“லெச்சுமி – 1991 “…. குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர்- 08 … மீனாசுந்தர்

நீங்க நெசம்ன்னு நெனச்சாலும் செரி, பொய்யின்னு நெனச்சாலும் செரி, மனச தொறந்து சத்தியமா சொல்லுறன். வரவர யெனக்கு இந்தத் தெருவுலருக்கவே புடிக்கல. ஒரே வெறுப்பாருக்கு. ஒலகம் என்னவோ ரொம்பப் பெரிசுன்னு சொல்றாங்களே.., அதுல எவ்ளோ ஊருகருக்கு., போயும் போயும் இந்தூருல, அதுவும் என்ன பொல்லாத பாவஞ் செஞ்சேனோ, இந்தத் தெருவுல போயி ஆண்டவன் என்ன படச்சிருக்கான் பாருங்க.. கொஞ்சங்கூட ஈவுஎரக்கம் இல்லாத பயங்க இந்த ஆண்டவன். இவ்ளோ வெறுப்பையும் வேதனையையும் ஏந்தான் அவன்ங் கொடுக்கிறான்னே தெரியல.
ஒங்க தலையில அடிச்சி சத்தியம் பண்றேன். கொஞ்ச நாளாவே எனக்கு இந்த தெருவுல மனுசங்க வாழுறதாவே தெரில. பேயி, பிசாசெல்லாம் குடி கொண்டிருச்சோன்னு கூட நெனக்கத் தோனுது. என்ன? இப்பிடிப் பேந்தபேந்தன்னு முளிக்கிறீங்க? வளவளன்னு பேசறேன்னு பாக்குறீங்களா? அதிலயும் தெருவு தெருவுன்னு வார்த்தக்கி வார்த்தை குத்தம் சொல்லுறியே. அப்படி என்னதான் பண்ணிருச்சி ஒனக்கு அந்தத் தெருவுன்னுதானே கேக்குறீங்க? சரியான கேள்விங்க. என்னவோ மொகத்தப் பாத்து மனச படிப்பாங்களாமே செல பேரு. அத நீங்க நல்லாவே செய்யிறீங்க.
“வாங்க எங்க தெருவுக்குப் போவம். ந்தோஓ..ஒ..” தெரியிது பாருங்க ஒரு ஓட்டு ஊடு. அந்த ஓட்டு ஊடுதான்ங்க நாச்சிமுத்து வாத்தியாரோட வூடு. அதுக்கு பக்கத்தாப்புல இருக்குதே ஒரு ஓல குடிச. அதுதான்ங்க எங்க பங்களா!! ரெண்டு பேரு வூடுங்களும் பக்கத்து பக்கத்துலதான்னாலும் என்ன ஜென்மபகையோ தெரில, யெனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்தே எங்க வூடும் அவங்க வூடும் பேசிக்கிட்டதில்ல. மனுசனுக்குள்ள மனுசன் என்ன இப்படியெல்லாம் ஒரு கோடு போட்டுக்கிட்டு? எல்லாரும் கடசில இந்த மண்ணுக்குள்ளத்தான போவப் போறோம்ன்னு நேத்திக்கு லாடமுத்து தாத்தா யாருக்கிட்டவோ பேசிக்கிட்டிருந்தப்ப எனக்கு எங்க ரெண்டு ஊடுவளுந்தான் நாவகத்துக்கு வந்திச்சி. எனக்குச் சிரிப்பு தாங்கமுடில. அவரு சொல்றதும் சரிதான?
செரி.. செரி.. நானு சொல்லவந்த சேதிய வுட்டுப்புட்டு என்னென்னவோ பேசறேன் பாருங்க.. வாத்தியார் வூடுதாங்க இந்தத் தெருவுலியே நல்ல வூடு. தரையில் சிமெண்டெல்லாம் போட்டு வழவழன்னு பாக்குறதுக்கே ஆசயாருக்கும். வெளி செவுத்துல மஞ்சக்கலரும் காப்பிக்கொட்ட கலரு பார்டரும் அடிச்சி ரொம்ப அசத்தலா இருக்கும். முக்கியமா நானு சொல்ல வேண்டியது, தெரு லைட்ட தவுர வூட்டுக்குன்னு ஒயரிங் பண்ணி எங்க பாத்தாலும் பளிச்சி பளிச்சின்னு ட்யூப் லைட்டும் பல்புமா தொங்குறதும் வாத்தியார் வூட்ல மட்டுந்தான்ங்க. மொத்தத்துல இந்தத் தெருவுல பாக்குறதுக்கு நாகரீகமாவும். லெட்சணமாவும் இருக்குறதும் வாத்தியார் வூடும் அவங்க மனுசங்களுந்தான்.
நாங் கூட அப்பக்கி அப்ப நெனச்சிக்கிறது உண்டு. எங்க அப்பாவும் நல்லா படிச்சி ஒரு வாத்தியாரா ஆயிருக்கக் கூடாதான்னு. என்ன பண்றது? யாராருக்கு எதெது வாய்க்கணுமோ அதானே வாய்க்குமாம்ன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கும். என்னவோ சொல்லுவாங்களே, ஒடம்பு பூராவும் எண்ணய தடவிக்கிட்டு மண்ணுல பொரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்ன்னு. இனிமே அதப் பத்தி கவலப்பட்டு என்னாவப் போவுது? எங்கப்பா இனிமே வாத்தியாரா ஆவ முடியுமா? என்னவோ நான்ம் படிச்சி பெரியாளா ஆயி வாத்தியாரா ஆனாத்தான் உண்டு. அது கெடக்கட்டும். இந்தத் தறி கெட்ட மனசு செத்த நேரத்துக்குள்ள என்னென்னவெல்லாம் நெனச்சிடுது பாருங்க.
வாத்தியார் வூட்டுல மட்டுந்தான் டி.வி, மிக்ஸி, கிரைண்டர்ன்னு என்னன்னவோ கண்ணுல பாக்காத சாமானுங்க எல்லாத்தியிம் வாங்கி வெச்சிருந்தாங்க. மத்தவுங்கல்லாம் சோத்துக்கே லாட்டரி அடிக்கிற கேசுவ. அப்புறம் எங்க கரண்டு இளுக்குறதாவது ? டி.வி வாங்குறதாவது ? அதிலயிம் இந்தக் கண்றாவி டிவிதான்ங்க எனக்கு எமனா வந்து வாச்சிடுச்சி. ஆமாங்க அந்தக் கருப்புப்பெட்டிதான்ங்க இப்ப எமன்.

பொளுது பெயிடுச்சின்னா, தெருகோடில நின்னு பாத்தாலும் கரெய்ட்டா தெரியிம் அந்த வாத்தியாரு வூடு. அத்தினி வெளிச்சமாருக்கும். அதனாலியெ என்னுவோ இந்தத் தெருவுல உள்ள கெழங்கட்டயிலர்ந்து சின்னூண்டு வாண்டு வரக்கிம் வாத்தியாரு வூட்டுக்குப் போயி குழுமி குடியா கெடக்கும்ங்க. அதுங்க மேலியும் ஒன்னும்ந் தப்பு சொல்ல முடில. காணாதத கண்டா எல்லாருக்கும் அதிசியமாத்தான இருக்கும்?
லைட்டு வெளிச்சமுன்னு மட்டுமில்ல. அதுக்கும் மேல இந்த டி.வி ன்னு ஒரு கண்றாவி இருக்கே. அத எவன்ங்க கண்டு புடிச்சது? அவன்தான்ங்க எனக்கு மொத எதிரி. டி.விய போட்டுட்டா போரும். லைட்டு மரத்துல சந்தோசமா வெளயாண்டுக்கிட்டு இருக்குற ஒரு குட்டிகுளுவான்ங்கூட இருக்காதுவொங்க. எல்லாம்ஞ் சிட்டா பறந்திடும். எனக்கும் ஆசயாத்தான் இருக்கும். ஆனா போவ முடியாதே. அதான் வாத்தியாரு ஊட்டோட சென்ம பகன்னு மின்னாடியே சொன்னேல்ல.
அப்புடியும் ஒரு நாளு ஆச தாங்க முடியாம கூட்டத்தோட கூட்டமா நானும் பொயிட்டேன். வாத்தியாரு வூட்டுல ஒரு பெரியண்ணன் இருக்கு. அது என்ன வாஞ்சயா பாத்து லேசா சிரிச்சி, “வா லெட்சுமி வா. இப்புடி வுக்காரு. யெலே.. எல்லா பயலுவளும் நவந்து லெட்சுமிக்கும் கொஞ்சம் எடம் வுடுங்கடா”ன்னு அந்தண்ணன் சொன்னப்போ எனக்கு சந்தோசம் தாங்கமுடில. இவ்ளோ நல்லவங்களா இவுங்க இருக்குறப்போ நம்ம வூட்டுக்கும் அவங்க வூட்டுக்கும் எப்பிடித்தான்ஞ் சண்ட வந்திச்சோன்னு நெனச்சிக்கிட்டன்.
டி.வி பாக்க பாக்க ஆசயாருந்திச்சு. பயலுவெல்லாம் எவ்ளோ சந்தோசமா இருந்தானுவ தெரிமா? வாத்தியார் வூட்டு அண்ணந்தான் நம்மள ஒன்னுஞ் சொல்லலியே… இனிமே நாமளும் தெனமும் டி.வி. பாக்க வந்திட வேண்டியதுதான்னு நானு நெனச்சிக்கிட்டிருந்தப்பவே திடீருன்னு ஆத்தா கூப்புடுற சத்தம்ங் கேட்டிச்சி. எனக்கு பக்குன்னு ஆயிருச்சி. என்ன செய்றதுன்னே தெரில. இருந்தாலும், மனச தெடப் படுத்திக்கிட்டு மெதுவா எளுந்திருச்சி வெளில வந்தன். “யே.. லெச்சுமியோ.. அடியே… லெச்சுமியோவ்வ்வ்…” ன்னு சத்தமா மறுபடி மறுபடி ஆத்தா கூப்டுக்கிட்டே இருந்திச்சு. கூப்டுக்கிட்டே அது எதுக்க வர்றதுக்கும் வாத்தியாரு வூட்டுலேருந்து நானு வெளில வர்றதுக்கும்ஞ் சரியாருந்து போச்சி.
அவ்ளோவு தான். எங்காத்தா மொகத்த பாக்கவே எனக்குப் பயமாயிடுச்சி. கண்ணெல்லாம் நெருப்புமாரி செவந்து ரத்தமாயிருச்சி, கய்யி காலெல்லாம் ஒதறலு எடுத்திடுச்சி எனக்கு. “ஏட்டி முண்ட.. எங்கடி பொயிட்டு வார?” ன்னு ஆத்தா கேட்டப்போ என்ன பதிலு சொல்றதுன்னே தெரில. “சொல்லுடி.. யெங்க பெயிட்டு வார?” ஆத்தா நறநறன்னு பல்ல கடிச்சிகிட்டு அதட்டினிச்சி. எனக்கு அளுவ பொத்துக்கிட்டு வந்திருச்சி. “யாண்டி.. திருட்டு முண்டச்சி.. திங்கிற கொளுப்பா ஒனக்கு… தின்னிட்டு கய்யி காலு அடங்கி வூட்டுல கெடக்காம கண்ட கண்ட நாயிவொ வூட்டுக்கெல்லாம் எதுக்குடி போற?” ன்னு சம்பந்தமில்லாம வாத்தியாரு வூட்டயும் ஒரண்ட வம்பு இளுத்து பேசினிச்சி. கடசியில கன்னத்துல ரெண்டு அறை வுட்டுச்சி. எனக்கு அழுக அழுகயா வந்திச்சி. “இன்னொரு தரம் ஒன்ன நானு அங்கப் போயி பாத்தன் கய்யி காலு ரெண்டயிம் கட்டி சூடு வெச்சிப்புடுவன் ஆமா. நொய்யி கஞ்சி குடிச்சாலும் மானம் மரியாதியோடு வாளுறவுடி நான். ஒன்னுமறியாத ஒப்பனுக்குத் திருட்டுப் பட்டம் கட்டி ஊரு பஞ்சாயத்துல நிறுத்தி கேவலப் படுத்தின பயலுவ வூட்டுலயெல்லாம் ஒனக்கு என்னடி வேல வேண்டிக் கெடக்கு?” ன்னு ஆத்தா என்னென்னவோ பேசிக்கிட்டே போனிச்சி.
அப்பதான் அவுங்க வூட்டுல எவனோ திருடிட்டு போனதுக்கு அப்பாவ நாச்சிமுத்து வாத்தியாரு திருட்டுப் பட்டம் கெட்டி ஊரு பஞ்சாயத்தில நிறுத்தினதும் அவுமானம் தாங்க முடியாம அப்பா தூக்கு மாட்டிக்கிட்டு செத்ததும் எனக்கு லேசா தெரிய ஆரம்பிச்சிச்சி. ஆத்தா சொல்லுறதும் நாயந்தான்னாலும் பாத்திட்டு வந்த டி.வி.ல கடத்திகிட்டுப் போன பொண்ணு என்ன ஆனாளோன்னு மனசு சம்மந்தமில்லாம ஒருபக்கம் கெவல பட்டிச்சி.
அவ்ளோவு தான். அதுக்கு பெறவு நானு வாத்தியாரு வூட்டு வாசப்படிய கூட மிதிச்சது இல்ல. இப்பெல்லாம் அங்க போவலங்கிற சங்கடம்ல்லாம் எனக்கு இல்லன்னாலும் பொளுது சாஞ்சிடுச்சின்னா. மனசு ரணமா கனத்துப் போயிருது. எல்லா புள்ளிங்களும் வாத்தியாரு வூட்டுக்கு டி.வி. பாக்க ஓடிப் போயிருதுங்க. லைட்டு மரத்தில நான் மட்டுந்தான் தனியா எவ்ளோ நேரம் ஒக்காந்து இருக்குறது? அளுவ அளுவயா வரும். நானு மட்டும் தேம்பிக்கிட்டெ ஒக்காந்திருப்பன்.
ஆண்டவா அடுத்த பெறவின்னு ஒன்னு இருந்தா இந்த ஊருல பொறக்கப் படாது. அப்புடியே பொறந்தாலும் இந்தத் தெருவுல பொறக்கப்படாது. அப்புடியே பொறந்தாலும் அந்தத் தெருவில வாத்தியாரு வூடுன்னு ஒன்னு இருக்கப்படாது. அப்புடியே இருந்தாலும் எங்களுக்குள்ள எந்தச் சண்ட வம்பும் இருக்கப்படாதுன்னு மனசுக்குள்ள வேண்டிக்குவன்.
புள்ளிங்கல்லாம் டி.வி. பாத்திட்டு வந்து கதகதயா சொல்றப்போ எனக்கு அளுகய அடக்க மிடியாது. பெரிம்மா அடிக்கடி சொல்றாப்புல நம்மளோட விதின்னு நெனச்சிக்குவன். டி.வி. பாக்கலன்னாகூடப் பரவால்ல. லைட்டு மரத்தில வெளாட யாராவது இருக்கலாம்ல. ஒருத்தருமே இல்லன்னா தனியா என்னாதான் வெளாடறது? குச்சிகுச்சி தாம்பலம் வெச்சி ரெண்டு பக்கமும் நானே வெளாண்டு வேதனய ஆத்திக்கிடுவன். ஆனா எத்தினி நாளக்கி அதுமாரிருக்க முடியும்?
அதுலருந்து கரண்டு மேலயும். டி.வி.மேலயும் அப்புடியொரு வெறுப்பு வந்திருச்சி. இந்தக் கரண்டும். டி.வி.யும் இருக்கறதாலதான ஒரு புள்ளயும் வெளாட வராம ஓடிப் போயிருதுங்க. என்னிக்காவது கரண்டு கட்டாயிருச்சின்னா மட்டும் எல்லா புள்ளிங்களும் ஓடி வரும்ங்க, ஒளி கண்டு புடிச்சி வெளாடுவம். எங்கியாவது போயி ஒளிஞ்சுக்கிட்டு கொக்கரக்கோ கோம்போம். மனசு மான்ங்குட்டிமாரி துள்ளி துள்ளி குதிச்சி குதூகலிக்கும். எனக்கு நேரா ஆண்டவன் வந்து ஒனக்கு என்ன வரம் வேணும்ன்னு கேட்டா மொதல்ல இந்தக் கரண்டயும், டி.வி.யயும் ஒழிச்சிடும்பேன்.
இப்புடியே போன வாழ்க்கயிலதான் திடீருன்னு ஒருநாளு ஒரே பேயி மழயா புடிச்சிக்கிட்டு அடிக்க ஆரம்பிச்சிச்சி. டி.வி.ல ரேடியோல எல்லாம் என்னமோ காத்தழுத்த தாழு்வுமண்டலம் ஏற்பட்டிருக்கின்னும் நிச்சியிமா பொயலு அடிக்கும்ன்னும் சேதி சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நானு பொறந்ததிலருந்து பொயலு பாத்ததில்லேங்குறதால அத பாக்கணும்போல ஆசயா இருந்திச்சி. ஒருநாளு சாந்திரமா சொன்னது மாரியே சுத்திசுத்தி உஸ்உஸ் ன்னு சொழட்டிச் சத்தம் போட்டுக்கிட்டு காத்தடிக்க ஆரம்பிச்சிருச்சி. எங்க தெருவுல உள்ள எல்லாரும் துணிமணியெல்லாம் அள்ளிக்கிட்டு பள்ளிக்கொடத்துல போயி தங்கிக்கிட்டோம். எங்க பாத்தாலும் ஒரே கூட்டம். பசங்கல்லாம் ஒன்னா சேந்து வெளாண்டோம். எல்லாரும் சேந்து ஒன்னா சோறாக்கித் தின்னோம். இப்புடியே தெனமும் இருக்கப்படாதான்னு மனக ஏங்க ஆரம்பிச்சிருச்சி.

பொயலடிச்சி ஓஞ்ச பின்னாடி எல்லாரும் தெருவு பக்கமா போயிப் பாத்தொம் வாத்தியாரு வூட்டத் தவுர மத்த வூடெல்லாம் கூற பிஞ்சியும் மண்ணு சொவரெல்லாம் இடிஞ்சியும் கீழ உலுந்து கெடந்துச்சி. மரமெல்லாம் வேர புடுங்கிக்கிட்டு சாஞ்சி கெடந்துச்சி. பாக்கவே ஒரே கண்றாவியா இருந்திச்சி. அப்புறம் அவங்கவங்க கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிக்கிட்டு வூடு வந்து சேத்துட்டோம்.
என்னமோ கரண்டு கம்பியெல்லாம் அறுந்து போச்சுன்னு சொன்னாங்க. கொஞ்ச நாளா கரண்டே இல்லாமப் போயிருச்சி. தெருவு லைட்டும் எரியறதில்ல. வாத்தியார் வூட்லயும் மண்ணென்ன வௌக்குதான். அதுனால தெருவ பாக்கவே ஒரே இருட்டா இருந்திச்சி. எல்லா கொளந்தங்களும் பொழுது சாஞ்சி சாயந்தர நேரத்துல லைட்டு மரத்துக்கு ஓடி வந்திடும்ங்க. வெளாடுவோம். நொண்டி கோடு அடிப்போம். ஆச ஆசயா இருந்திச்சி. ஆண்டவா இனிமே இந்தத் தெருவுக்கு கரண்டே வரப்படாதுன்னு வேண்டிக்கிட்டேன். மனசு அதுக்காவ ஏங்கினிச்சி.
ஒரு வாரம் கழிச்சி ஒருநாளு திங்க கெழமன்னிக்கி பள்ளிக்கொடம் பொயிட்டு திரும்பி வந்தப்போ கரண்டு மரத்துமேலே யாரோ ரெண்டு மூணு பேரு ஏறி நின்னு வேல செஞ்சிக்கிட்டிருந்தாங்க. ஊரே கூடி நின்னு வேடிக்க பாத்துக்கிட்டிருந்திச்சு. நாங்க பசங்கெல்லாம் என்னவோ அதிசியத்த பாக்குறமாரி பாத்துக்கிட்டு நின்னோம். ஒரு மணி நேரம் முடிஞ்சி எல்லாரும் எறங்கினாங்க. அதுலேர்ந்து ஒருத்தரு சைக்கிள எடுத்துக்கிட்டு வேகமா ஓடுனாரு. நின்ன ஆளுவள்ல ஒருத்தரு சைக்கிள்ல போனவர்ட்ட சொன்னாரு. “டிரான்ஸ்பார்ம்ல போயி ஆன் பண்ணி விடுன்னாரு”.
ஒரு பத்து நிமிசந்தான் இருக்கும். பளிச்சிபளிச்சின்னு மின்னல்மாரி அடிச்சிச்சி. கண்ணெல்லாம் கூசினிச்சி. தெரு பூரா மறுபடியும் ஒரே வெளிச்சமா பழையமாரி ஆயிருச்சி. வாத்தியார் வூட்லயிம் பளிச்சி பளிச்சின்னு அடிச்சிக்கிட்டு லைட்டெல்லாம் எரிய ஆரம்பிச்சிருச்சி. அன்னிக்கி பொளுது சாஞ்சதும் நானு எல்லாத்தியும் மறந்திட்டு துள்ளிக் குதிச்சுகிட்டே லைட்டு மரத்தடிக்கு வெளாட ஓடுனன். புள்ளிங்களும் கூட்டமா கூடி நின்னிச்சிங்க. எவனோ ஒரு பய எமன்மாரி கத்தினான்.
“யெலே..பயலுவளா…. டி.வி. போட்டாச்சி. ஓடி வாங்கடோய்…”
அவ்ளோவு தான். அடுத்த நிமிசம் ஒரு பயக்குட்டிகூட லைட்டு மரத்தில இல்ல. தெருவே மயானபூமிமாரி ஆயிருச்சி. எங்கப் பாத்தாலும் ஒரே நரக அமைதி. நானு மட்டும்ந் தன்னந்தனியா நின்னுக்கிட்டிருந்தன். ஊருக்கே வெளிச்சம் வந்து எனக்கு மட்டும் இருட்டு வந்தமாரி இருந்திச்சி. எங்கேருந்து வந்துச்சின்னே தெரில. ஏன் எதுக்குன்னும் புரில. என்னயிம் மீறி அழுவ குமுறிகிட்டு வந்திச்சி. எவ்ளவோ முயற்சி பண்ணியும் என்னால கட்டுப்படுத்த முடில. கய்யி ரெண்டையும் எடுத்து மொகத்த பொத்திக்கிட்டப்ப ஒடச்சிக்கிட்டு வந்திருச்சி. ஓ.. ன்னு தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சுட்டென்.
![]()