இந்திய அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்; வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் செயலாளர் அனந்தராஜா வலியுறுத்து

இந்திய அமைதி காக்கும் படை மேற்கொள்ளப்பட்ட வல்வை படுகொலைகளிற்கு இந்திய அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் அவர்களிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு 430 கோடி ரூபா(14.6 மில்லியன் டொலர்) நஷ்ட ஈடு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்றும் வல்வெட்டித்துறை பிரதேச சமூக செயற்பாட்டாளரும், பிரஜைகள் கூழுவின் செயலாளருமான ந. அனந்தராஜா தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) பருத்தித்துறை வீ.எம். வீதியில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற வல்லைப் படுகொலைகளுக்கான இழப்பீட்டுக்கான இழப்பீடு பரிந்துரை அறிக்கை நூல் வெளியீடு நடைபெற்றது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல் திட்டத்தினால் (ஐ .ரி.ஜே.பி.)அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட ‘ஒரு படு கொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கையில் 1989 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நேரடி சாட்சியங்களின்-வாக்குமூலங்களின் -ஆதாரங்களை இந்த சமர்ப்பிப்பு அடிப் படையாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. அது கொலைகள் மற்றும் காயங்களை மட்டும் விவரிக்காமல், வல்வெட்டித்துறை கரையோர நகரில் இடம் பெற்ற வீடுகள், வியாபாரங்கள். படகுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பரவலாக அழிக்கப்பட்டமை பற்றியும் விவரிக்கின்றது.
அங்கு அந்தச் சமயத்தில் மூன்று நாள்கள் இடம் பெற்ற வெறியாட்டத்தில் 120 வீடுகள், 43 கடைகள். அழிக்கப் பட்டன. 250 க்கும் அதிகமான வீடுகள் சேதமாக்கப்பட்டன. பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்கள் கடந்த 35 வருடங்களாக எந்த விதமான அங்கீகாரத்தையோ அல்லது பரிகாரத்தையோ பெற்றுக் கொள்ளவில்லை என்று இப்போதைய விண்ணப்பம் விவரிக்கின்றது.
சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இந்த இழப்பீடுகள் பற்றிய விண்ணப்பம் விரிவாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த அட்டூழியம் நடைபெற்ற போது வல்வெட்டித்துறையில் இருந்து தப்பி பிழைத்த ஆசிரியர் அனந்தராஜா(வல்வை அனந்தராஜ்)இந்த விடயம் பற்றி 1989 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குடாநாட்டில் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ‘வல்வை படுகொலையில் குறைந்தது 66 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 34 பேர் காயப்படுத்தப்பட்டனர். இந்திய அமைதிப்படை அங்கு நிலை கொண்டிருந்த சமயத்தில் இது இடம் பெற்றது.
இந்த இழப்புக்காக வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, இலங்கையின் இழப்பீடுகளுக்கான அலுவலகத்திடம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக் கான (அதாவது சுமார் 450 கோடி ரூபா வுக்கான) கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.
ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மோசமான பாரிய – அட்டூழியங்களில் ஒன்றாக, நீண்ட காலமாக வழங்கப்படா மல் இருக்கும் நீதியையும் வல்வெட்டித் துறை பிரஜைகள் குழு இந்த விண்ணப்பத்தில் கோரியுள்ளது.
இவை தொடர்பாக ஐ .ரி.ஜே.பி.யால் அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட ‘ஒரு படு கொலையின் வாக்குமூலங்கள்’ என்ற சுமார் 20 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிக்கை வெளியிடும் நேற்றைய நிகழ்வில் வல்வைப் படுகொலையில் உயிர் நீத்தவர்களிற்கான பொதுச் சுடரை ஆதிகோவிலடி கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் ஏற்றி வைத்தார்.
ஈகச் சுடர்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் , பருத்தித்துறை நகரசபைத் தலைவர் டக்ளஸ்போல் ஏற்றி வைக்க தொடர்ந்து சாவகச்சேரி நகரசபை உப. தவிசாளர் கிசோர், வடமராட்சி வடக்கு கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் சந்திரதாஸ், உப. தலைவர் வர்ணகுலசிங்கம், காணி உரிமைகள் அமைப்பின் தலைவர் முரளிதரன், பருத்தித்துறை வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் ஏற்றினர்.தொடர்ந்து விருந்தினர்கள் மற்றும் பொது மக்கள் உயிரிழந்தவர்களிற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அனந்தராஜ் தொடர்ந்து பேசுகையில் ;
இப் படுகொலை 35 வருடங்களிற்கு முன் இடம்பெற்றது. இப் படுகொலை மூன்று நாட்களாக இடம் பெற்று வீதிகளில் ஒழுங்கை களில் சடங்கள் காணப்பட்டன. அத்துடன் கடல்தொழில் உபகரணங்களும் நாசமாக்கப் பட்டன.
இது தொடர்பில் ஐ.நா. விடம் 150 இற்கு மேற்பட்ட சத்தியக் கடதாசிகளையும், இப் படுகொலை தொடர்பான விரிவான அறிக்கையையும் நாங்கள் அனுப்பி வைத்தோம். இது தொடர்பான பொறுப்புக் கூறலை சம்மந்தப்பட்ட தரப்பினர் ஏற்க வேண்டும்.
இந்திய அமைதிப்படை வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருந்த காலத்தில் 15,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இந்திய அரசு முழுமையான ஈழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் இந்திய அரசு வடக்கு கிழக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
88 ஆம் ஆண்டு இடம்பெற்ற இப் படுகொலைச் சம்பவத்திற்கான இழப்பீட்டை அன்றை காலத்திற்கான பெறுமதியை இன்றைய காலத்திற்கான பெறுமதியுடனும் அதற்கான வட்டியுடனும் வழங்க வேண்டும்.
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாரிய படுகொலை குற்றங்களுக்காக இழப்பீடு வழங்கும் கடப்பாடு ஓர் அரசாங்கத்திற்கு உண்டு என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது.
இந்திய அமைதிகாக்கும் படையினரின் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட, 1989 ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற வல்வெட்டித்துறை சம்பவமானது பொது மக்கள் கொல்லப்படுதல், காணாமல் போதல்கள், பெருமளவான காயங்கள் மற்றும் வீடுகள் வியாபார நிலையங்கள் மற்றும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை நடத்துவதற்குரிய அவசியமான உட் கட்டுமானத்தின் அழிவு உட்பட பாரிய படுகொலை குற்றங்களிற்கு இட்டுச் சென்றது.
பாதிக்கப்பட்ட பொது மக்கள் வெறுமனே நிதி இளப்பீடு என்பதற்கு அப்பால் விரிவான இளப்பீடுஙளை பெற்றுக் கொள்வதற்கான உரிமையை கொண்டுள்ளார்கள்.
வல்வையில் நடந்த மூன்று நாள் அராஜகத்தின் போது நானும் கைது செய்யப்பட்டு உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அச் சமயத்தில் அக் கல்லூரி வளாகத்தில் சிலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இருக்கலாம்.இதனை ஸ்கானர் மூலம் கண்டறிய வேண்டும்.
எங்கள் எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் சகல உரிமைகளுடனும் வழ வேண்டும் அதற்கான அதிகாரம் வேண்டும் இதற்கான முயற்சியை இந்த அரசு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதே வேளை மேற்படி அறிக்கையில்,
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் பாரிய படுகொலைக் குற்றங்களுக்காக இழப்பீடு வழங்கும் கடப்பாடு ஒரு அரசாங்கத்திற்கு உண்டு என்பது நன்குநிறுவப்பட்டுள்ளது. இந்திய அமைதிகாக்கும் படையினரின் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட ஆகஸ்ட் 1989 இல் இடம்பெற்ற வல்வெட்டித்துறைச் சம்பவமானது, பொதுமக்கள் கொல்லப்படுதல், வலிந்து காணாமற்போதல்கள், பெருமளவான காயங்கள் மற்றும் வீடுகள் , வியாபாரங்கள் மற்றும் மக்கள்தமது வாழ்வாதாரத்தை நடத்துவதற்குரிய அவசியமான உட்கட்டுமானத்தின் அழிவு உட்பட்ட பாரியபடுகொலைக் குற்றங்களுக்கு இட்டுச் சென்றது.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வெறுமனே நிதி இழப்பீடு என்பதற்கும் அப்பால் விரிவான இழப்பீடுகளை பெற்றுக் கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்கள்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பாரிய மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் பரிகாரம் மற்றும் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்ற சர்வதேச நியமங்களுக்கு இணங்க இழப்பீடுகளுக்கான கட்டமைப்பு பின்வருவனவற்றை உள்ளடக்க வேண்டும்.
* மறுசீரமைப்பு சாத்தியமான வகையில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது முன்னைய நிலைமைக்கு மீட்டெடுத்தல் (உதாரணமாக வீடுகளை மீளக் கட்டுதல், கைப்பற்றப்பட்டசொத்துகளை திருப்பிக் கொடுத்தல்)
*நட்டஈடு: உயிரிழப்பு, காயம் மற்றும் சொத்தழிவிற்கு தற்போதைய பெறுமதியைப் பிரதிபலிக்க கூடியவகையில் நிதிக் கொடுப்பனவு.
*புனர்வாழ்வு: மருத்துவ மற்றும் உளவியல் ரீதியான பராமரிப்பு, சமூக சேவைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான ஆதரவு.
* மனநிறைவு: பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளுதல், அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கோருதல் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அல்லது நினைவுச் சின்னங்கள் போன்ற முயற்சிகள்.
* மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதங்கள்: நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள்,
சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் மீறல்கள் மீண்டும் இடம்பெறமாட்டாது என்பதை உறுதிப்படுத்தும் பொறிமுறைகள்.
இந்த அறிக்கையானது இழப்பீடுகளை வழங்கும் விரிவான கடப்பாட்டின் ஒரு அங்கமாக பிணக்கிணால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களை பற்றிய ஒரு மதிப்பீட்டினை வழங்குகின்றது.
இங்கு 3 நாள் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களின் போது, எரிக்கப்பட்ட வீடுகள் -123,உள்ளடக்கங்கள் அழிக்கப்பட்ட வீடுகள் -123 ,சேதமாக்கப்பட்ட வீடுகள் -250, கடைகள் -43 ,தனியார் மருத்துவ நிலையங்கள்- 1 ,திரையரங்குகள் 2 ,கார்கள், வான்கள் மற்றும் -7,மோட்டார் சைக்கிள்கள் -3 ,மிதி வண்டிகள்- 50 ,இழுவைப் படகுகள் -4 ,கன்னார்ப் படகுகள் -4 என்ற விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()