கடவுளரையும் விட்டுவைக்காத அரசியல்!…. சங்கர சுப்பிரமணியன்.


அரசியல் என்பது ஒரு நாட்டை ஆள்வதற்கு மட்டுமின்றி ஒருவர் தன்னை நெறிப்படுத்தவும் ஒரு குடும்பத்தை நெறிப்படுத்தவும், மற்றும் ஒரு கூட்டத்தை வழி நடத்துவதுகூட அரசியல்தான். அப்படிப்பட்ட அரசியல் நேர்மையானதாக இருக்கவேண்டும். இத்தகைய அரசியலை சுயநலத்திற்காக தன்வயப்படுத்தும் போது அரசியல் அசுத்தமடைகிறது.
இப்படியாக அன்றைய மாலையில் அலசூர் ஏரிக்கரைமீது நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த குமரனும் மாலனும் அரசியல் பற்றி பேசியபடி நடந்தனர். அப்போது எதிரே வந்த அதிகப் பிரசங்கி அருணசாலம் அவர்களைப்பார்த்து,
“என்ன கால்நடையா?” என்றான்.
“என்ன சொன்ன, கால்நடையா? அது நீ. நாங்கள் நடைபயிற்சி செய்கிறோம்” என்றான் குமரன்.
“என்னப்பா, புரியாம பேசுற வாக்கிங்தான போற. காலால் நடந்து போவதால் கால்நடையான்னு கேட்டன். அதுக்கு ஏன் சிலுத்துக்குற”
“சிலுத்துக்குறனா? கால்நடைன்னா என்னான்னு தெரியுமா? ஆடு மாடுகளைத்தான் கால்நடை என்பார்கள்” என்று குமரன் பதில் சொன்னதும் முகத்தை தொங்கப் போட்டபடி பதிலேதும் சொல்லாமல் சென்றான் அருணாச்சலம்.
இப்படித்தான் சில அதிகப்பிரசங்கிகள் நாம் கருத்து கேட்காமல் பெரிய அறிவாளி போல் கருத்து சொல்வார்கள். இதை நீங்கள் இப்படிச் செய்திருக்க வேண்டும். இந்த கூரையை சற்று உயர்த்தி இருக்க வேண்டும். இந்த ஜன்னல் இந்த இடத்தில் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பார்கள்.
ஆனால் இவர்களிடம் ஆயிரம் குறையிருக்கும்.
இப்படியும் ஒருமாதிரி மனநிலை கொண்ட மக்கள் நம்மிடையே இருப்பாரகள். கொஞ்சம் சிந்தித்தால் உடனே அவர்கள் முகம் உங்கள் முன் வரும். இவர்களைப்பற்றி மற்றவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியாதவர்கள்.
இப்படி நடந்து கொள்வதால் தமக்கு எல்லாம் தெரிந்தவர்களாக மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற ஒரு நினைப்பு. நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்குது என்பார்களே அதற்கு தக்க சான்றாக திகழ்பவர்கள.
இதைத்தான் ஒரு பழமொழியில் “எச்சில் இலையை எடுக்கச் சொன்னால் எத்தனைபேர் சாப்பிட்டார்கள் என்று கேட்பது” என்று சொல்லியபடியே நடந்த குமரனும் மாலனும் மீண்டும் யூடேன் எடுத்து அரசியலுக்குள் வந்தார்கள். அப்போது,
“இந்த அரசியல் கடவுள் மற்றும் மதத்துக்குள்ளும் வந்திருக்கிறது” என்றான் மாலன்.
“அறநிலையத்துறையைச் சொல்கிறாயா?
“அது தமிழ்நாட்டு அரசியல். நான் சொல்வது மத அரசியல். நம்ம கடவுளில் பெரியவர் யார்?”
“ஏன் சந்தேகம் விஷ்ணுதான். பகவத்கீதைதானே நம் மத நூல்?”
இல்லையில்லை இல்லவே இல்லை என்றான் மாலன். நீ ஒருவன் சொன்னால் போதுமா? நம் நாட்டில் அப்படித்தானே சொல்கிறார்கள் இல்லாவிட்டால் பைபிள் குர்ரான் மாதிரி நீதிமன்றங்களில் பகவத்கீதை இருக்குமா? என்று குமரன் தன் கருத்தைச் சொன்னான். ஆயிரம் கைகள் மறைத்த போதும் ஆதவன் மறைவதில்லை. உலகமே ஒன்று கூடிச்சொன்னால் உண்மை பொய்யாகி விடாது என்று கூறினான் மாலன்.
எதுவுமே மறு ஆய்வுக்கு உட்படுத்தும்போது முடிவு மாறுபடம். கடலையே பாயாய்ச் சுருட்டி அந்த கடலுக்குள்ளே ஒழிந்து கொண்டதை நம்பிய நாம் பின் உலகம் உருண்டையானது என்று சான்றுகளுன் நிரூபிக்கப் பட்டபின் அந்த புராணக் கதைக்கு எவ்வளவு வரவேற்புள்ளது என்பதையும் அறிவோம் என்று உரையாடல் தொடர்ந்தது.
எல்லாம் சரிதான் எதற்கும் சரியான ஆதாரங்கள் வேண்டுமே என்று கேட்ட நண்பனுக்கு மாலன் தயங்காமல் பதில் சொன்னான். நேற்று ஒரு தகவலைப் படித்தறிந்தேன். அந்த தகவலை படித்தறிந்ததும் இப்படியும் இருக்கலாமோ என்று எண்ணினேன்.
அதைத்தான் நான் இப்போது உன்னிடம் சொல்ல வருகிறேன். அதற்கு முன்பாக மும்மூர்த்திகளாக இருந்தோரில் பிரம்மாவை ஓரங்கட்டியது ஓர் அரசியல் என்றால் கடவுள்களுக்கெல்லாம் கடவுளான மகாதேவனை ஓரங்கட்டியதும் ஓர் அரசியல்தான்.
ஏனென்றால் மகாவிஷ்ணு என்றால் விஷ்ணுவுக்கு எல்லாம் விஷ்ணு அல்ல. பெரிய விஷ்ணு அவ்வளவுதான். ஆனால் மகாதேவனென்றால் பெரிய கடவுள் அதாவது கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்று பொருள்.

கீதை என்ற அறிவுரையை முதலில் வழங்கியவனே சிவன்தான். அதற்கு பெயர் ஈஷ்வர கீதை ஆகும். இதை நான் சொல்லவில்லை கூர்ம புராணம் என்ற நூல் சொல்கிறது. இதைத்தவிர சிவகீதை என்ற ஒன்றும் உள்ளது. இது பத்மபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் சிவன் தன் விஸ்வரூபத்தை ராமனுக்கு காட்டியிருக்கிறார்.சிவன் ஒருவன் மட்டுமே உருவமற்ற லிங்கமாக வழிபடப் படுகிறார். சிவன் உருவமற்றவர் மற்றும் நம் உணர்வுகளால் உணரமுடியாதவர். அழிவற்றும் எல்லையற்றும் இருப்பவர். பூஜ்ஜியமும் அவரே ஒன்றும் அவரே. பிரபஞ்சம் தோன்றுமுன்னே தோன்றியவர் அதே பிரபஞ்சம் அழிந்த பின்னும் நிலைப்பவர்.
நடனத்துக்கு தலைவன். விலங்குகளுக்கும் கடவுள் என்பதைவிட இவற்றிற்கெல்லாம் மேலாக இந்திரனும் வருணனும் சிவனைக் கடவுள் என்கிறார்கள். ராமனும் கிருஷ்ணனும் சிவனை கடவுள் என்கிறார்கள். பிரம்மனும் விஷ்ணுவும்கூட சிவனைக் கடவுள் என்பதால் சிவன் மகாதேவன் என்பது உறுதியாகிறது.
இவ்வாறெல்லாம் சிவபுராணத்தில் சொல்லபட்டிருக்கின்றது என்பதை படிக்கும்போது நாம் இவற்றை எப்படி எடுத்துக் கொள்வது? என்றான் மாலன்.
ஆமண்டா நீ சொல்வதை எல்லாம் கேட்கும்போது ஒன்னுமே புரியலே உலகத்திலே. என்னமோ நடக்குது மர்மமா இருக்குதுன்னு சந்திரபாபு பாடியதைப்போல பாடத்தான் முடியும். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பதைப்போல மத அரசியலிலும் இதெல்லாம் சகஜமப்பா என்று எடுத்துக் கொள்ள வேண்டுயதுதான்.
கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணவறையில் வை என்பதுபோல் அவர்களுக்கு நடைபயிற்சி முடியும் இலக்கும் வந்துவிட்டது. இந்தச் சமயம் மாடசாமி அண்ணாச்சி ஒரு சந்தேகத்தை கிளப்பினார். அது என்னவென்றால் மணவறையில் வை என்று சொன்னாயே அது கிழவியையா அல்லது கிழவனையா?
எனக்கு கோபத்தை அடக்க முடியவில்லை. இது இப்ப ரொம்ப அவசியம். இப்ப கதையில் விசயம் எவ்வளவு சீரியஸா போயிட்டு இருக்கு. கிழவனா கிழவியா என்பதா முக்கியம் என்று சொன்னபடி அவரை ஒரு பார்வை பார்த்தேன். புரிந்து கொண்டார் மனிதர். எட்டயபுரத்துக்கு வழி எப்படி என்றால் கொட்டைப் பாக்கு என்ன விலை என்பவர்களையும் வாழ்க்கையில் சந்தித்தானே ஆகவேண்டும்.
இந்த நடைபயிற்சியின் அவசியமே தேவி பவனில் இப்போது கிடைக்கும் சூடான போண்டோவைத் தின்று விட்டு ஒரு கப் காபி குடிப்பதுதான். தேவி பவன் போண்டா என்றால் அலசூரை சுற்றிய பகுதியில் அவ்வளவு பிரபலம்.
எப்படி அன்னதானம் சாப்பிடுவதற்கென்றே சில பக்திமான்கள் கோவிலுக்கு வருகிறார்களோ அப்படி தேவி பவன் ஓட்டலில் போண்டா சாப்பிடுவதற்காகவே அலசூர் சோமேஷ்வரன் கோவிலை சாக்காக வரும் பக்திமான்களும் உண்டு.
அவர்களைப் போலவே உலகையே மாற்றப்போவது போவதுபோல் எல்லாவற்றையும் வாய்கிழியப் பேசிவிட்டு தேவி பவனுக்குள் நுழைந்தனர். கல்லாவில் இருந்தவரும் சரியான நேரத்துக்கு வந்துட்டீங்கண்ணே இப்பத்தான் சரக்கு மாஸ்டர் போண்டாவை வைத்து விட்டுப் போகிறார் என்றார். அவர் வியாபாரம் அவருக்கு. நம்ம வேலை படித்ததை பகிர்வது என்று சொல்லி கதையை முடிக்கிறேன்.
![]()