எதிரணிகள் பேரணி; ஐ.ம.ச.வரவில்லை!; ஏனைய கட்சிகள் சந்திப்பு

அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடவில் நவம்பர் 21ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பேரணி தொடர்பில் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சிகளினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொள்ளவில்லை.
கொழும்பு நிபோன் ஹோட்டலில் ‘மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டதுடன், இதில் ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவித்துறு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதானிகளும், முக்கியஸ்தர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் இதில் கலந்துகொண்டிருக்கவில்லை.
இது தொடர்பில் அந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதன்போது பதிலளித்த பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கூறுகையில்,
எதிர்க்கட்சிகளின் ஐக்கியம் மற்றும் ஜனநாயகத்திற்காக எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டியது அந்தந்த கட்சிகளின் கடமையாகும். இதன்படி விரைவில் அந்தக் கட்சி இதில் இணையும். அதேபோன்று ‘மக்கள் குரல்’ என்ற அமைப்பில் ஐக்கிய மக்கள் சக்தியும் அங்கத்துவம் வகிக்கின்றது. எதிர்காலத்தில் மேலும் பல கட்சிகள் எங்களுடன் இணையும் என்றார்.
![]()