூதன்’ எனும் பத்திரிகை நடத்தியவர். இவர்தான் மணவை எனும் பெயரைப் பிரபலப்படுத்துகிறார்.

அடுத்து மணவை முஸ்தபா. இவர் இலக்கியப் பெருங்கடல். மருத்துவ அகராதியாக இருக்கட்டும். கணினி அகராதியாக இருக்கட்டும். இவர் ஆற்றிய இலக்கிய பங்களிப்பு மிகப் பெரியது. இவர் எழுத்தாளர் ஜெயந்தன் உடன் இணைந்து மணவை தமிழ் மன்றம் எனும் இலக்கிய அமைப்பை உருவாக்கினார்.

மணவை முஸ்தபா பற்றி பேசுகிற இந்த இடத்தில் எழுத்தாளர் ஜெயந்தன் குறித்தும் நாம் பேசியாக வேண்டும். நான் எழுத வந்த காலத்தில் ஜெயந்தன் என்பவருக்கும் ஜெயகாந்தன் என்பவருக்கும் வித்தியாசம் தெரியாது. இருவரும் ஒருவரென்றே நினைத்தேன். ஜெயந்தன் தன் எழுதுகளை முழுக்க இடதுசாரி அரசியலாக, அடித்தட்டு மக்களுக்காக எழுதியவர். அவரது எழுத்தின் தொடர்ச்சிதான் ஆங்கரை பைரவி, ஜீவிதன், அஷரப் அலி, தமிழ்மணி, சீராளன், பாலாஜி இனியன், தமிழ்ச்செல்வன், அறிவுச்செல்வன். இந்த வரிசையில் நிலா மகனும் சேர்கிறார்.

இந்தத் தொகுப்பில் முதல் கதையாக இருக்கிறது ‘காளிதாசும் கண்ணதாசனும்’. இக்கதை என் அப்பாவின் கதை என்பதாக தொடங்குகிறது.

எல்லா அப்பாக்களுக்கும் ஒரு காதலி இருக்கிறாள் என்று மகன்கள் உணர்கிற இடம் இருக்கிறது அல்லவா அது முக்கியமானது. அதேநேரத்தில் எல்லா அம்மாக்களும் தன் கணவன் தனக்கு மட்டுமே உண்மையாக, நிஜமாக, வாய்மையாக, சத்தியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற நினைப்பும் இருக்கிறது. இது அதைவிடவும் முக்கியமானது. இந்த இரண்டு பாத்திரங்களும் ஒரு புள்ளியில் இணைவதுதான் காளிதாசும் கண்ணதாசனும் எனும் இக்கதை.
நான் தப்பு பண்ணிட்டேன். இனிமேல் அப்படி நடக்காதுனு மனைவியிடம் கணவர் மண்டியிடுகிற இடம் இந்தக் கதையில் முக்கியமானது. எண்பதுகளில் வாழ்ந்தவர்கள் இன்று நமக்கு அப்பா வயது உடையவர்கள். அவர்களுக்கு ஒரு ராசாத்தி உண்டு. மாலை ஐந்து மணியானாலும் ‘ராசாத்தி உன்ன கானாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்று அவர்களது ஆழ்மனம் பாடத்தொடங்கிவிடுவதுண்டு. அப்படியாக பாடும் ஒரு அப்பாவாகத்தான் காளிதாசு இருக்கிறார். அந்த அப்பாவின் ராசாத்தி யாரென்று மகன் கண்ணதாசன் கண்டடைகிற இடமும் கண்டு அப்பாவை மீட்டுவரச் சென்ற மகன் அப்பாவை விட்டுவருவதையும் ஒரு காவியம் போல படைத்திருக்கிறார் நிலா மகன்.

இந்தக் கதை தருக்கமானது. இந்தக் கதையில் வரும் காளிதாசு எனும் பாத்திரத்தை ஆண் பார்வையிலும் பெண் பார்வையிலும் விவாதிக்கலாம். எப்படி விவாதித்தாலும் விவாதத்தின் முடிவு நிலா மகன் முடித்திருக்கும் முடிவிலேயே வந்து நிற்கும். நீங்கள் அந்தக் கதையை வாசிக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கதையை நான் சொல்லாமல் விட்டுச் செல்கிறேன்.
எல்லா சிறுகதையும் அதற்குரிய சரியான முடிவை நோக்கி நகர்கிறது. அக்கதையின் முடிவை எழுத்தாளன் சரியாக எழுதாதபொழுது அக்கதை வாசகனைக்கொண்டு எழுதிக்கொள்கிறது.
உதாரணத்திற்கு ஒரு கதையைச் சொல்கிறேன். விஸ்வநாதன் எனும் சிறுகதையாளர் ‘சிலேட்டு’ எனும் ஒரு கதை எழுதினார். இந்தக் கதை குறித்து எழுத்தாளர் சுஜாதா மிக அருமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு சிலேட்டு வழங்குகிறார் அமைச்சர். இந்த சிலேட்டிலும் கூட நிகர லாபம் பார்க்கும் மந்திரியின் செயலைக் கண்டு கொதித்து தான் செய்த சிலேட்டுகளை அடித்து நொறுக்குகிறார் சிலேட்டுத் தொழிலாளி. இதுதான் கதை.

இந்தக் கதையை வாசித்த சுஜாதா இந்தக் கதைக்குள் வேறொரு கதை ஒளிந்திருக்கிறது. அந்தக் கதையை சிறுகதையாளர் தவற விட்டுவிட்டார் என்கிறார். அந்தக் கதை என்னவென்றால் “சிலேட்டு செய்யும் தொழிலாளி பள்ளி வயதுடைய தொழிலாளியாக இருக்கிறான்.”
இந்த இரண்டு கதைகளில் முதல் கதை உணர்ச்சிவயப்பட்டது. இரண்டாவது கதை உணர்வுவயப்பட்டது. சிறுகதைக்கு உணர்ச்சியை விடவும் உணர்வே முக்கியம்.
இப்படியாக இத்தொகுப்பில் கற்பகத்தின் ராஜாங்கம், தப்புத் தாளங்கள் சிறுகதைகள் தனக்குள் வேறொரு கதை அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் யாவும் PHOTOSYNTHESIS வகை கதைகள்.
ஒவ்வொரு எழுத்தாளரும் மூன்று படித்துறைகளைக் கொண்டுள்ளார்கள்.
PHOTOSYNTHESIS,
LOGOSYNTHESIS,
THEOSYNTHESIS.
PHOTOSYNTHESIS FICTION அறிவியல் தமிழ் இதை ஒளிச்சேர்க்கை என்று சொன்னாலும் இலக்கியம் இதை சுயம்புக் கதைகள் என்று சொல்கிறது. தனக்குத் தேவையான உணவை தாவரங்கள் தாமே தயாரித்துக்கொள்வதைப் போல தன்னுடைய கதைகளைத் தாமே எழுதிக்கொள்வது போட்டோசிந்தசிஸ். “மனிதன் தனக்கான வரலாற்றைத் தானே உருவாக்கிக்கொள்கிறான் ” எனும் யாம்படிஸ்டா விகோவின் புகழ்ப்பெற்ற கூற்று போட்டோசிந்தசிஸ் வகையிலானது. தன் மீதும் தன் படைப்புகள் மீதும் வரும் விமர்சனத்திற்கு நேரடியாக பதில் சொல்வது இந்த வகைமையானதே.

LOGOSYNTHESIS FICTION என்பது அடுத்த நிலை. லோகோசிந்தசிஸ் எனும் சொல்லாடல் டாக்டர் வில்லெம் லாமர்ஸ் உருவாக்கியது. தனிநபர்கள் உணர்ச்சி மற்றும் மன சவால்களை சமாளிக்க வார்த்தைகளின் சக்தியைப் பயன்படுத்துவது. தன் மீது, தன் குடி மீது, தன் படைப்புகள்மீது வரும் விமர்சனங்களை தேர்ந்த சொற்களால் வேறொரு படைப்பு மூலமாக பதில்கொடுப்பது.
ஒரு முறை ஒரு பிரபலமான எழுத்தாளர் பிரபலமான இதழில் தேவதாசி முறைக்கு ஆதரவாகவும் வரவேற்றும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த தேவதாசி முறை இந்த சமூகத்தை ஒழுங்குப்படுத்தியது என்றிருந்தார்.

இந்தக் கட்டுரையை வாசித்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அந்த எழுத்தாளருக்கு விமர்சனக் கடிதம் எழுதினார். கட்டுரை வாசித்தேன். கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. தேவதாசியே எழுதியதைப் போலிருந்தது.

இந்த விமர்சனக் கடிதத்தை வாசித்த எழுத்தாளர் வெட்கி தலைகுனிந்தார். இதுதான் லோகோசிந்தசிஸ்.

THEOSYNTHESIS FICTION என்பது அடுத்த நிலை. டாக்டர் பவுலா மெக்டொனால்டு உருவாக்கிய சொல்லாக்கம் இது. வாழ்வில் எழுத்தில் பேச்சில் அறிவியலையும் இறையியலையும் ஒருங்கிணைப்பது. தத்துவத்தையும் இயல்பையும் இணைப்பது.

பாரதியார், பட்டினத்தார், சித்தர்கள், திருமூலர், திருவள்ளுவர் இந்த நிலையை அடைந்தவர்கள். புதுமைப்பித்தன், மௌனி சிறுகதைகள் இந்த உயரத்தை அடைந்திருக்கின்றன. இந்த நிலைக்கு சிறுகதையாளர்கள் வரவேண்டும். இந்த நிலையைத்தான் தமிழ் எதிர்பார்க்கிறது. தமிழ் இலக்கியம் எதிர்பார்க்கிறது.

நிலாமகன் ஜீவி சந்திரசேகராக இருந்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற காலத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டார். மனிதனின் மறுபக்கம் எனும் நாடகம் எழுதியிருக்கிறார். குடியால் கெட்டு அழியும் குடும்பத்தை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறார். இந்தக் கதையை வாசித்த இவரது தந்தை “என்னடா நான் குடிக்கிறேன் என்பதற்காக என்னை வைத்து கதை எழுதியிருக்கிறியா?” என்று கேட்டு தட்டிக்கொடுத்திருக்கிறார்.

குடிக்கு எதிரான கதைகள் தமிழ் இலக்கியத்தில் நிறைய உள்ளன. இன்னும் நிறைய எழுத வேண்டும். பெரும்பாலும் குடி கதைகள் பெண் எழுத்தாளர்களை விடவும் ஆண் எழுத்தாளர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். அப்படியாக எழுதுகையில் முக்கிய பாத்திரமாக பெண்கள், சிறுமிகளை வைத்தே எழுதியிருக்கிறார்கள்.

சிறுகதையாளர் ஆங்கரை பைரவி ‘அப்பா’ என்றொரு கதை எழுதினார். இந்தக் கதை அமுதசுரபி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. நான் எழுதத் தொடங்கிய காலத்தில் இக்கதையை வாசித்து அவரிடம் பேசியிருக்கிறேன்.

ஒரு சிறுமி பள்ளிக்கு கல்விக் கட்டணம் கட்ட வேண்டும். எல்லாரும் கட்டிவிடுவார்கள். அந்த ஒரு சிறுமியைத் தவிர. அவள் கட்டாததற்குக் காரணம், அவள் கல்விக் கட்டணத்திற்காக சேமித்த பணத்தை எடுத்து அவளது அப்பா குடித்து விடுவார். அந்தச் சிறுமி பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அடம் பிடிக்க, அவளது அம்மா எப்படியும் இன்று பணம் கொண்டுவந்து கட்டிவிடுகிறேன் என்பார். அதை நம்பி அந்தச் சிறுமி பள்ளிக்கு வந்து ஜன்னல் வழியாக அம்மாவை எதிர்பார்த்து வராததைக் கண்டு அழுதுவிடுவாள். அவளது அழுகையைக் கவனிக்கும் டீச்சர் அந்தச் சிறுமியை அழைத்து ஏன் அழுகிறாய் என்று கேட்பார். அந்தச் சிறுமி , “அப்பா செத்திட்டாங்க” என்பாள். அந்தச் சிறுமியை டீச்சர் தேற்றிக்கொண்டிருக்கையில் அந்தச் சிறுமியின் அப்பா வந்துவிடுவார்.

“அப்பா செத்துட்டாங்கனு சொன்னே. இதான் வாறாரே. அப்பா உயிருடன் இருக்கையில் ஏன் இப்படி கொன்றாய்” எனக் கேட்பார் டீச்சர். முன்பு அழுததை விட சத்தமாக அழுவாள் சிறுமி. “இன்றைக்கு ஒரு நாள்தான் அவரை நான் கொன்னேன். அவர் தினம் தினம் எங்களைக் கொல்கிறார்.” கதை இவ்வளவுதான்.

குடியை வைத்து நான் எழுதிய கதை “வித்யாவுக்கு மூன்று அப்பாக்கள். ” ஒரு குடிகார அப்பா மூன்று அப்பாக்களாக பெண் குழந்தைகளுக்குத் தெரிவதுதான் கதை. இந்தக் கதைகள் குடியின்மீது நிகழ்த்தப்படும் விமர்சனக் கதைகள். இத்தகைய விமர்சனக் கதைகளை நிலா மகன் எழுத வேண்டும்.

இத்தொகுப்பில் மிக முக்கியமான கதை அளவி. இக்கதையை நிலா மகனின் சகோதரர் எழுத்தாளர் ஜீவிதன் அழகாய் சொல்லி தானொரு சிறந்த கதைசொல்லி என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். இந்தக் கதை குறித்து தன் அணிந்துரையில் ரமேஷ் வைத்யா எழுப்பிய கேள்வி எனக்கும் வந்தது.

ஓர் அபலையின் நகையை வஞ்சகமாக அபகரிக்கிறான் ஒருவன். நியாயமான பஞ்சாயத்திற்கு அந்த வஞ்சகன் கட்டுப்படவில்லை. இப்பொழுது இந்த வஞ்சகனுக்கு கதையாசிரியர் ஒரு தீர்ப்பு கொடுக்கிறார். இந்தத் தீர்ப்பு நல்ல தீர்ப்புதான். சரியான தீர்ப்புதான். ஆனால் இந்த தீர்ப்புபடிதான் எதார்த்தத்தில் நடக்கிறதா என்கிற கேள்வி வாசிக்கும் யாருக்கும் எழும்.

நாட்டில் பல அநீதிகள் நடந்தேறுகின்றன. இந்த அநீதிக்கு இயற்கை கூலி கொடுக்கிறதா? தண்டிக்கிறதா? என்கிற கேள்விக்கான பதில்தான் ‘அளவி’ எனும் சிறுகதை. இந்தத் தொகுப்பில் முத்தான, நெற்றான, கனியான சிறுகதை இது.

நல்ல சொற்கட்டும் பார்வைக்கட்டும் கொண்டவராக நிலா மகன் இருக்கிறார். எதிர்காலத்தில் நல்ல சிறுகதைகளைத் தருவார், தர வேண்டும் என்று வாழ்த்தி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி இடம் அமர்கிறேன். நன்றி வணக்கம்!!

(அக்டோபர் 26,2025 அன்று மணப்பாறை மணவை இலக்கிய வட்டத்தில் நிலா மகன் எழுதிய சிலுக்கு தேவதை எனும் நூலை வெளியிட்டு ஆற்றிய உரை.)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *