இலங்கை

மண்டைதீவில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதை உடனடியாக நிறுத்தவும்!

யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்கத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு, உப்பளங்கள், சேற்றுத் திட்டுகள், உப்புநீர் சதுப்பு நிலங்கள்-கண்டல் இணைச்சூழல்கள் (salt marsh-mangrove ecotones), கடற்புற்கள் மற்றும் விரிவான இயற்கையான கண்டல் தாவரங்களின் வாழ்விடங்களைக் கொண்ட ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க மற்றும் மிக முக்கியமான பகுதியாகும் என்று தெரிவித்துள்ளது.

தேவையான சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் எதையும் பூர்த்தி செய்யாமலேயே மைதானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது இலங்கையின் சுற்றுச்சூழல் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வளங்கள் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ், கடலோரப் பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்திப் பணிக்கும், அது நிலையானதா என்பதை உறுதிப்படுத்த, முதலில் ஆரம்ப சுற்றுச்சூழல் பரிசோதனை அல்லது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடத்தப்படுவது கட்டாயமாகும்.

சட்டத்தின் பிரிவு 16, இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் முன் அனுமதி அவசியம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.

திட்டத்தின் அளவு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த, கட்டாயமாக ஒரு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சீர்குலைப்பது, மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அப்பகுதி மக்களுக்கு அனர்த்த அபாயங்களை அதிகரிக்கும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

இந்தத் திட்டம் உள்நாட்டுச் சட்டத்தை மீறுவதுடன் மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை ஏற்றுக்கொண்ட சர்வதேச காலநிலை சார்ந்த கடப்பாடுகளையும் பலவீனப்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அபிவிருத்தி என்ற பெயரில் விஞ்ஞான மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை புறக்கணிப்பதற்கு இது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கும் என்றும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *