கதைகள்

அத்தை வந்தாள்… கதை… மா.சங்கீதா

அத்தையின் இறந்த காரியத்தில் நின்று கொண்டிருக்கிறேன். சுற்றிலும் உறவினர்கள். பூமாலைகளின் நடுவில் அத்தை படுத்துக் கொண்டிருக்கிறாள். அனைவர் பேச்சிலும் என்றுமில்லா பேச்சாக என் அத்தை நிறைந்து இருக்கிறாள்.

அத்தையின் இறந்த செய்தி கேட்டதுமே என் மனம் என் தந்தையின் நினைவாகவே இருந்தது. என் ஆயா தாத்தாவிற்கு ஒரே பிள்ளையாகவும், இரண்டு அக்காக்களுக்கு ஒரே தம்பியாகவும் பிறந்த அவர், இரண்டு அக்காக்களின் மகனாகவே வளர்க்கப்பட்ட அவர், அதிலும் பெரிய அத்தையின் உலகமாகவே இருந்தவர் என்றுகூட என் அப்பாவை சொல்லலாம். அதனால் அப்பா எப்படி இந்த இழப்பை ஏற்றுக் கொள்வார் என்ற புரியாத புதிர்களும் வினாக்களும் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.. பெரிய அத்தையை விட பத்து வயது சிறியவர் என் அப்பா.அத்தைக்கு திருச்சிக்கு அருகிலிருந்த கிராமத்தில் கல்யாணம் செய்து கொடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே கணவரை இழந்த கைம்பெண்ணாக கையில் ஆறுமாத பெண்குழந்தையுடன் வந்து நின்றாள் அத்தை.

வீட்டிற்கு வந்தவுடன் கைக்குழந்தையை ஆயா தாத்தாவிடம் கொடுத்துவிட்டு குடும்பத்திற்காக மீண்டும் உழைக்க ஆரம்பித்தாள் அத்தை.அந்த வயதில் என் தந்தைக்கு ஒரு அன்னையைப் போல் இரண்டு அத்தைகளும் அதிக பாசமாய் கவனித்து கண்ணும் கருத்துமாய் வளர்த்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

அதன் பிறகு அத்தை மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டு பின்னாளில் எங்களது ஊருக்கு மீண்டும் வந்ததாகவும் தாத்தா, அத்தைக்கு எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு குடிசை வீட்டில் குடி அமர்த்தினார் என்றும் அப்பா கூறியது ஞாபகம். பிற்பாடு ஊருக்கு பக்கத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அத்தை வீடு இருந்தது.
நாங்கள் சிறுபிள்ளைகளாக இருக்கும்போதிலிருந்தே விபரம் தெரிந்த வயது வரை தினமும் அதிகாலையில் அப்பா உள்ளூரில் உள்ள பெரிய அத்தை வீட்டிற்குச் சென்று அத்தையை பார்த்து பேசி விட்டு அத்தை கையில் ஒரு டீயோ காப்பியோ குடித்துவிட்டு வருவார். சின்ன அத்தையை பக்கத்தில் ஒரு பத்து கிலோமீட்டர் தொலைவில் கல்யாணம் செய்து கொடுத்து இருந்தாலும், பெரியத்தை மட்டும் ஆயா தாத்தா அப்பாவோ கூட இருப்பது சின்ன அத்தைக்கு மனதில் வருத்தம். நாம் அவ்வாறு பக்கத்தில் இருக்க முடியவில்லையே என்று..ஆனாலும் வாரம் ஒரு முறையாவது சின்னத்தை அப்பாவை பார்க்க வந்து விடுவாள் அல்லது அப்பா சென்று சின்ன அத்தையை பார்த்து விட்டு வருவார்.

தினமும் பெரியத்தையை அதிகாலை பார்த்து பேசி விட்டு அதன் பிறகு தான் அப்பா வெளியில் மற்ற அலுவல்களுக்குச் செல்வார்.ஒரு நாளும் அத்தையை அப்பா பார்க்க மறந்ததில்லை. அத்தையும் தினமும் வயல் வேலை, கொள்ளை வேலை என கூலி வேலைகளுக்குச் சென்று விட்டு சாயந்திரம் அப்பாவை வந்து பார்த்துவிட்டு தான் செல்வாள். நாங்கள் பெரிய பிள்ளைகளாக வளர்ந்த பிறகும் அத்தை மீது அதிக பாசம் கொள்ள இதுவும் ஒரு காரணம்.
அப்பா எதையும் சரியாகத்தான் செய்வார். அதனால் அப்பா அத்தை மீது கொண்டிருந்த அளவற்ற பாசம் நாங்களும் அத்தையின் மேல் அதிகம் பாசம் கொள்ள காரணமாக இருந்தது..
இதோ அத்தை பூமாலைகளின் நடுவில் படுத்து கொண்டிருக்கிறாள்…

என் அத்தையை நினைவில் கொள்ள எத்தனையோ நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்…

எனது சிறு வயதில் ஒரு மழைக்கால சூறைக்காற்றில் எங்களது வீட்டில் இருந்து அத்தையின் வீட்டிற்கு ஓடிய போது அத்தை வீட்டின் கூரையை சூறைக்காற்று பந்தாடி இழுத்தடித்து மரக்கிளையில் மாட்டி விட்டது.. கேணி, குளங்களில் உள்ள தண்ணீர் கூட அந்த சூறைக்காற்றுக்கு ஆட்டம் கண்டது போல் கலங்கி போயும் பயங்கரமாகவும் கிராமத்தையே உலுக்குவதாக பேய் காற்று அடித்துக் கொண்டிருந்தது…

என் அத்தையின் வீட்டிற்கு ஆசையாக ஓடி வந்த என்னை, என் அத்தை, அத்தையின் பிள்ளைகளை கூட மறந்து என் தலையில் கோணிச் சாக்கைப் போட்டு பத்திரமாக‌க் கூட்டிச் சென்றது நினைவுக்கு வருகிறது. மேலும் அந்த மழையில் கருவேல முள் என் காலை பதம் பார்த்தது. என்னை விட அதிகமாக துடி துடித்த என் அத்தை சுடு சாம்பல், உப்புக்கள் ஒத்தடம் கொடுத்து துணியால் கட்டி விட்டு என்னை பத்திரமாக பார்த்துக் கொண்ட நினைவு இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல் இருக்கிறது..

என் அத்தை அப்பா மேல் உயிராய் இருப்பாள். விவரம் தெரியாத வயது எங்களுக்கு! என் அத்தை பக்கத்து வயல் கொள்ளைகளில் கூலி வேலை பார்த்து வருவாள். அழுக்கு சேலையும், பின்னலிடாத அள்ளி முடிந்த தேங்காய் எண்ணெய் காணாத தலையும், வெளுத்துப் போன, கூலி வேலை செய்து உப்பு படிந்த ரவிக்கையும், சோகம் தாங்கிய முகமும் அத்தையின் அடையாளங்கள்..

தினமும் அத்தை தலையில் சுமந்து கொண்டுவரும் தட்டுக்கூடையில் கடலையோ,சோளமோ, மாங்காயோ, சீனிக்கரும்போ எங்கள் வீடு தாண்டித்தான் செல்லும். விதை நெல்லில் கிடைக்கும் அவலரிசி சாப்பிட எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

விதை நெல்லை மூன்று நான்கு நாட்கள் குளம் பாறை தண்ணீரில் ஊறவைத்து பின் உழுத வயலில் விதைப்பார்கள். பொதுவாக இந்த விதைப்புகள் எல்லாம் மழைக்கால தூறலில் மலர்ந்ததாய் பசுமை நினைவு எனக்கு! விதைப்பு முடிந்தவுடன் அந்த நெல்லை மூன்று நான்கு கைப்பிடி அளவுக்கு அங்கு நிற்கும் மக்களுக்கு பங்கு போட்டு அள்ளிக் கொடுப்பார்கள். கடவுளை நினைத்து கொடுக்கும்போது நெல்லின் அமோக விளைச்சலுக்கு காரணமாக இருக்கும் என வழி வழி வரும் வழக்கம் அது. விதை நெல்லை உரலில் போட்டு இடித்து அரிசி எடுத்து அதில் சுடு தண்ணீர் வெல்லம் போட்டு உருண்டையாக சாப்பிட எச்சில் ஊறும். அந்த விதை நெல்லை அத்தை தலையில் சும்மாடு வைக்கும் துண்டுகளிலோ, பழைய சாக்கிலோ, தட்டுக் கூடையிலோ அடிக்கடி எங்களுக்கு கொண்டு வருவாள்.

என் அத்தை கொண்டு வரும் அத்தனையும் என் அப்பாவுக்காக மட்டும்தான்! நாங்கள் பிறந்த பிறகு அவை எங்களுக்கும் அதிகம் கிடைத்தது.நாங்கள் பள்ளி முடிந்து வீடு வந்ததும் அத்தை கொண்டு வந்த தீனி ஏதாவது இருக்கும். இந்த உலகில் எங்களுக்கு ருசியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவள் என் அத்தையாகவே என்றும் இருந்தாள்.

சனி ஞாயிறுகளில் அத்தை வீட்டில் ரேஷன் அரிசி இட்லி சட்னி மணக்கும். எங்கள் அம்மாவின் கைப் பக்குவம் அருமையாக இருந்தாலும் அத்தை வீட்டு சாப்பாடு சுவை சற்று மிகுதி தான். எங்கள் வீட்டில் அத்தை வீட்டு இட்லியும் சட்னியும் மணக்கும். அத்தை வீட்டில் எங்கள் வீட்டு சாப்பாடு வயிறை நிரப்பும். வருடந்தோறும் அத்தை கணவர் மாமா பழனி முருகன் கோவிலுக்கு மாலை போட்டு பழனிக்கு நடந்து செல்வார்.அந்த நாட்களில் தினமும் அத்தை வீட்டின் இட்லி தோசை என்று விரத சாப்பாடு எங்கள் வீட்டிற்கும் தினமும் கிடைக்கும். இவ்வாறாக பாசமும் உணவும் கலந்து பரிமாறப்பட்ட அந்நாட்கள் என் கண்ணில் இப்பொழுதும் நிழலாடுகிறது!
இதோ, அத்தை வாசலில் மாலைகளுக்கு நடுவில் படுத்துக் கொண்டு இருக்கிறாள்!

அப்பா அத்தையின் பாச நினைவுகள் அனைத்தையும் ஒரே நாளில் நினைத்துப் பார்க்க முடியாது என்பதால் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்கிறார் போல. தெரியவில்லை, அத்தையின் உயிர் கலந்த அன்பிற்கு அப்பா கதறி அழ வேண்டாமா? அனைத்தையும் தாங்கிக் கொண்டு சுமை தாங்கியாய் நிற்கிறாரோ?

என் அத்தை எவ்வளவு அழகானவள்.. மிக மிக சாதாரண உடைகளிலேயே பார்த்து பழக்கப்பட்ட அத்தை எப்பொழுதாவது விசேஷ நாட்களில் மட்டும் மஞ்சள் குங்குமத்துடன், தலையில் சிறிதேயான செவ்வந்தியோ மல்லியோ சூடி இருப்பாள். அப்பொழுது மட்டும் அசாதாரண அழகாகத் தெரிவாள் அத்தை.

ஒவ்வொரு தீபாவளிக்கும் அத்தை இருவருக்கும் அப்பா சேலை வாங்கி கொடுப்பார். எங்களிடம் அப்பா அந்த ஒரே வடிவம் உள்ள, வெவ்வேறான நிறங்களை கொண்ட சேலைகளை காட்டி,”இது பெரிய அத்தைக்கு,இது சின்ன அத்தைக்கு” என்பார். நாங்களும் ஆர்வமாக வாங்கிப் பார்ப்போம். சென்ற வருடம் வரைக்கும் அத்தைக்கு சேலை வாங்கி கொடுத்தார் அப்பா. இந்த வருடம் அப்பாவுக்கு செலவு மிச்சம். பெரிய அத்தைக்கு சேலை வாங்கி கொடுக்கும் தேவை இருக்காது அப்பாவுக்கு!

நான் மூத்த பிள்ளை ஆதலால் அத்தைகள் இருவருக்கும் என் மீது பாசம் அதிகம்.என் அத்தை என்னை “ஆயா, செல்வி” என்று அழைப்பாள். என் முகத்தை உருவி முத்தம் கொடுப்பாள்.என் தம்பிகள் தங்கையிடம் அன்பை பொழிவாள். எங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் நிறைய சொல்வாள். ஆனால், நான் அறிந்து என் அத்தைகள் இருவரும் அவர்கள் பிள்ளைகளை விட எங்கள் நால்வரிடம்தான் அதிக பாசமாய் இருப்பதை பார்த்திருக்கிறேன்.
ஒருமுறை சின்ன அத்தை சொல்லி அழுதாள் , ஊர்ப் பொதுமக்கள் பார்க்கும் பஞ்சாயத்து தொலைக்காட்சியில் ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’,சிவாஜி சாவித்திரி பாடல் பார்க்கும் போதெல்லாம் அப்பாவை நினைத்து கண்ணீர் விடுவாளாம்.. ஊர் மக்கள் ‘நல்ல அக்கா தம்பி’ என்று சொல்லி கிண்டல் பண்ணுவார்களாம்..

எங்க சின்ன அத்தை எப்பொழுதும் அப்பாவை பார்த்ததும், ‘எங்க கடவுள் வந்துருச்சு, எங்க வீட்டு சாமி வந்துருச்சு அப்படித்தான் மற்றவரிடம் சொல்லுவாள். ‘வாங்கப்பா, சொல்லுங்கப்பா, போங்கப்பா’ என்று அப்பாவை சின்ன அத்தை மரியாதையோடு பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். அப்பா பெயர் ரங்கநாத கடவுளின் பெயர் என்பதால் இரண்டு அத்தைகளுமே அப்பாவின் பெயரை சொல்லி அழைக்க மாட்டார்கள். சாமி, கடவுள் அப்படித்தான் சொல்வார்கள்.
ஒருமுறை அப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பேருந்தில் இருந்து சின்ன அத்தை விறகு கட்டை சுமந்து செல்வதை பார்த்திருக்கிறார். அந்த விறகு கட்டையை பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்க்கு எடுத்துச் சென்று விற்று காசு வாங்கி வந்து மறுநாள் கறி வாங்கி அப்பாவிற்கு சமைத்து கொடுப்பதற்காக பச்சையாக வெட்டி விறகுக் கட்டை சுமந்து சென்று விற்று வருவாள் என்று சொல்லி அப்பா அழுதது மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தியது. அதிலும் அப்பா, “அந்த வயதில் எனக்கு அத்தையின் பாசம் புரியவில்லை, ஆனால் எனக்கு கஷ்டம் தெரிய கூடாது என்று என் அக்காக்கள் என்னை வளர்த்தது இப்பொழுதுதான் புரிகிறது” என்று அன்றொரு நாள் அப்பா சொல்லி கண் கலங்கியதை நினைத்துப் பார்த்தேன்.

இதோ அத்தை பூமாலைகளுக்கு நடுவில் படுத்து இருக்கிறாள்.
என் சின்ன அத்தை கத்தி அழுது கொண்டே தட்டு தடுமாறி வருகிறாள்.”அக்கா, இப்ப என்னக்கா நான் சொல்லிட்டேன், எப்பவும் நீ இப்படித்தான், எல்லாத்துக்கும் கோவிச்சுக்குவே, நான் அடுத்த வர பஸ்சுக்கு போயிடுறேன், தெரியாம வந்துட்டேன்”…என்று பெரிய அத்தையிடம் அடிக்கடி கோபித்துக் கொள்வாள் சின்ன அத்தை. பெரியத்தையும் பதிலுக்கு சின்னத்தையிடம் கோபமாக பேசினாலும் கடைசியில் சின்ன அத்தையை சமாதானப்படுத்துவாள். ‘ஏன் கிளம்புறே’ன்னு சொல்லி சோளம், கம்பு, கடலை, அரிசி எல்லாம் பாசத்துடன் கொடுத்துவிடுவாள் பெரிய அத்தை.அடிக்கடி நடக்கும் பாச சண்டை அது!

பிறகு சின்ன அத்தை எப்படி அத்தை இறந்ததை ஏற்றுக்கொள்வாள்.. திட்டவும் அணைக்கவும் அம்மாவாய் இருந்த பெரிய அத்தை இல்லாததை ஏற்க முடியாது தானே!

சின்ன அத்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நிற்க கூட முடியாத நிலையில் கேவி கேவி சிறு குழந்தை போல் சின்ன அத்தை அழுதாள்.என் அப்பாவை பார்த்து அழுதாள்.எதற்கும் கலங்காமல் நின்றுகொண்டு இருந்த என் கல்நெஞ்சக்கார அப்பா என் சின்னத்தையைப் பார்த்தவுடன் மட்டும் அழுதார். அது அம்மூவருக்கு மட்டுமே உரித்தான பாசம்! மற்றவர் புரிந்து கொள்ள முடியாதது.. அந்த அழுகையில் ஆயா தாத்தாவை நினைத்திருக்கலாம், அவர்கள் மூவரும் சிறு வயது முதல் வாழ்ந்த இன்ப துன்பங்களை கண்டிருக்கலாம், இதுவரை மூவராக இருந்தவர் இருவராகிப் போனோமே என்றும் இருக்கலாம்… அவர்களது அழுகையின் காரணங்களை அங்கிருந்த எவராலும் உணரக்கூட முடியாது! மழை நீர் மண்ணுடன் கலந்த பிரிக்க முடியாத பாசம் அது!!

அன்று ஒருநாள் அடை மழை பெய்து கொண்டிருந்த மதியவேளை.. ஊரெல்லாம் குளிர், வீட்டுக்குள்ளும் குளிர், மழையில் ஊரே நடுங்கி கொண்டிருந்தது. அந்தக் குளிரில் மரங்கள் எல்லாம் இலைகளை இரும்பாக்கிக் கொண்டன. அந்த மழையில் தொப்பு தொப்பென்று நனைந்து ஓடி வந்த பெரிய அத்தை,நெளுஞ்சு போன அலுமினிய சட்டி ஒன்றில் கெண்டை,கெளுத்தி, அயிரை மீன் என்று நிறைத்துக் கொண்டு வந்தாள் அத்தை.அப்பாவுக்கு ஆச்சரியம், “என்னக்கா,இப்டி மழையில நனைஞ்சு வந்திருக்க, எங்க போய் மீன் புடிச்சிட்டு வந்த”, அப்டின்னார். “கும்முக்கொளத்துல கலிங்கி ஒடஞ்சு கடல் மாதிரி தண்ணி போகுதுப்பா, ஊர்சனமே அங்க தான் கிடக்கு, கூடை எதுவும் கிடைக்கல,தலையில் உள்ள சும்மாடு துணியில் விரிச்சு மீன் புடிச்சு கொண்டு வந்தேன்பா” என்று சொல்லி முக்கால்வாசி மீன்களை எங்களிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் மட்டும் அவள் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு சென்றாள் தங்க தம்பியை காப்பாற்ற பூமிக்கு வந்த அந்த சாமர்த்தியக்கார அத்தை!! அந்த மழையில் சாப்பிட்ட மீன் குழம்பின் வாசனை இப்பொழுதும் எனக்கு மணக்கிறது.அந்த மழை நேர குழம்பின் சூடு இன்று என் அப்பா கண்ணில் கண்ணீர்த் துளிகளாய் தெறித்து ஓடுகிறது.

என் அத்தை சற்று கோபக்காரி தான்.. வாழ்க்கையில் அதிகம் சிரித்து பார்த்திராத அத்தைக்கு கோபம் மட்டும் அதிகமாக வரும். ஊரில் எவரேனும் எங்களை எதுவும் திட்டவோ சண்டையோ போட்டால் முதல் ஆளாய் என் அத்தை அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள். என் தம்பியை விளையாட்டில் தெரியாமல் தள்ளிவிட்ட சிறுவனை மிரட்டும் தொனியில் “என் தம்பி புள்ள மேலேயா கையவச்ச, கைய ஒடிச்சுருவேன்,புள்ளைய வளத்துருக்கா பாரு, என் தம்பிய மாதிரி இந்த உலகத்துல யாரும் புள்ளைங்களை வளர்க்க முடியுமா? இந்த பள்ளிக்கூடத்துல முதல் மார்க் வாங்குறது எந்தம்பி புள்ளைங்கதான், கொணத்திலேயும் எப்படி நேர்மையையும் ஞாயத்தையும் சொல்லி என் தம்பி வளக்குது பாருன்னு சொல்லி சண்டைக்கு போனாள்.. அம்மா எவ்வளவோ சமாதானம் சொன்னாலும் அத்தை விட மாட்டாள்.அந்த சிறுவன், கோழிக்குஞ்சு பருந்துக்கு பயந்து தாய்ப் பறவையின் சிறகில் ஒடுங்கி நிற்பது போல் பயந்து முழித்து நின்றான். அவனது அம்மாவும் அப்படித்தான் பயந்து போய் நின்றாள், அத்தையின் பாச போராட்டத்திற்கு முன்பு!!

இவள் ‘இவளது பிள்ளைகளை கூட இப்படி பாதுகாக்க மாட்டாள்’ என்பார்கள் ஊர் மக்கள்.
அத்தை வீட்டில் அத்தை சொல்வதைத் தான் மாமா கேட்பார். என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போதெல்லாம் பார்த்தால் எங்கள் வீட்டிற்கும் அத்தை வீட்டிற்கும் ரோடு போடாத குறைதான். பத்து தடவைகளுக்கு மேலும் வருவார் போவார், சலிப்பில்லாமல் அத்தை கொடுத்து விடும் உணவுப் பொருட்களையும், கசாயம் போன்ற மருந்து பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு எதுவும் எதிர்பாராமல் சென்று விடுவார். அதோ அத்தையைப் பார்த்து அழுத முகத்துடன் இறுகிப்போய் நிற்கிறார் மாமா. இனி அவருக்கு யாரும் இல்லை, அத்தை இல்லாத மாமா எங்கள் வீட்டிற்கு எதற்கு வரப் போகிறார். அப்பாவைப் போல மாமாவும் மனதிற்குள் எதை எல்லாம் நினைத்து அழுகிறாரோ??

இதோ, அத்தை பூமாலைகளுக்கு நடுவில் படுத்து இருக்கிறாள்.
அப்பாவை மீண்டும் பார்க்கிறேன். அப்பா அத்தையின் எந்த பாசத்தை நினைத்து மனதிற்குள் வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பார். தெரியவில்லை, விடை ஆராய முயன்று பலமுறை தோற்க்கிறேன். விடைகள் அதிகமாய் உள்ள வினாவிற்கு பதில் ஏது?

பக்கத்து வீட்டு அக்கா கூறுகிறாள், “தம்பின்னா உசுரு, தம்பியை விட்டு எதுவும் சாப்பிடாது, வீட்டில் எது செஞ்சாலும் தம்பிக்கு கொடுத்துவிட்டு தான் சாப்பிடும், தெனமும் தம்பி முகத்தை பார்த்துட்டு தான் திரும்ப வீட்டுக்கு வரும், தம்பி என்ன திட்டினாலும் கோவிச்சுக்காது, அதுக்கும் கழுத்துல இருந்த தைராய்டு கட்டிய, ஆபரேஷன் பண்ணி நாலஞ்சு வருஷமா உயிரை காப்பாத்தி வச்சாரு அந்த தம்பி, இவங்கள மாதிரி உடன்பிறப்ப நான் பார்த்ததில்லை”, அப்படின்னு அழுது கன்னத்தில் கை வைத்துக்கொண்டு வருத்தத்தோடு சொன்னாள்.அதற்கு பக்கத்தில் இருந்த இன்னொரு பெண், இப்ப ரெண்டு நாளா முடியாம இருந்தப்போ தம்பிய பாக்க போறேன்னு நடு ராத்திரில எந்திரிச்சு ஓடி ஓடி வந்து இருக்கு, அப்புறம் பக்கத்து வீட்டு சனங்க அதை இழுத்திட்டு போய் படுக்க போட்டு இருக்காங்க. ஆனாலும் ராத்திரி முழுதும் தம்பி பேர சொல்லிக்கிட்டே இருந்திருக்கு.

நேத்தும் வந்து அவர் பார்த்துட்டு சாப்பாடு எல்லாம் கொடுத்துட்டு தான் வீட்டுக்கு போய் இருக்காரு. விடிய காலைல அஞ்சு மணிக்கு எப்பவும் போல அக்காவை பாக்க வந்த அவர் கையில தான் அந்தம்மாவோட உசிரும் போய் இருக்கு, எப்படி பாசம் பாரு, உசுரு முழுசும் தம்பி மேல தான் இருந்திருக்கு. அப்புறம் தான் அந்தம்மாவோட வீட்டுக்காரே பாத்துருக்கார் ” என்று இறந்த கதையை, பாசம் கலந்த கதையை சொன்னாள்.

யாருக்கும் தெரியாமல் என் அப்பா மனதிற்குள் அழும் ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது.
இதோ என் தங்கை வருகிறாள், என்னை பார்த்ததும் ஓவென்று அழுகிறாள்.”இனிமே நமக்கு பெரிய அத்தை இல்லையா? என்று கதறும் பொழுது என் நினைவு கசிகிறது.
ஒரு ஐப்பசி அடைமழையின் அதிகாலை நேரம்! அதிகாலையில் வரும் முதல் பேருந்திற்கு தங்கையின் ஆசிரியர் படிப்பிற்குத் தேவையான துணைக் கருவி பொருட்களை வைத்துக்கொண்டு அம்மா, அப்பா, தம்பி, அத்தை பையன் அனைவரும் நிற்கிறோம்.அத்தை ஓட்டமும் நடையாய் ஓடி வருகிறாள். சூடு பறக்கும் பாலில்லாத சுடு காப்பியை கொண்டு வந்து எல்லோருக்கும் ஆத்தி ஆத்தி கொடுக்கிறாள். ஒவ்வொரு முறையும் என் தங்கை வீட்டிற்கு வந்து விடுதிக்குப் போகும் அதிகாலை இரவும் அத்தை சுடு காப்பியை எங்களுக்கு கொண்டு வந்து எங்கள் முன் நிற்பாள். அதற்கு முன் எத்தனை மணிக்கு அத்தை எழுவாள் என்பது கடவுளுக்கு தான் தெரியும். என் தங்கை வெகு நேரம் அழுது கொண்டே இருந்தாள். அவள் மனதில் அத்தையின் நீங்கா நினைவுகள் நிறைய இருக்க வாய்ப்புண்டு.

என்ன அத்தை மகள் இருவரும் வந்தார்கள். வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சொல்லி சொல்லி அழுது புலம்பினார்கள். அழுது மயங்கிப் போனார்கள். என் அத்தையின் பேர பிள்ளைகளும் வெகு நேரம் அழுது ஓய்ந்து போனார்கள். என் அத்தை மகன் ஒரே பிள்ளை, மனதிற்குள் தன் அம்மாவை நினைத்து அழுது வீங்கிய கண்களோடு பரிதாபமாய் நின்றிருந்தது!
ஏனோ, என் அத்தை வெளியில் படுத்திருக்கிறாள்… அவள் இனிமேல் இந்த வீட்டிற்குள் எழுந்து செல்லப் போவதில்லை. அவள் குரலுக்கு காத்திருக்கும் பிள்ளைகள் கணவனை அழைக்க, கவனிக்க அத்தை இனி வரப்போவதில்லை. ‘அப்பா, பெரியத்தை வீட்டுக்குப் போயிட்டு வரோம்பா’ என்று நாங்கள் முன்பு போல் என் அத்தை இல்லாத வீட்டிற்கு வரவும் அப்பாவிடம் அனுமதி கேட்டு அத்தை வீட்டிற்கு செல்ல போவதுமில்லை!!

என் பெரிய தம்பி கவலையான அழுத முகத்துடன் என்னை பார்க்கிறான். ஏனோ அத்தை இல்லாத வீட்டிற்குள் போக மனமின்றி வலித்து வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறான். அவனைப் பார்த்ததும் எனக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. அவன் சாதாரணமாக கூறினான், “என்ன பெரிய அத்தை போயிடுச்சு, நம்ம நாலு பேரும் தான் ரொம்ப கவலைப்பட போறோம், என்று எங்கள் நாலு பேரையும் சேர்த்து சொல்லி எவ்வளவு பெரிய உண்மையை போட்டுடைத்து, அத்தையின் மீது கொண்ட ஒப்பற்ற பாசத்தை மௌனமாய் அழுகிறான் நான் தூக்கி வளர்த்த என் அருமை தம்பி!!

என் சின்னத் தம்பியை பார்த்தேன், அவனை என் அத்தை “எங்க முருகையா அப்பா இவருதான், எங்க முத்தையா சித்தப்பாவும் இவருதான்,முத்துப்பிள்ளை செல்லப்பிள்ளை” என்று பலவாறாக கொஞ்சுவாள். அத்தையின் இறுதி காரியத்தில் பூக்கடைகளில் பூக்களை நிரப்பி ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்த அவன் மனதில் அத்தையை நினைத்து விசும்பும் பாச ஓசை எனக்கு மட்டும் கேட்டது!

இதோ அத்தை பூமாலைகளுக்கு நடுவில் படுத்திருக்கிறாள். அத்தை எழுந்து விட மாட்டாளா என்னை கூப்பிட மாட்டாளா என்று எண்ணுகிறேன். இது கனவாக இருந்து விடக்கூடாதா என்ற கவலையில் கரைகிறேன். நானும் ஒருநாள் இவ்வாறு இறப்பேன், அப்பொழுது என் அத்தையின் மடியில் சென்று அமர்ந்து கட்டிப்பிடித்துக் கொள்வேன் என்று ஏதேதோ நினைக்கிறேன்..
மனிதன் இல்லையென்றால் இவ்வளவுதானா, எங்கள் அத்தையால் இனி எங்கள் ஏக்கங்களை புரிந்து கொள்ள முடியாது, இதோ இந்த அத்தை வந்தாள் இப்பூமியின்மேல், எங்களுக்கு வரமளிக்கும் தேவதையாய் வளமான வாழ்வு தந்தாள்! இதோ செல்கிறாள் இந்த வீட்டை, ஊரை, உலகை விட்டு!

அத்தையை தூக்கிச் செல்கிறார்கள். அத்தை எந்த சாதியில் இறப்பு ஏற்பட்டாலும் அன்றைய நாள் முழுதும் சாப்பிடாமல் அடக்கம் செய்து ஆண்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் சாப்பிடுவாள். அத்தையின் இறப்பிற்கு யார் அப்படி இருப்பார்கள் தெரியவில்லை.

என் அப்பாவிடம் கேட்டேன்,” அப்பா கடைசியா என்னோட சேலைய அத்தை மேல போடலாமாப்பா” என்று! அப்பா சொன்னார், “உன்னோட மாலைதாம்பா அத்தைக்கு கடைசியா இப்ப போட்டிருக்கோம் சேலையையும் போடுப்பா உன்னோட சேலையோடவே அத்தை போகட்டும்” அப்படின்னு மனசுல வருத்தம் சுண்ட சொன்னார் அப்பா.

ஏனோ என் மீது கொள்ளை பிரியம் கொண்ட என் அத்தை என் சேலையை கட்டியே செல்கிறாள் இந்த வீட்டை விட்டு! இந்த உலகை விட்டு!அழுகை நெஞ்சை அடைத்தது. என் அப்பாவின் மனதை நினைத்து நானும் என் மனதை நினைத்து என் அப்பாவும் கதறி அழுதோம்!
அத்தையை தூக்கிச் செல்லும் பொழுது, ‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ’ கண்ணதாசன் குரல் ஒலித்தது. வரிகள் அல்ல அவை! ,மனிதனின் கடைசி நாதம் அது! மனிதத்தை நடுங்கவைக்கும் பாடல் அது! பயம் காட்டும் ராகம் அது!!

‘மனிதா இவ்வளவே தான், இத்தனை சிறியதுதான் வாழ்க்கை! சீக்கிரம் நல்லவனாய் மட்டும் வாழ்ந்து, எளியோர்க்கு உதவிகள் பல புரிந்து விட்டு வந்துவிடு’ என்ற வாழ்வின் உனண்மையை உணர்த்தும் கவிஞரின் வரிகள் அவை! அதன் தத்துவம் புரிந்தவன் ஞானி ஆகிறான், ஆம் ஞானி அவன், அவன் கவிஞன் கண்ணதாசன்!!

என் அத்தை மகள் கூறுகிறாள், “அம்மா இனி நம்ம மாமா வீட்டுக்கு வரவே மாட்டாருமா, எழுந்திருச்சு வாம்மா,மாமாவை கூப்பிடுமா என்று உலுக்கும் குரல் கேட்டு அனைவரும் மனம் வருந்தி அழுதனர். என் அப்பா கண்களை துடைத்துக் கொண்டே செல்கிறார்.
என் அத்தையின் முகத்தை இறுதியாகப் பார்க்கிறேன். எங்கள் வீட்டின் முதல் திருமுகள் என் அத்தை, எங்கள் வீட்டில் முதல் கடவுளாயும் ஆகிப் போனாள் இன்று!!

அத்தையை விட்டு வீடு வந்த நாள் முதல், நான் என் அத்தையை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் என் அனுமதியின்றி பெருக்கெடுத்து ஓடுகிறது. ‘நல்லா இருக்கியாப்பா’ என்று எப்பொழுது என் அத்தை கேட்பாள் என்று அவள் குரலுக்காக என் மனம் ஏங்குகிறது. உலகம் முழுதும் ஒலிதான், இரைச்சல்தான்!அதில் என் அத்தையின் குரல் எங்கே என்று என் மனம் தேடி தோற்றுப் போகிறது..

பதினெட்டு வயதில் இளம் விதவையாய் வந்த என் பெரிய அத்தை, குழந்தையை கூட சரியாக கவனிக்காமல், காடு கரைனு குடும்பத்திற்காக தனியாக பாடுபட்டு,அல்லும் பகலும் அயராது உழைத்து என் தந்தையையும் குடும்பத்தையும் காப்பாற்றி இருக்கிறாள்.அவ்வளவு தியாகம் யாருக்கு வரும்? வாழ்க்கை முழுவதும் குடும்பத்திற்காகவே கஷ்டப்பட்டவள்.அவளுக்கென்ற வாழ்க்கையை அவள் வாழவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தையின் கடைசி காலங்களிலும் அப்பாவே அத்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து கவனமாக பார்த்துக் கொண்டார். அத்தையின் எல்லா பிள்ளைகளையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்து அனைத்தையும் செய்தார் அப்பா.

இன்னும் சிறிது காலம் அத்தை என் அப்பாவிற்காக இருந்திருக்கலாம். ஆயாவிற்குப்பின் என் அப்பாவின் இன்னொரு தாயும் போய்விட்டாள்.அவரால் வாய் விட்டு கதற முடியாத அளவிற்கு அத்தையின் மீது தாய்மை கலந்த பாசம் அதிகமாக இருந்திருக்கிறது. அத்தையின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாத என் அப்பா கதறி அழ முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்து அழுது ஓய்ந்திருக்கிறார். இப்பொழுது தான் எனக்கு அந்த கேள்விக்கான விடை புரிந்தது.

அடுத்த சில மாதங்களில் எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா வந்தது.பொங்கலுக்கு அப்பாவிடம் போனில் சொன்னேன், “அப்பா இந்த வருஷம் பொங்கல் உண்டு தானேப்பா, கறி எல்லாம் வாங்க வேண்டாம்பா, காசு செலவானாலும் பரவாயில்லை நல்ல கிடாயாய் பார்த்து வாங்கி வெட்டி பொங்கல் வைக்கலாம்பா” என்றேன், எல்லாம் தெரிந்தவளை போன்று! அதற்கு அப்பா, நீ எங்களுக்கு மூத்த பிள்ளைனா பெரிய அத்தை தானப்பா இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளை.எனக்கு கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளர்த்த என்னோட அம்மாப்பா. நாம இப்ப நல்லா இருக்கோம்னா நம்ம அத்தைதான் முக்கிய காரணம்பா. ஒவ்வொரு வருஷமும் அத்தை நம்ம வீட்டுக்கு வந்து பொங்கல் சாப்பிட்டுட்டு, பொங்கல் எடுத்துட்டு போகும்பா, நாங்க இந்த வருஷம் பொங்கல் வைக்கலப்பா”என்று அப்பா சாதாரணமாக கூற முயற்சித்தாலும், அத்தை போனதை நினைத்து அவர் படும் துயரம், பாசத்தின் வெளிப்பாடு போன் துண்டித்தும் தொடர்ந்து எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது!!!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *