பாதாளக் குழுக்களுடன் எனக்குத் தொடர்பில்லை; பொலிஸ் மா அதிபர் கூறியது பொய் -ஜகத் விதான எம்.பி.

பாதாளக் குழுக்களுடன் தனக்கு தொடர்பு உள்ளதாக பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளதை தான் முழுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே ஜகத் விதான எம்.பி இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு குற்றக் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்து பொலிஸ்மா அதிபர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அப்போதுதான் என்னுடன் குற்றக்கும்பல்களுடன் பிரச்சினை உள்ளது என்று தெரியும். பாராளுமன்றத்தில் வைத்து என்னிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையொன்றிலேயே நான் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நபர் என்று தெரியவந்தது. பொலிஸ்மா அதிபரினாலேயே அதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கின்றேன். குற்றவாளியென அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் எனக்கு தற்காலிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் இப்போது கூறுகின்றார்.
எனது பாதுகாப்பு எப்போது வேண்டுமென்றாலும் நீக்கப்படலாம். ஆனால் பயந்துகொண்டு நான் இருக்கப்போவதில்லை. இது போன்ற நிலைமை இனி எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஏற்படக்கூடாது என்ற செய்தியை கூறவே வந்துள்ளேன். சபாநாயகர் ஊடாக சட்டப்படி நான் பாதுகாப்பை கோரியதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை.
இதேவேளை எனது வர்த்தக நடவடிக்கை தொடர்பிலும் பொய்யான தகவல்களை கூறியுள்ளார். என்னை பாதாள குழுக்களுடன் தொடர்புபடுத்தியுள்ளார். இதற்கு எதிராக நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். பொலிஸாருக்கு செய்ய முடியாததை பாதாள குழுக்கள் ஊடாக செய்யவே முயற்சிக்கின்றனர். நான் என்ன தவறு செய்துள்ளேன் என்று கேட்கின்றேன் என்றார்.
![]()