இலங்கை

தமிழரசு, மு.காவை தடை செய்ய கொண்டு வரவிருந்த பிரேரணை முறியடிப்பு!

இன மற்றும் மத பெயர்கள், அடையாளங்களை கொண்ட கட்சிகளை தடை செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொண்டு வரவிருந்த தனிநபர் பிரேரணை  நாடாளுமன்றத்தில் பெரும் வாதத்தை ஏற்படுத்தியது.

அந்த முயற்சி தங்களின் கடும் எதிர்ப்பால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

”இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பெயர்களை வைத்து இந்தக் கட்சிகள் இலங்கையில் பதிவில் இருக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரேரணை ஒன்றை இன்று கொண்டு வந்திருந்தார்.

இந்தப் பிரேரணைக்கு எதிராக இன்று என்னால் நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு கடுமையான விவாதங்களுக்கு மத்தியில் அந்தப் பிரேரணை முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதற்கு எமக்கு பல கட்சிகளின் ஆதரவு இன்று கிடைக்கப்பெற்றது.

2009 ஆண்டளவில் இதேபோன்ற காரணத்தை காட்டி இலங்கைத் தமிழரசுக் கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற வழக்கு வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து எமது கட்சியின் மறைந்த முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவினால் இந்த விடயம் கையாளப்பட்டு, இதற்கான வழக்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அதனை எதிர்த்து வாதிட்டு வெற்றிகரமாக நீதிமன்றத்தில் அந்த முயற்சியை முறியடித்தார்” என்று இன்று இந்த விவாதத்தின் பின்னர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன,”இன மற்றும் மத அடையாளங்களை கொண்ட அரசியல் கட்சிகளை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவதற்கான நடவடிக்கையை தடை செய்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அதைத் திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளதால், அது வாபஸ் பெறப்பட்டது” என்று கூறினார்.

இந்தப் பிரேரணைக்கு பின்னால் உள்ள தனது ஒரே நோக்கம் நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்வதாகும் என்று ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அத்தகைய பிரேரணை அல்லது சட்டத்தைச் செயற்படுத்தக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *