கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 23….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

மற்றபடி இயற்கை என்னும் பேராற்றல் தான் இறை. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்ற ஐம்பூதங்களை உள்ளடக்கிய பேராற்றலே இறை. இதையே வள்ளுவனும் விசம்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பதரிது என்றும் தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்காப் பெறின் என்றும் சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு என்றும் இயற்கையின் முதன்மையை கூறியிருக்கிறார்.

இயற்கையின் முன் எதுவும் முதன்மையில்லை. இதைத்தான் முதற்குறளிலேயே ஆதி பகவன் (பகலவன்) என்கிறார் வள்ளுவர். பகலவன் திரிபே பகவன். உள்ளம் என்பது உளம் எனத் திரிவடைந்ததைப் போல். எனவே பகலவனையே முதற்றே உலகு என்கிறார்.

மீண்டும் கட்டுரைக்கே வருகிறேன்.

பவளப்பாறையிலிருந்து கப்பல் கரையை அடைய ஆதவனும் அவன் இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். அந்த ஆதவனுக்கு நன்றி சொன்னேன். இன்று நன்றி சொல்ல சரியான காரணம் உண்டு.

இதற்கு முன் கேன்ஸ் வந்தபோது விடுதியில் தங்கி மறுநாள் காலை கேன்ஸ் போக காத்திருந்தோம். ஆனால் அன்றிரவு புயல் வரலாம் என்று அறவிப்பு வர மறுநாள் புயல் வந்தே விட்டது.

இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்வி இறைவனை மனிதன் கண்டு பிடித்த நாளிலிருந்தே தொடர்கதையாக தொடர்ந்து பயணம் செய்கிறது. இருப்பதாக எண்ணி மலயேறி ஏழுமலயானைத் தரிசிக்க பல மணிநேரைம் வரிசையில் காத்திருந்து அருகில் சென்றவுடன் ஒருவர் சருகண்டி என்று இழுத்து தள்ளிவிடுவார்.

அதுவே பணமிருந்தால் பகவான் பாந்நமாய் காட்சியளிப்பார். பணமிருப்பவனுக்கும் பகவானுக்கும் அப்படியொரு பிணைப்பு. பாசப்பிணைப்பு கேள்விப் பட்டிருப்போம் இதுவே பணப்பிணைப்பு. இதையெல்லாம் நாம் சொன்னால் உண்மையைத்தானே சொல்கிறோம் என்று எண்ணமாட்டார் மாடசாமி அண்ணாச்சி. பொசுக்கென்று கோபம் வந்துவிடும் அவருக்கு.

பகவானைக் கூட பணத்தைக் கொடுத்து சரிகட்டி விடலாம். அல்லது முதலமைச்சர், நாட்டின் முதல்வர், அமைச்சர். ஆளுநர் என்ற பதவிகளை வைத்து சரிகட்டி விடலாம். இயற்கை என்னும் பேராற்றலை எந்த கொம்பனாலும் சரிகட்டிவிட முடியாது. அதனாலேயை இயற்கையை கடவுள் என்கிறோம்.

வைரக்கிரீடம் கொடுத்தோ வைரவாள் கொடுத்தோ தோரோட்டம் திருக்கல்யாணம் நடத்தியோ கடவுளை குதூகுலப் படுத்துவதுபோல் இயற்கையை நம் வழிக்கு கொண்டுவரமுடியாது. சுனாமி வருவதையோ சூறாவளி சுழன்றடிப்பதையோ பதவியாலோ பணத்தாலோ கற்பழித்தவனை அரசியல் செல்வாக்கினால் காப்பாற்றி விடுவதைப்போல் தடுத்துவிட முடியாது.

உடனே அண்ணாச்சி எனக்கு அறிவுரை சொல்வார். அப்படியெல்லாம் சொல்லாதே தெய்வகுற்றமாகிவிடும் என்பார். சின்ன பிள்ளையிடம் தப்பு செய்யாதே செய்தால் சாமி கண்ணை குத்திப்புடும் என்று சொல்வதுபோல் சொல்வார். பாவம் அண்ணாச்சி நல்ல மனிதர் அவர் பார்வைக்கு இன்னும் கால்சட்டை கூட அணியாத சின்னபையன்தான் நான்.

அவராவது பரவாயில்லை என் பாலுள்ள அன்பால் சொல்கிறார் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிலர் எதற்கெடுத்தாலும் எல்லோருக்கும் அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற குறளை எல்லாம் படித்திருக்க மாட்டார்களா? கற்றபின் நிற்க என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியாதா என்பதெல்லாம் புரியாத புதிர்தான்.

அடக்கம் என்றால் சிலர் தவறுதலாக பொருள் கொள்கிறார்கள். அடக்கம் என்றால் கைகட்டி வாய்மூடி உண்மைக் கருத்தைக் கூட கூறாமல் அடங்கிப்போவதல்ல. அதிகப்பிரசங்கியாக இல்லாமல் இருப்பதுதான். அதற்கொரு சான்றை வேண்டுமானால் சொல்லலாம்.

நம் வாழ்க்கையில் சிலரைச் சந்தித்திருப்போம். எதற்கெடுத்தாலும் நமக்கு ஒன்றுமே தெரியாததுபோல் சொல்லித் தருவார்கள். தெரியாததைச் சொல்லித்தந்தால் பரவாயில்லை. நமக்குத் தெரிந்ததையே நமக்கு ஒன்றும் தெரியாததைப்போல் சொல்லித் தருவார்கள். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக தம்மைக் காட்டிக் கொள்வதில் அப்படியொரு பெருமை.

ஏதோ ஒரு தடவை இருதடவை என்றால் பரவாயில்லை. நாம் என்ன செய்தாலும் இப்படிச் செய்திருக்கலாம் அப்படிச் செய்திருக்கலாம் என்று நமக்கு ஒன்றும் தெரியாததைப்போல அவர்கள் தம்மைக் காட்டிக் கொள்வார்கள். அதற்கு ஒரு சான்றைக் கூறுகிறேன்.

அதாவது, திருமணமே ஆகாத ஒருவர் திருமணமாகி பேரப்பிள்ளைகளுடன் இருப்பவரிடம் போய் குழந்தை வளர்ப்பைப் பற்றி சொல்லிக் கொடுத்தால் எப்படி இருக்கும்? அவர் கடுப்பாகி விடமாட்டாரா? அப்படித்தான் சிலர் நடந்து கொள்வார்கள். இதைத்தான் அடக்கமின்மை என்பது.

சில நேரங்களில் இயற்கையும் நம்மை கடுப்பாக்கிவிடும். அதுபோல் பவளப்பாறைக்கு செல்ல மிகவும் ஆவலாக பல ஆண்டுகளுக்கு முன் காத்திருந்தது பெரிய ஏமாற்றத்தை தந்தது. அந்த ஏமாற்றத்தை தொடர்ந்து பலமுறை முயன்றும் வாய்ப்பு வந்து என் வாசல்படியைத் தட்டிச் செல்லவில்லை.

ஆனால் இம்முறை எனக்கு கேன்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஒருபுறம் வாய்ப்பு கிடைத்தாலும் மறுபுறம் வயிற்றில் புளியைக் கரைத்தது. கடந்தமுறை நடந்தது போல் இந்தமுறையும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததுபோல் ஆகிவிடக் கூடாதே என்ற கவலைதான். இம்முறை புயலுக்கே என் மேல் பரிதாபம் வந்ததோ என்னவோ கண்ணுக்கெட்டிய தூரம் புயலைக் காணவில்லை.

அன்று வானிலை நன்றாகவே இருந்தது. அதற்காகவே ஆதவனுக்கு நன்றி சொன்னேன்.கப்பல் கரையை அடைந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. மதியம் இலங்கை கோழிக்கறியுடன் சாப்பிட்ட எங்களுக்கு இரவில் சாப்பிட இந்திய உணவகத்தை தேடினோம். “தேடினேன் வந்தது வாசலில் நின்றது வாழவா என்றது” என்பதைப்போல் அவ்வளவு எளிதாக உணவகம் தென்படவில்லை.

கடைசியாக கூகுளிடம் கேட்க அது என்ன ஏடுபி அல்லது சரவணபவனையா காட்டும்.
ஏதோ ஒன்றைக்காட்ட அங்கு சென்றபின்தான் அவர்கள் மெனுவில் இருந்ததைதான் டேக்அவே செய்ய முடிந்தது. மறுநாள் வேறொரு திட்டம் இருந்ததால் அங்கு கிடைத்த நான், ப்ரைடுரைஸ், பட்டர் பன்னீர் இன்னும் சில வாயில் சொல்லமுடியாதவைகள வாங்கிக் கொண்டுவந்து விடுதிக்கு வந்தோம்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *