இலங்கை

பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை பாதாளக் குழு எனக் கூறி நியாயப்படுத்த முடியாது ; அரசாங்கம் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தவேண்டும்

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. அதன்படி பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுவரும் அதேவேளை, மறுபுறம் பாதாள உலகக்குழுவினர் என அடையாளப்படுத்தப்படும் பலர் பொதுவெளியில் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன.

அதுமாத்திரமன்றி அரசாங்கம் பொதுவெளியில் நிகழும் இவ்வாறான படுகொலைகளை பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் கொல்லப்படுவதாகக்கூறி நியாயப்படுத்திவரும் போக்கு தொடர்பில் பலரும் கண்டனங்களை வெளிப்படுத்திவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த சுமந்திரன், பாதாள உலக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும் அதனைக் காரணமாகக்கூறி பொதுவெளியில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், மாறாக சட்டம், ஒழுங்கை உரியவாறு பேணவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வருடத்தில் இதுவரை சுமார் 50 க்கும் மேற்பட்ட இவ்வாறான கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இனிவருங்காலங்களில் இத்தகைய சட்டவிரோத படுகொலைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *