இலங்கை

தையிட்டி திஸ்ஸ விகாரையில் திடீர் விழாக்கோலம்; பொலிஸார் தலைமையில் ஏற்பாடு.!

யாழ். தையிட்டி – திஸ்ஸ விகாரையில் பொலிஸாரின் முழுமையான பங்களிப்புடன்,  திங்கட்கிழமை விழாவொன்றுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு இன்னும் ஓரிரு வாரத்துக்குள் தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார். தீர்வொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள், காணிகளின் உரிமையாளர்களுடனும், விகாரையின் நிர்வாகத்துடனும் இடம்பெற்று வருகின்றன.

அரச உள்ளக மட்டத்திலும் விகாரைக்கான தீர்வுக்காக சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே, விகாரையைச் சார்ந்த மத அனுஷ்டான விழாவொன்றுக்கு அங்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸார், விழாவை முன்னின்று ஏற்பாடு செய்கின்றமை பல்வேறு விசனங்களை உருவாக்கியுள்ளது.

திஸ்ஸ விகாரையில் இடம்பெறும் முன்னெடுப்புக்களை வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது, இராணுவத்தினரும், பொலிஸாரும், புலனாய்வாளர்களும் பிரதேச சபை உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன், ஒளிப்படங்களையும் எடுத்துள்ளனர். அத்துடன், பலாலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி அங்கு விரைந்து சென்று பிரதேச சபை உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பெயர் விவரங்களைப் பதிவு செய்து சென்றுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *