பகிர்வுகள்…. கலை இலக்கியப் பத்தித்தொடர்… பகிர்வு – 01 … செங்கதிரோன்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் பிரதிப்பணிப்பாளர் நாகபூசணி கருப்பையா அவர்களின் தலைமையில் 23.08.2025 அன்று குருணாகல், வடமேல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, ‘மகுடம்’ பதிப்பகத்தின் 100 ஆவது வெளியீடான திருமதி. தாரிகா ஸித்தீக் அவர்களின் கவிதைத் தொகுப்பான ‘கடலாக இருக்கிறேன்’ நூல் வெளியீட்டில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.
உலகின் எந்த மொழியாக இருந்தாலும் ஒரு மொழியின் உச்சம் அம்மொழியின் ‘கவிதை’ தான். அதனால் கவிதை எல்லோருக்கும் கைகூடுவதில்லை. அதனால்தான் கவிஞர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாகவே இருப்பர்.
தமிழ் மொழியைப் பொறுத்தவரை சங்ககாலம் மற்றும் சங்கம் மருவிய காலத்துப் பண்டைத்தமிழ்ச் செய்யுள் இலக்கிய நூல்கள் – காப்பியங்கள், அதன் பின்னர் வந்த பக்தி இலக்கியங்கள் பின்னர் பாரதியுகம் தற்போது புதுக்கவிதையென்றும், நவீன கவிதைகள் என்றும் காலதேசவர்த்தமான மாற்றங்களை உள்வாங்கி மடைமாற்றம் பெற்று பிரவாகித்துச் சென்றுகொண்டிருக்கும் ஒரு நீண்ட பாரம்பரியம் தமிழ்க் கவிதைக்கு உண்டு.
அத்கையதொரு நீண்ட கவிதைப் பாரம்பரியப் பயணப் பேராற்றில் ‘கடலாக இருக்கிறேன்’; எனுமிக் கவிதைத் தொகுப்பினூடாக இக் கவிதைகளின் படைப்பாளியான திருமதி. தாரிகா ஸித்தீக்கும் ஒரு சிற்றோடையாக இணைந்து கொண்டுள்ளார். அவருக்கு முதலில் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
‘கடலாக இருக்கிறேன்’ எனுமிக் கவிதைத் தொகுப்பு நூலை நான் ‘பொழிச்சல்’ எனும் இலக்கிய வகைக்குள்ளேயே வகைப்படுத்த விரும்புகின்றேன். அதற்கான காரணத்தை முன்வைப்பதும் எனது தார்மீகக் கடமையாகின்றது.
கவிதைக்கு அதாவது ‘பா’ இலக்கியத்துக்கு ஓசை அதுவும் தொடரோசை முக்கியமானது.
‘கம்பராமாயணம்’ படைத்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது பாயிரத்தில்;;
“ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நாக்குப் புக்கென
ஆசைபற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ”
என்பதன் மூலம் ஆசைபற்றி அறையவந்த கம்பன் ஓசைக்குரிய முக்கியத்துவத்தைப் பாயிரத்துக்குள்ளேயே உணர்த்தி விடுகின்றான். பின்னர் கம்பன் அடியொற்றி வந்த மகாகவி பாரதியோ,
“ ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானாமுதம் படைத்த காட்சிமிகு விந்தையடா!
காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்களொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!”
என்று ஓசையின் முக்கியத்தவத்தை – அதுதரும் இன்பத்தை இவ்வாறு பதிவு செய்கிறான்.
கவிதைக்கு ஓசை முக்கியம். அதுவும் தொடரோசை. ஓசை இல்லாதது கவிதையாகிவிடாது. மறுதலையாக ஓசை உள்ளது எல்லாம் கவிதையாகிவிடவும் மாட்டாது. அப்படியாயின் பழமொழிகள், விடுகதைகள் எல்லாம் கவிதையாகிவிடுகின்ற விபத்து நிகழ்ந்துவிடும். அதனால்தான் கவிதைக்குத் தொடரோசை முக்கியமானது எனப்படுகின்றது.
ஆனால், ‘புதுக் கவிதை’ வடிவத்திற்கு ஓசை ஒரு பொருட்டல்ல என்பதே பொது விதியாகிவிட்ட சூழலில், கவிஞர் காசி ஆனந்தன் தான் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் புதுக்கவிதை ஒரு வீச்சான உரை இலக்கியம் எனும் புரிதலோடு விண்ணிலிருந்து பொழியும் மழை போன்ற ‘சிந்தல்’ உரை இலக்கியம் – வில்லிருந்து புறப்படும் அம்பு போன்ற ‘நறுக்கு’ உரை இலக்கியம் போன்ற புதுக்கவிதை வடிவங்களுக்கு அவர் புதிதாய்ச் சூடிய பொருத்தமான பெயர்தான் ‘பொழிச்சல்’ என்பது.
‘கடலாக இருக்கிறேன்’ எனுமிக் கவிதைப் தொகுப்பிலுள்ள படைப்புக்கள் யாவும் புதுக் கவிதை வடிவத்திலேயே- ஓசை- சந்தம் அற்றதாய் அமைந்திருப்பதால் நான் ஆரம்பத்தில் கூறியதுபோல இந்நூலை ஒரு ‘பொழிச்சல்’ இலக்கியமாகவே நோக்குகிறேன்.

தமிழில் புதுக்கவிதைப் போக்கு அறிமுகமானதின் பின்பு தமிழில் ‘புதுக்கவிதை’த் தொகுதிகள் புற்றீசல்கள்போலப் புறப்பட்டன. மட்டுமல்லாமல் அப்படைப்புக்களின் கவிதை மொழியும் நுகர்வோருக்கு அதாவது வாசகர்களுக்குப் புரியாததாகவும் இருந்தது. இப்போதும் அந்தநிலை மாறிவிட்டதாகக் கூற முடியாது.
இத்தகையதொரு பின்புலத்தில் ‘கடலாக இருக்கிறேன்’ எனுமிக் கவிதைத் தொகுப்பு மேற்கூறப்பெற்ற புரியாத புனைவுமொழி போன்ற பலவீனங்களிலிருந்து விடுபட்டு ஒரு தனித்துவம் மிக்கதாய் திகழ்வதே இதன் சிறப்பு ஆகும். காரணம் இந்நூலிலுள்ள ஆக்கங்கள் யாவும் அவை புதுக்கவிதைப் பாணியிலே அமைந்திருந்தாலும்கூடத் தெளிவாகவும் – இறுக்கமாகவும் – எளிமையாகவும் – நுகர்வோருக்கு அதாவது வாசகருக்குப் புரியும் மொழியிலும் புனையப்பட்டிருப்பதே.
ஓர் இலக்கிய வடிவத்திற்கு அணி சேர்ப்பது அதன் அழகியல் அம்சங்களுமாகும். அதே வேளை அழகியல் மட்டுமே இலக்கியமாகிவிடவும் மாட்டாது.
உதாரணத்திற்கு திருக்குறள் இலக்கியம் அல்ல: அது ஒரு அறிவுநூல் எனும் சர்ச்சையும் உண்டு. ஆனால் திருக்குறளை அறிவுநிலைப் படைப்பாகவும் அதே போன்று உணர்வுநிலைப் படைப்பாகவும் பார்க்கலாம் என்பதே அறிஞர்களின் முடிவு. திருக்குறள் நீதி போதிப்பதால்- அறவிழுமியங்களை அடக்கியிருப்பதால் அதனை ஒரு அறிவு நூலாகப் பார்ப்பதும் அதேவேளை அது ஈரடிவெண்பா எனும் யாப்பு வடிவத்தில் அமைந்து சில இடங்களில் உணர்வு வெளிப்பாடுகள் உயர்வாக அமைந்திருப்பதால் அதனை ஒரு உணர்வு நிலைப் படைப்பாகவும் நோக்கும் ஒரு போக்கு இருக்கிறது.
‘கடலாக இருக்கிறேன்’ நூலிலுள்ள ஆக்கங்கள் யாவும் அறிவார்ந்த செய்திகளையும் – அறவிழுமியங்களையும் – சமூக நீதியையும் – ஆன்மீக ஆற்றுப்படுத்தல்களையும் வழங்குகிறது. அவற்றை வெறுமனே போதனைகளாக முன்வைக்காமல் அனுபவ வெளிப்பாடுகளாகவும் – தன்னுணர்வு நிலையிலும் முன்வைப்பதால் திருக்குறள் போன்றதொரு அறிவு நிலைப்பட்ட நூலாகவும் உணர்வு நிலைப்பட்ட நூலாகவும் ஆன ஒரு கலப்பாக இருப்பது தனியானதொரு இலக்கியப் பரிமாணத்தை இந்நூல் வெளிப்படுத்துகிறது எனலாம்.
இந் நூலிலுள்ள ஆக்கங்களைப் படித்துக் காட்டி நேரத்தை விழுங்க நான் விரும்பவில்லை. அவற்றை நீங்களே படித்து இன்புற வேண்டும். அதுவே பொருத்தமும்கூட. ஆனாலும், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்நூலிலுள்ள இரண்டாவது ஆக்கமான ‘கல்லாகிவிட்டேன்’ ஐ எடுத்துக் கொள்கிறேன்.
கல்லாகிவிட்டேன்…..
“தோல்வி கூட
நெருங்க அஞ்சுகிறது
தூக்கி எறிந்தாலும்
தூக்கியடித்தாலும்
வலிக்காது எனக்கு
காரணம் நான்
கல்லாகிவிட்டேன்….
யாரும் என்னை விரும்பத்
தேவையில்லை
செதுக்கிய சிலைகளிலும்
நான் அழகான வடிவம்
பெற்றிருக்கிறேன்…..
பலரும் ரசித்து மகிழும் சிற்பமாக இருப்பதை விட
வேறு மகிழ்ச்சி இல்லை…..
கல்லில்தான் செதுக்குகிறேன்
என் வாழ்க்கையை நானே…..
அது ஒரு
அழியாச் சின்னமாக இருக்கட்டும்….
யாரும் விளக்கம்
கொடுக்கத் தேவையில்லை….
விதி அமைத்த பாதை
எவருக்குமே ஒரே சீரானதல்ல
அதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல…”
என்று தொடர்கிறது. நான் முன்னொரு இடத்தில் குறிப்பிட்டதுபோல அனுபவ வெளிப்பாடாகவும்- தன்னுணர்வு வெளிப்பாடாகவும் செல்லும் இவ் ஆக்கம் நிறைவுறுகிறபோது,
“வெளவால் கூட்டத்தில் வாழ்க்கைப்பட்டால் தலைகீழாகத்தான் தொங்கத்தான் நேரிடும்” என்று முடிகிறது. இந்த வரிகள் குறியீடு – படிமம் – உவமை – உருவகம் – இறைச்சிப்பொருள் என அத்தனை அம்சங்களும் அடங்கி இவ் ஆக்கம் கூறும் செய்திகளுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமல்ல, ஓர் அழகியல் அந்தஸ்தையும் கொடுக்கிறது.
இதே போன்றதொரு சொற்றொடரைக் கிராமத்திலே கூறுவார்கள்.
“பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்
புளிய மரத்த்pலே ஏறத்தான் வேண்டும்” என்று
கவிதை மொழியின் கனதிக்கு இவ்வாறான சொற்றொடர்கள் பெறுமதி சேர்ப்பனவாகும்.
மேலும், இந்நூலிலுள்ள உணர்வுநிலைப்பட்ட வரிகள் சிலவற்றை உங்கள் கவனத்திற்கு ஓப்புவிப்பதன் ஊடாக இந்நூல்;; அறிவும் – உணர்வும் சாந்ததோர் படைப்பு என்பதை எடுத்துக் காட்டி எனது பணியை நிறைவு செய்யலாம் என எண்ணுகின்றேன்.
ஜந்தாவது ஆக்கமான ‘வலிகள் ஆயிரம்’ (பக் 11) இல் வரும்,
“செய்வதை செய்துவிட்டு
கொரவக்கன் கோழிபோல
பலரது தலைகள்
சந்து பொந்துகளில்”
எட்டாவது ஆக்கமான ‘தலையில் கிரீடம் அணிவித்த கைகள்’ (பக் 16) இல் வரும்,
“கிரீடம் அணிந்த கைகளை
கிரீடமே குத்திக் காயப்படுத்தும்”
பதினைந்தாவது ஆக்கமான வந்திருக்கும் இந்நூலின் தலைப்பான ‘கடலாக இருக்கிறேன்’ (பக் 28) இல் வரும்
“தீக்குச்சியைப் போல
சீறிப்பாயும் குணம் உள்ளோர்”
பத்தொன்பதாவது ஆக்கமான ‘வழிவிடுங்கள்’ (பக் 35) இல் வரும்.
“கத்தரிக்கப்பட்ட
என் சிறகுகளும் வளர்ந்து விட்டது”
இருபத்தியோராவது ஆக்கமான ‘இதயத்தில் ஈரம் இல்லை’ (பக் 39) இல் வரும்,
“வார்த்தைகளால்
தேள் போல கொட்டியவர்களின்”
முப்பத்தியெட்டாவது ஆக்கமான ‘காலம் பேசுமானால்’ (பக் 78) இல் வரும்,
“இன்று எத்தனை பேருடைய மௌனங்கள்
மொழிபெயர்க்கப் படாமலே ஃ மூச்சுக்காற்றோடு அடங்கிப் போய்விட்டது”
நேர முகாமைத்தவம் கருதி உதாரணங்களை மட்டுப்படுத்திக் கொள்கின்றேன். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்நூல் ஒரு கடலாகவே காட்சி தருகிறது. அதனுள் இறங்கி முத்துக் குளிப்பது அவரவர் திறமையை பொறுத்தது. அந்த வகையிலே ‘கடலாக இருக்கிறேன்’ எனும் தலைப்பு இந்நூலுக்குக் கன கச்சிதமாகவே பொருந்தியுள்ளது.
வாய்ப்புக்கு நன்றி! வணக்கம்!
(பகிர்வுகள் தொடரும்…..)
![]()