கட்டுரைகள்

“கந்தபுராண கலாசாரத்தைக் கருத்தில் வைப்போம்” …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 ஆசியாக்கண்டம் பரந்தது விரிந்தது. ஆசியாக்கண்டத்தில்  காணப்படும் கலாசாரத்தின் அடிநாதமாக மெய்யியல் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றார்கள். இந்த மெய்யியல் பல சோதனைகளுக்கும் வேத னைகளுக்கும் ஆளாகி இருப்பதை வரலாற்றால் அறிய முடிகிறது. சோதனைகளையும் வேதனைகளையும் எதிர் கொண்டாலும் மெய்யியலை மட்டும் இழந்துவிட விரும்பாத நிலையில் சூழலுக்கு ஏற்ப ஒரு கலா சாரத்தை ஏற்படுத்தி அதனை வளர்ப்பதற்கும் அதனை வாழ்வுடன் இணைத்து நிற்பதற்கும் முயற்சிகள் நடைபெற்றதையும்அதற்கு தலைமை ஏற்பதற்கு தகுதியானவர் வந்த நிலையினையும் காணமுடிகிறது. இந்த வகையில் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் -தமிழையும் சமயஇலக்கியத்தையும் சேர்த்துக் கொண்டு வீறு பெற்று ஒரு தனித்துவமான கலாசாரம் எழுந்தது. அதனை யாவரும் போற்றினர்.கண்டவர் வியப்புற்றனர். அப்படி யாவரையும் வியக்கும் வண்ணம் செய்ததுதான் முகிழ்த்த  ” கந்தபுராண கலாசாரம் ” ஆகும்.

   ஆசியநாட்டில் இந்தியாவின் நிலை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். சமயம் இலக்கியம் ஆன் மீகம். கலைகள்இந்தியாவின் சொத்துக்களாகும். ஞானிகள் பலரை இந்தியா தந்திருக்கிறது. வேதங்கள்ஆகமங்கள்சாத்திரங்கள்புராணங்கள்இதிகாசங்கள்திருமுறைகள்யாவும் பொக்கிஷங்களாகி அமை ந்திருக்கின்றன. சமணம்பெளத்தம்சைவம்வைஷ்ணவம்என்று மதங்கள் பலவும் அவை சம்பந்தமான கருத்து மோதல்கள் பலவித பிணக்குகள் யாவும் இந்தியாவில் இருந்ததை வரலாற்றால் அறிகிறோம். ஆனால் இப்படியொரு நிலை ஈழத்தில் காணப்படவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கவே இல்லை என்பதும் முக்கியமாகும். யாழ்ப்பாணமும் அங்குவாழ்ந்த தமிழ்மக்களும் இந்தியத் தொடர்பை விட்டுவிடவில்லை. அதே வேளை இந்தியாபோல் இருந்திடவும் நினைக்கவில்லை. இந்திய சிந்தனை களை உள்வாங்கி அவற்றை வைத்துக் கொண்டு தமக்கென ஒரு பண்பாட்டை  உருவாக்கிட  முனைந் தமை முக்கியத்துவம் மிக்கதெனலாம்.

    தமிழ் இலக்கிய நூல்களும் சமய இலக்கிய நூல்களும் இந்தியாவின் பொக்கிஷங்கள் என்பது மிகவும் பெருமைதான். ஆனால் ஈழத்துத்தமிழர்கள் தமிழ் சமய இலக்கியங்களில் காட்டும் ஈடுபாடும் உறுதிப் பாடும் அங்கு காணப்படும் நிலை சற்று தளப்பமாய் இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். அதற்கு அங்கு காணப்படும் சமூகநிலையும்அரசியல் நிலையும் காரணமாகக் கூட  இருக்கலாம். என்றாலும் இந்தியாவின் அங்கீகாரம் குறிப்பாக தமிழகத்தின் அங்கீகாரம் பெரிய அங்கீகாரமாக அன்றும் தேவை ப்பட்டது. இன்றும் அந்த நிலை தொடர்கிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்து எனலாம். 

   சமணத்தாலோ பெளத்தத்தாலோ  வைஷ்ணவத்தாலோ ஆரியத்தாலோ திராவிடத்தாலோ ஈழத் தவர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்து சமூகம் தாக்கமுறும் நிலை ஏற்படவில்லை. அதற்கான சூழலும் அங்கு காணப்படவில்லை. ஆனால் இவையாவும் இந்தியாவில் நிறைந்தே இருந்தது.தமிழகத்தில் இவற் றின் தாக்கம் மிகுந்து காணப்பட்டது என்பதும் கருத்திருத்த வேண்டியது முக்கியமாகும். ஆனால் எங்கி ருந்தோ வந்துநின்ற எங்கள் பண்பாட்டுக்கே பொருத்தமில்லா கூட்டத்தால் ஏற்பட்ட வினையால் சமூக த்தில் வேண்டத் தகாத விளைவுகள் வந்துநின்றன. இந்த வினையை வெட்டி எறிந்து தமிழ் சமய பண்பா ட்டைக் காப்பாற்றி அப்பண்பாட்டை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயமே ஈழத்தில் குறிப்பாக யாழ் மண் ணுக்கு தேவையாய் இருந்தது. அந்த நிலையில் ஒருவர் வந்து நின்றார். அவர்தான் நல்லைநகர் தந்த \
ஆறுமுகநாவலர். அவரால் உருவாக்கப் பட்டதுதான் “கந்தபுராணகலாசாரம்”

   போர்த்துக்கேயர்ஒல்லாந்தர்ஆங்கிலேயர் என்னும் அன்னியர் வருகையினால் யாழ்ப்பாணத்தின் கோலமே மாறியது. சைவசமயம் பதறியது. கோவில்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.கிறீத்தவம் தலை விரித்து நின்றது. மதம் பரப்பும் போதகர்கள் மதம்பிடித்து நின்றார்கள். சைவமும் தமிழும் தமிழர் தம் வாழ்வும் ஊசலாடியபடியே காணப்பட்டது. அங்கு வாழ்ந்தவர்கள் தங்களின் சமய நடவடிக்கைகளை செய்ய முடியா நிலைக்கு ஆளாக்கப் பட்டார்கள். காலங்காலமாய் கடைப்பிடித்து வந்த பண்பாடு அவர்க ளின் கண் முன்னாலேயே சிதறுண்டு போகும் நிலையே காணப்பட்டது. 

    சைவத்தைக் கடைப்பிடித்து தமிழ் சமய இலக்கியங்கியங்களை உயிரென்று எண்ணி வாழ்ந்தவர்கள் அன்னியச் சூறாவளியினால் அவதிக்கு ஆட்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். கோவில்கள் தோறும் கந் தபுராணம் படிக்கப்பட்டது. கந்தனுக்குரிய விரதங்களை மக்கள் மிகவும் பக்குவமாக அனுட்டித்து வந்தா ர்கள். தமிழும் சமயமும் மலர்ந்தும் விரிந்தும் நல்லதொரு பண்பாடு ஒளிவிட்டு இருந்தது.ஆனால் அவை யாவுமே கேள்விக்குறியாகியதால் மக்கள் திசையறியா கலமாக இருந்தார்கள். 

    சமணத்தை நன்கு கற்று அதன் தலைமைப் பீடத்தில் இருந்தவர்தான் நாவுக்கரசர். அதே நாவுக்கரசர் தான் சைவத்தைக் காத்திட உழவாரப் படையினை கையில் ஏந்தி சமணத்தை எதிர்த்து சைவத்தின் காவ லனாக வந்து நின்றார். இதன் காரணத்தால் திருநாவுக்கரசு நாயனாராக சைவத்தமிழ் உலகில் இன்று வரை போற்றுதலுக்கு உரியவராக நிற்கிறார்.அப்பர் பெருமான் என்று சைவர்கள் அவரை அழைப்பதில் அகநிறைவு எய்துகிறார்கள் எனலாம்.

     அப்பரைப் போல ஒருவராக ஆறுமுக நாவலரும் அக்கால யாழ்ப்பாண நிலையில் சைவத்தைக் காத் திட வந்து நிற்கிறார். நாவர் ஆங்கிலத்தில் கற்றார். கிறீத்தவ சூழலில் அவர் கற்றல் நிகழ்ந்தது. கிறீத் தவத்தை நன்கு தெரிந்தவர் ஆகிறார். அதனால் கிறீத்தவ வேதாகம நூலான பைபிளை தமிழில் மொழி பெயர்க்கும் ஆற்றலையும் பெற்று நிற்கிறார். முழுக்க முழுக்க கிறீத்தவ சூழலில் நின்ற ஆறுமுகநாவலர் மனம் முழுவதும் சைவமே நிறைந்து நின்றது. இதனால் சைவத்தை காத்திட சைவ தமிழ் இலக்கியங்கிய ங்களை காத்திட நாவலர் வீறுகொண்டு எழுகின்றார். அந்த எழுச்சி தந்த கலாசாரமே யாவராலும் ” கந்தபு ராண கலாசாரம் ” என்று போற்றுதலுக்கு உரியதாக விளங்கிறது எனலாம்.

    தமிழ் இலக்கியங்களை தமிழ் இலக்கணத்தை சைவ இலக்கி யங்களை ஆராத காதலுடன் ஐயமகற் றியே ஆறுமுக நாவலர் கற்றார். ஆறுமுகம் என்னும் பெயர்கொண்டவர் தமிழ்நாடு சென்று ஆற்றிய சொற்பெருக்கை கண்ணுற்ற திருவாவடுதுறை ஆதீனமே ” நாவலர் ” என்னும் பட்டத்தை அளித்து ஆறு முகத்தை அங்கீகாரம் செய்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து ஆறுமுகமாக சென்றவர் ” ஆறுமுகநாவலர் ” என்னும் கெளரவத்துடன் திரும்புகின்றார். தமிழகத்தின் அங்கீகாரத்துடன் அவரின் பணிகள் ஆரம்பிக்கப் படுவதும் மனங்கொள்ளத் தக்கதாகும். அங்கீகாரம் பெற்றாலும் யாழ்ப்பாணத்தில் அவரினால் மேற்கொள் ளப்பட்ட பணிகள் ஈழம் முழுவதற்குமே பெரும் பயனை வழங்கியது என்பதை மறுத்துவிட முடியாது.

  பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலுள்ள ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளை நாவலர் காலம் என்று குறிப்பிடலாம். பொதுவாக இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டிலும் சிறப்பாக ஈழத்திலும் நிலவிய சூழ் நிலையே ஆறுமுக நாவலரைத் தோற்றுவித்தது எனலாம். பல இலட்சம் தமிழ்ச் சைவர்கள் ஆறுமுக நாவலரின் காலத்தில் வாழ்ந்தார்கள்.ஆனால் தமிழ்ச் சைவர்களில் ஒருவரே ஆறுமுகநாவலர் ஆகிவிட முடிந்தது. இங்குதான் நவலரின் பெருமை புலப்பட்டு நிற்கிறது எனலாம்.

   பல்லவர் , பாண்டியர், சோழர், ஆரிய சக்கரவர்த்திகளால் சைவமும் தமிழும் பாராட்டி வளர்க்கப்பட் டன. பாண்டியர் வீழ்ச்சியின் பின்பு சைவத் தமிழ் மன்னரால் தலையெடுக்க முடியாமற் போய் விட்டது. பதினான்காம் நூற்றாண்டின் பின் சைவத் தமிழர் பிறர் தயவில் வாழக் கற்றுக் கொண்டனர்.  பதினே ழாம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாணத்தில் சைவத் தமிழர் ஆட்சி இடம் பெற்றிருந்தது. தமிழ கத்தில் ஒரு சாராரே சைவராக இருந்தார்கள். அவர்களுள் இன்னொரு சாரார் வைஷ்ணவத்தை தழுவியி ருந்தார்கள்.சைவசித்தாம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் வேதாந்தமும் செல்வாக்குடன் அங்கு விளங்கி யது என்பதும் நோக்கத்தக்கதாகும்.இப்படியான ஒரு சூழல் காணப்பட்டாலும் – அங்கிருந்த நிலை பாரம் பரிய தமிழ்க் கலாசாரத்தை விட்டுவிடாமல் அதனுடன் பிணைந்தே இருந்த காரணத்தால்  ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தோன்றிய சைவத் தமிழ் இயக்கம் போன்ற ஒன்று இந்தியாவில் தோன்ற வில்லை என்பது மனமிருத்த வேண்டிய முக்கிய விடயமாகும். சமரச சன்மார்க்க இயக்கங்கள் உருவா வதற்கே இந்தியச் சூழ்நிலை வழிவகுத்தது எனலாம்.

  இந்தியாவின் செல்வாக்கு ஈழத்தில் காணப்பட்டாலும் ஈழத்தின் சமூகநிலை இந்தியா போன்று இல்லாத காரணத்தால் இங்கு உருவான பண்பாடும் வித்தியாசமானதாகவே அமையும் நிலை  ஏற்பட்டது எனலாம். புராணங்களில் கந்தபுராணத்தைப் போற்றும் மனப்பாங்கு தமிழ்நட்டைவிட யாழ்ப்பாணத்தில் நிறைந்தே  இருந்தது எனலாம். கந்தபுராணத்தைச் சொந்த புராணமாக இங்குள்ள சைவர்கள் போற்றினார்கள். கோவி ல்கள் தோறும் கந்தபுராணத்தைப் படித்து அதன் விளக்கத்தை விபரமாக எடுத்துரைக்கும் ஒரு பணி தெய் வீகப் பணியாக யாழ்ப்பாண மக்களால் மேற்கொள்ளப் பட்டுவந்தது.

  போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகையால் யாழ்ப்பாணத்தின் நிலையே தலைகீழானது. கோவில்கள் இடிக்கப்பட்டன. மதமார்றம் கட்டாயம் ஆக்கப்பட்டது. கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப் பட்டது. பாரம்பரிய பண்பாடு கேலிக்கு உரியதாக்கப் பட்டது. சுதேசம் தொலைந்து போகும் நிலை உருவானது. அன்னியரின் கெடுபிடியால் பலர் மதம் மாற்றப் பட்டனர். பணத்துக்கும், பட்டத்துக்கும், பதவிக்கும், உயர் அந்தஸ்த்துக்கும் என்று பலர் மதத்தை பண்பாட்டை துறக்கும் நிலை உருவாக்கப்பட்டது.பயத்தின் காரண மாயும் இந்த வலைக்குள் பலர் மாட்டுப் பட்டார்கள். களப்பிரர் காலம் போல ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பா ணத்தில் ஒரு இருண்ட காலமே நிலவியது எனலாம்.

   தமிழ் படிக்க முடியாத நிலை. சைவத்தை கைக்கொள்ள முடியாத நிலை. திருமுறைகளை ஓத முடியா த நிலை. விரதங்களை அனுட்டிக்க முடியாத நிலை. சைவர்களாய் தமிழர்களாய் வாழுவதே மிகவும் கஷ் டமாய் ஆகிவிட்ட நிலை.    ” வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க ஒரு குழந்தை புனித வாய் மலர்ந்து அழுதது”,  “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ” என்று ஒரு குரல் எழுந்து நின்றது. அதேபோன்று யாழ்ப்பாணத்தில் அவ்வேளை ஒரு குரல்  எழுந்தது. அந்தக்குரல்தான் ஆறுமுக நாவலர் குரலாகும்.

   நாயன்மார்கள் ஊர்கள்தோறும் சென்று பக்திப் பரவசம் நல்கும் பாடல்களைப் பாடி மக்களிடம் சமய நல்லுணர்வையும் நல் வாழ்க்கை முறைகளையும் சேர்ப்பித்தார்கள். அவர்களின் அர்ப்பணிப்பால் மக்களி டம் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டது. புத்துணர்ச்சி உருவானது. பக்தியென்னும் இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. தமிழும் வளர்ந்தது. சமயமும் வளர்ந்தது. சமூகத்திலும் நல்லதொரு மாற்றமும் விளைந்தது. கலங்கிய சமூகம், தடுமாறிய சமூகம், நிதானம் அடைந்தது. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என் னும் நம்பிக்கையும் பிறந்தது. நற்றமிழை நாவாரப் பேச வேண்டும். நற்றமிழால் இறைவனை துதிக்க வேண்டும். நற்றமிழும் சமயமும் இரண்டு கண்கள் என்னும் உணர்வும் எல்லோர் மனதிலும் ஊற்றெடுக்க வைக்கப் பட்டது.

  நாயன்மார்கள் காலம் பாடல்கள் கோலோச்சிய காலம். அதனால் எதைச் சொல்வதாக இருந்தாலும் அத ற்கு வழி பாடல் என்னும் ஊடகம்தான். ஆனால் நாவலர் காலம் அப்படியானது அன்று. அதனால் நாவலர் அவர்கள் தனது சமய தமிழ் சமூகப் பணிகளுக்கு உரைநடையினையே உறுதுணை ஆக்கினார். பேச்சு, எழுத்து, விளக்கம், யாவும் நாவலரின் உத்வேகமான உரைநடை போக்கில் வெளிவந்து நின்றது.

  அன்று யாழ்ப்பாணம் இருந்த சூழலில் ஆறுமுகநாவலர் மட்டும் உருவாகி இருக்காவிட்டால் இன்று ஈழத்தில் சைவமே இருந்தி ருக்காது. தமிழும் அதுசார்ந்த பண்பாடும், தமிழ் சைவ இலக்கியங்களும் காணாமலேயே போயிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம்.

         நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்

         சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
         ஏத்து புராண ஆகமங்க ளெங்கே ப்ரசங்கமெங்கே 
         ஆத்தன் அறிவெங்கே அறை.
 
இந்தப்பாடலே இதற்குத் தக்க சான்றாகி நிற்கிறது அல்லவா !

இந்தியாவில் தோன்றிய முனிவர்கள் கண்ட பழைமையான கலாசாரம் பண்பாடு சில நெருக்கடிகளால் தெற்கு நோக்கி நகரத்தொடங்கியது. அக்கலாசாரம் சற்று தங்கி இருப்பதற்கு ஒரு இடம் கிடைத்ததென் றால் அது யாழ்ப்பாணம் என்பதுதான் பொருத்தமாகும். அதற்குக் காரணம் நாவலர் பெருமானால் உருவா க்கப்பட்ட கந்தபுராண கலாசாரம் என்றேதான் சொல்ல லாம். 

    ” இந்தக் கந்தபுராணத்தை விதிப்படி மெய்யன்போடு நியமமாகக் கேட்பவர்கள் நோய்நீக்கம்செல்வம்புத்திரபாக்கியம்சத்துருஜயம்இராச வசியம்முதலிய பயன்களைப் பெறுவார்கள். இது நெடுங்காலம் பலராலும் நிச்சயித்துணரப்பட்ட விஷயம். இது சத்தியம் முக்காலும் சத்தியம் ; ” என்பது நாவலர் பெருமானின் கருத்தாகும்.

நாட்டுக்கு வருகின்ற இடையூறுகளினின்றும் சைவத்தையுந் தமிழையும் பாதுகாத்திட உதவியது. பாது காத்தது. பாதுகாத்து வைக்கின்றது. கந்த புராணம் ஒரு கற்பதரு அது வேண்டுவார் வேண்டுவதை எந்தக் காலத்திலும் ஈவதற்கு ஆயத்தமாயிருக்கிறது. விலங்கு நிலையிலிருக்கும் மனிதனை மனதனாக்கி மனி தர்களுக்கு மேலே தேவர்களுக்கும் அப்பாலே வழி நடப்பதற் கும் வழி செய்வது கந்தபுராணம்.

இப்படிப்பட்ட கந்தபுராணம் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு சைவாலயத்திலும் மடாலயங்களிலும் வருடந் ததோறும் விதிப்படி படித்துப் பொருள் சொல்லப் பட்டுவந்தது. வருடத்தில் மூன்று மாதங்கள் கந்தபுராண காலமாக இருக்கும்.ஆண்களும் பெண்களும் காப்புக்கட்டி விரதம் இருந்து கந்தபுராணத்தைக் கேட்பார்கள். ஊர்கள் தோறும் இருக்கும் கோவில்களில் எல்லாம் இதனை கண்டு கொள்ளக் கூடிய ஒரு நிலை காணப் பட்டது. சைவசமயத்தில் துறைபோனவர்கள்தமிழில் மிகவும் பாண்டித்தியம் பெற்றவர்கள்சிவதீட்சை பெற்றவர்கள் ஆசாரசீலர்கள்கந்தபுராணத்தை ஒருவர் இராகத்துடன் படிக்க இன்னொருவர் அதற்குரிய விளக்கங்களை சொல்ல அங்குள்ளவர்கள் பெரும் பயனைப் பெற்று வந்தார்கள். இதனால் சமயம் வளர் ந்தது. தமிழும் வளர்ந்தது. ஒழுக்கம்கட்டுப்பாடுஉயர்சிந்தனைபக்திஅறம்நேர்மை என்று இம்மைக்கும் மறுமைக்கும் இன்றியமையாத பண்புகள் மக்களின் உள்ளத்தில் பதியும் நிலை உருவானது என்பது மிக வும் கவனிக்க வேண்டிய விஷயமெனலாம். இப்படி மிகவும் சிறந்து விளங்கிய பண்பாட்டுக்கு பெரும் இடையூறாக வந்து நின்றதுதான் அன்னியர் என்னும் சூறாவளி ஆகும்.

அன்னியரின் வருகையால் யாழ்ப்பாணத்தின் நிலையே தலைகீழானது. மக்களின் கோலங்கள் அலங் கோலங்கள் ஆகின. இந்த வேளை இறைவனின் அனுக்கிரகத்தால் ஆறுமுகநாவலர் ஆறுதலாய் தேறு தலாய் அங்கு வந்து நின்றார். ஏற்கனவே கந்தபுராணம் என்பது பரம்பரையில் ஊறிய காரணத்தால் அந்தப் பரம்பரையில் வந்துநின்ற நாவலரின் இரத்தத்திலும் ஊறியே காணப் பட்டது. கந்தபுராணம் யாழ்ப்பாண த்தவர்களை மீண்டும் காப்பாற்றும் வல்லமை மிக்கது என்று ஆறுமுகநாவலர் எண்ணினார். ஆகவே சொந்தப் புராணமாக கந்தபுராணத்தையே நாவலர் பெருமான் துணையாக்கி அதன் வழியில் யாழ்ப்பா ணத்தின் பண்பாட்டைக் காத்து உயிர்ப்புறச் செய்யும் பணியில் உழைக்கத் தொடங்கினார். அவரின் உழை ப்பினால் யாழ்ப்பாணத்தின் பண்பாடு காப்பாற்றப் பட்டது. அந்தப் பண்பாட்டினைக் காத்திட அவர்கையாண்ட வழிமுறைகளினால் முகிழ்த்து வந்ததுதான்.

” கந்தபுராண கலாசாரம் ” ஆகும்.

  ” இந்தியாவிலே சைவ சமயிகளுள்ளும் சைவசமயத்தில் உடபற்றில்லாதவர்கள் பலரேயாகவும்இவ் வியாழ்ப்பாணத்திலே கிறிஸ்து மதத்திற் புகுந்தவ ருள்ளும் சைவ சமயத்தில் உட்பற்றற்றவர் அரியர் ஆதலாகிய இத்துணை விசேடத்துக்குக் காரணந்தான் என்னை எனிற் கூறுவதும் :

  ” எத்துணைக் காலந் திருப்பித் திருப்பிப் படிக்கினும் கேட்கினும் எட்டுணையுந் தெவிட்டாது தித்தித்த முதூறும் அத்தியற்புத அதிமதுரத் திவ்விய வாக்கியம் கந்தபுராணத்திலுள்ள பதியிலக்கணத் திருவிரு த்தங்களை கேட்டல் சிந்தித்தல்களினால் இவர்கள் உள்ளத்து ஊற்றெடுத்த மெய்யுணர் வேயாம் ,

  ” இந்தியாவிலே சிவபுராணப் பிரசங்கம் செய்யும் கோயில்கள் மிக அரியனஇத் தேசத்திலே அது செய்ய ப்படாக் ( யாழ்ப்பாணத்தில் ) கோயில் இல்லை.இந்தியாவிலே வித்துவான்கள் சைவ சமய குருமார் முத லியோர்களுள்ளும் கந்தபுராணம் முதலியன அறிந்தவர் சிலரேஇத் தேசத்திலோ  ( யாழ்ப்பாணத்தில் ) பெண்களுள்ளும் அவை அறியாதார் இலர் ” என்று நாவலர் பெருமான் அவர்கள் யாழ்ப்பாணச் சமய நிலை என்னும் நூல் வாயிலாக வெளிப்படுத்தி இருப்பது மனங்கொள்ளத்தக்கதாகும். நாவலுருடைய காலத்தில் கந்தபுராணப் படிப்பு மிகவும் உச்ச நிலையை அடைந்தது.

பெரியபுராணத்தைக் கோவில்கள் தோறும் சென்று பிரசங்கம் செய்தவர் நாவலர் பெருமான் அவர்கள். பெரியபுராணத்தை யாவரும் படிக்க வேண்டும் என்னும் பேரவாவினால் அதனை வசனநடையில் ஆக்கியும் அளித்திருக்கிறார்.

ஆனால் அவர் கையிலெடுத்தது கந்தபுராணத்தையே ஆகும். அதற்கு என்ன காரணம் என்பதும் ஆராயப் படவேண்டியதே. தேவர்களை

அசுரர்கள் துன்புறுத்திபலதொல்லைகளைக்கொடுத்தார்கள்.தேவர்களின் கோட்பாடுகளைச் சீரழித் தார் கள். இந்த நிலையை அன்னியர் வருகையுடனும் அவர்களின் அட்டூழியத்துடனும் நாவலர் பெருமான் ஒப்பிட்டிருக்கலாம். தேவர்களைக் காத்து ஆணவநிலை நின்ற அசுரர்களை அழித்து அறத்தை நிலை நாட்டிட கந்தப்பெருமான் அவதாரம் செய்கிறார் என்பதையே கந்த புராணம் காட்டி நிற்பதால் அன்னிய அசுரர்களை அகற்றி சைவமென்னும் தர்மத்தையும் உயிரன்ன தமிழையும் பண்பாட்டையும் காத்திட கந்த புராணம் நிச்சயம் உற்ற துணையாகும் என்ற நம்பிக்கையே கந்தபுராணத்தைக் கையில் எடுப்பதற்கும் அதன்வழி ஒரு புதுக் கலாசாரம் உருவாதவற்கும் நாவலர் பெருமானின் எண்ணமாகக் கூட இருந்திரு க்கலாம் அல்லவா.

  கந்தபுராண கலாசாரம் என்பது ஆறுமுகநவலருடன் நின்றுவிடவில்லை. அவரின் மரபைக் கைக்கொள் ளும் பாரிய பரம்பரையினையே உருவாக்கி விட்டது எனலாம். ஆறுமுக நாவலரின் பணிகள் பன்முகப் பட் டன. பழைய நூல்களைப் பதிப்பித்தமை. காலத்துக்கு ஏற்ப தமிழ் இலக்கியங்களை குறிப்பாக சைவ இல க்கியங்களை வசனநடையில் ஆக்கியமை.இலக்கணத்தை இக்காலத்தவர்களும் இலகுவாக விளங்கும் வண்ணம் நூல்களை ஆக்கியமை.பாடசாலைகள் நிறுவி சைவத்தையும் தமிழ் பண்பாட்டையும் வருங்கால சந்ததியினருக்கு பதியச் செய்தமை. தமிழுக்கென்று நல்லதோர் வசனநடையினை அறிமுகம் செய்து வச னநடை கைவந்த வல்லாளர் ஆகியமை.பாடத்திட்டங்களை ஆக்கி இளையோர் நன்னெறி வழியில் வளர் வதற்கு வழி சமைத்தமை. அச்சுக்கூடங்களை நிறுவி எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் நூல்களை அச்சிட்டு வெளியிட்டு சாதனை காட்டியமை.

    அஞ்சாமை, தூங்காமை, களங்கங்கண்டு பொறுக்காமை, பொய்மை ஏற்காமை, ஒழுக்கத்தை இழக் காமை, ஆறுமுகநாவலரின் வாழ்க்கை முறையாக அமைந்தது எனலாம். பிரமச்சாரியாகவே வாழ்ந்தார். இல்லறத்தைத் துறந்தார். நல்லறத்தை ஏற்றார். சொல்லிவிட்டு நிற்கவில்லை. சொல்லியபடி வாழ்ந்தும் காட்டினார். அறுபத்து மூன்று நாயன்மாருடன் ஆறுமுகநாவலரையும் இணைக்கும் வழக்கமும் காணப்படு கிறது.சமயகுரவர் நால்வருடன் ஐந்தாங் குரவராக ஆறுமுகநாவலர் அவர்களை ஏற்கும் நிலையும் காண ப்படுகிறது. ஆறுமுகநாவலர் அவர்கள் இரண்டு பெரிய குறிக்கோள்களைத் தம் இளம்பருவத்திலே உருவா க்கிக் கொண்டார்.தமிழன் என்ற பெருமையோடு தலைநிமிர்ந்து வாழவைக்கும் தாய்மொழி வளர்த்தலும், இம்மைக்கும் மறுமைக்கும் பயன்களை நல்கும் சமயத்தைக் காத்தலும் ஆகிய குறிக்கோள்கள் இரண் டுமே எனலாம். இவற்றைத் தவிர வேறென்றையும் அவருடைய உள்ளம் இடந்தரவில்லை என்றே கருத முடிகிறது. ” தமிழ் சமயம் ஆகிய இரண்டும் என் இரு கண்கள்.அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதி வரை காத்துப் பயன் கொள்வதே என் கடன். அவை வாழப் பணிபுரிதலே என் வாழ்வின் குறிக்கோள் ” என்று ஆறுமுகநாவலர் புகன்று நிற்பதுதான் கந்தபுராண கலாசாரத்தை உருவாக்கிட உள்நின்ற சக்தி எனலாம். ஆசியப் பண்பாட்டில் சைவத்தையும் சைவத்தமிழ் இலக்கியங்களையும் காத்து அதற்கென ஒரு தனியான பண்பாடாக  ” கந்தபுராண கலாசாரம் ” விளங்குகிறது என்பதும் அதனை தாங்கி நிற்கும் யாழ்ப்பாணமும் கருத்தில் இருத்தப்பட வேண்டியது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *