கதைகள்

ஆகாயப் பந்தல்…. (தொடர்- 11)…. ஏலையா க.முருகதாசன்

ரெலிபோனிலை யார் என்று சிசிகலா கேட்க,இனியபாரதியும் இரகுமாலிகாவும் வருகினமாம்.டோட்முண்டு; துணிக் கடைக்குப் போனவர்களாம் போயிட்டு வருகிற வழியில் இங்கை வந்திட்டுப் போகப் போயினமாம் என்று கணவன் மகேந்திரராஜா சொன்னதைக் கேட்டு சசிகலா மனசுக்குள் ஒரு கணக்குப் போடுகிறாள்.

சசிகலா தனக்குப் பக்கத்தில் நின்று தனது தலையை ஆதரவாத் தடவி விடும் போது தன்னை ஏதோ ஒரு காந்த சக்தி தாக்குவது போல உணர்ந்தாள் மதுசா.

இக்காந்த சக்தி தாக்குதலை சரவணன் தனக்கருகில் நிற்கும் போதும் சாரிணி நிற்கும் போதும் உணர்ந்தவள் மதுசா.

சசிகலாவின் அருகாமையும் ஆதரவாகத் தலையைத் தடவிவிட்ட போது எழுந்த எதோரு காந்த அலை மதுசாவின் உடலை வருடி அவளைப் பரவசப்படுத்தியது.

தான் தாயாரின் அருகில் நிற்கும் போதோ சிலசமயம் தாயின் மடியில் தலையை வைத்துக் கண்ணயரும் போதோ,அப்பாவின் அருகிருந்து அப்பா படத்துக்குப் போவோமா என்று செல்லமாகக் கேட்கும் போதோ அவையிரண்டு பேரிலும் தாய் தகப்பன் என்ற வாஞ்சையும் உரிமையும் இருக்கும்.

தாய்க்குரிய வாசனையும் தந்தையின் வாசனையும் அவர்கள் உடம்பிலிருந்து வருவதை மதுசா உணர்ந்திருக்கிறாள்.சிலசமயம் தாய் அடுப்படியில் சமையல் செய்து கொண்டிருக்கும் பெது களையாறவென கூடத்து செற்றி இருக்கையில் வந்து இருக்கும் போது தாயின் மடியில் தலைவைக்கையில் சமையல் மணமும் வரும் அது மதுசாவுக்கு பிடித்தமான மணமா இருக்கும்.

ஆனால் சசிகலா அருகில் நின்ற போது தனது உடல் சிலிர்ப்பதை உணர்ந்தாள்.உடம்பின் தோலில் மெல்லிய சுகமான மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது அவளுக்கு.உடலின் உள் உறுப்புக்கள் சுகமான கிளர்ச்சி கொண்டது போல அவளை உணர வைச்சது.
தன் வீட்டிலிருந்து, சரவணன் காரில் தனக்கருகில் இருத்தி சரவணனின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வரும் போதும் இதே சிலிர்ப்பு ஏற்பட்டது,அண்ணி என்று சொல்லி சாரிணி தனக்கருகில் வரும்பொதெல்லாம் அதே சுகமான சிலிர்ப்பை மதுசா உணர்ந்தாள்.
இந்தக் குடும்பத்துக்கும் வேற்றுக் கிரகத்துக்குமிடையில் ஏதோ தொடர்பு இருக்கிறது என்னையும் அது சூழ்ந்து கொண்டு விடுமோ என மதுசா நினைச்ச போதும் அதை அவளால் விட்டு விலக முடியவில்லை.

அது அவளுக்குத் தேவையான இனிமையான சுகமாக இருந்தது.தன்னையறியாமலே கட்டுண்டு விட்டாள் மதுசா.மதுசாவின் அருகில் நின்றவாறே சசிகலா அவளின் தலையைப் புன்னகை ததும்ப பாசத்துடன் வருடிவிட்டுக் கொண்டிருக்க,அப்பொழுது மகேந்திரராசா கையில் கைத்தொலைபேசியுடன் வந்து,உங்களுடன் இரகுமாலிகா கதைக்க வேண்டுமாம் என்று குடுக்க,கைத்தொலைபேசியை வாங்கிய சசிகலா அதைக் காதோடு பிடிச்சு என்ன இரகுமாலிகா நீங்கள் எங்களை கனநாளாய் மறந்துவிட்டியள் போல ரெலிபோன் எடுக்கிறதும் இல்லை நான் எடுத்தாலும் வீட்டிலை நீங்கள் யாருமே நிக்கிறதும் இல்லையோ தெரியாது,இல்லாட்டில் வீட்டிலை நின்று கொண்டு நம்பரைப் பார்த்திட்டு எடுக்காமலிருக்கியளோ தெரியாது ம் சரி சொல்லுங்கோ என்று சசிகலா சொல்லி முடிச்சதும் என்னக்கா நீங்களும் இஞ்சையுள்ளவை மாதிரி கதைக்கத் தொடங்கிவிட்டியள் நாங்கள் இரண்டு குடும்பங்களும் இந்தப்பூமிக்குரியவர்களா அக்கா நானும் அவரும் டோட்முண்ட் புடவைக் கடைக்குப் போயிட்டு வருகிறம்,அது சரி உங்களுக்குச் சிவராஜசிங்கத்தின்ரை குடும்பத்தினர் தங்கடை மோளின்ரை கல்யாண வீட்டுக்குச் சொன்னவையே அதுக்குத்தான் ஒரு சீலை எடுக்கப் போயிட்டு வாறம் என்று இரகுமாலிகா சொல்ல எங்களுக்கும் சொன்னவை போக வேணும் என்ன கலரிலை சீலை எடுத்தனீங்கள் என்று கேட்க,அதைக் உங்களுக்குக் காட்டத்தான் நானும் அவரும் வந்து கொண்டிருக்கிறம் அக்கா நல்ல பசியோடை வாறம் சாப்பாடு தருவியள்தானே என்று இரகுமாலிகா கேட்க என்ன இப்படிக் கேட்டிட்டியள் உங்களுக்கில்லாத சாப்பாடா லாகினி வரேலையா என்று சசிகலா தொடர அவள் வரவில்லை என்று இரகுமாலிகா சொல்ல சரி சரி வாருங்கோ எங்களுடைய வீட்டில் ஒரு முக்கியமான ஆளைக் காட்டப் போகிறம் என்று சசிகலா சொல்ல முக்கியமான ஆளா என்று இரகுமாலிகாவின் குரல் கொஞ்சம் சத்தமாகக் கேட்பது அங்கிருந்த சரவணன் சாரிணி மதுசா ஆகியோருக்குக் கேட்டது.

தாய் உரிமையுடன் கதைப்பதும் எங்கடை இடம் என்று கதைப்பதும் இரகுமாலிகா குடும்பத்துடன் மட்டுந்தான் என்பது சாரிணிக்கும் சரவணனுக்கம் நன்றாகவே தெரியும் என்பதால் அவை வருகினமோ என்று தாயைப் பார்த்துக் கேட்டவள் ஆரையம்மா முக்கியமான ஆள் என்று சொன்னனீங்கள் என்று தாயைக் கேட்க,தாய் கண்களால் மதுசாவைக் காட்டுகிறாள்.
அப்பொழுது சரவணனை தாய் கவனிக்க அவன் கடைக்கண்ணால் தாயையும் மதுசாவையும் பார்த்தவன் பார்க்காதவன் போல தலையைத் திருப்பி கதைப்புத்தகத்தில் கண்களைப் பதிக்கிறான்.

அங்கிருந்த அந்த அதிசயப் பறவைகள் இரண்டும் மனிதர்கள் உன்னிப்பாக கவனிப்பது போல சசிகலா கதைப்பதை அவதானித்தவை தமக்குள் புன்னகை பூக்கின்றன.
உற்று அவதானித்தால் அந்தப் பறவைகள் இரண்டும் சொண்டுகளால் சிரிப்பதைக் கவனிக்க முடியும்.

அம்மா அவை இரண்டு பேரையும் பாருங்கோ உங்கடை கதையைக் கேட்டு மெதுவாகச் சிரிக்கினம் என்று சாரிணி சொல்ல,நானும் கவனிச்சனான் என்கிறாள் தாய்.
ரெலிபோன் கதைக்கும் போது மதுசாவின் தலையை வாஞ்சையோடு வருடிக கொண்டிருந்த தாய் இப்பொழுது அவளின் முதுகில் கைவைத்தபடியே மகளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.

மதுசாவின் தாயும் இப்படித்தான் மகளின் முதுகை ஆதரவாகத் தடவி தனது படிப்பு பல்கலைக் கழகம் போனது உளவியல் பாடத்தில் விசேட படிப்புப் படித்தது வேலானந்தனை விரும்பியது என தனது கதையைச் சொல்லும் போது தாயின் வாஞ்சையையும் பாசத்தையுமே அவள் உணர்ந்திருக்கிறாள்.ஆனால் சசிகலா தனது முதுகில் கைவைத்த போது தனது உடலில் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத் துணிக்கைகளில் ஏதோ ஒரு சுகமான மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தாள்.அந்த உணர்வ உடலின் அந்தனை உறுப்புகளையும் சுகமாக்கியது போல உணர்ந்தாள்.சில உணர்வுகளைச் சொல்ல முயற்சிக்கலாம் பலவித உதாரணங்களைச் சொல்லி விபரிக்க முயன்றாலும் திட்டவட்டமாக சொல்ல முடியாதது போலத்தான் சிசகலாவின் கை தனது உடலில் பட்டவுடன் எழுந்த பரவசத்தை அவளால் தனக்குள்ளேயே விபரிக்க முடியாத இன்பத் தடுமாற்றத்தை அவளுக்கு ஏற்படுத்தியது.

இதுவரை நேரமும் சரவணன் ஏதோ புத்தகம் ஒன்றை வாசிக்கிறான் என்றுதான் மதுசா நினைச்சுக் கொண்டிருந்தாள்,வாசிப்பதை நிறுத்திவிட்டுத் தாயைப் பார்க்கும் போது வாசித்த பக்கத்தில் விரலை வைத்து புத்தகத்தை நிமிர்த்திய போது அந்தப் புத்தகத்தின் பெயரைப் பார்த்தாள்.அது பிரபஞ்சத்தில் கோள்களும் உயிரினங்களும் (Planets and living things in the universe)என்ற ஆங்கிலப் புத்தகம் என அதன் அட்டையில் இருந்ததிலிருந்து கண்டு கொண்டாள்
பிரபஞ்சம் பற்றியும் கோள்கள் பற்றியும் அறியும் ஆவலுடையவர்கள் அரிதாகவே இருப்பார்கள்.அவர்களிலும் ஒருசிலர்தான் இத்தகு புத்தகங்களை வாசிப்பவர்களாக இருப்பார்கள்.

சரவணன் இந்தப் புத்தகத்தை வாசிக்கிறபடியால் அவருக்கும் கோள்களுக்கும் பிரபஞ்சத்துக்குமிடையில்: ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று அதை நோக்கியே மதுசா சிந்திக்கத் தொடங்கியதால் பூமியில் வாழும் மனிதர்களுடன் வேற்றுலக மனிதர்களின் உணர்வுகள் தொடர்பிலிருக்கின்றன,பூமியில் மனிதர்களோடு மின்காந்த அலையூடாகவும்,மின் கம்பிகள் ஊடாகவும் தொடர்புகள் ஏற்படுத்தப்படுவது போல வேறு;றுலக மனிதர்கள் ஒருசில பூமி மனிதர்களுடன் தொடர்பிலிருக்கிறார்கள்,இத்தகைய மனிதர்கள் தாம் வேற்றுக்கிரக மனிதர்களுடன் தொடர்பிலிருப்பதை அடிக்கடி உணர்வதும் உண்டு.ஆனால் அதனைப் பகிரங்கப்படுத்த மாட்டார்கள்.அவ்வாறு பகிரங்கப்படுத்தினாலும் மற்றவர்களுக்குப் புரியும்படி அதனை நிரூபிக்கவு அவர்களாhல் முடியாது. அவர்களின் உடலில் மூளையில் சில அதிர்வுகளை அவர்கள் உணர்வதும் உண்டு.

பூமியில் நடக்கும் பல்வேறுபட்ட விடயங்களை இத்தகு தமது கிரகத்தோடு தொடர்புடைய மனிதர்களை வைத்தே வேற்றுக்கிரக வாசிகள் அறிகிறார்கள் என்பதையும் அவ்வப்போது செய்திகளாக கட்டரைகளாக வெளிவரும் விஞ்ஞானக் கட்டுரைகளை வாசித்து வியந்து அதுபற்றித் தாயிடமும் கேட்டிருக்கிறாள்.

ஒருநாள், மதுசா தாயிடம் அம்மா இங்கை பூமியிலை இருக்கிற மாதிரி வேறு கிரகங்களிலும் மனிதர்கள் இருப்பார்களா எனக் கேட்ட போது,ஏன் இருக்காது பிரபஞ்சத்தில் பலகோடி கிரகங்கள் இருக்கின்றன,அவற்றில் பூமியைப் போல உயிரினங்கள் இருப்பவையும் இருக்கலாம்,எமக்குச் சூரியன் போல வேறு கிரகங்களுக்கும் ஒரு சக்தியைக் குடுக்கும் கிரகம் இருக்கலாந்தானே என சொல்லியதைக் கேட்டு அந்தத் சிந்தனைத் திக்கில் அவள் கவனம் செலுத்தியதும் உண்டு.

தாய் ஒரு உளவியல் பட்டதாரி என்பதால் மதுசா தாயிடம் உளவியல் சம்பந்தப்பட்ட பல விடயங்களோடு கிரகங்கள் சம்பந்தப்பட்ட விடயங்களையும் கேட்டறிவாள்.
ஒரு நாள் தாய் எல்லா மனிதர்களிடாத்திலும் உளவியல் சார்ந்த பொதுப்பண்பு இருக்கின்றது.ஆனால் சிலரிடம் சில விசேடமான பண்புகளும் இருக்கின்றன என்று சொல்லி அதற்கான பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறாள்.

இவர்கள் ஒரு மனோதத்துவ நிபுணரையோ உளவியல் ஆய்வாளரையோ சந்திக்கும் போது அவரோடு கதைக்கும் போது அவர் ஒவ்வொரு விநாடி நீள்கையிலும் என்ன நினைக்கிறார் என்பதை மிகத் தெளிவாக உணரக்கூடியவர்கள்.அவர்கள் தமது உடல் இயங்குவதைத் தெளிவாக அதுவும் இரத்தம் நரம்புகளுக்கூடாக பாய்வதை கேட்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இத்தகைய மனிதர்களை வேற்றக்கிரகத்தோடு தொடர்புடையவர்கள் என்று உளவியல் கோட்பாடு சொல்கிறது என்று விபரித்தாள்.

தாய் சொன்ன அந்த வியப்புக்குரிய தகவல்களைக் கொண்டிருக்கும் சரவணன் சாரிணி குடும்பந்தானோ,அதனால்தான் சரவணன் இந்தப் புத்தகத்தை வாசிக்கிறான் என்ற சிந்தனையில் ஆழ்ந்த மதுசா அந்தப் பறவைகளையே வைத்த கண் வாங்காது பார்ப்பது போல இருந்தாலும் அவளையும் இந்தக் குடும்பம் ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது.

மதுசாவின் தோளில் ஆதரவாகக் கைவைத்தபடி இருந்த சசிகலா என்ன மருமகளே என்ன குத்திட்ட யோசனை என்று கேட்க மதுசா அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டே தனது நினைவுகளிலிருந்து விடுபடுகிறாள்.அப்பொழுது வீட்டுவெளிக்கதவின் அழைப்பு மணியடிக்க சசிகலா கதவை நோக்கிப் போக,வீட்டுக்கூடத்திலிருந்து மகேந்திரராஜாவும் வீட்டு வெளிக்கதவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *