மழை பொழிந்து…. கதை… சுப்ரபாரதிமணியன்

பறவைகளின் இறக்கைகள் குஞ்சுகளுக்குப் பாதுகாப்பானவை என்று சித்தப்பா ஒரு முறை அவளிடம் சொன்னார்.
அப்போது மழை லேசாகத் தூறிக்கொண்டிருந்த நேரம். தாழைக்கோழிப்பறவை ஒன்று தன் குஞ்சுகளுடன் கொஞ்சம் பரவியிருந்த நீர் ஓரத்தில் தரையில் நடந்து சென்று சுவர் அருகில் ஒதுங்கிக்கொண்டது. அது தாழைக்கோழி என்று மெல்ல முணுமுணுத்துச் சொன்னாள் அம்மா.
அந்தப் பெயரை அப்போதுதான் துளசி கேட்டிருந்தாள்.
ஜன்னல் ஆடி அசைந்து மார்பில் அடித்துக் கொண்டது அப்படி அடித்துக் கொள்ளும்படி அதற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால் மழை வரப்போகிறது அந்த மழை அந்த ஜன்னலை இன்னும் கொஞ்சம் அசைத்துப் பார்க்கும். அந்த பயத்தில் தான் அந்த ஜன்னல் அப்படி மார்பில் அடித்துக் கொள்கிறது.
காற்று அதிகமானால் கதவும் அப்படித்தான் அடித்துக் கொள்ளும் அப்படி அடித்துக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக முன்னதாகவே தாழ்ப்பாள் போட்டு விட வேண்டும்.
துளசிக்கு சீக்கிரம் மழை வந்துவிடும் என்று தோன்றியது. ஜன்னல் செய்கிற களேபரங்கள் தவிர கதவும் தன் பாட்டுக்கு எதையோ சொல்லிக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து காசிமேடு வருகிற ஈரக்காற்று மழை பற்றி சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் இன்றைக்கு ஜெமிலைத் தேடி கொஞ்ச தூரம் போக வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.. வேறு வழியில்லை. தினந்தோறும் கொஞ்ச தூரம் போனால் ஏதாவது செய்தி கிடைக்கலாம். ஜெமில் எங்கே போய் விழுந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் விசாரித்து அது எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்
. துளசிக்கு துணையாகத் தான் ஓர் ஆண்டாக ஜெமிலி இருந்தது அது இப்போது காணாமல் போய்விட்டது. காணாமல் போய்விட்டது என்றால் யாரோ கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். ஒன்றரை வயது நாய் ஜெமிலி வீட்டுக்கு யார் வந்தாலும் குரைக்கும் . இரவுகளில் அந்த பக்கம் யாராவது நடமாடிக் கொண்டிருந்தால் குலைக்கும் தனக்கு பாதுகாப்பாக அது இருப்பதாக அவர் சொல்லிக் கொள்வாள் .ஆனால் அதற்கு பாதுகாப்பு இல்லை என்பது போல் ஜெமிலி காணாமல் போய்விட்டது. பக்கத்து வீதிகளில் முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டம் என்று தொலைக்காட்சிகள் காண்பித்தன. ஆளில்லா வீடுகளில் திருடர்கள் புகுந்து கொள்கிறார்கள் என்று செய்தித்தாள்களும் சொல்லின.. இவை எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது தனியாக இருந்த தனக்கும் ஏதாவது கெட்டதாக நடக்கும் என்று அவள் உறுதியாக நம்பினாள். நல்லது நடக்காது. கெட்டதாகத் தான் நடக்கும் என்று அவள் மிகவும் நம்பினாள். ஆனால் அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்றும் நினைத்தாள். இப்போதைக்கு இரவு நேரம் தான் ஆனால் மக்கள் நடமாடக் கூடிய அளவு வெளிச்சம். கொஞ்சம் நடமாடி அவளின் ஜெமிலியை கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தேடினால் ஜெமிலி பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும்.
நேசம் வைத்தால் எதுவும் கைவிட்டுப் போகாது என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ஜெமிலியிடம் நேசம் இருந்தது. நாய் தானே என்பதில் கொஞ்சம் அசூசை இருந்தது.அதுதான் துரத்தி விட்டதா. ராகவனிடம் அன்புன் இருந்தது. அவனும் விலகிப் போய்விட்டான். அவன் நேசிக்க வேறு சிலர் இருந்திருப்பார்கள் என்று நம்பினாள். எல்லாம் நம்பிக்கைதான். அவை பொய்யாகக்கூட இருக்கலாம்
. அம்மா உனக்கு இதுதான் துணையாக இருக்கப் போகிறது என்று சாவதற்கு முன்னால் சொன்னாள் .ஒரு நாய் தனக்கு எப்படி துணையாகும் என்று அவள் கேட்டு வைத்தாள். பல சமயங்கள் அப்படித்தான் துணை அமைந்து விடுகிறது என்று சொன்னாள் அம்மாவுக்கு அப்பா அப்படி ஒரு சரியானத் துணையாக இல்லாமல் போய்விட்டார். அதனால் அம்மா தனியாகத்தான் ஜீவனம் செய்து கொண்டிருந்தாள் அந்த ஜீவனத்தில் அவளையும் தங்கையையும் வளர்த்தாள். ஆனால் பொதுவாகவே அவளை பார்க்கிற பலர் ” அன்லக்கி சிஸ்டர்ஸ் ‘ என்று சொல்வார்கள். காரணம் தங்கை கொஞ்சம் நிறமாக, அழகாக இருப்பாள். துளசி அவ்வளவு அழகானவள் அல்ல. ஆனாலும் எடுப்பான முகம். அவளை திரும்ப பார்த்துச் செல்லச் செய்யும். தங்கைக்கு கொஞ்சம் அவசரம். காதல் செய்கிறேன் என்று வீட்டை விட்டுப் போய்விட்டாள். கல்யாணம் செய்துவிட்டாள். வீட்டை விட்டு போனது அம்மாவுக்கு பலவீனம் ஆகிவிட்டது. அந்த கவலையிலேயே செத்துப் போய்விட்டாள்.

“ உனக்கு ஒரு வீடு இருக்கிறது சொந்த வீடு உன்னை நம்பி ஒருவன் வருவான். இந்த வீட்டுக்காக வேண்டி.. இந்த வீடு.. இப்போது சொத்து மதிப்பு சில லட்சங்கள் ஆகும். அந்த லட்சங்களுக்காக யாராவது உன்னை தேடி வருவார்கள் “ என்று அம்மா சொல்லி இருந்தார்
“ உனக்கு ஒரு வேலை இருக்கிறது. தனியார் வேலை என்றாலும் போதும். அது போதும் நீ பாதுகாப்பாக வாழ்ந்து கொள்ளலாம் அப்படி ஒரு கணவர் வருகிற வரைக்கும் உனக்கு ஜெமிலி பாதுகாப்பிற்கும் என்று வெகு பாதுகாப்பாக இருக்கும் “ என்று அம்மா சொல்லியிருந்தாள். அதை நிஜமாகி போய்விட்டது. உறவினர்கள் வந்து போவார்கள் அம்மாவுக்கு பிறகு என்ன செய்வது என்பதை அவளே முடிவு செய்து கொள்ள சொல்லிவிட்டார்கள். இரவுகளில் குரைத்து தெரு வழிகளில்பிறர் நடமாட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தது.
ஜெமிலின் குரைப்பு இப்போது இரண்டு நாட்களாய் இல்லாமல் போய்விட்டது. யாரிடம் போய் சொல்வது என்று தெரியவில்லை காவல்துறையிடம் பொய் சொன்னால் அவர்கள் சிரிப்பார்களா அல்லது அக்கறையோடு எடுத்துக் கொள்வார்களா .உனக்கு யாரும் துணை இல்லையா என்று கேட்பார்களா? ஆனால் ஜெமிலி இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தாள்.
அவள் தாத்தா வீட்டுக்குச் சமீபத்தில் போயிருந்தபோது அம்மா இருந்த அறையை கூர்ந்து பார்த்தாள். அங்கே ஒரு பழைய கட்டில் இருந்தது. அதில் படுத்து கொண்டு பார்த்தாள். அதில் படுக்கிற அனுபவம் பாதுகாப்பாக இருப்பதாகத் தோன்றியது. தாத்தா இன்னொரு கட்டிலில் கட்டில் கம்பி போல இளைத்துக் கிடந்தார் அவரால் எழுந்து கூட பேச இயலவில்லை.. அவருடைய வயது அப்படி.. அது குறித்து துளசிக்கு எந்த வருத்தமும் இல்லை ஆனால் நமக்கு பாதுகாப்பு அளிக்க ஒரு பழைய கட்டில் இருந்தது என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
செத்துப் போனவர்களை பக்கமாய் இருந்து பார்த்ததில்லை. அவள் அம்மாவை தவிர.. அம்மா சாகுற போது பக்கத்தில் இருந்தாள் அதைத் தவிர வேறு எவரையும் அவள் பக்கம் இருந்து பார்த்ததில்லை.. தாத்தா இறக்கிறபோது அப்படி பக்கத்தில் இருந்து பார்க்கிற வாய்ப்பு கிடைக்காது. ஏனென்றால் வெவ்வேறு ஊர்கள்.. வெவ்வேறு கட்டில்கள்….வெகு தூரம்தான்.
இந்த உலகத்தில் எல்லோரும் கெட்டவர்களாக இருப்பார்களா என்று யோசித்து பார்த்திருக்கிறாள். அப்படி எல்லோரும் கெட்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் நடக்கிறதைப் பார்த்தால் எல்லாம் கெட்டவர்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தது. .ராகவன் அப்படித்தான் கெட்டவனாகிக் கொண்டிருந்தான்.. சீக்கிரம் அப்படி ஒரு முத்திரை அவன் மீது விழும் என்று அவளும் சொல்லிக் கொண்டிருந்தாள். ரொம்பவும் நெருக்கமாக இருந்தவன்தான். இடுப்பு எலும்பு போல் தேவையாக இருந்தவன்.
அவள் மெல்ல வடக்கு தெரு நோக்கி செல்ல ஆரம்பித்தாள். அவளுக்கு கால் வலி தோன்றுவதாகத் தோன்றியது. நின்று கை கால்களை நீட்டி மடக்கிக் கொண்டாள். குனிந்து நிமிர்ந்து உடம்பைத் தளர்த்திக் கொண்டாள்.
தெரு விளக்குகள் சாதாரணமாக மின்னிக் கொண்டிருந்தன இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டு முழுமையாக ஆக்கிரமித்து விடும் .அப்போது இந்த விளக்குகளின் பிரகாசம் சரியாகத் தெரியும் இப்போதைக்கு வீதியில் நடமாடுபவர்களை அடையாளம் காட்டுகிற விளக்காக இருந்தது. நகரின் ஒதுக்குப்புறத்தில் தான் இருந்தது. அவள் வசிக்கிற இடம் அப்படி. அதுவும் அவள் வீடு 40க்கு 20 என்ற இடத்தில் பாதியாக கட்டப்பட்டது. மீதி இருந்த இடத்தில் கொஞ்சம் செடிகளும் புல்லும் புதராக முளைத்து விட்டது. அவற்றை ஒழுங்குபடுத்த அவளுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. பாம்பு இருக்கும். பாம்பு கூட நடமாடும். ஜெமிலி இருந்தால் அது நடமாட்டத்தை அடையாளம் கண்டு ஏதோ ஒரு வகையில் சொல்லிவிடும் .
இப்படி நடந்து நான் தனியாக இருந்து தொலைந்து போவேனா என்ற பயம் மெல்ல கம்பளிப்பூச்சி ஊர்வது போல் வந்தது ஜெமிலி காணாமல் போனது போல் காணாமல் போவேனா.. அவள் அலுவலகத்திற்குப் போகிற போதுகேட்டை சரியாகச் சாத்தி விட்டுப் போவாள். இரவில் தன் அறையில் அதை வைத்துக் கொள்ளத் தோன்றியிருக்கிறது. சில சமயம் படுக்கையில் அதைப் கூடத் தன்னுடன் போட்டுத் தூங்கியுமிருக்கிறாள். வெதுவெதுப்பாகத்தான் இருந்திருக்கிறது. சட்டெனத் தூக்கம் கலைகிற போது அருவருப்பானது போல் அதைக் கட்டிலை விட்டு தள்ளி விட்டிருக்கிறாள். இரவில் அவள் அறையில் நடமாட விடுவதில் சில சமயம் சில சிரமங்களை உணர்ந்திருக்கிறாள். அது சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது, அதை பின்னர் சுத்தம் செய்வது அவளுக்குச் சிரமமாகவேயிருந்திருக்கிறது. அதன் பொருட்டே ஜெமிலியை வீட்டிற்கு வெளியே பாதுகாப்பாக்கியிருந்தாள். பாதுகாப்பு செய்தது பலனில்லாமல் போய் விட்டதை இரு நாள் முன்னர் அறிந்து கொண்டாள்.
.வெளியில் நடமாடுவது கூட கொஞ்சம் அபாயகரமானது என்று அவளுக்கு தோன்றியது. அபாயகரமான அபாயகரமானது என்றால் இருட்டு கூட அபாயம்… இருட்டைப் பார்த்து அவள் பயப்பட ஆரம்பித்திருந்தாள்.
அவள் நடக்க ஆரம்பித்தபோது சிவன் கோவில் தெற்கு தெரு பக்க பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த அந்த மனிதர் அணிந்திருந்த சட்டை அவள் வீட்டிலிருந்த சட்டையைப் போல் இருந்தது அவள் ஏதோ பலவீனமான ஒரு தருணத்தில் இரண்டு மூன்று சட்டைகளை வாங்கி போட்டாள் அதை அவ்வப்போது அணிந்து கொள்வாள் அம்மா அதற்கு எதிராகத்தான் இருந்தாள். இதெல்லாம் எதற்கு என்று எரிச்சலோடு தான் கத்துவாள். ஆனால் பெண்கள் சட்டை என்பது ஆண்கள் சட்டையில் இருந்து மாறுபட்டது என்பது தான் அம்மாக்கு தெரியாமல் இருந்தது. ஏதோ கட்டட வேலைக்கு போகிற பெண்கள் கணவன்மார்களின் பழைய சட்டையை போட்டுக் கொள்வது போல இந்த சட்டைகள் ஆண்கள் சட்டைகள் என்று தான் அம்மா நினைத்து இருந்தாள். அது ஆண்களுக்கான சட்டை இல்லை. பெண்களுக்கான சட்டை. பெண்களுக்கான சட்டை என்பதால் அது எப்படி வித்தியாசமானது என்று அவள் கூட ஒரிரு விஷயங்களை சொல்லி பார்த்தாள். அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை. ஆனாலும் எடுத்து விட்டோம் என்று பயன்படுத்தினாள்.. இரவுகளில் தூங்கப்போகையில் அவற்றை போட்டுக் கொள்வாள் சில சமயம். உடம்பைப்போர்த்திக்கொள்ளும் போர்வை போல் அது பாதுகாப்பாக சில சமயங்களில் இருந்திருக்கிறது
அவளைக் கடந்து போய்க் கொண்டிருந்த அந்த இளைஞன் போட்டிருந்த சட்டை அவள் அணிகிற சட்டை போலிருந்தது அவள் அணிகிற சட்டை எப்படி அந்த இளைஞனுக்கு கிடைத்திருக்கும் அல்லது அதே சட்டை தானா அல்லது அதே நிறத்தில் வேறு சட்டையா.. இது பெண்கள் சட்டையா ஆண்கள் சட்டையா.. அவன் தன்னைக் கடந்து போய்விட்ட பின்னாலும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
துளசி அவள் வேலை செய்யும் பின்னலாடை தொழிற்சாலையில் இப்போதெல்லாம் இந்த வகைச் சட்டைகளைத் தான் அதிகமாகத் தயார் செய்கிறார்கள் அப்படித்தான் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பொதுவான சட்டை என்று வந்துவிட்டதாக தோன்றியது. ஆண்கள் பெண்கள் இருவருக்குமான தனித்தனி உடைகள் என்று இல்லாமல் ஒரே மாதிரியான உடையை போட்டுக் கொள்வது. இப்போது பேசன். என்று அவள் அலுவலகத்தில வந்து போகும் சிலரின் பேச்சுகள் மூலம் அறிந்திருந்தாள்.
அவளின் அலுவலக நிர்வாகத்தில் விளையாட்டு உடைகள் அதிகமாக உற்பத்தியாகின. அதே போல் இப்போது ஆண்கள் பெண்கள் இருவருக்குமான உடையில் வித்தியாசம் இல்லாமல் உடை அணிந்து கொள்கிறார்கள் ஆகவே பொதுவான உடை என்று வந்துவிட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள் அப்படி ஏதாவது இருக்குமா .அவன் பொதுவான சட்டையை விரும்புகிற இளைஞனாக இருப்பானா. அவளுக்குக் குழப்பமாகத்தான் இருந்தது.
ஆண் பெண் பொதுவான உடைகள் வந்து விட்டன. அது போல் பலவிசயங்களில் இருக்கலாம். முதலில் தலையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று ஒரு முறை அவள் நிறுவன மேலாளர் சொன்னார். அதன் பின் அவள் அலுவலகத்தில் இருந்த இளம் பெண்கள் ஜடைகளைத் துறந்து விட்டு முடியைக் குறைத்துக் கொண்டார்கள். அவளும் ஜடையைக் குறைக்க வேண்டியானது. கழுத்தில் புரள்கிற மாதிரி கேசத்தைத் துண்டித்துக் கொண்டாள். .நல்ல வேளை அம்மா இல்லாத காலம். அம்மா இருந்திருந்தாள் அதற்காக வருத்தப்பட்டிருப்பாள். அழுதும் இருப்பாள்.
இரண்டு தினம் முன்னாள் அவள் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. வெளியே அலுவலக நேரத்தில் செல்லும் வாய்ப்பு அபூர்வமாகத்தான் வாய்க்கும். ஒரு சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடைபெற்றது. அதில் சில அரங்குகளில் வெவ்வேறு வகைத் துணிகள் பார்வைக்கு இருந்தன.. பின்னால் பேஷன் பேரேடு என்று ஒன்று இருக்கும் .அதற்கான உடைகள் இரண்டை கொண்டு போய் கொடுக்க சொன்னார்கள். .அந்த உடையை அணிந்து நடமாட ஒரு மாணவர் நகரத்தில் பேஷன் டெக்னாலஜி படிக்கிறவர் நியமிக்கப்பட்டிருந்தார்.,பேஷன் டெக்னாலஜி சார்ந்த கல்லூரி ஒன்றில் படிக்கிற மாணவர்கள் அந்த பேஷன் பேரேடு நடத்தினார்கள். அதி ஒருவருக்கான உடையைத் தர வேண்டியிருந்தது. தர சொல்லி மேலாளர் தகவல் சொல்ல அவள் போக வேண்டியானது.
கருத்தரங்கம் நடந்த குளிரூட்டப்பட்ட பெரிய அரங்கத்தில் அந்த நேரக் குளிரில் அவள் உடம்பை நடுங்குவதாக உணர்ந்தாள். ஆனால் கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று உட்கார்ந்திருந்தாள்.
கருத்தரங்க உரைகளெல்லாம் முடிந்த பின்னால்தான் பேசன் பேரட் இருக்கும் இரண்டு மூன்று அமர்வுகள். எல்லாவற்றிலும் மனிதன் மூலமாக தயாரிக்கப்படும் பைபர்களும் அவை சார்ந்த துணிகள் சார்ந்த உற்பத்தியும் என்பது பற்றியப் பேச்சிருந்தது. பருத்தி என்பது பேச்சு வழக்கில் கூட இல்லாமல் போய்விட்டது. இனி எல்லாமே பைபர் தான். செயற்கை இழை நூல்களில் இருந்து தயாரிக்கப்படும் துணிகள் தான். அந்த துணிகள் இனி வரும் காலங்களில் ஆட்சி பண்ணும். அவை என்ன வகையானவை உள்ளன அது எப்படி எல்லாம் தயாரிக்கப்படுகின்றன என்பதை பற்றி எல்லாம் சொன்னார்கள், எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தன புரிந்து கொள்கிற ஆங்கிலம் தான், ஆனால் பேசியவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள், உள்ளூர் காரர்கள் ஒரு ஐந்து சதவீதம் கூட இல்லை மொத்தமே நூறு பேர் இருந்திருப்பார்கள் அந்த பெரிய அரங்கில், அதில் ஒரு ஐந்து பேர் தான் தமிழ் முகங்களாக இருந்தார்கள். எண்ணியும் பார்த்து விட்டாள். மற்றபடி எல்லாரும் வடநாட்டு முகங்கள்.
. உள்ளூரில் வடநாட்டு தொழிலாளர்கள் அதிகமாகி விட்டார்கள் எங்கு போனாலும் அவர்களை தென்படுகிறார்கள். சுலபமான கூலிக்கு வந்து விடுகிறார்கள் என்பதால் அவர்களை அதிகம் காண முடிந்தது பேருந்தில் போனாலும் மார்க்கெட்டுக்கு போனாலும் அப்படித்தான் நகரமே வடநாட்டுக்காரர்கள் ஆக்கிரமிப்பில் வந்து விட்டதாக பல விஷயங்கள் சொல்லிக் கொண்டிருந்தன.
ஒவ்வொரு மளிகைக் கடையிலும் கடைக்கார்ரின் ஒவ்வொரு வகையான இந்தி உச்சரிப்பு இருந்தது.. வெவ்வேறு வகையான உச்சரிப்பில் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் பேசிக்கொண்டார்கள் வியாபாரம் செய்து கொண்டார்கள். எல்லோரும் இந்தியில் தான் பேசினார்கள். இந்த கருத்தரங்கில் எல்லோரும் அவர்கள்தான் . இந்திக்கார முகங்கள்தான் பேசின. ஆனால் விஷயம் பொதுவானது தான் வடநாட்டுக்காரர்களுக்கான விஷயம் அல்ல. பொதுவான வியாபாரம் ஒரு லட்சம் கோடி அந்நிய செலவாணி என்பதுதான் அதனுடைய அதிகபட்சமான எல்லையாக இருந்தது
அவள் கையில் கொண்டு வந்திருந்த உடைகளை வாங்கிக் கொண்ட பெண்மணி கூட வடநாட்டுக்காரியாகத் தான் இருந்தார்.
. முன்பு அவரைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. அவளுக்குத் தரப்பட்ட கைபேசி எண் எல்லைக்கு அப்பால் இருப்பதாகச் சொன்னது. மேலாளருக்கு கைபேசி அழைப்பு விடுத்த போது அங்குதான் இருப்பார். அவசரப்பட வேண்டாம் என்றாள். கலவரமாகிவிட்டது. திரும்பத் திருமப் அழைத்துக் கொண்டிருந்தாள்.
மேடையில் பேசிக்கொண்டிருந்தவர் விளையாட்டு ஆடை உற்பத்தி பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். திரையில் விளையாட்டு ஆடைகளைப் பல விதங்களில் அணிந்து பலர் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்கள்.அது சென்னைக்கடற்கரை அல்ல . வடநாட்டுக்கடற்கரை.
இன்று உடுத்தியிருக்கும் தன் ஆடை எந்த வகையினது என்று யோசித்துப் பார்த்தாள். நிச்சயம் பருத்தியாக இருக்க முடியாது. பருத்தி இந்தப் பகுதியில் விளைந்த காலம் போய்விட்டது. நெசவில் கூட செயற்கை இழைகள் வந்து விட்டதாகச் சொன்னார்கள். அவை பம்பர், கோரா என்றார்கள். கோரா சேலை ஒன்றை சமீபத்தில் அவள் வாங்கினாள். அதனால் பம்பர், கோரா பெயர்கள் மனதில் இருந்தது. அவளிடமிருந்த அந்த சேலை விசைத்தறி நெசவில் மிளிர்ந்தது. விலை குறைவாகவும் இருந்தது.

சம்பந்தப்பட்டவரைக் காண முடியாமல் போனால் என்னவாகும். பேசன் பேரேடு நின்று விடுமா. அவளை எப்படி தேடுவார்கள். மேலாளரிடம் தகவல் போய் தகராறாக அமைந்து விடுமா.அந்தக் குளிரூட்டப்பட்ட அரங்கிலும் சட்டென முகம் வியர்க்க ஆரம்பித்தது . பதட்டம் தொடர்ந்தது, மேடைப்பக்கம் இருந்து வந்த ஓர் இளம் பெண் கைபேசியில் எண்களைத் தட்டியபடி வந்தாள். அது தன் கைபேசியை அடைந்தது ஆறுதலாக இருந்தது.
அவள் பெயரை சரியாக கூட உச்சரிக்க தொடர்ச்சியாக முடியவில்லை. ஆனால் அவளை வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு துணிப்பையை வாங்கிச்சென்று விட்டாள். அவளுக்கு பின்னால் சென்ற சில கல்லூரி மாணவர் மாணவிகள் அந்த பேசன் பேரடில் கலந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும் எல்லோரும் விதவிதமான தலைக்கேச அலங்காரங்களுடன் வினோதமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்.. உடைகளில் கூட அந்த வினோதம் இருந்தது. இனிவரும் பேசன் பேரேடில் கூட அந்த வினோதம் இருக்கும்.
அதை பார்ப்பதற்காக அவள் உட்கார்ந்து இருந்தாள். கொஞ்ச நேரத்தில் குளிர் அதிகமாகவே வெளியே வந்தாள். வெளி வெயிலை உள்வாங்கி வெப்பத்தை துப்பிக் கொண்டிருந்தது பொது இடம் ஆசுவாசப்படுத்த என்றால் அது உள் அரங்கம் தான் அப்படித்தான் அந்த அரங்கின் முகப்பில் கூட கொஞ்சம் நேரம் நின்று கொண்டிருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
பன்னாட்டுக்கண்காட்சி நடக்கும் இடத்துக்குள் செல்ல அவள் விரும்பவில்லை. போனால் அடையாள அட்டை கேட்பார்கள் . விசிட்டிங் கார்டு கேட்பார்கள். ஏதாவது படிவம் கொடுத்து பூர்த்தி செய்யச் சொல்வார்கள். கழுத்தில் மாட்டிக்கொள்ள அட்டை தருவார்கள். உள்ளே போய் விட்டு வெளியேறும் போது அதை ஏதாவது பெட்டிக்குள் போடச் சொல்வார்கள். அந்த வகையான ஏதோ பெட்டி அவள் கண்களில் தென்பட்டது.
இன்னொரு மூலையில் சில பைபர் சிலைகள் தென்பட்டன. ஒன்று நிர்வாணமாக இருந்தது. அது ஆணா., பெண்ணா.. மர்ம உறுப்பை ஏனோ அவள் கண்கள் தேடின. ஆனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
உடைகள் ஆணிற்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியாகிவிட்டது தலைக்கேசத்தில் கூட. இந்த நிர்வாண சிலைகளும் கூட. உலகமே பொதுவானதுதான் என்று சொல்லிக் கொண்டாள்.
சிலைகளின் பார்வையிலிருந்து தப்புவதற்காக நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டில் இருக்கிற நேரம் கொஞ்சம் அதிகரிக்கும் ஜெமிலியைத் தேடி அந்த இரவில் இரண்டு மூன்று வீதிகளில் திரிந்தாள். இன்றைக்கு இது போதும்.
வீதி விளக்குகள் சோம்பலாக அழுது கொண்டிருந்தன. மனிதர்கள் அவசரமான நடவடிக்கைகளில் இருந்தார்கள். அவள் தனியாக செல்வதை பார்த்த சில ஆச்சரியத்துடன் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படி அவசரமாக ஓடிக்கொண்டிருப்பவர்களின் சட்டை பிடித்துக் கொண்டு என் ஜெமிலி எங்கே என்று தெரியுமா என்று கேட்கவா முடியும் இரண்டு மூன்று வீதிகள் சென்றபோது அந்த வீதியில் சமீபத்தில் சாலை ஒழுங்கமைக்கப்பட்டு சரியாக நடந்து செல்வதற்கான வீதிகள் என்று கண்டு கொண்டாள். கொஞ்சம் இப்படி நடக்கலாம் தான் ஆனால் யாராவது பின் தொடர்ந்து வந்து ஏதாவது கேள்வி கேட்கலாம். அவள் ஜெமிலி பற்றி கேட்க கேள்வி இருந்தது ஜெமிலி எங்கே பிறரிடம் கேட்க கேள்வி இருந்தது. அதை மற்றவர்களிடம் கேட்க முடியுமா என்று தெரியவில்லை.
இப்போது தூறல் மெல்ல பரவ ஆரம்பித்தது. இந்த தூறலை தவிர்ப்பதற்காகவே வீட்டிற்கு போய் சேர வேண்டும் என்று நடையை விரைசலாக்கினாள் .
வீட்டுக்கு வந்த போது முன்பக்க ஜன்னல் இன்னும் தாறுமாறாக ஆடி மார்பில் அடித்து கொண்டது.அது போல் மார்பில் அடித்துக்கொண்டு அழுது சில சமயம் பாரம் குறைக்கலாம் என்று தோன்றும் அவளுக்கு. அதை சரியாக மூடிவிட்டால் போதும் இப்போதைக்கு பயம் சென்று விடும். அவள் கதவை திறக்க திறக்க சட்டெனக் கொட்டிய மழையில் அவள் நனைந்து விட்டாள் . அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அந்த மழைனோடு கரைந்து போகும் என்பது அவளின் நம்பிக்கையாக இருந்தது.
நேற்று பேசன் பேரேடுக்காக ஆடைகளைக் கொண்டு போய் கொடுக்கப் போன போது பதட்டத்துடன் இருந்தது ஞாபகம் வந்தது. அது போல் இப்போதும் பதட்டம் வந்தது. இப்படி ஏதாவது விசயம் பதட்டத்திற்கென்று வந்து விடுகிறது அவளுக்கு.தினந்தோறும் ஏதாவது பதட்டம். இப்போதைக்கு ஜெமிலி குறித்த பதட்டம்.
அந்த இரவு பாதுகாப்பாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றவில்லை ஆனால் ஜெமிலி இருந்தால் அது தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று மட்டும் அவளுக்கு அப்போதைக்குத் தோன்றியது.
![]()