இலங்கை

கோப்பாய் பொலிஸ் நிலையக் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பு

கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ்.நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த 30 வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் இருந்து வந்தது.

அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை.

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு, காணிகளுக்குச் சொந்தமான 7 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்

வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இதன் போது பொது மக்களின் காணிகளிலிருந்து பொலிஸார் வெளியேறி, அந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பொலிசார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வருகைதந்து, அங்குள்ள பொலிசாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளித்தார்.

தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் தனித்து இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள்,வேறு காணிகள் இல்லாது வேறு இடங்களில் நீண்ட காலமாக வாசித்து வந்தனர். நேற்றைய தினம் காணிகள் கையளிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *