கதைகள்

உயிர் இருக்கு… கதை… சுருளி காந்திதுரை

பத்து வருசத்துக்கு முன்ன இந்தக் குளத்தில கம்பிக்கட்டு இல்ல; படிக்கட்டுல உக்காந்து நானும் பிரேமாவுக்கு கால்கள தண்ணிக்குள்ள விட்டு விளையாடுவோம். மீன்கள் வந்து கடிக்கும். அது கூச்சமா இருக்கும். நம்மையும் அறியாமல் ஒரு குறுகுறுப்பு மனதுக்குள் எழும்.
வாழ்க்கை இப்போது எவ்வளவு மாறிப்போச்சு; கைமீறிப் பேரிச்சு. நாமதான் சின்னப்பிள்ளையாட்டம் இன்னும் இருக்கம். அதே குளம், அதே கவிதா தான். காதலன் கூட வந்தபோது இந்தத் தெப்பக்குளத்தின் அழகே தனி. வாழ்க்கை இழந்து படிக்க வந்ததும், பிரேமா கூடச் சேர்ந்து விளையாடிய போதும் குளம் ஒன்னுதான். பண்ணா மீன் வாய வாயப் பிளக்கும். இன்னைக்கி வேலை கெடச்சு நாம கை நிறைய சம்பாதிக்கிற நிலையில இருக்கிறோம்.
எவ்வளவு இழந்தோம். வாழ்க்கையில தோல்விக்கிப் பழகிக்கிட்ட மனசு வெற்றின்னு சொன்னதும் மனசு பூரிச்சிப் போகுது.

இது எல்லாம் அந்த சார் தான் காரணம். அவர் மட்டும் அன்னைக்கு என்கூட பேசல.. இன்னக்கி உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். இந்த உலகமே மறந்திருக்கும். இப்ப கவிதா டீச்சரா இருக்கேன்னா… “எங்க சார் தான்” என் வாழ்க்கையை மாற்றிய பிரம்மா.

இன்னைக்கு இந்தத் தெப்பக்குளம் எவ்வளவு அழகாக இருக்கு. அட மனசு நல்லாயிருந்தா எல்லாம் நல்லாத் தெரியும்போல. குளத்தில தனியாளாய்… கால்களைத் தண்ணிக்குள் விட்டு ஆட்டினாள். மீன்களின் அந்த மெல்லிய வாயில் கடிப்பது சுகமாக இருந்தது. ஒரு இடத்தில் கடித்ததும் வலி எடுத்தது. நினைவுகள் வலியில் இருந்து இன்னும் இன்னும் கவிதா விடுபடல…
*
இலையுதிர் காலம், உயிர் மரம் தளிர்க்க மழை வேண்டும். மழையை நோக்கிக் காத்திருக்கிறது மரங்கள். கல்லூரி வளாகம் முழுவதும் மரங்கள் இலைகள் இல்லாமல் இருப்பது குமரிப் பெண்கள் மொட்டை அடித்திருப்பது போல இருந்தது.

சங்கர் சார் ஓய்வறையில் இருந்தார். தொடக்கத்தில் கல்லூரி சேர்ந்த மாணவர்கள் படித்ததைத் தடம்பிடித்து ஆசிரியரின் குணம் அறிந்து நல்ல நட்பு கிடைத்தால் போதும். கல்லூரித் தொடங்கி இரண்டு மாதம் ஓடிவிட்டது. மாடல் டெஸ்ட் நடந்து கொண்டிருந்தது. பதின்ம பருவத்து மாணவர்களுக்கு ஆயிரம் கற்பனைகள், லட்சம் கனவுகள், நகரின் மையப்பகுதியில் இருந்த கல்லூரியில் சங்கர் விரிவுரையாளர் பணியாற்றினர்.

ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதே ஒரு கலை. வகுப்பில் விடைத் தாள்களை மாணவர்களுக்குக் கொடுக்கும்போதுத் திட்டு வாங்கும் மாணவர்கள் அதிகம். பாராட்டுப் பெறும் மாணவர்கள் வெகு குறைவு. எழுத்தாக, கருத்தாக, நடையாக இப்படிப் பல ஆக இருக்கலாம். சிலநேரம் திட்டும்போது எதிரெதிர் பாலினத்தின் முன்புத் திட்டும்போது தன்மானப் பிரச்சினையில் துடிப்பதும் துவள்வதும் யதார்த்தம். மாணவப்பருவம் இளையப் பிள்ளைக.
ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் விடைத்தாளை உற்றுநோக்கிய விதமும் மதிப்பெண் அளிக்கின்ற முறையும் ஆசிரியருக்கு – ஆசிரியர் வேறுபடுவார்கள். எப்படி சிற்பியின் கலை நுணுக்கம்போல சிலரும், கல் கொத்தும் தட்டச்சர் போல சிலர் இருப்பார்கள்.
இப்ப அக்கல்லூரியில் சங்கர் சார் துறைத்தலைவர். நாற்காலியில் ஏதோ சிந்தனையில் இருந்தார். ஆடிப்பட்டம் தேடி விதைக்கின்ற காலம். சூரியன் இன்னும் உச்சிப் பொழுதைத் தொடல. ஒரு பெண்மணி வேகமாக வந்து வணக்கம் வைத்தார். மேசை மீது இருந்தப் பெயர்ப் பலகையைப் பார்த்தார். அவள் முகத்தில் அப்படி ஆச்சரியம், மகிழ்ச்சி.
கையில் சுவீட் பாக்ஸ், மேசை மீது வைத்தாள்.

என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க சார். சங்கரும் நின்னு நிதானிக்க இடம் தரல. காலில் விழுந்து அழுகிறாள். ஆசிர்வாதம் கேட்டாள். அழுகிறாளேன்னு… சங்கருக்கு இதயம் லப்டப் லப்டப்ன்னு அடிப்பது அவரின் காதுகளுக்குக் கேட்டது.

யாரம்மா, என்ன வேணும் ஏன் அழுகிற? என்ன பிரச்சனை. உங்களுக்கு என்னவேணும். யார் நீ? எங்கிருந்து வர்ற? எந்த வருசம் படிக்க? உம்கூட படிச்ச மாணவர்கள் பெயரைச் சொல்லுமா?
இப்படித்தான் அன்னைக்கும் கேட்டீங்க. மொதல்ல என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க சார். இது என்ன பெரிய கொடுமையா இருக்கு…

ஆசிர்வாதம் செய்தபிறகுதான் காலில் இருந்து எழுந்தாள். சுவீட் எடுத்து சாப்பிடுங்க சார். சங்கர் சாரிடம் கொடுத்து மகிழ்ந்தாள். அறையில் இருந்த அனைவரும் சங்கரை பார்க்கிறார்கள். சங்கரைப் போலவே யார் என்று தெரியல. இங்க படிச்சவங்க… அது மட்டும் தெரிகிறது.
சார், அன்னைக்கும் இப்படித்தான் பாத்தீங்ன்னு சிரிப்பும் அழுகையும் கலந்த நிலையில் நின்றாள்.

என்னய தெரியலையா சார்?
எப்படித் தெரியும். வருடத்தில் ஈராயிரம் மாணவர்களைப் பார்க்கிறோம். சில மாணவர்களின் பெயரும் முகமும் பதிந்துபோகும்.

நானும் யோசித்துப் பார்த்தேன். எதுவும் ஞாபகம் வரவில்லை. யார்டா இந்தப் பொண்ணு…
ஐயோ, சார் பத்து வருசத்துக்கு முன்னாடி என் கதையை உங்ககிட்ட சொன்னேன். இப்பயும் ஞாபகம் வரையலா சார். நானே சொல்லிர்றேன். சரியா பதினோரு வருசம் ஆகுது. பரிட்சை எழுதிட்டு வந்து எனக்குப் படிக்கப்பிடிக்கல, நான் டிசிய வாங்கிகிட்டுப் படிப்ப நிப்பாட்டப் போறேன். படிக்கப் பிடிக்கலன்னு சொன்னேன் சார். என் பேர் கவிதான்னு சொல்லவுமே,
அட இப்பத்தான் கவிதாக்கு உயிர் வந்தது.

நல்லாயிருக்கியாமா? வாடா வாடான்னு உக்காருடா எவ்வளவு மாறிப் போயிட்டே, சுத்தமா அடையாளமே தெரியல. நீபாட்டுக்க வந்தே அழுதே, ஆசீர்வாதம் கேட்டே, சுவீட் எடுத்துச் சாப்பிடச் சொன்னா, யாருன்னு நானே ஒரு கனம் ஆடிப் போனேன்…

சார், அண்ணைக்கி போடாப்போய் படி, கல்விதான் கை கொடுக்கும்னு சொல்லிட்டு, ஒரு வார்த்தை சொன்னீங்க. இன்னவரைக்கும் எங்க அப்பா, அம்மாகிட்ட உங்களப் பேசாம இருந்த நாட்கள் மிகக்குறைவு.

இன்னைக்கு நான் உயிரோட இருக்கதும், துணிச்சலா இந்த சமூகத்தை எதிர்த்துப் படிச்சு வந்துருக்கேன்னா… அந்த ஒருநாள் (8.8.2015) நான் மீண்டும் புது மனுசியா பிறக்க உதவுனீங்க. சமூகம் ஓடுனா விரட்டும். எதுத்து நின்னா ஓடிப்போம். சமூகத்தைப் பார்த்துப் பயப்படக் கூடாது. எதுத்துக் கேள்வி கேளு. நம்மலக் கேட்ட எல்லோரும் அவுங்க வேலையப் பாக்கப் போயிருவாங்க. படிக்கிறது ரொம்ப ஈசிடா. அது மாதிரி ஈசியான விஷயம் உலகத்துல வேற எதுவுமில்ல…

நான் அழுதேன், பாடம் மண்டையில ஏறமாட்டேங்குது, பரிட்சை நல்லா எழுதலன்னு சொன்னேன்.

சின்னப் புள்ளயா இருக்கியேன்னு, உன்னால முடியும், உன்னால படிக்க முடியாட்டி யாரால படிக்க முடியும். ரெண்டு வருசம் படிப்ப நிப்பாட்டிட்டேன் சார். வாழ்க்கையில பெரிய இடைவெளி… படிப்புலயும் இடைவெளி… அதுதான் சிரமம் சார்.
அத நினைக்காதே,

சார் காதல், கல்யாணம், சண்டை, போலீஸ் கேஸ்… எல்லாம் முடிஞ்சு பிரிஞ்சு அப்பா வீட்ல இருக்கேன். ஒரே சாதி தான் சார். டைவர்ஸ் அப்ளே பண்ணியிருக்கேன். என் நிலையைச் சொன்னதும் மிக அமைதியாக எங்க அப்பாகூட இவ்வளவு பொறுமையாக் கேட்டதில்ல. சார். நீங்க கேட்டீங்க. கேட்டீங்க.

எல்லாரும் உங்கள கோவக்காரர், சிடுமூஞ்சி, முன்கோபின்னு சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனா பழைச எல்லாத்தையும் மற, படிப்பு மட்டுமே உன்னை மாத்தும் வெறித்தனமாப் படி, எப்ப எல்லாம் மனசு சஞ்சலப்படுதோ. அப்ப இடைவிடாது படி.. புத்தங்கள் மாறவேண்டும். மனசு படிப்பதில இருந்து மாறக் கூடாது. படிச்சுக்கிட்டே இரு. யாரைப் பத்தியும் கவலப்படாதே.. குறிப்பாக உறவுகளின் கேலிப்பேச்சை காதுல வாங்காத.

உன்ன ஏமாத்துனவன் உன்னைப் பார்த்து கைகொட்டிச் சிரிச்ச சாதி சனம் முன்னாடி நீ ஜெயிச்சிட்டேன்னு காட்ட வேண்டாமா? அதுக்காக படி.. இரண்டு வருசம் படிப்ப விட்டதால. பிக்கப் பண்ண முடியுமான்னு கேட்டபோது, கவிதா உன்னால முடியலான்னா யாராலயும் முடியாது. வாழ்க்கைப் போராட்டத்தை மனசுல இருந்து தொடங்கு நீ ஜெயிப்படா? படிப்புல என்ன சந்தேகம், கஷ்டம் வந்தாலும் நான் இருக்கேன்னு சொன்னீங்க சார். எங்க குல தெய்வமா தெரிஞ்சீங்க அன்னைக்கி.

மொதல்ல அழுகாதே கண்ணீரைத் தொடன்னு சொன்னீங்க. இன்னவரைக்கும் உங்க பேச்சு மட்டுமே என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்குது. ஜெயிட்டேன். ஊரே உசந்து பார்க்கு. இன்னொரு மகளான்னு… சார் நீங்க நல்லா இருக்கனும்.

என்னடா அம்மா நம்ம எல்லோருமே நல்லா இருப்போம். சுவீட் பாக்ஸ்ல இருந்து மோதி லட்டைக் கையில் எடுத்தபோது சன்னல் பக்கம் கண்கள் ஓடியது.. சூரியன் உச்சிப் பொழுதை அடைந்து வெயில் உக்கிரமாக இருந்தது. லட்டின் சுவை கூடுதலாகத் தெரிந்தது.

(முற்றும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *