இலக்கியச்சோலை

“நினைவாகிய நாயகன்” வங்காலையில் இம்மாதம் 26 இல் வெளியீடு!

மன்னார் மாவட்டத்தின் தவப்புதல்வர் ஈழத்தின் மூத்த கலைஞர் அமரர் தொபியாஸ் மக்சிமஸ் லெம்பேட் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பதிவு செய்துள்ள நினைவாகிய நாயகன் மலரின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 26 ஆம் திகதி மன்னார் வங்காலை, ஆவேமரியா மண்டபத்தில் பிற்பகல் 3-00 மணிக்கு நடைபெறும்.

இம்மலர், மன்னார் மாவட்டத்தின் சிறப்புகளையும், அங்கு கலைஞர் மக்சிமஸ் லெம்பேட் மேற்கொண்ட கலைப்பயணத்தையும் விபரிக்கிறது.

மும்மொழிப்புலமை மிக்க அவர், அதிபராக, கல்விப்பணியை மேற்கொண்டவாறு, கலைத்துறையில் குறிப்பாக கூத்து, நாடகம் முதலான துறைகளிலும் சமூக, சமயப்பணிகளிலும் தனது அயராத சேவையை தொடர்ந்து வந்திருப்பவர்.

அன்னாரின் வாழ்வையும் பணிகளையும், இந்நூலில் பலரும் சிலாகித்து, அவருடனான தங்கள் அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளனர்.

வங்காலையில், கலாமன்றம் அமைத்து, இளம் தலைமுறையினரை குறிப்பாக மாணவர்களை கலைத்துறையில் ஊக்குவித்த அதேசமயம், அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்திருப்பதாக அருட்திரு. தமிழ்நேசன் அடிகளாரின் விரிவான கட்டுரையிலிருந்து நாம் தெரிந்துகொள்கின்றோம்.

மன்னார் மாவட்ட முன்னாள் அரச அதிபர் திருமதி அன்னம்மா ஸ்ராண்லி டிமெல், தனது செய்தியில், மாணவர்கள் வகுப்பறையில் செய்யும் தவறுகளுக்கு மக்சிமஸ் அவர்கள் வழங்கும் விநோதமான தண்டனையை விபரிக்கும்போது, அதனை நேரில் பார்த்த அனுபவத்தை பெறுகின்றோம்.

ஒரு தடவை திருமதி அன்னம்மா அவர்களின் கனவில் தோன்றி அவர் சொன்ன வேண்டுகோளின் தாற்பரியத்தை வாசிக்கும்போது, அந்த கனவின் பின்னணியில் அவரது புதல்வி றெஜி அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பதை குறிப்பால் அந்தக்கனவின் மூலம் சொல்லியிருக்கிறார்.

இத்தகைய வாழ்வனுபவங்கள் பெற்றவர்கள் எம்மத்தியில் பலருண்டு. கனவுக்கும் நனவிற்கும் மத்தியில் இழையோடும் பிணைப்பின் உயிர்ப்பை உணர்கின்றோம்.

மக்சிமஸ் லெம்பேட் அவர்களின் அன்புத்துணைவியார், ( அமரர் ) திரேசாள் லெம்பேட் அவர்கள், தமது கணவருடன் தொடர்ந்த பயணத்தில் பெற்ற அனுபவங்களை பல உண்மைச் சம்பவங்களின் வாயிலாக பதிவுசெய்துள்ளார்.

சமூகத்திற்காக பேசுவதுடன், சமூகத்தையும் பேசவைக்கும் மக்சிமஸ் அவர்களின் உன்னத பணிகளை இந்தப்பதிவின் மூலம் தெரிந்துகொள்கின்றோம்.

வேலை தேடும் படலத்தில் ஈடுபட்ட பல இளைஞர்களுக்கு அவர் எவ்வாறெல்லாம் தன்னோடு தங்கவைத்து உதவியிருக்கிறார் முதலான பல செய்திகளை அந்தப்பதிவின் மூலம் அறிய முடிகிறது.

பல கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய அரச கடனுதவிகளையும் தனது தொடர்பாடல்களின் மூலம் அவர் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

ஒரு பாடசாலைக்கு சுற்று மதில் தேவைப்படும் கோரிக்கை எழுந்தபோது, அதற்காக ஒரு திரைப்படத்தை நிதியுதவிக்காட்சியாக காண்பித்து ஆக்கபூர்மாக உதவிய பெருந்தகைதான் மக்சிமஸ் லெம்பேட். இவ்வாறு அவர் தமது வாழ்நாளில் தனது பிரதேசத்தில் மேற்கொண்ட அரிய பணிகளை, அன்னாரின் அன்புத்துணைவியாரின் விரிவான ஆக்கத்தின் மூலம் தெரிந்துகொள்கின்றோம்.

ஊரில் பல கலைநிகழ்ச்சிகளில் பல மாணவிகளை ஈடுபடத்தூண்டி பல்வேறு அரங்காற்றுகையை ஆரம்பித்து அவர்களிடம் புத்தூக்கத்தை வளர்த்திருக்கிறார். அத்துடன் பல வரலாற்று நாடகங்களும் அவரது முன் முயற்சியினால் மேடையற்றம் கண்டிருக்கிறது.

மன்னார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழகக்கோன், மற்றும் சூசைதாசன் முதலானோருடன் அவருக்கிருந்த நெருக்கமான ஈடுபாட்டினால், அந்தப்பிரதேசம் வளர்ச்சி கண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் வதியும் மூத்த கலைஞர் ஈழக்கூத்தன் தாசீசியஸ் , தனது நாடகத்துறை வளர்ச்சிக்கு மக்சிமஸ் அவர்கள் எவ்வாறேல்லாம் மனமுவந்து ஊக்குவித்துள்ளார் என்பதை தனது கட்டுரையில் விபரிக்கின்றார்.

நண்பரும் இசைக்கலைஞருமான வின்சன்ட் லெம்பேட் , தன்னுடன் அழைத்து வந்தவரை இவர்தான் மக்சிமஸ் லெம்பேட் என தாசீசியசுக்கு _ முதல் முதலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.

கணீரென்ற குரலுடன் பல வருடங்களுக்கு முன்னர் தன்னுடன் உரையாடி நட்பு பூண்ட அந்நிகழ்வை தாசீசியஸ் நினைவுபடுத்துகிறார்.

சுமார் பத்தாண்டு காலம் கொழும்பில் தாசீசியஸ்,, மக்சிமஸ் அவர்களின் ஊடாக மன்னார் வங்காலை பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்கிறார்.

இன்றைய நவீன வசதிகள் இல்லாத அக்காலப்பகுதியில், இலங்கை வானொலியில் நாடகம், கூத்து முதலான கலைகள் பற்றிய நிகழ்ச்சிகளை தாசீசியஸ் தயாரித்து வழங்குவதற்கு கே.எம் .வாசகர் ஊக்குவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த பல கலைஞர்கள் அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சிகளை மன்னாருக்கே நேரடியாகச்சென்று, பதிவுசெய்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு தனக்கு பக்க பலமாக இருந்தவர், மக்சிமஸ் என்பதை, தாசீசியஸ் மிகுந்த நன்றியோடு பதிவுசெய்கிறார்.

மக்சிமஸ் ஊடாக தனக்கு கிட்டிய புதிய கலைஞர்கள் பலரையும் பற்றி தாசீசியஸ் தமது பதிவில் விரிவாகச்சொல்கிறார்.

கலைத்துறையில், கூட்டு முயற்சியினால் பலவற்றையும் சாதிக்க முடியும் என்பதை தாசீசியஸ் தனது ஆக்கத்தின் ஊடாக விபரிக்கின்றார்.

மன்னார் மரபுக்கூத்தில் கர்ணன் கருணை கொழும்பு லும்பினி அரங்கில் மேடையேற்றப்பட்ட பின்னணியைம் தாசீசியஸ் தமது பதிவில் விரிவாகச்சொல்கிறார்

கொழும்பு லும்பினி அரங்கில் குறிபிட்ட நாடகம் அரங்கேறி விருதும் பெற்றது. அதனை இயக்கிய மாக்சிமாஸ் அவர்களின் கடின உழைப்பு எத்தகையது என்பதை நாம் அறிந்துகொள்கின்றோம்.

“ கலை ஊற்று மக்சிமஸ் லெம்பேட், ஒரு பெரும் கலைஞன்,பெரும் சமூகத்தொண்டன். தனது கிராமம் தொடர்பாகவும் தனது மாவட்டம் தொடர்பாகவும் பெரும் கனவுகளை அபிலாஷைகளை வேணவாக்களை சுமந்து ஆங்காங்கே பயிரிட்டு பயணம் புரிந்தார். பயிர்கள் வளர்கின்றன. எந்தவொரு கலைஞனும், எந்தவொரு

சமூகத்தொண்டனும் தனது காலத்துக்குப்பின், ஓர் உந்து சக்தியாகின்றான். “ என்று தாசீசியஸ் தனது விரிவான ஆக்கத்தை நிறைவுசெய்துள்ளர்.

ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் கலாபூசணம் ஆரோக்கியம் குரூஸ், மற்றும் முன்னைநாள் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆபேல் றெவ்வல், பேராசிரியர் ஆனந்தா சோசை, ( அமரர் ) . வின்சன்ட் லெம்பேட், எழுத்தாளர், சீமான் பத்திநாதன் பெர்ணாந்து, , கலா பூசணம், செபஸ்தியான் மாசிலாமணி, ஓய்வு நிலை ஆசிரியர் ஞானசேகரன், பற்றிக் லெம்பட், (பாரிஸ்டர் ) அந்தனி நிக்கலஸ் உட்பட பலரும், கலைஞர் மக்சிமஸ் அவர்களின் உன்னத வாழ்வையும் கலைச் சேவைகளையும் இம்மலரில் நினைவுபடுத்தியிருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் மக்சிமஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் மேடையேறிய பல நாடகங்களில் பங்கேற்றவர்கள். சில கட்டுரைகள் நெகிழ்ச்சியானவை.

மூத்தபுதல்வர் றோய் லெம்பேட்டின் வெளிநாட்டுப் பயணத்தையடுத்து மக்சிமஸ் அவர்கள் இந்த உலகவாழ்வை நீத்துள்ளார் என்ற செய்தியை கம்பராமாயணக்காட்சியில் தசரதனின் நிலையை நினைவுபடுத்தும் வகையில் ஓய்வுபெற்ற அதிபர் திரு. எமில் குலாஸ் தனது ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன்,மௌனகுரு அ.சண்முகதாஸ் ஆகியோருக்கு பிரியமான கலைஞராகத் திகழ்ந்திருக்கும் மக்சிமஸ் அவர்களின் மூத்த புதல்வர் றோய் லெம்லெம்பேட், தனது ஆக்கத்தில், வங்காலை புனித ஆனாள் வித்தியாலயம் வளர்ச்சிகண்டத்தில் தனது பப்பாவின் பங்களிப்பை விபரித்துள்ளார்.

ஒருதடவை இராணுவ முகாமுக்கு அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, தனது வாக்குமூலத்தை தெளிவாக ஆங்கில மொழியில் சொல்லியிருக்கிறார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்து வியந்தவர் ( அமரர் ) எஸ். ஆர். மரியநாயகம். இவர் தனது ஆக்கத்தில் மேலும் பல உண்மைச் சம்பவங்களை குறிப்பிடுகிறார்.

முழுமையான கலைஞராகத் திகழ்ந்திருக்கும் மக்சிமஸ் அவர்களின் பன்முக ஆளுமைப்பண்புகளை விபரிக்கும் . நினைவாகிய நாயகன் மலரின் வெளியீட்டு விழாவில், மக்சிமஸ் அவர்களின் சேவைகளை, நினைவுபடுத்தும் சில அறிஞர்களின் விதப்புரைகளும் இடம்பெறவுள்ளன.

இம்மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காலையில் ஆவேமரியா மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு கலாநிதி ஏ.எஸ். ஆனந்தன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.

கணகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுவார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் வங்காலை புனித ஆனாள் ஆலயம் . பங்குத் தந்தை அருட் தி ரு. லக்கோன்ஸ். . பிகிறாடோ .

மலரை திரு. றோய் லெம்பேட் வெளியிட்டு வைப்பார். நன்றியுரை :

பிறைற்றன்.சில்வா.

—-0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *