இலங்கை

மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை – ரணில் விக்கிரமசிங்க கேள்வி !

1980களில் திட்டமிட்ட கல்வி முறைமை சீர்திருத்தங்களை, அக்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்தன. ஆனால், இன்று அதே கல்வி முறைமையை ஜே.வி.பி உயர்த்திப் பிடிக்க முயற்சிக்கிறது என்று குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு முக்கிய திட்டங்கள் நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்க காரணமாகிய போதிலும், மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை? என்று கட்சி உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார். கொழும்பு 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

இதன் போது பெரும்பாலான உறுப்பினர்கள் முன்வைத்த கருத்து என்னவென்றால், ‘ரணில் விக்கிரமசிங்க எப்போதும் ஒரு தசாப்தம் முன்னோக்கிச் சிந்திக்கிறார். ஆனால், பொதுமக்கள் ஒரு தசாப்தம் பின்னால் நின்று சிந்திக்கிறார்கள்.’ இதனால், ரணில் விக்கிரமசிங்கவின் பார்வையும் பொதுமக்களின் எதிர்பார்ப்பும் பல சந்தர்ப்பங்களில் ஒத்துப் போகாமல் போனது ஒரு முக்கியக் காரணம் என்று கூறினர். உதாரணமாக, ரணில் ‘கணினி யுகம்’ பற்றி சிந்தித்தபோது, மக்கள் ‘தென்னை ஓலை மற்றும் கயிறு பாய் பின்னுதல்’ போன்ற பாரம்பரிய தொழில்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர் என்று உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர்.

இதற்கு பதிலளித்து கூறுகையில், 1980களில் திட்டமிட்ட கல்வி முறைமை மறுசீரமைப்புகளை, அக்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்தன. ஆனால், இன்று அதே கல்வி முறைமையை ஜே.வி.பி உயர்த்திப் பிடிக்க முயற்சிக்கிறது. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்ட நான், பத்திரிகைகளின் மொத்தச் சரிவு குறித்து கவலையடைகிறேன்.

இருப்பினும் பத்திரிகைகள் புதிய முறையில் சிந்தித்து, விரிவான நவீனமயமாக்கலுக்குச் செல்லாவிட்டால், அதன் ஆயுள் மிகவும் குறுகியதாக இருக்கும். ஒரு செய்தித்தாளை இ-பத்திரிகையாக (நு-நேறளியிநச) மாற்ற முடியாது. ஏனெனில் செய்திகள் உடனுக்குடன் வந்துவிடுகின்றன. ஆனால், பத்திரிகையாளர்கள் நீண்ட கட்டுரைகள் எழுதவே பயிற்சி பெற்றுள்ளனர் என்றார்.

இதேவேளை, ஒரு நாட்டில் நீதிமன்றம் இருப்பது நீதியை நிலைநாட்டுவதற்காகவே. எந்தவொரு குற்றவாளியையும், ஏன், வேறு யாரையும் கூடத் தன்னிச்சையாகக் கொலை செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒரு தவறு நடந்திருந்தால், சட்ட நடவடிக்கைகள், வழக்குத் தொடர்வு மற்றும் முறையான சட்டச் செயற்பாடுகள் மூலமாகவே அதற்குரிய நடவடிக்கையை எடுக்க முடியும்.

ஒரு அரசாங்கம் இதுபோன்ற விடயங்களை அங்கீகரித்தால், மக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளத் தொடங்குவார்கள். அவ்வாறு சட்டத்தை கையில் எடுத்து, தாங்களாகவே ஒருவரைக் குற்றவாளி என்று தீர்மானித்து, அவரைக் கொலை செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டாகிறது. இது மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *