செம்மணிக்குள் வெள்ளம் புகுவதை தடுக்காதது ஏன்?; வேலன் சுவாமிகள் கேள்வி

மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு இடத்திற்குள் மழைநீர் மற்றும் வெள்ளம் செல்லாமல் தடுப்பதற்கு கூடாரமோ அணைக்கட்டுக்களோ அமைக்கப்படவில்லை என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் ஏற்பாட்டில் செம்மணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களுடைய நீதி கோரும் பயணத்தில் செம்மணி மனிதப் புதைகுழிக்கு மிகவும் ஒரு காத்திரமான ஒரு பங்கு உள்ளது.
இப்போது மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளது என்று சொல்லக்கூடிய நிலையில் இந்த அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. மழை தொடங்கிய பிற்பாடுதான் அரசாங்கம் இதற்கான நிதியை ஒதுக்கி இருக்கிறது. மழைக்காலம் முடிவடைந்த பின்னர் தான் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன என கூறப்படுகிறது.
இந்த மனிதப் புதைகுழிகளுக்குள் மழை நீர் செல்லாத வகையில் எந்த ஏற்பாடுகளும் இங்கு செய்யப்படவில்லை.
வானத்திலிருந்து வருகின்ற மழைநீர் உள்ளே செல்லாது கூடாரமும் சுத்தி வரக்கூடிய வெள்ளம் வராது தடுக்க அணைக்கட்டு கட்டப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறான ஏற்பாடு இங்கு நடைபெறவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
அந்தப் பணி நீதியான விதத்தில் செய்யப்பட வேண்டும். காலங்காலமாக இலங்கை அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றதை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். சர்வதே நீதியை கோரி நாங்கள் போராடுகிறோம்.
சர்வதேசம் இதற்குரிய அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்து நீதியான விதத்தில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனைவர் சார்பிலும் கேட்டு நிற்கிறோம் – என்றார்.
![]()